You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

அதிமுக சட்டமன்ற குழு துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு

தமிழ்நாட்டில் கொரோனா பொதுமுடக்கத்தில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் இன்று அமலுக்கு வந்திருக்கின்றன

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. ஆங் சான் சூ ச்சீ: மியான்மர் தலைவருக்கு எதிரான வழக்கு விசாரணை தொடங்கியது

    மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கைப்பற்றிய ராணுவ நிர்வாகம், அந்நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ ச்சீக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணை தொடங்கியுள்ளது.

    கொரோனா விதிகளை மீறியது, உரிமம் இல்லாமல் வாக்கி டாக்கி கருவிகளை வாங்கியது போன்ற குற்றச்சாட்டுகளின்கீழ் தற்போதைய விசாரணையை அவர் எதிர்கொண்டுள்ளார்.

    இது தவிர அவர் மீது ஊழல் முறைகேடு மற்றும் அலுவல்பூர்வ ரகசிய காப்புப் பிரமாணத்தை மீறியதாகவும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவற்றின் மீதான விசாரணை பின்னர் நடத்தப்படும் என்று தெரிகிறது.

    ராணுவ நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை மனித உரிமைகள் குழுக்கள் கண்டித்துள்ளன. எதிர்கால தேர்தல்களில் ஆங் சான் சூ ச்சீ போட்டியிடுவதை தடுக்க மேற்கொள்ளப்படும் முயற்சி இது என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    75 வயதாகும் ஆங் சான் சூ ச்சீ, கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ராணுவ நிர்வாகத்தால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு அவ்வப்போது நீதிமன்றங்களுக்கு அழைத்து வரப்படும்போது மட்டும் சில நிமிடங்கள் அவரை சிலர் பார்த்துள்ளனர்.

    அவர் மீதான குற்றச்சாட்டுகளில் ராணுவ நிர்வாகம் தரப்பு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அவரது தரப்பு வழக்கறிஞர்கள் அனுமதி கோரியுள்ளனர்.

    இது தவிர, ஆங் சான் சூ ச்சீ மீது தேச துரோக குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. அதில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 14 ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

    கடந்த வாரம் ஆங் சான் சூ ச்சீ மீது சட்டவிரோதமாக ஆறு லட்சம் அமெரிக்க டாலர்கள் வாங்கியது மற்றும் சுமார் 11 கிலோ தங்கம் வைத்திருந்ததாக மேலும் சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

    கடந்த பிப்ரவரி மாதம் மியான்மரில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவ தலைமை, கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாலேயே இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறியது.

    ஆனால், சுயாதீன தேர்தல் பார்வையாளர்கள், அந்த தேர்தல் வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் நடந்ததாக கூறினார்கள். அரசியல் உள்நோக்கத்துடன் ஆங் சான் சூ ச்சீ மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

  2. அதிமுகவில் இருந்து வா.புகழேந்தி நீக்கம்

    அதிமுகவில் செய்தி தொடர்பாளர் ஆக இருந்த வா.புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

  3. தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு

    தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வாகியிருக்கிறார்.

    ஏற்கெனவே சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்ற குழு தேர்வு செய்திருந்தது.

    இந்த நிலையில், சென்னையில் இன்று நடைபெற்ற அக்கட்சியின் சட்டமன்ற குழு கூட்டத்தில் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம், கொறடா ஆக எஸ்.பி. வேலுமணி, துணை கொறடா ஆக அரக்கோணம் எம்எல்ஏ ரவி, பொருளாளராக கடம்பூர் சி. ராஜூ, செயலாளராக கே.பி. அன்பழகன், துணை செயலாளராக பி.ஹெச் மனோஜ் பாண்டியன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

  4. மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி: காங்கிரஸ்

    மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நானா படோல் தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்துப் பேசிய நிலையில், அம்மாநிலத்தில் புதிய அரசியல் முன்னேற்றமாக காங்கிரஸ் கட்சி, அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று அதன் மாநில தலைவர் நானா படோல் கூறியுள்ளார்.

    கட்சி மேலிடம் விரும்பினால், முதல்வர் உத்தவ் தாக்கரேவை எதிர்த்து போட்டியிடுவேன் என்று அவர் தெரிவித்தார்.

    சில தினங்களுக்கு முன்பு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அரசியல் உத்திகள் வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாயின.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நான்கு முறை எம்எல்ஏ ஆக இருப்பவர் நானா படோல். அங்குள்ள பாந்த்ரா மாவட்டத்தின் கசோலி தொகுதியில் இருந்து அவர் தேர்வானார்.

    மாநில அரசியலில் காங்கிரஸின் முகமாக அறியப்படும் இவர் வெளியிட்டுள்ள கருத்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் சிவசேனா கட்சியுடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை சேர்ந்து ஆட்சியமைத்துள்ளன. இங்கு ஆளும் அரசின் பதவிக்காலம் 2024ஆம் ஆண்டுவரை உள்ளது.

  5. கொரோனா நோயாளிகளுக்கு புதுவித சிகிச்சை அளிக்கும் கோவை மருத்துவர்கள்

    கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மனரீதியாக வலுப்படுத்தும் பயிற்சியை உளவியல் ஆலோசகர்கள் அளித்து வருகின்றனர்.

    கொரோனா குறித்த அச்சத்தாலேயே இறப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த பயிற்சி கோவிட் குறித்த அச்சத்தை நீக்கி, நம்பிக்கையை அளித்து, நோயிலிருந்து குணமடைய உதவுகிறது.

  6. உலகின் மிகப்பெரிய குடும்பத் தலைவர் காலமானார் - 38 மனைவிகள், 89 பிள்ளைகள்

    38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்த உலகின் மிகப்பெரிய குடும்ப தலைவர் காலமானார்.

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் வாழ்ந்து வந்த உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் ஸியோனா சாணா தனது 76 வயதில் காலமானார். அவருக்கு 38 மனைவிகள், 89 பிள்ளைகள், 36 பேரக்குழந்தைகள் இருந்ததால், உலகிலேயே மிகப்பெரிய குடும்பத்தின் தலைவராக இவர் அறியப்பட்டு வந்தார்.

    நீரிழிவு, உயர் அழுத்தத்துடன் அவர் பாதிக்கப்பட்டு வந்தார். அவர் சேர்க்கப்பட்ட மருத்துவமனையின் இயக்குநர் லால்ரின்துலுஅங்கா, "ஸியோனா வாழ்ந்த பக்தவாங் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக அவரது நிலைமை மோசமடைந்தது. எனவே மருத்துவமனைக்கு அவரை குடும்பத்தினர் அழைத்து வந்தனர். ஆனால், அவரது உயிர் பிரிந்து விட்டது," என்று தெரிவித்தார்.

    ஸியோனாவின் வாரிசுகள் அனைவரும் 100 அறைகள் கொண்ட நான்கு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

    தனது முதலாவது மனைவியை திருமணம் செய்து கொண்டபோது ஸியோனாவின் வயது 17. அப்போது அந்த பெண் இவரை விட மூன்று வயது மூத்தவராக இருந்தார்.

    உலகின் மிகப்பெரிய குடும்பமாக அறியப்படும் இவரது குடும்பத்தினர் வாழும் பகுதி, மிசோரம் மாநிலத்தில் குறிப்பிடத்தக்க சுற்றுலா இடமாகவும் மாறியதால் இவர்கள் வாழும் குடியிருப்புப்பகுதி சுற்றுவாசிகளிடையேயும் உள்ளூர் மக்களிடையேயும் மிகவும் பிரபலமானது.

    ஸியோனாவின் மறைவுக்கு மாநில முதல்வர் ஸோராம்தாங்கா இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மிசோரம் மாநிலத்தில் பல தார திருமணங்களை ஏற்கும் சுவாந்தர் சமயத்தின் தலைவராக இருந்தவர் ஸியோனா. இந்த சமயத்தை இவரது தாத்தா குவாங்துஹா உருவாக்கினார். 1942இல் ஹம்வாங்கான் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு இந்த சமயத்தை குவாங்துஹா உருவாக்கினார்.

    அப்போது முதல் இந்த குடும்பம் அய்ஸ்வாலில் இருந்து 55 கி.மீ தூரத்தில் உள்ள பக்தவாங் கிராமத்தில் வாழ்ந்து வருகிறது. இந்த பகுதியில் 400 குடும்பங்கள் சுவாந்தர் சமயத்தை ஏற்று வாழ்ந்து வருகின்றன.

  7. 25 கோடி பேருக்கு தடுப்பூசி

    இந்தியாவில் இதுவரை 25கோடிக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

  8. தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஆக ஏ.கே.எஸ். விஜயன் நியமனம்

    தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஆக ஏ.கே.எஸ். விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    அவர் பதவியேற்கும் நாளில் இருந்து ஓராண்டுக்கோ அல்லது தேவை உள்ளவரையோ இந்த பதவியில் இருப்பார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏ.கே.எஸ். விஜயன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். மக்களவை உறுப்பினராக மூன்று முறை இருந்துள்ளார். தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் இவர். திமுக விவசாய அணியின் மாநில செயலாளராக உள்ளார்.

  9. தமிழ்நாட்டில் மீண்டும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு

    தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபான கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.

    அவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, மாநிலம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

    அதையொட்டி, அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் கடந்த மாதம் 10ஆம் தேதி மூடப்பட்டன. இந்த ஊரடங்கு கடந்த மாதம் 31ஆம் தேதி வரையிலும் பிறகு கடந்த 7ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் 11 மாவட்டங்கள் நீங்கலாக மற்ற 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா கட்டுப்பாடுகள் வரும் 21ஆம் தேதி வரை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இதன்படி மாநிலத்தில் உள்ள மதுபான கடைகளை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை திறக்க அரசு அனுமதித்துள்ளது.

    மொத்தமாக மதுபான பாட்டில்களை வாங்கக்கூடாது, ஒரே நேரத்தில் ஐந்து பேருக்கு மேல் கடைகளில் அனுமதி இல்லை, மதுபானம் வாங்க வரும் மதுப்பிரியர்கள் 6 அடி இடைவெளி விட்டு வரிசையில் நிற்க வேண்டும், கடைகளை திறக்கும்போதும் மூடும்போதும் கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும், பணியாளர்களுக்கு மூன்றடுக்கு முக கவசம் உள்ளிட்ட 14 வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

    இதனால், டாஸ்மாக் மதுபான கடைகளில் காலை முதலே மதுபானங்களை வாங்க மதுப்பிரியர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

  10. தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் தளர்வுகள் அமலுக்கு வந்தன

    தமிழ்நாட்டில் கொரோனா பொதுமுடக்கத்தில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் இன்று அமலுக்கு வந்திருக்கிறது.

    கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களில் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன.

    இந்த 27 மாவட்டங்களில் மட்டும் அழகுநிலையங்கள், சலூன்கள் குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவிகித வாடிக்கையாளா்களுடன் செயல்படலாம்.

    பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடைப்பயிற்சிக்காக மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

    டாஸ்மாக் கடைகள் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

    மின்சாதன பழுது பார்க்கும் கடைகள், செல்போன் விற்பனைக் கடைகள்கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள் போன்றவை காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை செயல்படலாம்.

    தேநீர்க் கடைகளஇல் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் முறையில் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

    கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் கிடையாது

  11. இஸ்ரேலில் முடிவுக்கு வந்தது நெதன்யாகு ஆட்சி

    இஸ்ரேலில் 12 ஆண்டுகளாகப் பிரதமராக இருந்த நெதன்யாகுவின் ஆட்சி முடிவுக்கு வந்திருக்கிறது. புதிய பிரதமராக நெஃப்தலி பென்னெட் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

    தேர்தலாலும் அரசியல் கசப்பாலும் பிரிந்து கிடக்கும் நாட்டை ஒருங்கிணைக்கப் போவதாக புதிய பிரதமர் பென்னெட் அறிவித்திருக்கிறார்.

    நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பில் புதிய அரசுக்கு ஆதரவாக 60 வாக்குகளும் எதிராக 59 வாக்குகளும் கிடைத்தன. ஒரேயொரு வாக்கைக் கூடுதலாகப் பெற்று பென்னெட் பிரதமராகியிருக்கிறார்.

    யாமினா கட்சியின் தலைவரான பென்னெட் வரும் 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை அந்தப் பதவியில் இருப்பார். அதன்பிறகு, ஏற்கெனவே செய்து கொள்ளப்பட்டிருக்கும் உடன்பாட்டின்படி யேஷ் அடிட் கட்சியின் தலைவரான யேர் லேபிட் பிரதமராகப் பொறுப்பேற்பார்.

    நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த விவாதத்தில் பேசிய நெதன்யாகு "திரும்பி வருவேன்" என்று சூளுரைத்தார்.

    இது எப்படி நடந்தது?

    பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலில் 15 ஆண்டுகள் பிரதமராகப் பதவி வகித்திருக்கிறார். 1996 முதல் 1999 வரையிலும் பின்னர் 2009 முதல் 2021 வரையிலும் அவர் பதவியில் இருந்திருக்கிறார்.

    அண்மையில் நடந்த தேர்தலில் நெதன்யாகுவின் கட்சி அதிக இடங்களில் வென்றது ஆயினும் ஆட்சியமைக்கும் அளவுக்குப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. லேபிட்டின் கட்சி இரண்டாவதாக வந்தது.

    இதைத் தொடர்ந்து நெதன்யாகுவுக்கு எதிராக கூட்டணி அமைக்கப்பட்டது. இஸ்ரேலிய அரசியலின் அனைத்து வகையான கொள்கைகளையும் கொண்டதாக புதிய கூட்டணி அமைந்தது.

    இதில் இடம்பெற்றிருக்கும் 8 கட்சிகளுக்கும் பொதுவான கருத்துகள் மிகமிக அரிது. ஆயினும் நெதன்யாகுவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற ஒரே திட்டத்துடன் இவை இணைந்தன.