You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

ஆப்கானிஸ்தான் கந்தஹார் இந்தியத் தூதரகத்தில் இருந்து ஊழியர்கள் வெளியேற்றம்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து தாலிபன்கள் நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றி வருகிறார்கள். இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களைக் காட்டி கந்தஹாரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இருந்து பல தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.

    பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. வலிமை அப்டேட் கிடைத்தது

    அஜித் நடிக்கும் வலிமை படத்தின் முதல் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.

    அஜித் ரசிகர்கள் இரண்டு ஆண்டுகளாக காத்திருந்த வலிமை அப்டேட் கிடைத்தது. மோஷன் போஸ்டரை வெளியிட்டார் போனி கபூர்.

    கடந்த 2019-ம் ஆண்டு இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் வெளியான படம் 'நேர்கொண்ட பார்வை'. இது இந்தி படமான 'பிங்க்' படத்தின் ரீமேக். 'நேர்கொண்ட பார்வை' வெற்றிக்கு பிறகு மீண்டும் ஹெச். வினோத், அஜித் கூட்டணி இணைகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். மேலும், 'காலா' ஹூமா குரேஷி, வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.

    வலிமை திரைப்படம் பற்றிய தகவல்கள் பலரிடமும் தன் ரசிகர்கள் கேட்டுவருவது தன்னை வருத்தமடையச் செய்வதாக, அறிக்கை மூலம் சென்ற பிப்ரவரியில் அஜீத்குமார் கண்டனம் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    அஜித் குமாரின் ரசிகர்கள் அவ்வப்போது ட்விட்டரில் வலிமை படத்தின் அப்டேட் குறித்து கேட்பதை வழக்கமாக வைத்திருந்தனர். பிரபலங்களையும் tag செய்துவந்தனர். இது பல தருணங்களில் கேலிக்குள்ளானது.

  3. 5,000 மருந்தாளுநர் பணியிடங்கள்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை

    தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 1,235 மருந்தாளுநர்கள் (Pharmacist) உள்ளிட்ட 4,624 துணை மருத்துவப் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கான அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

    இதற்காக அடுத்த சில நாள்களில் ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட உள்ளது. இந்த முறையாவது பி.பார்ம் (B.Pharm) முடித்த பட்டதாரிகளுக்கு மருந்தாளுநர் பணி அளிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடையே எழுந்துள்ளது' என அறிக்கை ஒன்றில் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், `தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், வட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில், சுமார் 5,000 மருந்தாளுநர் பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு மருந்தியலில் பட்டப்படிப்பு (பி.பார்ம்), பட்டயப் படிப்பு (டி.பார்ம்) படித்தவர்கள் தகுதி பெற்றவர்களாக உள்ளனர். டி.பார்ம் படிப்பைவிடவும் பி.பார்ம் படித்தவர்களுக்கு மருந்துகள் குறித்த கூடுதல் புலமை இருக்கும். ஆனால், தமிழ்நாட்டில் இன்று வரை பி.பார்ம் படித்தவர்களுக்கு அரசு மருத்துவ நிறுவனங்களில் மருந்தாளுநர் பணி மறுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அரசுத் தரப்பில் கூறப்படும் காரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது. `பி.பார்ம் படித்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கூடுதலான வேலைவாய்ப்புகள் இருப்பதால், அவர்களுக்கு மருந்தாளுநர் பணி வழங்கத் தேவையில்லை; டி.பார்ம் படித்தவர்களுக்கு வேறு வேலைவாய்ப்புகள் இல்லை என்பதால், அவர்களுக்கு மட்டுமே இப்பணி வழங்கப்பட வேண்டும்' என அரசு தெரிவிக்கிறது.

    இது அடிப்படையும் அறமும் அற்றது ஆகும். மருந்தாளுநர் பணிக்கு அடிப்படைத் தகுதி டி.பார்ம் என்றால், டி.பார்ம் மற்றும் அதைவிட கூடுதலாக படித்த அனைவருக்கும் மருந்தாளுநர் பணி வழங்கப்பட வேண்டும். அதுதான் இயற்கை நீதி ஆகும். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள சில பொறியியல் பணிகளுக்கு பட்டயப்படிப்பு அடிப்படைத் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், பொறியியல் பட்டதாரிகளும் போட்டியிட அனுமதிக்கப்படுகிறார்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகளில் பத்தாம் வகுப்பை தகுதியாக கொண்ட பணிகளுக்கு பட்டப்படிப்பு படித்தவர்களும், பட்டப்படிப்பை அடிப்படைத் தகுதியாக கொண்ட பணிகளுக்கு அதைவிட கூடுதலான கல்வித் தகுதி கொண்டவர்களும் போட்டியிடுகின்றனர். அந்த அடிப்படையில் பார்த்தால், மருந்தாளுநர் பணிக்கு பி.பார்ம் பட்டதாரிகளுக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு அரசுத்துறைகளில் பி.பார்ம் படித்தவர்கள் மருந்து ஆய்வாளர் (Drug Inspector) பணிக்கு மட்டுமே செல்ல முடியும். தமிழ்நாடு அரசில் இந்தப் பணிகள் மொத்தமே 140 என்ற அளவில்தான் உள்ளன. இவ்வளவு குறைந்த வேலைவாய்ப்பு கொண்ட பி.பார்ம் பட்டதாரிகள் மருந்தாளுநர் பணிக்கு செல்லக்கூடாது என்பது பெரும் சமூக அநீதியாகும். மருந்தாளுநர் பணிக்கு டி.பார்ம் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டதன் நோக்கம் பி.பார்ம் பட்டதாரிகளுக்கு வேலை வழங்கக்கூடாது என்பது அல்ல.

    மாறாக, 1963-65 காலத்தில் டி.பார்ம் படிப்பு மட்டுமே இருந்ததால், மருந்தாளுநர் பணிக்கு அதுவே அடிப்படைத் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டது. தமிழகத்தில் பி.பார்ம் படிப்பு 1975 ஆம் ஆண்டில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, பி.பார்ம் படித்தவர்களும் மருந்தாளுநர் ஆகலாம் என்று விதிகள் மாற்றப்படாதது தான் அனைத்துச் சிக்கல்களுக்கும் காரணமாகும். மருந்தாளுநர் பணிக்கு பி.பார்ம் படித்தவர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில், அவர்களுக்கு சாதகமாக இடைக்காலத் தீர்ப்பை 2019 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியது. அதன்படி, அந்த ஆண்டில் நடைபெறவிருந்த மருந்தாளுநர் பணிக்கான போட்டித்தேர்வுக்கு பி.பார்ம் படித்தவர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆனாலும், 2019 ஆம் ஆண்டில் நடைபெற வேண்டிய மருந்தாளுநர் பணிக்கான தேர்வுகள் பல்வேறு காரணங்களால் இப்போது வரை நடத்தப்படவில்லை.

    இப்போதும் நிலுவையில் உள்ள அந்த வழக்கில், மருந்தாளுநர் பணிக்கு டி.பார்ம் படித்தவர்களை மட்டும் அனுமதிப்பதா? பி.பார்ம் பட்டதாரிகளை மட்டும் அனுமதிப்பதா? அல்லது இரு தரப்பையும் அனுமதிப்பதா? என்பது பற்றி முடிவெடுத்து தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மருந்தாளுநர் பணி நியமனத்தில் டி.பார்ம் பட்டயதாரிகள், பி.பார்ம் பட்டதாரிகள் ஆகிய இரு தரப்பினரின் நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.

    அதைக் கருத்தில் கொண்டு மருந்தாளுநர் பணிக்கு இரு தரப்பினரும் விண்ணப்பித்து, தகுதி அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் வகையில், புதிய திட்டத்தை தயாரித்து அரசு செயல்படுத்த வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

  4. மோதியின் புதிய அமைச்சரவை: 42 % பேர் மீது குற்ற வழக்குகள்

    கடந்த புதன்கிழமை தனது அமைச்சரவையை மாற்றியமைத்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி. பல பழைய அமைச்சர்கள் பதவி விலகினர். 36 புது முகங்கள் சேர்க்கப்பட்டு 78 பேர் கொண்டதாக அமைச்சரவை உருவானது.

    அவர்களில் 33 பேருக்கு எதிராக, அதாவது 42 சதவீதம் பேருக்கு எதிராக குற்ற வழக்குகள் இருப்பதாகவும், அவர்களில் 24 பேர் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி போன்ற தீவிர குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரீஃபார்ம்ஸ் (ADR) என்ற அமைப்பை மேற்கோள் காட்டி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

  5. கோவேக்சினை அவசர பயன்பாட்டு பட்டியலில் சேர்ப்பது பற்றி 6 வாரத்தில் முடிவு - WHO

    இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியான கோவேக்சின் இன்னும் உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்தைப் பெறவில்லை.

    அதனை அவசரப் பயன்பாட்டுக்கான பட்டியலில் சேர்ப்பது பற்றி 4 முதல் 6 வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அந்த நிறுவனத்தின் முதன்மை அறிவியலாளர் சௌம்யா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

    அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஏற்பாடு செய்த வெபினார் நிகழ்வில் பேசிய அவர், இந்த தடுப்பூசியின் உற்பத்தியாளரான பாரத் பயோடெக் நிறுவனம் அந்த மருந்து தொடர்பான தரவுகளை உலக சுகாதார நிறுவனத்தின் வலைத்தளத்தில் பதிவேற்றி வருவதாகவும், அவற்றை உலக சுகாதார நிறுவனம் பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

  6. புதுவையில் 16-ம் தேதி பள்ளி, கல்லூரி திறப்பு

      • எழுதியவர், நடராஜன் சுந்தர்

    புதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

    கொரோனா தொற்று இரண்டாம் அலை காரணமாக கடந்த மார்ச் மாதம் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன.

    இதனிடையே கடந்த இரண்டு மாதங்களாக புதுச்சேரியில் படிப்படியாக கொரோனா பரவல் குறையத் தொடங்கியது.

    இந்த நிலையில் புதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் முதற்கட்டமாக 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும், அன்றைய தினமே கல்லூரிகளும் திறக்கப்படும் என்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

    பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பையும், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளையும் கல்வி மற்றும் உயர்கல்வி துறைகள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  7. ஆப்கானிஸ்தான் கந்தஹார் இந்தியத் தூதரகத்தில் இருந்து அதிகாரிகள் வெளியேற்றம், தாலிபன்கள் முன்னேறும் நிலையில் நடவடிக்கை

    அமெரிக்கா தலைமையிலான மேற்கத்தியப் படைகள் பெருமளவு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், நாட்டின் பல பகுதிகளை தாலிபன் தீவிரவாதிகள் கைப்பற்றி வருகிறார்கள்.

    இந்நிலையில் கந்தஹாருக்கு அருகிலேயே அவர்கள் வந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், அங்குள்ள இந்தியத் தூதரகத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் பலரை வெளியேற்றியது இந்தியா.

    ஆனால், தூதரகம் மூடப்பட்டுவிட்டதாக கூறப்படும் செய்தி தவறு என்றும், தூதரகத்தில் அவசர நிலைப் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலை இருப்பதாகவும், தமக்கு கிடைத்த தகவல்களை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ. செய்தி முகமை கூறுகிறது.