தாலிபன்களுக்கு பயந்து படைத் தளத்தைக் காலி செய்த அமெரிக்கா
பாக்ராம் என்ற அந்த விமானப்படை தளத்தின் அங்கமாக ஒரு சிறைச்சாலை இருக்கிறது. அதில் சுமார் ஐந்தாயிரம் தாலிபன் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஒலிம்பிக் தடகள வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம்: முதலமைச்சர்
பட மூலாதாரம், SUBHA VENKATESAN
தமிழ்நாட்டில் இருந்து ஒலிம்பிக் தடகளத்தில் பங்கேற்க இருக்கும் 5 வீரர்களுக்கும் தலை ரூ.5 லட்சம் வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து ஆண்கள் 400 மீட்டர் தொடர் ஓட்டத்துக்கு ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் ஆகியோர் தேர்வு செய்யபட்டிருக்கிறார்கள்.
கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் பங்கேற்க சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர், ரேவதி ஆகிய மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் 5 பேருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் இருந்து ஒலிம்பிக் தடகளத்தில் பங்கேற்க 5 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். 3 பெண்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதும் முதல்முறைதான்.
ஏற்கெனவே பிற விளையாட்டுகளில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டிருக்கும் 6 பேருக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது.
ஆஃப்கானிஸ்தான் விமானப்படை தளத்தை விட்டு சொல்லிக் கொள்ளாமல் வெளியேறிய அமெரிக்க வீரர்கள்
பட மூலாதாரம், EPA
படக்குறிப்பு, ஆஃப்கானிஸ்தானின் பாக்ராம் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற அமெரிக்க வீரர்கள் முகாமிட்டிருந்த இடங்களை பரிசோதிக்கும் ஆஃப்கானிஸ்தான் வீரர்
ஆஃப்கானிஸ்தானின் பாக்ராம் விமானப்படை தளத்தில் இருந்து இரவோடு இரவாக சொல்லிக்கொள்ளாமல் அமெரிக்க வீரர்கள் வெளியேறியதாக ஆஃப்கானிஸ்தான் ராணுவ ஜெனரல் அசதுல்லா கோஹிஸ்தானி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் நடந்த இச்சம்பவம், அமெரிக்க படையினர் புறப்பட்டுச் சென்ற பிறகே தங்களுடைய கவனத்துக்கு தெரிய வந்ததாக அந்த ராணுவ உயரதிகாரி கூறினார்.
பாக்ராம் என்ற அந்த விமானப்படை தளத்தின் அங்கமாக ஒரு சிறைச்சாலை இருக்கிறது. அதில் சுமார் ஐந்தாயிரம் தாலிபன் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆஃப்கானிஸ்தானின் பல இடங்களில் தாலிபன்கள் முன்னேறி வரும் நிலையில், ஏற்கெனவே தாலிபன்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி அமெரிக்க படையினர் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
அந்த பாக்ராம் படை தளத்தை ஆஃப்கன் ஆயுததாரிகள் குழு தாக்கலாம் என்று எதிர்பார்ப்பதாக ஜெனரல் கோஹிஸ்தான் பிபிசியிடம் மேலும் தெரிவித்தார்.
"உங்களுக்குத் தெரியுமா, அமெரிக்க படையுடன் நாங்கள் ஒப்பிடப்பட்டால், அது மிகப்பெரிய விஷயம். ஆனால், எங்களுக்கும் பலம் உள்ளது. இயன்றவரை போராடி பாதுகாப்போம். மக்களை காப்போம்," என்று ஜெனரல் கோஹிஸ்தானி தெரிவித்தார்.
பட மூலாதாரம், EPA
படக்குறிப்பு, நூற்றுக்கணக்கான சிவில் வாகனங்களை அப்படியே விட்டு விட்டு ஆஃப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ள அமெரிக்க படையினர் இருந்த பாக்ராம் விமானப்படை தளத்தின் வாகன நிறுத்துமிட காட்சி.
ஆலமரத்தில் ஏறினால்தான் ஆன்லைன் வகுப்பு - நாமக்கல் மாணவர்களின் அவலம்
படக்குறிப்பு, ஆல மர கிளைகளில் அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவர்கள்
கொரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடி கிடக்கின்றன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தவிர்க்க முடியாததாக மாறியுள்ளன.
இந்த நிலையில் செல்பேசி சிக்னல் கிடைக்காததால் ஆலமரத்தில் ஏறி ஆன்லைன் வகுப்புகளைக் கவனிக்கிறார்கள் நாமக்கல் மாவட்டத்தில் பெரியகோம்பை கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள்.
இங்கு ஒன்றிரண்டு மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டால் கூட பரவாயில்லை. ஒரே மரத்தில் இருபத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கிறார்கள்.
யூட்யூப் சேனலில் 20 மணி நேரம் வேலை செய்தே பணம் சம்பாதித்தார் மதன் - மனைவி கிருத்திகா
பட மூலாதாரம், MADHAN
யூட்யூப் சேனலில் 20 மணி நேரத்திற்கும் மேலாக விளையாடியே தனது கணவர் சம்பாதித்ததாகவும் எந்த பண மோசடியிலும் அவர் ஈடுபடவில்லை என்றும் கூறியிருக்கிறார் "பப்ஜி' மதனின் மனைவி கிருத்திகா. மதன் கைது செய்யப்பட்டுள்ள அதே வழக்கில் கிருத்திகாவும் கைதாகி தற்போது ஜாமீனில் வெளியே இருக்கிறார்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் 'பப்ஜி' விளையாட்டை யூட்யூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பி, ஆபாச வர்ணனைகள் மற்றும் சிறார், பெண்களை கீழ்தரமாக பேசியும் பணம் வசூலித்தார் என்றும் கூறி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கிறார் மதன். இவரது மனைவி கிருத்திகா சென்னையில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது மதன் சட்டவிரோதமாக எந்தச் செயலையும் செய்யவில்லை என்றும் அவர் சொத்துகளை குவித்ததாக கூறப்படுவது பொய் என்றும் தெரிவித்தார்.
சினிமா தொடர்பான திருத்தச் சட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு
பட மூலாதாரம், DMK
படக்குறிப்பு, மு.க. ஸ்டாலின்
இந்திய அரசின்
சினிமாட்டோகிராஃப் திருத்தச் சட்டம் 2021க்கு தமிழ்நாடு
அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. திரைப்படச் சான்றிதழ் வாரியம், மாநில அரசுகளின் உரிமைகளை இந்தச் சட்டம் குறைப்பதோடு, கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையிலும் இருப்பதாக மத்திய அரசிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய அரசின்
தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாதிற்கு மு.க. ஸ்டாலின்
எழுதியுள்ள கடிதத்தில், "இந்தச் சட்டம் திரைத்துறையினர் மத்தியில்
மட்டுமல்லாது, கருத்துச் சுதந்திரத்தின் மீது அக்கறையுள்ள
சமூகத்தினரிடமும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஒரு துடிப்புமிக்க ஜனநாயகத்தில் கலை ரீதியான சிந்தனைக்கும் சுதந்திரத்திற்கும்
இடமுண்டு. ஆனால், இருபதாண்டுகளுக்கு முன்னால் உச்ச
நீதிமன்றத்தால் நீக்கப்பட்ட மத்திய அரசின் மறு ஆய்வு செய்யும் அதிகாரத்தை இந்தச்
சட்டம் மீண்டும் சேர்க்க முயல்கிறது.
இந்திய
சினிமாட்டோகிராஃப் சட்டத்தின் பிரிவின் ஐந்து - ஏவைப் பூர்த்தி செய்யும் அனைத்துப்
படங்களுக்கும் மத்தியத் திரைப்படச் சான்றிதழ் வாரியம் சான்றிதழ் வழங்கி வருகிறது.
தகுதியான காரணங்களோடு திரைப்படத்தை நிராகரிக்கவும் இந்த சட்டம் வழிவகுக்கிறது. அதே
சட்டத்தின்பிரிவு ஐந்து - பியின் படி, விதிமுறைகள் என்ற வடிவில் கூடுதலான கட்டுப்பாட்டு அதிகாரமும்
வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கூடுதலான சட்டங்கள், விதிகளின் மூலம் 21ஆம் நூற்றாண்டிலும் கருத்துச் சுதந்திரத்தை
முடக்குவது சரியாகாது.
ஒரு
திரைப்படத்திற்கு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம், அனுமதி அளித்துவிட்டால், அந்தத் திரைப்படத்தை திரையிட அனுமதிப்பது
குறித்த அதிகாரம் மாநில அரசுகளுக்கே உள்ளது. ஏனென்றால் சட்டம் ஒழுங்கு என்பது
மாநில அரசின் கையில் உள்ள அதிகாரமாகும்.
ஆனால், மத்திய அரசுமுன்மொழிந்திருக்கும் இந்தச் சட்டம்
கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக இருப்பதோடு, மாநில அரசு மற்றும்
மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் அதிகாரங்களிலும் தலையிடுகிறது. அதற்கு
முன்னோட்டத்தைப் போல திரைப்படச் சான்றிதழுக்கான மேல்முறையீட்டு வாரியமும்
கலைக்கப்பட்டது.
திரைப்பட
சான்றிதழ் வாரியம் சான்றிதழ் அளித்த பிறகு, மறு ஆய்வு
செய்யும் அதிகாரத்தை மத்திய அரசுக்கே அளிப்பது இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 19 (2)ல் குறிப்பிடப்பட்டுள்ள “reasonable restriction" என்ற பதத்தை தவறாகக் கையாளுவதாகும். திரைப்படத்
துறையினர் கலைரீதியாக சிந்திப்பதைக் கட்டுப்படுத்தி, இப்படித்தான் திரைப்படம் எடுக்க வேண்டுமெனச் சொல்வது ஏற்க முடியாதது.
இந்திய
அரசியல் சாசனத்தின் அடிப்படையான லட்சியங்களுக்கே இது முரணானது. சிந்திக்கும்
உரிமையைப் பறிப்பது நமது ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தும். எந்தக் கட்சி ஆட்சியில்இருந்தாலும் ஜனநாயகம் துடிப்புமிக்கதாக இருக்க வேண்டியது அவசியம்.
இந்தச் சட்டத்தில்
குறிப்பிடப்பட்டுள்ள வேறு சில அம்சங்களைச் நடைமுறையில் செயல்படுத்துவதும் கடினம்.
குறிப்பாக, வயதுவாரியாக திரைப்படங்களுக்குச் சான்றிதழ்
அளிப்பது. சில திருத்தங்கள் திரைப்படம் எடுப்பதேயே மிகுந்த சவாலான, ஆபத்தான காரியமாக மாற்றுகின்றன.
மேலே சொன்ன கருத்துகளையும்
திரைத்துறையினரின் உண்மையான கவலைகளையும் மனதில் கொண்டு இந்திய சினிமாட்டோகிராஃப்
சட்டத்தில் செய்யப்படும் திருத்தங்களைக் கைவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்திய
சினிமாட்டோகிராஃப் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான அறிவிப்பை இந்திய அரசின்
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடந்த ஜூன் 18ஆம் தேதி
வெளியிட்டது. அப்போது முதல் திரைத் துறையினர் இந்தச் சட்டம் குறித்து தங்களது
எதிர்ப்பையும் அச்சத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.
அமைச்சர்கள் கூட்டத்தை திடீரென ரத்து செய்தார் மோதி
பட மூலாதாரம், PIB
படக்குறிப்பு, நரேந்திர மோதி, இந்திய பிரதமர்
இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அமைச்சரவை விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இன்று அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்களின் செயல்திறன், மத்திய அரசின் திட்டங்களின் அமலாக்கம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவிருந்தது.
இதனால், பிரதமர் மோதி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான எதிர்பார்ப்புகள் டெல்லி அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளன.
இந்தியாவில் 4 மாநில ஆளுநர்கள் இடமாற்றம், 4 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்
பட மூலாதாரம், RP BHAVAN
படக்குறிப்பு, ராம்நாத் கோவிந்த், இந்திய குடியரசு தலைவர்
இந்தியாவில் நான்கு மாநிலங்களின் ஆளுநர்கள் திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பிறப்பித்துள்ளார்.
இதன்படி மிசோரம் மாநில ஆளுநர், கோவா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹரியாணா மாநில ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யா, திரிபுரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திரிபுரா ஆளுநர் ரமேஷ் பய்ஸ் ஜார்கண்ட் மாநில ஆளுநராகவும், ஹிமாச்சல பிரதேச ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா ஹரியாணா மாநில ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய ஆளுநர்கள்: கர்நாடகா மாநில ஆளுநராக தாவர்சந்த் கெலாட், மிசோரம் ஆளுநராக ஹரிபாபு கம்பம்பட்டி, மத்திய பிரதேச ஆளுநராக மங்குபாய் சகன்பாய் படேல், ஹிமாச்சல பிரதேச மாநில ஆளுநராக ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் கர்நாடகா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் தாவர்சந்த் கெலாட், பிரதமர் மோதியின் மத்திய அமைச்சரவையில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சராக இருந்து வருகிறார்.
பிரதமர் மோதி தலைமையிலான அமைச்சரவை ஒரு சில நாட்களில் விரிவுபடுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு டெல்லி அரசியல் வட்டாரத்தில் மேலோங்கி வரும் வேளையில், இந்த ஆளுநர்களின் மாற்றங்களும் புதிய நியமனங்களும் வந்துள்ளதால், இந்த அரசியல் நிகழ்வு, உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
வந்துகொண்டிருக்கும் செய்தி, யூட்யூப்பர் பப்ஜி மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
பட மூலாதாரம், MADHAN
படக்குறிப்பு, 'பப்ஜி' மதன்
யூட்யூப் சமூக வலைதளத்தில் மிகவும் கீழ்தரமான ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி காணொளிகளை வைரலாக்கும் 'பப்ஜி' மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் சென்னை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு துணுக்குகள் தருவதாகக் கூறி அதற்கென யூட்யூப் சமூக வலைதளத்தில் தனக்கென ஒரு பிரத்யேக பக்கத்தை நிறுவி லட்சக்கணக்கானோரை பின்தொடருவோரை கொண்டிருப்பவர் மதன்.
இவர் துணுக்குகள் தரும் ஆன்லைன் விளையாட்டான பப்ஜி, சிறார்கள் தரப்பில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், இவரது அடைமொழி 'பப்ஜி' ஆனது.
ஆன்லைன் விளையாட்டுலகின் சமூக வலைதள பயனர்கள் இடையே பப்ஜி மதன் என அழைக்கப்படும் இவர், மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி தமது பக்கத்தில் பங்கேற்கும் சிறார்கள், பெண்களிடம் பேசுவதாக சர்ச்சை எழுந்தது.
இதைத்தொடர்ந்து அவருக்கு எதிராக 150க்கும் அதிகமான புகார்கள் சென்னை காவல்துறை இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்பட்டன. அவற்றின் மீது சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
பல வார தேடுதலுக்குப் பிறகு பப்ஜி மதனை கைது செய்த காவல்துறையினர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவின்பேரில் அவரை நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.
இந்த வழக்கில் மதனுக்கு உதவியதாக அவரது மனைவி கிருத்திகா எட்டு வயது கைக்குழுந்தையுடன் சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். பின்னர் குழந்தையின் உடல் நலனை கருத்தில் கொண்டு அவரை ஜாமீனில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து தன்னையும் ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த மனுக்களை சைதாப்பேட்டை நீதிமன்றம் நிராகரித்தது.
இதற்கிடையே, ஆதரவற்றோருக்கு உதவுவதாகக் கூறி ஆன்லைனில் பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக மதன் மீது மேலும் சில வழக்குகள் பதிவாகின.
இந்த நிலையில், அதிக புகார்கள் மற்றும் வழக்குகள் பதிவானதைத் தொடர்ந்து பப்ஜி மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை நகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் பாதுகாப்பு விதிகளில் திருத்தம் - மக்கள் கருத்துத் தெரிவிக்க கெடு நீட்டிப்பு
நுகர்வோர் பாதுகாப்பு விதிகள் 2020ல் திருத்தத்தை முன்மொழிந்துள்ளது இந்திய அரசு. இந்த திருத்தம் குறித்து மக்கள் கருத்துத் தெரிவிக்க அளிக்கப்பட்டிருந்த காலக்கெடு தற்போது நீட்டிக்கப்படுவதாக இந்திய நுகர்வோர் விவகார, உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜூலை 21ம் தேதி வரை மக்கள் தங்கள் கருத்துகளை js-ca@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என்றும் அந்த அமைச்சகத்தின் உத்தரவு கூறுகிறது.
பட மூலாதாரம், Government of India
படக்குறிப்பு, கருத்துத் தெரிவிக்க காலக்கெடு நீட்டிப்பு
இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று 35 ஆயிரத்துக்கு கீழே சென்றது
இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை நேற்று திங்கள்கிழமை 35 ஆயிரத்துக்குக் கீழே சென்றது. இந்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரப்படி 24 மணி நேரத்தில் 34,073 பேருக்குத் தொற்று ஏற்பட்டது.
கடந்த 111 நாள்களில் இல்லாத அளவு குறைந்த எண்ணிக்கை இது என்று ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவிக்கிறது.
இது கொரோனா வைரசின் இரண்டாவது அலை இந்தியாவில் மேலும் தணிந்து வருவதைக் காட்டுகிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
ஒலிம்பிக்கில் இந்திய கொடியை சுமந்து செல்லப்போகும் மேரி கோம், மன்பிரீத் சிங்
புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் மேரி கோம், இந்திய ஹாக்கி அணித் தலைவர் மன்பிரீத் சிங் ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் மூவர்ணக் கொடியை சுமந்து செல்வர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலக அளவில் நடக்கும் நிகழ்வுகளை இந்தப் பக்கத்தில் நேரலையாக வழங்குகிறோம். எங்களுடன் இணைந்திருங்கள்.