You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சிங்கப்பூரில் வீட்டுப் பணிப்பெண்ணை தொடர்ச்சியாக சித்திரவதைக்கு உள்ளாக்கி, பட்டினிப்போட்டு, பிறகு கொல்லப்பட்ட கொடூர சம்பவத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    இத்துடன் இன்றைய நேரலை பக்கம் நிறைவு பெறுகிறது. நாளை (ஜூன் 23, 2021) காலை தொடங்கப்படும் புதிய நேரலை பக்கத்தில் உள்ளூர் முதல் உலகம் வரை பல்வேறு செய்திகளையும் தெரிந்துகொள்ளலாம். செய்திகளை துல்லியமாக, புதிய கண்ணோட்டத்துடன் விரைவாக தெரிந்துகொள்வதற்கு பிபிசி தமிழுடன் தொடர்ந்து இணைந்திருங்கள். நன்றி.

  2. தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

    தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6,895 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலம், கொரோனாவால் மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,36,819 ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் உயிரிழந்த 194 பேரையும் சேர்த்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31580ஆக அதிகரித்துள்ளது.

  3. கொரோனாவின் புதிய திரிபு: இந்திய அரசு கருத்து

    கொரோனா வைரஸின் டெல்டா பிளஸ் என்ற புதிய திரிபை 'கவலையளிக்குரிய திரிபாக' இந்தியா கருதுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

  4. “தனியார் பள்ளிகள் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்”

    தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் 75 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சிபிஎஸ்இ, மெட்ரிக், ஐசிஎஸ்இ, ஐஜிசிஎஸ்இ மற்றும் ஐபி பள்ளிகளில் 75 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும். மேலும், கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களை கட்டாயப்படுத்தவோ அல்லது ஆன்லைன் வகுப்புகளில் இருந்து நீக்கவோ கூடாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  5. ஃபைசர் கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் விரைவில் அனுமதி?

    கோவிஷீல்டு, கோவேக்சின் மற்றும் ஸ்புட்னிக் ஆகிய கொரோனா தடுப்பூசிகளுக்கு அடுத்து ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    “இந்தியாவில் ஃபைசர் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் பெறும் நடவடிக்கை கடைசி கட்டத்தை அடைந்துள்ளது. இதுதொடர்பாக, இந்திய அரசுடன் விரைவில் உடன்பாடு எட்டப்படும் என்று நம்புகிறோம்” என்று ஃபைசர் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ஆல்பர்ட் பௌர்லா தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

  6. சாத்தான்குளம் கொலை வழக்கு: தற்போதைய நிலை என்ன?

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டு மரணமடைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அந்த வழக்கின் தற்போதைய நிலை என்ன?

  7. சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

    சிங்கப்பூரில் வீட்டுப் பணிப்பெண்ணை தொடர்ச்சியாக சித்திரவதைக்கு உள்ளாக்கி, பட்டினிப்போட்டு, பிறகு கொல்லப்பட்ட கொடூர சம்பவத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    தனது மூன்று வயது மகனை நன்றாக வளர்க்க வேண்டும் எனும் கனவோடு சிங்கப்பூரில் பணிப்பெண் வேலைக்கு வந்த மியான்மரை சேர்ந்த 24 வயதான பியாங் இங்கை டொன், 2015 முதல் 2016ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடந்த துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் அதன் தொடர்ச்சியாக நடந்த கொலை அந்த நாட்டையே உலுக்கி இருந்த நிலையில், தற்போது அந்த வழக்கில் தீர்ப்பு வெளிவந்துள்ளது.

    பணிப்பெண் சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டை காத்ரி முருகையன் என்ற இந்திய வம்சாவளி பெண் ஒப்புக்கொண்ட நிலையில், அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

    40 வயதான காயத்ரி முருகையனின் செயல்கள் “மிகவும் கொடியவை” என்றும் “முற்றிலும் மனிதாபிமானமற்றவை” என்றும் எதிர்தரப்பு வழக்குரைஞர் விசாரணையின்போது தெரிவித்திருந்தார்.

    மியான்மரை சேர்ந்த பணிப்பெண் எவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, பட்டினி போடப்பட்டு, இறுதியில் கொல்லப்பட்டார் என்பதற்கான "அதிர்ச்சியூட்டும்" விளக்கத்தை அரசு தரப்பு முன்வைத்துள்ளதாக நீதிபதி குறிப்பிட்டார்.

    இந்த வழக்கு சிங்கப்பூரின் "மோசமான படுகொலை வழக்குகளில் ஒன்றாகும்" என்றும், இறப்பதற்கு முன் அந்த இளம்பெண் எதிர்கொண்ட துன்புறுத்தலின் அளவை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை என்றும் நீதிபதி மேலும் கூறினார்.

    இந்த சம்பவம் குறித்த பின்னணி தகவல்களை தெரிந்துகொள்ள: "குப்பைக்கூடையில் கொட்டப்படும் உணவைக் கூட சாப்பிட விடவில்லை"

  8. ஏ.டி.எம் இயந்திரங்களில் நூதன பண மோசடி - டெல்லி கும்பலை தேடும் சென்னை போலீஸ்

    சென்னையில் இந்திய ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட வகை ஏ.டி.எம் இயந்திரங்களை குறிவைத்து நடந்த பண மோசடியால் வங்கி நிர்வாகம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. டெல்லியை சேர்ந்த வடமாநில கும்பல் சென்னையில் தங்கியிருந்து இந்தச் செயலில் ஈடுபட்டு வந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியின் டெபாசிட் வசதியுள்ள ஏ.டி.எம் (Cash deposit machine) இயந்திரங்களில், அண்மைக்காலமாக பணம் குறைந்து வருவது தொடர்பாக வங்கி அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதிலும், கீழ்பாக்கம், வடபழனி, விருகம்பாக்கம், தரமணி, வேளச்சேரி எனப் பரவலாக ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் குறைந்து வந்துள்ளது. அதாவது, 10 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டால் அதில் இருந்து ஒன்றரை லட்சம் முதல் 2 லட்சம் வரையில் பணம் குறைவது கண்டறியப்பட்டது.இதுதொடர்பாக, மேற்கண்ட பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசாரின் தீவிர விசாரணையில் ஹெல்மெட் அணிந்த நபர் ஒருவரும் இன்னொரு இளைஞரும் கடந்த 17 ஆம் தேதி ஏ.டி.எம் இயந்திரத்துக்குள் செல்வதும் பின்னர் வேறு யாரும் வருகிறார்களா என நோட்டமிட்ட பின்னர் பணத்தை எடுத்துச் செல்வதும் பதிவாகியுள்ளது.

    அந்த வகையில் தற்போது வரையில் 48 லட்ச ரூபாய் பணம் மோசடியாக எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ள எஸ்.பி.ஐ வங்கி அதிகாரிகள், ` பணத்தை டெபாசிட் செய்யும் வசதியுள்ள இயந்திரங்களில் மட்டும் இந்த மோசடி நடைபெற்றுள்ளது. அதிலும், குறிப்பிட்ட மாடல் இயந்திரத்தை மட்டும் இலக்காக வைத்து மோசடி நடந்துள்ளது' எனத் தெரிவித்துள்ளனர். ``டெல்லியில் உள்ள வங்கி ஒன்றின் ஏ.டி.எம் அட்டைகளை மோசடிக்காக பயன்படுத்தியுள்ளனர். ஏ.டி.எம் மையத்துக்குள் சென்றதும், எவ்வளவு தொகை வேண்டும் என டைப் செய்வார்கள். இதன்பின்னர் பணம் வரும்போது அதனை எடுக்காமல் இருந்துவிட்டு, மீண்டும் அந்தப் பணம் பெட்டிக்குள் செல்லும் நேரத்தில் ஷட்டரை அழுத்திப் பிடித்துள்ளனர்.

    இதன் காரணமாக பணம் உள்ளே சென்றுவிட்டதாக வங்கிக்குத் தகவல் சென்றுவிடும். ஆனால், அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு மோசடிக் கும்பல் பறந்து விடும். இதன் பின்னர், அடுத்த ஏ.டி.எம் இயந்திரம் எனத் தொடர்ந்து முறைகேடு செய்துள்ளனர்.

    இப்படியொரு மோசடி தொழில்நுட்பம் மூலம் எஸ்.பி.ஐ வங்கிக்கு 48 லட்ச ரூபாய் வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மோசடிக்காக ஏராளமான ஏ.டி.எம் அட்டைகளையும் பயன்படுத்தியுள்ளனர்.

    குறிப்பிட்ட அந்த ஏ.டி.எம் கார்டின் வங்கிக் கணக்குகள், டெல்லியில் உள்ள ஒரு வங்கியின் முகவரியைக் காட்டுகிறது" என்கின்றனர் சென்னை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள்.மேலும், ``ஏ.டி.எம்களில் நடந்த இந்த மோசடி குறித்து தொடக்கத்தில் வங்கிகளுக்கு தெரியவில்லை. தொடர்ச்சியாக பணம் குறைவதைக் கண்டறிந்த பின்னர்தான் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். கடந்த நான்கு நாட்களாக கொள்ளையில் ஈடுபட்டு வந்த இந்தக் கும்பல், தற்போது ஹிரியானாவில் உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள்" என்கின்றனர்.இது தொடர்பாக, எஸ்.பி.ஐ வங்கி நிர்வாகம் சி.சி.டி.வி காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பதிவாகியுள்ள இரண்டு பேர் தான் மோசடியில் ஈடுபட்டவர்கள் என வங்கி நிர்வாகம் உறுதியாகத் தெரிவித்துள்ளது. ``பணம் டெபாசிட் இயந்திரத்தில் நடந்த மோசடி காரணமாக, குறிப்பிட்ட வகை ஏ.டி.எம் இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு எஸ்.பி.ஐ வங்கி நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஹிரியானாவில் உள்ள மோசடிக் கும்பல் சிக்கிய பிறகுதான், எத்தனை வங்கிகளில் இதே பாணியில் மோசடி செய்துள்ளனர் என்பது தெரிய வரும்" என்கின்றனர் சென்னை காவல்துறை மத்திய குற்றப் பிரிவின் வங்கி மோசடிப் பிரிவு காவலர்கள்.

  9. நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்

    இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் நாளை (ஜூன் 23, புதன்கிழமை) மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

    முன்னதாக, பிரதமர் நரேந்திர மோதி, பாஜக தேசிய தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்கள் சிலருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆலோசனை மேற்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக பிடிஐ முகமை செய்தி வெளியிட்டிருந்தது.

  10. சிறு துறைமுகங்கள் உத்தேச சட்டத்தை எதிர்க்க கடலோர மாநில முதல்வர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

    சிறு துறைமுகங்கள் மீது மாநில அரசுகளுக்கு உள்ள கட்டுப்பாட்டை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்படி கடலோர மாநிலங்களின் முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

    இந்தியாவில் கடலோரத்தில் அமைந்துள்ள குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம், ஒடிஷா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றின் முதல்வர்களுக்கு இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

    இதுவரை மாநில அரசுகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த சிறு துறைமுகங்கள் குறித்து இந்திய அரசு சமீபத்தில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக, குறிப்பாக இதற்கென மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் கொண்டு வரவிருக்கும் இந்திய துறைமுகச் சட்டம் 2021 குறித்து இந்தக் கடிதத்தில் மு.க. ஸ்டாலின் கவனப்படுத்தியுள்ளார்.

    இதன் மூலம், சிறு துறைமுகங்களின் நிர்வாகம் மாற்றப்படும் என்றும் இந்த மசோதா குறித்து விவாதிப்பதற்காக கடல்சார் மாநிலங்களின் வளர்ச்சி கவுன்சில் கூட்டம் ஜூன் 24ஆம் தேதி நடக்கவிருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

    "தற்போதுள்ள 1908ஆம் ஆண்டின் இந்தியத் துறைமுகச் சட்டத்தின்படி சிறு துறைமுகங்களை திட்டமிட, ஒழுங்குபடுத்த, கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகளுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், இந்தப் புதிய இந்தியத் துறைமுகச் சட்ட மசோதா இதனை மாற்ற உத்தேசிக்கிறது. இதன் மூலம் சிறு துறைமுகங்கள் மீதான பெரும்பாலான அதிகாரங்கள், தற்போது வரை ஆலோசனை சொல்லும் அமைப்பாக உள்ள கடல்சார் மாநில வளர்ச்சி கவுன்சிலுக்குச் செல்லும். மேலும், தற்போது மாநில அரசுகளின் வசம் உள்ள பல அதிகாரங்கள் மத்திய அரசுக்குச் செல்லும்.

    தற்போதுள்ள அமைப்பின்படி மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் பல சிறு துறைமுகங்கல் சிறப்பாக வளர்ச்சியடைந்துள்ளன. இது தொடர்பாக புதிய சட்டத்தைக் கொண்டுவரும் மத்திய அரசின் நடவடிக்கையானது சிறு துறைமுகங்களை நிர்வகிப்பதில் நீண்டகால, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், சிறு துறைமுகங்கள் மீது மாநில அரசுகளுக்கு எந்த பெரிய கட்டுப்பாடும் இருக்காது.

    சிறு துறைமுகங்களை நிர்வகிப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் மாநிலங்களுக்கு உள்ள தன்னாட்சி அதிகாரத்தைக் குறைக்கும் இந்த நடவடிக்கை குறித்து மத்திய கப்பல்போக்குவரத்துத் துறையிடம் நாங்கள் பேசியிருக்கிறோம்.

    ஆகவே, எல்லா கடலோர மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இந்தப் புதிய இந்தியத் துறைமுகச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். ஏற்கனவே மாநிலங்களின் வசம் உள்ள அதிகாரங்களை நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கைகளை எதிர்க்க கூட்டு நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

    ஜூன் 24ஆம் தேதி நடக்கும் கூட்டத்தின்போது தமிழகத்தைப் போலவே இந்தச் சட்டத்தற்கு எதிர்ப்புத் தெரிவித்து எல்லா மாநில அரசுகளும் தங்கள் கருத்தைப் பதிவுசெய்ய வேண்டும்," என மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

  11. கொரோனா அலைகளை கட்டுப்படுத்துவதில் மோதி அரசு தோல்வி: ராகுல் காந்தி

    கொரோனா தொற்றின் முதல் இரண்டு அலைகளை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

    டெல்லியில் காணொளி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்டு வரும் தடுப்பூசி திட்டங்கள், அவை செயல்படுத்தும் விதத்தை கடுமையாக சாடினார். அதன் விவரம்:

    இந்திய அரசு தனது முதல் தடுப்பூசி ஆர்டர்களை ஜனவரி 11, 2021 வரை வழங்கியது. பின்னர் இரண்டு உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து 1.65 கோடி அளவு டோஸ்களை மட்டுமே ஆர்டர் செய்தது. உற்பத்தி திறனை விரிவாக்குவதற்கு இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு போதுமான ஆதரவை முன்பே வழங்க அரசு தவறியது.

    மேலும் பிற இந்திய நிறுவனங்களுக்கு கோவாக்சின் (ஐ.சி.எம்.ஆர் மற்றும் பாரத் பயோடெக் இணைந்து உருவாக்கியது) உரிமம் வழங்குவதை தாமதப்படுத்தியது. போதுமான, மலிவு விலையுள்ள தடுப்பூசி பொருட்களை வாங்குவதற்கான தனது பொறுப்பை மத்திய அரசு கைவிட்டது, மேலும் பல்வேறு சுமைகள் இருக்கும் என தெரிந்தும் அந்தப் பணியை மாநிலங்கள் மீது மத்திய அரசு திணித்தது.

    18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்னர் கோவின் செயலியில் கட்டாய பதிவு செய்ய வேண்டும் போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு வலியுறுத்தியது, இது டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற, நகர்ப்புற நடுத்தர வர்க்கங்களுக்கு சாதகமாக இருந்தது மற்றும் பெரும்பான்மையினரை கவனத்தில் கொள்ளாமல் அறிமுகப்படுத்தப்பட்டது.

    திடீரென கோவிஷீல்டிற்கான தடுப்பூசி இரண்டு டோஸ் போடும் அளவு கால இடைவெளியை 12 முதல் 16 வாரங்களாக மத்திய அரசு தன்னிச்சையாக அதிகரித்தது.

    இறுதியாக, இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பெரியர்களுக்கும் தடுப்பூசி போடும் இலக்கை நிர்ணயித்துள்ளதாக அரசு அறிவித்தது.

    ஆனால், மோதி அரசு என்ன செய்திருக்க வேண்டும். கொரோனா முதல் அலையை இந்தியா எதிர்கொண்டவுடனேயே தடுப்பூசிகளுக்கு உலகளவில் ஆர்டர்கள் செய்திருக்க வேண்டும். உற்பத்தித்திறனை வேகப்படுத்தி பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு உற்பத்திக்கான வசதிகளை மேம்படுத்தி முன்கூட்டியே மானியங்களை வழங்கியிருக்க வேண்டும். அதன் மூலமும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் மற்றும் அவற்றின் மூலப்பொருட்களுக்கு கட்டாய உரிமம் வழங்குவதன் மூலமும் உற்பத்தி திறனை அதிகரித்திருக்க வேண்டும்.

    சர்வதேச கடமைகளை நிறைவேற்றும் முன்பு, நமது மக்களுக்கு தடுப்பூசிகள், மூலப்பொருட்கள் மற்றும் சாதனங்களுக்கான வசதியை பெருக்க ராஜீய அளவிலான முயற்சிகளில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். தடுப்பூசிகளை மொத்தமாக தமது தொகுப்பில் வாங்கி, அவற்றை நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் ஒதுக்கி, மாநிலங்களுக்கு அவற்றை பயன்படுத்தும் கட்டுப்பாட்டை வழங்கியிருக்க வேண்டும்.

    மத்திய அரசு தனது கொள்கை தோல்விகளின் முக்கிய தாக்கத்தை எதிர்கொண்டுள்ளது. உள்நாட்டு நெருக்கடிகளைச் சமாளிக்க வெளிநாட்டு உதவிகளை ஏற்க வேண்டும் என்ற 17 ஆண்டுகால பாரம்பரியத்திலிருந்து இந்தியா விலகியிருக்கிறது. பின்னர் தனக்கு கிடைத்த வெளிநாட்டு உதவி விநியோகத்தை தாமதப்படுத்தியது, மேலும் பாதிப்பை சமாளிக்க தனக்கு வந்த நன்கொடைகள் குறித்த விவரங்களை இன்னும் அரசு வெளிப்படுத்தவில்லை.

    இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பின் சரிவு மருத்துவ ஆக்ஸிஜனின் கடுமையான பற்றாக்குறை, கோவிட்-19 காரணமாக வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், ஆக்ஸிஜன் சாதனங்களுக்கான சட்டவிரோத சந்தையின் வளர்ச்சி போன்றவை, தவிர்க்கப்பட்டிருக்கக் கூடிய முன்கள பணியாளர்களின் இறப்பை தவிர்க்க முடியாததாக்கி விட்டன. சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளால் இந்தியா ஓரளவு காப்பாற்றப்பட்டது, பொது முடக்க காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவை ஆதரவை வழங்கின.

    "தன்னிச்சையான மற்றும் பகுத்தறிவற்ற" தடுப்பூசி கொள்கை உள்ளிட்ட கொள்கை தோல்விகளுக்காக மோதி அரசாங்கத்தை நீதிமன்றங்கள் கண்டித்தன.

    தொற்றுநோயை தவறாக கையாண்டதன் காரணமாக நோயாளிகளின் மரணத்தை ‘இனப்படுகொலைக்கு’ சமமானது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அழைத்தது என்று ராகுல் காந்தி சாடினார்.

    இந்த விவகாரத்தில் உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க காப்புரிமை சட்டம் 1970இன் கீழ் கட்டாய உரிம விதிகளை மேற்கொள்ளுங்கள். சான்றுகள், சமபங்கு மற்றும் குறிப்பிட்ட உள்ளூர் தேவைகளை மையமாகக் கொண்ட வெளிப்படையான, நியாயமான சூத்திரத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை ஒதுக்குங்கள், துல்லியமான தடுப்பூசி தொடர்பான தரவுகளை வெளிப்படையான முறையில் பொதுவெளியில் கிடைக்கச் செய்யுங்கள், தேசிய அளவிலான அரசியல் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துதல், தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மறுஆய்வு செய்தல், மாநில அரசாங்கங்களுடன் ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் மற்றும் சிவில் சமூகத்துடன் ஒத்துழைத்தல் போன்ற நடவடிக்கையை எடுங்கள் என்று ராகுல் காந்தி யோசனை கூறியுள்ளார்.

    மருத்துவமனைகளின் நோயாளிகள் கையாளும் திறனை மேம்படுத்தி, கொரோனா தொற்றாளர்கள் மற்றும் கொரோனா அல்லாத தொற்றாளர்களுக்கு சமமான கவனம் செலுத்தி சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

  12. இலங்கை எரிபொருள் விலை உயர்வுக்கு வித்தியாசமாக எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்கட்சிகள் எம்.பி.க்கள்

    இலங்கையில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்திற்கு தங்களுடைய வாகனங்களில் வருகைத் தவிர்த்து, டிராக்டர்கள், டிரக்குகள், ஆட்டோ போன்ற வாகனங்களில் வந்து தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    முன்னதாக, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை, பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, சபாநாயகரிடம் கையளித்தது. எரிபொருள் விலை அதிகரிப்பை முன்னிலைப்படுத்தி, அமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

  13. சாத்தான்குளம் வியாபாரிகள் மறைவு: முதலாம் ஆண்டு நினைவு நாளில் ஏராளமானோர் அஞ்சலி

    தமிழ்நாட்டின் சாத்தான்குளத்தில் காவலில் இருந்தபோது இறந்த தந்தை, மகன் வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அப்பகுதி பஜாரில் உள்ள அவர்களது கடை முன்பு வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு குடும்பத்தினர். கனிமொழி எம்பி உள்ளிட்டோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

    கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி கடையை திறந்ததாக கூறப்படும் விவகாரத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தனர்.

    அவர்களை கைது செய்தவுடன் காவல்நிலையத்தில் வைத்து காவல்துறையினர் அடித்ததாக புகார் எழுந்தது. சிபிஐ விசாரித்து வரும் இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    இந்த இருவர் மரணம் அடைந்த முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சாத்தான்குளம் பஜாரில் உள்ள பென்னிக்ஸ் கடை முன்பு பொதுமக்கள் அஞ்சலிக்காக இருவரது படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

    திமுக எம்.பி கனிமொழி, ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ், சாத்தான்குளம் வியாபாரிகள், ஸ்டெர்லைட் போராட்ட குழுவினர், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் படங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    பிறகு ஜெயராஜ் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு கனிமொழி ஆறுதல் கூறினர். இந்த நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் சாத்தான்குளம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  14. இந்தியாவில் ஒரே நாளில் 86 லட்சம் பேருக்கு தடுப்பூசி

    இந்தியாவில் திங்கள்கிழமை ஒரே நாளில் மட்டும் 86 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

    அரசின் கோவின் இணையதளத்தில் இந்தப் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளனன.

    இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சாதனை எண்ணிக்கையில் தடுப்பூசி போடப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

    இந்தியாவின் புதிய தடுப்பூசிக் கொள்கை வெளியிடப்பட்ட பிறகு ஒரே நாளில் தடுப்பூசி போடப்பட்டதில் இதுவே அதிக எண்ணிக்கையாகும்.

    இதற்கு முன்னதாக ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி 42 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டதே அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது.

  15. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் இந்தப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.