You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

சீனா - ரஷ்யா புதுப்பித்துக் கொண்ட 20 வருட நட்புறவு - மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

இந்த நட்புறவு ஒப்பந்தத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்வதாக ஷி ஜின்பிங்கும் புதினும் தெரிவித்தனர். வெளியுறவு கொள்கை விவகாரங்களில் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்து செயல்படுவதால்தான் தங்களின் சர்வதேச ஒத்துழைப்பு நிலைத்து இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் குறிப்பிட்டார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. சீனா - ரஷ்யா புதுப்பித்துக் கொண்ட 20 வருட நட்புறவு - மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

    சீனாவும், ரஷ்யாவும் அவற்றின் 20 வருட நட்புறவை புதுப்பித்துக் கொள்ளும் அறிவிப்பை இன்று முறைப்படி வெளியிட்டன.

    இது தொடர்பாக சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் காணொளி காட்சி வழியாக பேசினர்.

    2001ஆம் ஆண்டில் இரு தரப்புக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட நட்புறவு ஒப்பந்தத்தை நினைவு கூர்ந்த தலைவர்கள், இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் தங்களுடைய நட்புறவு புதிய உச்சத்தை தொட்டதாக பெருமிதப்பட்டனர்.

    இந்த நட்புறவு ஒப்பந்தத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர். வெளியுறவு கொள்கை விவகாரங்களில் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்து செயல்படுவதால்தான் தங்களின் சர்வதேச ஒத்துழைப்பு நிலைத்து இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் குறிப்பிட்டார்.

    சீனா, ரஷ்யா இடையிலான கேந்திர ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்திய ஷி ஜின்பிங், பொது நல விவகாரங்களில் இரு நாடுகளும் சர்வதேச அரங்குகளில் ஒன்றுக்கொன்று தோள் கொடுக்கும் என்று கூறினார்.

    ஒரு காலத்தில் எதிரிகளாக விளங்கிய இந்த இரு முன்னாள் கம்யூனிஸ்ட் நாடுகளும் மேற்கு நாடுகளின் அன்னிய போக்குக்கு மத்தியில் அவற்றின் நல்லுறவை பேணிப்பாதுகாத்து வருகின்றன.

    எதிர்காலத்தில் ரஷ்யா, சீனா இடையே ராணுவ கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு பதில் தருவதை இந்த நாடுகளும் முந்தைய காலங்களில் தவிர்த்து வந்தன. ஆனால், அத்தகைய வாய்ப்பை ஒதுக்கி விட முடியாது என்று கூறியிருக்கிறார் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்.

  2. வந்துகொண்டிருக்கும் செய்தி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு 1.1 லட்சம் கோடி வரை கடன் உத்தரவு

    கொரோனா வைரஸ் பரவலால் பாதிப்படைந்த இந்திய பொருளாதாரத்தை சீரமைக்க உதவும் வகையில் பல அறிவுப்புகளை வெளியிட்டுள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

    • எட்டு பொருளாதார மீட்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் நான்கு முற்றிலும் புதியது. ஒன்று சுகாதார கட்டமைப்பிற்கானது. கொரோனா பாதிக்கப்பட்ட துறைகளுக்கு 1.1 லட்சம் கோடி கடன் உத்தரவு வழங்கப்படும். சுகாதார துறைக்கு 50,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
    • இந்த வருடம் ஏழை மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கான செலவு 93,869 கோடி ரூபாய். பிரதான் மந்திரி கரிப் கல்யான் யோஜனா திட்டத்திற்கு 2 லட்சத்து 27,841 கோடி ரூபாய் செலவிடப்படும்.
    • சர்வதேச சுற்றுலாத் துறையை புதுப்பிக்க, முதலில் வரும் 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா நபர்களுக்கு விசா கட்டணம் கிடையாது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை செயல்பாட்டில் இருக்கும். அல்லது ஐந்து லட்சம் விசாக்கள் வழங்கப்படும் வரை இருக்கும்.
    • மேலும் 11 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகளுக்கும் சுற்றலா சார்ந்த நிறுவனங்களுக்கும் நிதி உதவி அளிக்கப்படும்.
    • அவசரநிலை கடனளிப்பு உத்தரவாத திட்டத்திற்கு மேலும் 1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • குழந்தைகள் மற்றும் அவர்களின் நலத்தை வலியுறுத்தி அவசர கால தயாரிப்புகளுக்காக பொது சுகாதார துறைக்கு 23, 220 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • புதிய கடன் உத்தரவு திட்டத்தின் மூலம், சிறுநிதி நிறுவனங்கள் வழியாக தனி நபர் ஒருவருக்கு 1.25 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். இதற்கான வட்டி ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின்படி 2 சதவீதத்துக்கு குறைவாக இருக்கும்.
  3. பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கிய தமிழக அரசு - அற்புதம்மாள் உருக்கம்

    பேரறிவாளனின் உடல்நிலை காரணமாக அவருக்கான பரோல் காலத்தை மேலும் ஒரு மாதம் நீட்டித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன், அடிக்கடி உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் கொரோனா காலத்தில் அவரது உடல்நிலையில் மேலும் பாதிப்பு ஏற்படவே வாய்ப்பு அதிகம் என மருத்துவர்கள் தெரிவித்ததால், பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல் வழங்க வேண்டும் என முதலமைச்சரிடம் அற்புதம்மாள் கோரிக்கை வைத்திருந்தார்.

    இதை ஏற்று பரோல் வழங்கப்பட்டதால், கடந்த மே மாதம் 28 ஆம் தேதி சென்னை புழல் சிறையில் இருந்து சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்குத் திரும்பினார்.அவருக்குத் தொடர் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பதால் மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிப்பு செய்ய வேண்டும் என முதலமைச்சரிடம் அற்புதம்மாள் கோரிக்கை வைத்தார். இதை ஏற்று பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவு குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அற்புதம்மாள், `30 ஆண்டுகளின் தனிமை, சிறைவாசம் தந்து விட்ட மன அழுத்தம், அதனால் ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகத் தொற்று, முடக்குவாதம், வயிற்று கோளாறு என தொடர் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையில் கொரோனா தொற்று காலத்தில் சிறையில் இருப்பது பேராபத்து என சிறை அரசு மருத்துவர் அளித்த ஆலோசனையை ஏற்று வீட்டிலிருந்தபடி தொடர் மருத்துவம் பெற விடுப்பு வழங்கப்பட்டது. தற்போதுதான் மருத்துவம் தொடங்கி உள்ள சூழலில் அது தடைபடாமல் தொடர்ந்திடும் வகையில் அறிவுக்கு விடுப்பு நீட்டிப்பினை கனிவுடன் வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,' எனப் பதிவிட்டுள்ளார்.

  4. தடுப்பூசிகள் கையிருப்பு குறைவாக இருப்பதால் 45 தடுப்பூசி முகாம்கள் நிறுத்தம்

    ”தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தயாராக இருந்தாலும் போதிய அளவு தடுப்பூசிகள் இல்லை” என்று தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வழக்குரைஞர்களுக்கான தடுப்பூசி முகாமில் தெரிவித்துள்ளார்.சென்னை சேப்பாக்கத்தில் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமில் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி உள்பட நீதிபதிகள் பலரும் பங்கேற்றனர். இந்த தடுப்பூசி முகாமில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அப்போது அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசுகையில், ``காலையில் நான் வருகின்ற இடங்களில் எல்லாம், தடுப்பூசிகள் இல்லை என்ற பெயர்ப் பலகைகள் தொங்கிக் கொண்டிருந்தன. உண்மையில், வருத்தமாகத்தான் இருந்தது. தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்கு ஒட்டுமொத்த தமிழர்களும் தயாராகத்தான் உள்ளனர். கிராமப்புறங்களில் மட்டுமல்லாமல் மலைவாழ் பழங்குடிகள்கூட தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், தடுப்பூசிகள் இல்லை என்ற நிலைதான் உள்ளது.இதுவரையில் நமக்கு 1 கோடியே 44 லட்சத்து 39 ஆயிரத்து 940 தடுப்பூசிகள் வந்துள்ளன. இதுவரையில் நாம் செலுத்தியுள்ளது என்பது 1 கோடியே 41 லட்சத்து 50 ஆயிரத்து 249 தடுப்பூசிகள். இப்போது கையிருப்பில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 345 தடுப்பூசிகள் மட்டுமே. இந்த ஊசிகளில் இந்நேரம் பாதி முடிந்திருக்கும். விரைந்து தடுப்பூசியை வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்" என்றார்.`` சென்னையில் தடுப்பூசிகள் கையிருப்பு குறைவாக இருப்பதால் 45 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதுதவிர, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற மையங்களில் 19 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மொத்தமாக 5 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் மட்டும் கையிருப்பில் உள்ளன. இதனால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது" என்கிறார் மா.சுப்ரமணியன்.தடுப்பூசி போடுவதில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி முதலிடத்தில் இருப்பதாகவும் அமைச்சர் பெருமிதப்பட்டார். அங்கு இதுவரையில் 90,000 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

  5. இலங்கைக்கு கடத்த முயன்ற சுறா துடுப்பு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஐவர் கைது

    இலங்கைக்கு கடத்த சரக்கு வாகனத்தில் தூத்துக்குடியில் இருந்து கீழக்கரைக்கு கொண்டு வரப்பட்ட சுறா துடுப்பு, ஏலக்காய், பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்த மெரைன் போலீசார் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை கைது செய்து விசராணை நடத்தி வருகின்றனர்.

    ராமேஸ்வரத்திற்கு அருகே இலங்கை உள்ளதால் தமிழகத்தில் இருந்து கஞ்சா, கடல் அட்டை, பீடி இலை, கடல் பல்லி உள்ளிட்டவைகள் இலங்கைக்கும் அதே போல் இலங்கையில் இருந்து தங்க கட்டிகள் தமிழகத்திற்கும் கடல் வழியாக கடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் காயல் பட்டினத்தில் இருந்து ராமநாதபுரம் வந்த சரக்கு வாகனத்தை திருப்புல்லாணி அருகே தேவிபட்டிணம் மெரைன் போலீசார் நிறுத்தி சோதனை செய்த போது வாகனத்தில் தலா 30 கிலோ வீதம் 15 மூட்டைகளில் இருந்த 450 கிலோ தடைசெய்யப்பட்ட சுறா இறக்கை, தலா 50 கிலோ வீதம் 5 மூட்டைகளில் 250 கிலோ ஏலக்காய் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து வாகன ஓட்டுநரிடம் போலீசார் விசாரித்தனர்.

    இப்பொருட்களை கீழக்கரையில் உள்ள குடோனுக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தார். அதன் அடிப்படையில், குடோனை போலீசார் சோதனை செய்தனர். அங்கு பதப்படுத்திய நிலையில் இருந்த 55 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    இப்பொருட்கள் அனைத்தும் மருத்துவ பயன்பாட்டிற்காக கீழக்கரையில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்தது என விசாரணையில் தெரிய வந்தது. பறிமுதல் செய்த பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.16.62 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை கைது செய்த மெரைன் போலீசார் அவர்களிடம் விசாரடை நடத்தி வருகின்றனர்.

  6. கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன்

    ஆன்லைன் தளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவது மற்றும் குடிமக்களின் உரிமைகள் குறித்து விவாதிக்க, நாடாளுமன்ற தகவல் தொடர்பு நிலைக்குழு ஃபேஸ்புக் மற்றும் கூகுள் அதிகாரிகளுக்கு, அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலைக்குழுவிற்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தலைவராக உள்ளார்.

    குடிமக்களின் சிவில் உரிமைகளை பாதுகாப்பது மற்றும் சமூக வலைதளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து ஆலோசிக்க இந்நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக சமூக வலைதளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்தும் ஆன்லைன் செய்திகள் குறித்தும் விசாரிக்க ஜூன் 18ஆம் தேதியன்று இந்த கமிட்டியின் முன்பு டிவிட்டரின் பிரதிநிதி ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த கமிட்டி யூட்யூப் மற்றும் பிற சமூக ஊடக தளங்களின் பிரதிநிதிகளுக்கும் இம்மாதிரியான அழைப்புகளை விடுக்கவுள்ளது.

    இந்திய அரசு இயற்றிய புதிய தொழில்நுட்ப விதிமுறைகள் இந்த ஆண்டு மே மாதம் 26 தேதி முதல் அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  7. புல்வாமாவில் குடும்பத்துடன் கொல்லப்பட்ட சிறப்பு காவல் அதிகாரி சம்பவம்: அதிகாரிகள் விசாரணை

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் நடத்திய துப்பாக்கி சூட்டில் சிறப்பு காவல் அதிகாரி (எஸ்பிஓ) ஃபயாஸ் அகமதும் அவரது மனைவியும் உயிரிழந்த நிலையில், இன்று அதிகாலை அந்த சம்பவத்தில் துப்பாக்கி தோட்டா காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவரது மகளும் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் அவந்திபோரா பகுதியின் ஹரிபரிகாம் என்ற இடத்தில் நடந்துள்ளது. அந்த இடம் முழுவதும் தற்போது காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

    எஸ்பிஓ ஃபயாஸ் அகமதின் வீட்டுக்குள் நேற்றி இரவு நுழைந்த ஆயுததாரிகள், வீட்டில் இருந்தவர்கள் மீது சுட்டதாகத் தெரிகிறது.

    இந்த சம்பவத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்ததில் ஃபயசும் அவரது மனைவியும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்,

    அவரது மகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், அவரும் இன்று காலை உயிரிழந்தார்.

  8. ஜம்மு விமானப்படை தளத்தில் டிரோன் தாக்குதல்: இரண்டு இந்திய வீரர்கள் காயம்

    பாகிஸ்தான் எல்லையில் இருந்து 14 கி.மீ தூரத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இண்டு வெடிப்பு சம்பவத்தில் இரண்டு இந்திய வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.

    அது டிரோன் வெடிகுண்டு தாக்குதலாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.37 முதல் 1.43 மணியளவில் நடந்துள்ளது.

    ஒரு வெடிப்பு சம்பவத்தில் விமானப்படை தளத்தின் தொழில்நுட்ப பிரிவின் மேற்கூரை லேசாக சேதம் அடைந்ததாகவும் மற்றொரு வெடிப்பு சம்பவம் திறந்தவெளி பகுதியில் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலை தீவிரவாத நடவடிக்கை என்று ஜம்மு காஷ்மீர் காவல்துறை தலைவர் தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.

    அடையாளம் தெரியாத நபர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்ஐஏ தனது வசம் எடுத்துக் கொண்டுள்ளது.

    இந்த ஏஜென்சிதான் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை விசாரிப்பதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட புலனாய்வு அமைப்பாகும். இதே வேளை, ஜம்முவில் மேலும் ஒரு தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஐஜி தில்பாக் கூறியுள்ளார்.

    மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் டிரோனில் வெடிகுண்டு நிரப்பி அதை வெடிக்க வைக்கும் நோக்குடன் இருந்த நபர் பிடிபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், அந்த நபருக்கும் ஜம்மு எல்லை விமானப்படை தளத்தில் நடந்த சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பதை இன்னும் காவல்துறையினர் உறுதிப்படுத்தவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

  9. கொரோனா டெல்டா திரிபு: ஆஸ்திரேலியாவில் பாதிப்பு எண்ணிக்கை 128 ஆக உயர்வு

    ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கொரோனா டெல்டா திரிபால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.

    வடக்கு பிராந்தியம், குயீன்ஸ்லாந்து, மேற்கு ஆஸ்திரேலியா ஆகியவற்றிலும் சிலருக்கு இந்த வகை திரிபின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த நாட்டில் ஒரே நேரத்தில் பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் பதிவாவது இதுவே முதல் முிறை. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் மாகாண தலைவர்கள் திங்கட்கிழமை அவரச ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

    கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஆஸ்திரேலியா மிகவும் முக்கியமான கட்டத்தில் இருப்பதாக நாட்டின் நிதித்துறை அமைச்சர் ஜோஷ் ஃபிரைடன்பெர்க் தெரிவித்துள்ளார்.

    ஏற்கெனவே ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக பல்வேறு மாகாண எல்லைகள் மூடப்பட்டுள்ளன. ஏராளமான கட்டுப்பாடுகளும் அமலில் உள்ளன. இருந்தபோதும், கொரோனா பெருந்தொற்றின் புதிய கட்டமாக மிகவும் ஆபத்தான டெல்டோ திரிபை நாடு எதிர்கொண்டுள்ளதாகக் கருதுவதாக ஃபிரைடென்பெர்க் கூறியுள்ளார்.

    சமீபத்திய பாதிப்பு அளவின் அதிகரிப்பால் சிட்னி, டார்வின் உள்பட நான்கு நகரங்களில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

  10. இராக், சிரியாவில் அமெரிக்கா வான் தாக்குதல்: இரான் ஆதரவு தீவிரவாத குழுக்களுக்கு இலக்கு

    இராக், சிரியாவில் இரான் ஆதரவு தீவிரவாத குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தி வருவதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.

    அமெரிக்க படையினர் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, அந்த நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்காக பயன்படுத்தப்படும் வளாகங்கள், ஆயுத கிடங்குகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்படுவதாக பென்டன் கூறியுள்ளது. அமெரிக்க படையினரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் அதிபர் ஜோ பைடன் தெளிவாக உள்ளார் என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.

    சமீபத்திய மாதங்களில் இராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க படையினரின் தளங்களை இலக்கு வைத்து பல்வேறு டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

    ஆனால், அதில் தமது பங்களிப்பு ஏதுமில்லை என்று இரான் தொடர்ந்து மறுத்து வருகிறது. இராக்கில் ஜிஹாதிகள் இஸ்லாமியவாத நாடு என தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் குழுவுக்கு எதிராக போரிடும் சர்வதேச கூட்டுப்படையின் அங்கமாக 2,500 அமெரிக்க துருப்புகள் முகாமிட்டுள்ளன.

    இந்த நிலையில், பென்டகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, பாதுகாப்பு காரணங்களுக்காக நடத்தப்பட்ட துல்லியமான வான் தாக்குதல்களின் மூலம் சிரியாவில் இரண்டு இலக்குகளும் இராக்கில் ஒரு இலக்கும் குறி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கதாய்ப் ஹெஸல்போலா, கதாய்ப் சய்யீத் அல் ஷுஹாதா ஆகிய இரானிய ராணுவ ஆதரவு பெற்ற தீவிரவாத குழுக்கள், இலக்கு வைக்கப்பட்ட இடங்களில் ஆயுதங்களை குவித்து வைத்திருந்ததாக பென்டகன் தெரிவித்துள்ளது.

    2009ஆம் ஆண்டு முதல், கதாய்ப் ஹெஸ்போலா குழுவை தீவிரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இராக்கில் அமைதிக்கு அச்சுறுத்தலையும் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்த அந்த குழு முயல்வதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.