சசிகலா மீது கொலை மிரட்டல் வழக்கு: சி.வி. சண்முகம் புகார் மீது காவல்துறை நடவடிக்கை

சசிகலா தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக தமிழக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அளித்த புகாரின் பேரில் சசிகலா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.

    பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. அமெரிக்கா, பிரிட்டன் மீது புதின் குற்றச்சாட்டு

    ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்ட பகுதியான கிரீமியாவுக்கு மிகவும் அருகில் ஹெச்.எம்.எஸ் டிஃபெண்டர் (HMS Defender) எனும் பிரிட்டன் போர்க்கப்பல் மிதந்து சென்றதை தொடர்ந்து, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் 'சிக்கலான தூண்டிவிடும்' செயலில் ஈடுபடுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குற்றம் சாட்டியுள்ளார்.

    மூன்றாம் உலகப்போர் வருவதற்கான சூழல் இல்லையென்றாலும், உக்ரைனில் அல்லது உக்ரைனுக்கு அருகில் ராணுவ தளங்களை அமைக்க முயலும் அமெரிக்காவின் நடவடிக்கைகளில் இதுவும் ஓர் அங்கம் என்று அவர் கூறுகிறார்.

    ஜூன் 23 அன்று தங்கள் கப்பல், எந்த நோக்கமும் இல்லாமல் உக்ரைன் கடல் எல்லையில் உள்ள, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கடல்வழித்தடத்தில் தங்கள் கப்பல் சென்றதாக பிரிட்டன் கடற்படை தெரிவிக்கிறது.

    அமெரிக்கா, பிரிட்டன் மீது புதின் குற்றச்சாட்டு

    பட மூலாதாரம், Reuters

  3. வறுமையில் தவித்த எம்.கே.டி. பாகவதர் பேரன்! - அரசு வீட்டுடன் 5 லட்சம் நிதி ஒதுக்கிய மு.க.ஸ்டாலின்

    வறுமையில் தவித்த எம்.கே.டி. பாகவதர் பேரன்! - அரசு வீட்டுடன் 5 லட்சம் நிதி ஒதுக்கிய மு.க.ஸ்டாலின்

    பட மூலாதாரம், STALIN MK / FB

    பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் பேரன் குடும்பத்தினர் வறுமையில் வாடுவதை அறிந்து அரசு சார்பில் வீடும் 5 லட்ச ரூபாய் நிதியையும் ஒதுக்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது, வரவேற்பினைப் பெற்றுள்ளது.

    சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 28 ஆம் தேதி முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு கொடுக்க தியாகராஜ பாகவதரின் மகள் வழிப் பேரன் சாய்ராம் என்பவர் வந்திருந்தார். அங்கிருந்தவர்களிடம் மனு கொடுத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், `தியாகராஜ பாகவதருக்கு 2 மனைவிகள் இருந்தனர். அவர்களில் 2 வது மனைவி ராஜம்மாளின் மகள் அமிர்தலட்சுமியின் மகன் நான். எனக்கு அண்ணன், தங்கை, தம்பி உள்ளனர். அப்பா சிறு வயதிலேயே இறந்துவிட்டார். அம்மாவும் இல்லை. நாங்கள் அனைவரும் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தோம். கொரோனா காலத்தில் மிகவும் சிரமத்தில் இருக்கிறோம். தற்போது சூளைமேட்டில் உள்ள அண்ணன் வீட்டில் வசித்து வருகிறோம். நான் புகைப்பட கலைஞராக இருக்கிறேன். கொரோனாவால் அந்த வேலையும் போய்விட்டது. தற்போது செக்யூரிட்டி வேலைக்குச் சென்று வருகிறேன். எங்களால் வாடகை கொடுக்க முடியவில்லை. எனவே, வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கினால் அங்கேயே வசிப்போம்" என்றார்.

    மேலும் 2008 ஆம் ஆண்டு தங்கள் பாட்டி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டபோது, அப்போதைய முதல்வர் கருணாநிதி ஒரு லட்ச ரூபாய் வழங்கியதையும் நினைவுகூர்ந்தார். #

    இந்நிலையில், சாய்ராம் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் வீடு மற்றும் உதவித் தொகை வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக வெளியான அரசின் செய்திக் குறிப்பில், ` எம்.கே.டி என்று அன்போடு அழைக்கப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர், தமிழ்த் திரைப்பட உலகின் உயர் நட்சத்திர நாயகனும் மிகச் சிறந்த கர்நாடக சங்கீத பாடகராவும் திகழ்ந்தவர். அவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக அன்றைய காலகட்டத்தில் வலம் வந்தன. குறிப்பாக, 1944 ஆம் ஆண்டு வெளியான ஹரிதாஸ் என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த இவர், தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராக கருதப்பட்டார். இந்நிலையில், எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வழிப் பேரன் சாய்ராம் மற்றும் அவரது குடும்பத்தினர், தற்போது மிகவும் ஏழ்மை நிலையில் குடியிருக்க வீடின்றி மிகவும் சிரமமான சூழ்நிலையில் வசித்து வருவதை அறிந்து முதலமைச்சர் ஸ்டாலின், சாய்ராம் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் குறைந்த வாடகையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் பொது ஒதுக்கீட்டின்கீழ் வீடு ஒன்றினை ஒதுக்கித் தர உத்தரவிட்டுள்ளதோடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 5 லட்ச ரூபாயை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  4. சசிகலா மீது கொலை மிரட்டல் வழக்கு: சி.வி. சண்முகம் புகார் மீது காவல்துறை நடவடிக்கை

    சசிகலா

    பட மூலாதாரம், C.V.Shanmugam

    சசிகலா மீது கொலை மிரட்டல் வழக்கு: சி.வி. சண்முகம் புகார் மீது காவல்துறை நடவடிக்கை

    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக தமிழக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அளித்த புகாரின் பேரில் சசிகலா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சில தினங்களுக்கு சமூக ஊடகங்களில் முன்னாள் எம்எல்ஏ கதிர்காமுவிடம் சசிகலா பேசியதாக ஒரு ஆடியோ வைரலானது. அந்த ஆடியோ அனுப்பியவர் சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன். அதில், தனக்கு எதிராக திரும்பினார் என்பதற்காக ஓபிஎஸ் உள்ளிட்ட அவருக்கு ஆதரவாக செயல்பட்ட 10 எம்எல்ஏக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என தாம் கட்சிக்கு உத்தரவிட்டிருந்ததாக சசிகலா கூறியிருந்தார்.

    இது தவிர மேலும் சில ஆடியோ கிளிப்பிங்குகளில் மேலும் சில தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுடன் சசிகலா பேசிய ஆடியோவிலும், ஓபிஎஸ் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் மீது தகுதி நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்க வைத்தது தாம் தான் என்று பேசியிருந்தார்.

    ஆனால், எடப்பாடி பழனிசாமியுடன் ஓபிஎஸ் கைகோர்த்த பிறகு கட்சியின் 18 உறுப்பினர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர் என்றும் சசிகலா பேசினார். மேலும், அதிமுகவின் தற்போதைய தலைமை அரசியல் முதிர்ச்சியுடன் நடப்பதில்லை என்றும் விரைவில் ஆதரவாளர்களை சந்திக்கவிருப்பதாகவும் ஆடியோவில் சசிகலா பேசியுள்ளார்.

    இந்த நிலையில், சசிகலா பேசியதாக கூறப்படும் குறிப்பிட்ட ஆடியோவில் தனக்கு எதிராக கட்சியினரை அவர் தூண்டி விடுவதாக சி.வி. சண்முகம் காவல்துறையிடம் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தின் ரோஷனை காவல் நிலையத்தில் இந்த புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், "சசிகலா என்பவர் யார்? அவர் அம்மா வீட்டில் வேலைக்காரராக இருந்தார். வேலை முடிந்தது அவர் சென்றுவிட்டார். அவருக்கும் அதிமுக கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை," என்று கூறினார். "தன் பினாமி கட்சியை கூட ஜெயிக்க வைக்க இயலாத சசிகலா அதிமுகவை என்ன செய்து விட முடியும்? அதிமுக யார் தயவிலும் இல்லை. அதிமுக யாரையும் நம்பி இல்லை. இது ஒன்றரைக் கோடி தொண்டர்களை நம்பியே இருக்கிறது. அதிமுக தோல்வியடைந்தாலும் வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது," சண்முகம் தெரிவித்தார்.

  5. சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வல்லுறவை ஒருபோதும் ஏற்க மாட்டோம்: ட்விட்டர்

    TWITTER

    பட மூலாதாரம், TWITTER

    சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வல்லுறவை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ட்விட்டர் நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் சில பயனர்கள், குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்ய அந்நிறுவனம் அனுமதி அளித்துள்ளதாகக் கூறி இந்திய சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் காவல்துறையில் புகார் தெரிவித்தது.

    இதன்பேரில் டெல்லி சைபர் கிரைம் காவல்துறை ட்விட்டர் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. போக்சோ சட்டத்திலும் ட்விட்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ட்விட்டர் நிறுவனம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வல்லுறவை ஒருபோதும் ட்விட்டர் நிறுவனம் ஏற்றுக் கொள்ளாது. அத்தகைய படங்கள் இருப்பதாக கூறப்படும் பக்கத்தில் உள்ள இடுகைகள் உடனடியாக நீக்கப்படும் என்று கூறியுள்ளது.

  6. தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? அரசிடம் விளக்கம் கேட்கும் எடப்பாடி பழனிச்சாமி

    AIADMK

    பட மூலாதாரம், Edappadi Palaniswamy

    தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடக்குமா நடக்காதா என்பது குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். .

    சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த கிராம மக்களுக்கு அதிமுகவினர் சார்பில் தேவையான உதவிகளை செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    தேர்தல் நேரத்தில் திமுக சார்பில் 505 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதில் பெட்ரோல் ரூ 5, டீசல் ரூ. 4 விலை குறைப்பு செய்வதாக திமுக சார்பில் வாக்குறுதி கொடுக்கப்பட்டது.

    ஆனால் இதுவரை பெட்ரோல் டீசல், விலை குறைக்கப்படவில்லை என்று கூறினார். தமிழ்நாட்டில் கட்டுமான பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு உள்ள காலத்தில் வேலை இழந்து, கட்டுமான தொழிலாளர்கள் மிகுந்த சோதனைக்கும் வேதனைக்கும் உள்ளாகியுள்ளனர். எனவே திமுக அரசு கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

    தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முறையாக போடப்படுவதில்லை. அதிகளவில் மையத்திற்கு வரும் மக்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

    திமுக தேர்தல் நேரத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலேயே தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்பட்டது.

    அனைத்தும் தெரிந்தும் திமுக தேர்தல் நேரத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுமா என்ற குழப்பத்தில் மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளனர்.

    எனவே நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்பது குறித்து அரசு தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

    அதிமுக தொண்டர்களுடன் சசிகலா தொலைபேசி வாயிலாக உரையாடும் ஆடியோ வெளிவருவது குறித்து கேட்டதற்கு, "அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சசிகலா 10 ஆயிரம் பேரிடம் பேசினாலும் கவலை இல்லை அதிமுக உறுதியாக உள்ளது," என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

  7. புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 15-ம் தேதி வரை நீட்டிப்பு

    Puducherry

    பட மூலாதாரம், Twitter

    புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் கடற்கரை சாலை, பூங்காக்கள் காலை 9 மணிக்கு பதில் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் கோயில்களை மாலை 5 மணிக்கு பதில் இரவு 9 மணி வரை திறந்திருக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது

  8. மக்கள் மனுக்கள் மீது 30 நாளுக்குள் நடவடிக்கை, காவலர்களுக்கு மனித உரிமை மீறல் பயிற்சி: சைலேந்திர பாபு

    சைலேந்திர பாபு

    தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநராக பொறுப்பேற்றுள்ள சைலேந்திர பாபு, பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை விசாரித்து 30 நாட்களுக்குள் அறிக்கை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    தமிழக காவல்துறை தலைமை இயக்குநராக உள்ள திரிபாதியின் பதவிக்காலம் இன்று நிறைவடைகிறது. இதையொட்டி புதிய தலைமை இயக்குநராக முனைவர் சைலேந்திரபாபுவை தமிழக அரசு ஜூன் 29ஆம் தேதி நியமித்தது.

    இதைத்தொடர்ந்து சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் இன்று புதிய டிஜிபி பொறுப்பேற்கும் முன்னர், பதவியில் இருந்து ஓய்வு பெறும் டிஜிபி திரிபாதிக்கு காவல்துறை உயரதிகாரிகள் வாழ்த்து கூறி வழியனுப்பி வைத்தனர். முன்னதாக, புதிய டிஜிபி ஆக பொறுப்பேற்க வந்த சைலேந்திர பாபுவை திரிபாதி தலைமையக வாயில் பகுதியில் வரவேற்றார். பின்னர் இருவரும் காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். இதன் பிறகு புதிய டிஜிபி ஆக சைலேந்திர பாபு பொறுப்பேற்றார்.

    இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காவல்துறை தலைமை இயக்குநர் பதவி ஏற்றிப்பது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு. இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது பதவிக்காலத்தில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாரமரிப்புக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அளிக்கும் மனுக்களில், குறிப்பாக மாநில முதல்வரிடம் கொடுத்த மனுக்கள் மீது 30 நாட்களில் துரித விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும்," என்று கூறினார்.

  9. கனடாவில் வரலாறு காணாத வெப்பம் - டஜன் கணக்கானோர் பலி

    Canada

    பட மூலாதாரம், Getty Images

    கனடா நாட்டில் முன்னெப்போதுமில்லாத வகையில் பதிவாகி வரும் வெப்பத்தால் டஜன் கணக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். அங்கு 49.5 டிகிரிக்கும் மேலாக அதிகபட்ச வெப்பம் நிலவுகிறது.

    இதற்கு முந்தைய வாரங்களில் அதிகபட்சமாக கனடாவில் 45 டிகிரி அளவில்தான் வெப்பம் பதிவானது.

    இந்த வெப்பநிலை வயோதிகர்களுக்கும் உடல்நல பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளவர்களுக்கும் மோசமானதாக இருக்கலாம் என்று வான்கூவர் புறநகர் பகுதி போலீஸ் கேப்டன் மைக் கலன்ஜ் தெரிவித்துள்ளார்.

  10. கோவாக்சின் தடுப்பூசி உடன்பாட்டை ரத்து செய்கிறது பிரேசில்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசியை வாங்குவதற்காக செய்து கொள்ளப்பட்ட சுமார் 2500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை ரத்து செய்ய இருப்பதாக பிரேசில் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

    இந்தத் தகவலை ராய்ட்டர் செய்தி நிறுவனத்தை மேற்கோள்காட்டி ஏன்என்ஐ வெளியிட்டிருக்கிறது.

    பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து சுமார் 2 கோடி டோஸ் கோவாக்சின் மருந்துகளை வாங்குவதற்கு பிரேசில் உடன்பாடு செய்து கொண்டிருந்தது.

    ஆனால் இதில் முறைகேடு நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்ததை அடுத்து அது அதிபர் பொல்சனேரோ அரசுக்குத் தலைவலியாக அமைந்தது.

    தடுப்பூசி உடன்பாட்டில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இருப்பினும் பாரத் பயோடெக் நிறுவனத்துடனான உடன்பாட்டை ரத்து செய்வதற்கு பிரேசில் சுகாதாரத்துறை முடிவு செய்திருக்கிறது.

  11. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நிகழ்வுகளை சுருக்கமாகவும் விரைவாகவும் இந்தப் பகுதியில் வழங்குகிறோம். இணைந்திருங்கள்!