நன்றி நேயர்களே!
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் புதன் காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.
பிபிசியின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.
43 வயதுக்கும் குறைவாக உள்ள பெண்களுக்கு இந்த அனுமதி பொருந்தும். பிரான்ஸ் சுகாதார சேவை இதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்ளும்.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் புதன் காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.
பிபிசியின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.
ஒருபாலுறவு பந்தத்தில் இருக்கும் பெண்களும், திருமணம் ஆகமலோ, மணமானபின் பிரிந்தோ தனியாக வாழும் பெண்களும் வெளிச் சோதனை முறை கருக்கட்டல் (In Vitro Fertilization) மூலம் செயற்கை கருத்தரிப்பு செய்துகொள்ள அனுமதி வழங்கும் சட்டத்தை பிரான்ஸ் இயற்ற உள்ளது.
43 வயதுக்கும் குறைவாக உள்ள பெண்களுக்கு இந்த அனுமதி பொருந்தும். பிரான்ஸ் சுகாதார இதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்ளும்.
இரண்டு ஆண்டுகால போராட்டங்கள் மற்றும் நாடாளுமன்ற விவாதங்களுக்கு பிறகு இந்தச் சட்டம் பிரான்ஸ் நாட்டில் அமலாக உள்ளது.
இத்தகைய சட்டம் ஏற்கனவே பிரிட்டன் மற்றும் பிற 10 ஐரோப்பிய நாடுகளில் அமலில் உள்ளது.
சட்டம் அனுமதிக்காததால் செயற்கை கருத்தரிப்பு செய்துகொள்ள பல பிரெஞ்சு பெண்கள் அதிகம் செலவு செய்து பெல்ஜியம் மற்றும் ஸ்பெயின் சென்று வந்தனர்.

பட மூலாதாரம், Sylendra Babu
தமிழ்நாடு காவல்துறையின் புதிய தலைமை இயக்குநராக சி.சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு இன்று மாலை பிறப்பித்துள்ளார். ஏற்கெனவே இவர் டிஜிபி அந்தஸ்தில் ரயில்வே பிரிவு டிஜிபி ஆக பணியாற்றி வருகிறார்.
ஜூலை 1ஆம் தேதி முதல் காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல் படையின் தலைமை அதிகாரியாக செயல்படுவார். இவரது பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளாகும்.
இந்திய காவல் பணியில் 1987ஆம் ஆண்டில் சேர்ந்த சைலேந்திர பாபுக்கு தமிழ்நாடு காவல் பிரிவு ஒதுக்கப்பட்டது.
1962ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி, தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறையில் பிறந்த இவர், தமிழக விவசாய கல்லூரியில் பிஎஸ்சி வேளாண் படிப்பும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மக்கள்தொகை ஆய்வுப்பிரிவில் முதுகலை மேல்படிப்பும் முடித்தார்.
காணாமல் போன குழந்தைகள் என்ற தலைப்பில் பகுப்பாய்வு செய்து சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்ற இவர், பின்னாளில் மனித ஆற்றல் பிரிவில் முதுகலை பட்டமும் (எம்பிஏ) பெற்றார்.
கட்டுக்கோப்புடன் உடலை வைத்திருப்பது, வறிய நிலையில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் கலந்துரையாடுவது, இடைவிடாது உடற்பயிற்சியில் ஈடுபடுவது என தொடர்ச்சியாக தன்னை எப்போதுமே மும்முரமாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் மிக்கவராக இவர் அறியப்பட்டு வருகிறார்.
நீச்சல், தடகளம், துப்பாக்கி சுடுதல், நீண்ட தூர மிதிவண்டி ஓட்டுதல் போன்ற விளையாட்டிலும் இவருக்கு ஆர்வம் உண்டு. 2013ஆம் ஆண்டில் தமிழ்நாடு கடலோர காவல் படை தலைமை அதிகாரியாக இருந்தபோது கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான 890 கி.மீ தூர சைக்கிள் ஓட்டத்தை வழிநடத்தி கடலோர குடியிருப்புவாசிகளிடையே கடலோர காவல் படை பணியின் சிறப்புகளை விளக்கிய நடவடிக்கை மாநில அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்திய காவல் பணியில் 1987ஆம் ஆண்டு சேர்ந்த இவருக்கு தமிழக காவல் பிரிவு ஒதுக்கப்பட்ட பிறகு, தருமபுரி, கோபிசெட்டிபாளையம், சேலம் திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் உதவி கண்காணிப்பாளர் ஆக பணியாற்றினார். பிறகு பதவி உயர்வு பெற்று கண்காணிப்பாளராக செங்கல்பட்டு, சிவகங்கை, கடலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றினார். பின்னர் ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை கண்காணிப்பாளராக 2000ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2001ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இவர் பணியாற்றினார்.
இதைத்தொடர்ந்து காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) ஆக பதவி உயர்வு பெற்று விழுப்புரம் சரகத்திலும் வட சென்னை , தென் சென்னை ஆகிய காவல் சரகத்தில் இணை ஆணையாளராகவும் பின்னர் திருச்சி சரக டிஐஜி ஆகவும் இவர் பணியாற்றினார்.
பின்னர் கரூரில் உள்ள தமிழ்நாடு காகித ஆலையின் தலைமை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட இவர், அங்கு டிஐஜி அந்தஸ்தில் இருந்து ஐ.ஜி ஆக பதவி உயர்வு பெற்ற பிறகும் அதே அலுவலகத்தில் பணியைத் தொடர்ந்தார்.
காவல்துறை தலைவர் (ஐ.ஜி) ஆக பதவி உயர்வு பெற்றதும், 2008 முதல் 2010ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை தலைவர் ஆக சைலேந்திரபாபு பணியாற்றினார்.
இதைத்தொடர்ந்து கோவை நகர காவல்துறை ஆணையாளராகவும் பின்னர் தமிழ்நாடு காவல்துறையின் வடக்கு மண்டல காவல்துறை தலைவராகவும் இவர் பணியாற்றினார்.
இதன் பிறகு 2012ஆம் ஆண்டில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக பதவி உயர்வு பெற்றதும் தமிழ்நாடு கடலோர காவல் படையின் தலைமை அதிகாரியாக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார்.
பின்னர், காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் டிஜிபி ஆக ஓரு மாதத்துக்கும் குறைவான காலமே பணியாற்றிய இவர், மீண்டும் கடலோர காவல் படை கூடுதல் டிஜிபி ஆக நியமிக்கப்பட்டு அந்த பதவியில் சரியாக ஒரு ஆண்டு, ஒரு மாதம் நீடித்தார்.
இதன் பின்னர் சிறைத்துறை கூடுதல் டிஜிபி ஆக 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் நியமிக்கப்பட்ட இவர், அதே ஆண்டு அக்டோபர் மாதம் ரயில்வே கூடுதல் டிஜபி ஆக நியமிக்கப்பட்டார். அதே பிரிவில் இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு டிஜிபி அந்தஸ்தில் சைலேந்திர பாபு பணியைத் தொடர்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானைகள் மற்றும் வெள்ளைப் புலிக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையின் முடிவுகளை பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
சென்னையை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளது.
அங்குள்ள உயிரினங்களை பராமரிப்பதற்கான ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதற்காக பூங்காவில் உள்ள அனைத்துப் பணியாளர்களுக்கும் கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர்களுக்கு கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டது.
இந்நிலையில், உயிரியல் பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் நீலா என்ற பெண் சிங்கம் உயிரிழந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பூங்காவில் உள்ள கால்நடை மருத்துவர்கள், மற்ற சிங்கங்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் பணிகள் நடந்தன. அப்படியும் கடந்த 16 ஆம் தேதி ஆண் சிங்கம் ஒன்று கொரோனா தொற்றால் உயிரிழந்தது.
இதனால் இதர விலங்குகளுக்கும் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள பூங்கா நிர்வாகம் முடிவெடுத்தது. இதற்காக இரண்டு பெண் யானைகள் மற்றும் வெள்ளைப் புலி ஒன்றின் மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தது. இதன் முடிவுகள் கடந்த 25 ஆம் தேதி கிடைத்துள்ளன.
இது குறித்து வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியில் பூங்காவின் துணை இயக்குநர் நாக சதீஷ் கிடிஜாலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், `உயிரியல் பூங்காவில் பிரகுர்தி, ரோகிணி என்ற இரண்டு பெண் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதன் துதிக்கை மற்றும் மலப்புழையில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், கடந்த 18 ஆம் தேதி போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்குகள் நோய் பகுப்பாய்வு நிறுவனத்துக்கு (ICAR-NIHSAD) அனுப்பப்பட்டது.
இதைத்தொடர்ந்து 16 வயதுடைய பீஷ்மர் என்ற வெள்ளைப் புலியின் மாதிரியும் அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக வெளியான சோதனை முடிவுகளின்படி சார்ஸ் கோவிட் -2 தொற்று இல்லை இல்லை என முடிவுகள் வெளியாகியுள்ளது,' எனத் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், M.K. Stalin
கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் மருத்துவ ஆக்சிஜனை வாங்கவும் கொரோனா மூன்றாம் அலை முன்னேற்பாடுகளுக்காகவும் ரூ. 100 கோடியை ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இதுநாள்வரை கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு உதவிடும் வகையில் நிதி வழங்குமாறு முதல்வர் விடுத்த வேண்டுகோளை ஏற்று இதுவரை ரூ. 353 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நன்கொடை கொரோனா நிவாரண பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று முதல்வர் அளித்த உறுதிமொழியின்படி இந்த நிதி மூலம் ரெம்டெசிவீர் போன்ற உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவனைகளுக்கு வழங்குவதற்காகவும் மற்ற மாநிலங்களில் இருந்து திரவ ஆக்சிஜனை ரயில் போக்குவரத்து மூலமாக கொண்டு வரவும் தேவையான கன்டெய்னர்களை வாங்கவும் முதல் கட்டமாக ரூ. 50 கோடியை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இரண்டாம் கட்டமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை நடத்த அதற்குரிய கிட்டுகளை வாங்கவும் ரூ. 50 கோடி வழங்கவும் முதல்வர் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து சிப்காட் நிறுவனம் மூலம் சிங்கப்பூர் மற்றும் பிற வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் உருளைகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் இதர மருத்துவ கருவிகளை வாங்க ரூ. 41.40 கோடியும் கருப்புப்பூஞ்சை நோய் சிகிச்சைக்கு தேவைப்படும் ஆம்போடெரிசின் உள்ளிட்ட அனைத்து உயிர் காக்கும் மருந்துகளை வாங்க ரூ. 25 கோடியும் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து கொரோனா நோய் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் திரவ மருத்துவ ஆக்சிஜனை வாங்கவும் இந்த தொற்றின் மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும் ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு

பட மூலாதாரம், TWITTER
ட்விட்டர் சமூக வலைதளத்தில் குழந்தைகள் ஆபாச இடுகை தொடர்பான தகவலை அனுமதித்தது தொடர்பாக இந்திய சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அளித்த புகாரைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் மீது டெல்லி காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.
ட்விட்டர் வலைதள பக்கத்தில் பாலியல் ரீதியாக குழந்தைகள் தவறாக பயன்படுத்தப்படுவது தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளதால் அத்தகைய இடுகைகளை தமது தளத்தில் அனுமதித்த ட்விட்டர் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு தேசிய சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) டெல்லி காவல்துறைக்கு கடந்த வாரம் கடிதம் அனுப்பியிருந்தது.
இந்த விவகாரத்தில் டெல்லி காவல்துறை சைபர் க்ரைம் பிரிவு துணை ஆணையாளர் அன்யேஷ் ராய் ஜூன் 29ஆம் தேதி ஆணையத்தின் முன்பு ஆஜராக வேண்டும் என்றும் அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.
இந்த நிலையில், என்சிபிசிஆர் அளித்த புகாரின்பேரில், ட்விட்டர் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு

பட மூலாதாரம், Getty Images
`நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு குழு அமைப்பதற்கு உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி பெறப்பட்டதா?' என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. மேலும், `உச்ச நீதி மன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது' எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், `உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது' என அரசின் தலைமை வழக்கறிஞரிடம் தெரிவித்தனர். மேலும், `குழு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா?' எனக் கேள்வி எழுப்பினர். இதையடுத்து அரசிடம் விளக்கம் பெற அவகாசம் கேட்கப்பட்டதால், வரும் ஜூலை 5 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

புதுச்சேரி அமைச்சரவையில் பதவியேற்பின்போது "இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப் பரப்பு" என்று ரகசிய காப்பு பிரமாணத்தில் இடம்பெற்ற வார்த்தை பேசுபொருளாக மாறியுள்ளது.
சமீப காலமாக மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் பேச்சிலும், எழுத்திலும் குறிப்பிட்டு வருகின்றனர். இதற்கு தமிழக பாஜக தரப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஒன்றிய அரசு என்று சொல்வது தவறானது என்றும், மத்திய அரசு என்று சொல்வதே சரியானது என்றும் கருத்து தெரிவித்தனர்.
இந்த சூழலில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய அமைச்சரவை பதவியேற்றது. இதில் பதவியேற்ற என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அமைச்சர்களாக பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
அப்போது அமைச்சர்கள் ஒவ்வொருவரும், "இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப் பரப்பின் அமைச்சர் என்ற வகையில் என்னுடைய கடைமைகளை உண்மையாகவும், மனச்சான்றின் படியும் ஆற்றுவேன்" என்ற உறுதிமொழியை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூற, அதை பதவியேற்ற அமைச்சர்களும் அப்படியே கூறினர்.

பட மூலாதாரம், PETER ALPHONSE
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினர் நலன்களைக் காத்திட முன்னாள் முதல்வர் கருணாநிதியால் சிறுபான்மையினர் வாரியம் அமைக்கப்பட்டதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1989 மற்றும் 1991-இல் தென்காசி சட்டமன்றத் தொகுதியில் இருந்தும், 2006-இல் கடையநல்லூர் தொகுதியில் இருந்து சட்டமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டவர் பீட்டர் அல்போன்ஸ்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
கோவீஷீல்ட் தடுப்பூசிக்கு அவசரகாலப் பயன்பாட்டு அனுமதி வழங்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் சீரம் நிறுவனம் கோருவதாக பிபிசிக்கு தெரியவந்திருக்கிறது.
ஐரோப்போ முழுவதும் பயணம் மேற்கொள்வதற்காக வழங்கப்படும் டிஜிட்டல் சான்றிதழ் பெறுவதற்கு கோவிஷீல்ட் தடுப்பூசி தகுதிபெறவில்லை என்ற தகவல் பரவிய நிலையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. டிஜிட்டல் பயணச் சான்றிதழ் தற்போது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
ஐரோப்பிய மருந்து முகமையால் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே தற்போது இந்தச் சான்றிதழ் கிடைக்கும்.
"இந்தச் சிக்கலுக்கு கூடிய விரைவில் தீர்வு காண்போம்" என சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அடார் பூன்னவாலா கூறியிருக்கிறார்.
ஆயினும் திங்கள்கிழமையன்று பிபிசியிடம் பேசிய ஐரோப்பிய மருந்துகள் முகமை, இதுவரை சீரம் நிறுவனம் அனுமதிக்காக முறையாக விண்ணப்பிக்கவில்லை என்று கூறியது.
ஒவ்வொரு நாடும் யாரை உள்ளே அனுமதிப்பது என்பது குறித்து முடிவெடுத்துக் கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.

பட மூலாதாரம், Mahi Mahulati
கொரோனா வைரஸின் மூன்றாவது அலை இந்தத் தேதியில் வரும் என்று கூறுவது சரியாக இருக்காது என்று இந்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக் குழுவின் தலைவர் வி.கே. பால் கூறியுள்ளார்.
புதிதாகப் பரவி வரும் டெல்டா பிளஸ் திரிபு மிக வேகமாகப் பரவும் என்பதற்கு அறிவியல் ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்டா வைரஸ் காரணமாக தடுப்பூசிகளின் ஆற்றல் குறையும் என்பதும் இதுவரை உறுதிப்படுத்தப்பட வில்லை என்றும் வி.கே.பால் கூறியுள்ளார்.
டெல்டா பிளஸ் திரிபு புதிது என்பதால் அது தொடர்பான ஆய்வுத் தகவல்கள் நமக்கு மிகக் குறைவாகவே இருக்கிறது என்றும் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இரண்டாவது அலையின் வீரியம் சற்று குறைந்திருக்கும் நிலையில் நாளொன்றுக்கு சுமார் 50 ஆயிரம் வரை தொற்று கண்டறியப்படுகிறது.
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாகவும் விரைவாகும் இந்தப் பகுதியில் வழங்குகிறோம். இணைந்திருங்கள்.