ஏழை நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகளை வழங்க ஜி-7 நாடுகள் திட்டம்

உலகின் பிற நாடுகளுக்கு நூறு கோடி தடுப்பூசிகளை ஜி-7 நாடுகள் அளிக்கும் என பிரிட்டன் அறிவித்துள்ளது. ஏற்கெனவே 50 கோடி தடுப்பூசிகளை அளிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்

    குழந்தை

    பட மூலாதாரம், Getty Images

    கோசியாமி தமரா சித்தோல் என்பது அவரது பெயர். ஸ்கேன் செய்து பார்த்தபோது 8 குழந்தைகள் இருப்பது தெரிந்ததாகவும் ஆனால் பிரசவத்தின்போது 10 குழந்தைகள் பிறந்தது தங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டதாகவும் அவரது கணவர் டெபோஹோ சோட்டேட்சி கூறுகிறார்.

    "பிறந்தவற்றில் 7 ஆண் குழந்தைகள், 3 பெண்குழந்தைகள். நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன். உணர்ச்சிவயப்பட்டிருக்கிறேன். என்னால் அதிகம் பேச முடியாது " என்றார் சோட்டேட்சி.

    10 குழந்தைகள் பிறந்திருப்பதை தென்னாப்பிரிக்க அதிகாரி ஒருவர் உறுதி செய்திருக்கிறார்.

    10 குழந்தைகளில் 5 குழந்தைகள் இயற்கையான முறையிலும் 5 குழந்தைகள் சிசேரியன் மூலமாகவும் பிறந்திருப்பதாகவும் பெயர்கூற விரும்பாத உறவினர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

    இது தொடர்பாக ஆய்வு செய்து வருவதாக கின்னஸ் உலக சாதனை அமைப்பு தெரிவித்துள்ளது.

  2. போக்சோ சட்டம்: சிறாருக்கு எதிரான பாலியல் புகார்கள் எப்படி விசாரிக்கப்படும்? - சிறுவர்களுக்கு என்ன உரிமை?

    போக்சோ சட்டம்

    பட மூலாதாரம், Getty Images

    இந்திய தேசிய குற்ற ஆவண காப்பகத் துறை 2020இல் வெளியிட்ட 2019ஆம் ஆண்டுக்கான தரவுகளில், இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் பதிவான குற்றங்களின் சதவீதம் 35.3.

    அதில் உத்தர பிரதேசத்தில் 30, மத்திய பிரதேசத்தில் 18, ஹரியானா, கர்நாடகாவில் தலா 11, தமிழ்நாட்டில் 8, மகாராஷ்டிரா, தெலங்கானா, மேற்கு வங்கத்தில் தலா 6 சிறார் பாலியல் வல்லுறவு கொலை வழக்குகள் பதிவானதாக கூறப்பட்டுள்ளது.

    இது தவிர சிறார் கடத்தல், தற்கொலைக்கு தூண்டுதல், காயம் ஏற்படுத்துதல், கொலை முயற்சி, சிசுக்கொலை என வழக்குகளின் எண்ணிக்கை ஒவ்வாரு மாநிலத்திலும் நீளுகின்றன.

    இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டம் 2012இல்தான் பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டது. அந்த சட்டம் 2012 நவம்பர் 12ம் தேதி அமலுக்கு வந்தது.

  3. எத்தியோப்பியா பஞ்சம்: போர் நடந்த டீக்ரே பிராந்தியத்தில் பாதிப்பு - ஐநா அதிகாரி தகவல்

    ஐக்கிய நாடுகள் சபை

    பட மூலாதாரம், Getty Images

    டீக்ரேவின் மேற்குப் பகுதியில் இருக்கும் கஃப்தா ஹுமேரா மாவட்டத்தில் வாழும் மக்கள், தாங்கள் பட்டினியின் விளிம்பில் இருப்பதாக பிபிசியிடம் கூறினர்.

    நாங்கள் சாப்பிட எதுவும் இல்லை" என ஒருவர் தொலைபேசி வழியாக கூறினார். தங்களது பயிர்கள், ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகள் எல்லாம் கடந்த ஏழு மாதமாக நடந்த போரில் கொள்ளை அடிக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

    "நாங்கள் பத்திரப்படுத்தி வைத்திருந்த பயிர்களை உண்டோம். ஆனால் இப்போது எங்களிடம் எதுவும் இல்லை" என 40 வயதான விவசாயி ஒருவர் கூறுகிறார்.

    "யாரும் எங்களுக்கு எந்த ஒரு உதவியையும் செய்யவில்லை. நாங்கள் எல்லோரும் கிட்டத்தட்ட சாவின் விளிம்பில் இருக்கிறோம். எங்கள் கண்களிலேயே பசி தெரிகிறது. சூழல் மிகவும் மோசமாக இருக்கிறது. மரணம் எங்கள் வாசலைத் தட்டிக் கொண்டிருக்கிறது. எங்கள் அனைவரின் முகத்திலும் நீங்கள் பசியைப் பார்க்க முடியும்"

  4. பிரதமர் மோதி வீட்டுக்கு வந்த ஆதித்யநாத்

    மோதி - ஷா - ஆதித்யநாத்

    பட மூலாதாரம், Getty Images

    உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் டெல்லி லோக் கல்யாண் மார்கில் உள்ள பிரதமர் நரேந்திர மோதியின் வீட்டுக்கு வந்துள்ளார்.

    முன்னதாக அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்.அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள உத்தரப்பிரதேசத்தில் தற்போது ஒரு அரசியல் புயல் வீசிக்கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் - பாஜக தலைவர்களுக்கு இடையிலான சந்திப்புகள் நிகழ்கின்றன. மாநிலத்தில் பாஜகவைப் பொறுத்தவரை தலைமை மாற்றம் ஏற்படலாம் என்ற ஐயம் எழுந்து வருகிறது. இந்நிலையில் ஆதித்யநாத் டெல்லி வருகையும் பிரதமர் மோதி இல்லத்துக்கு அவர் வந்திருப்பதும் நிகழ்கிறது.

  5. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் நாடுதழுவிய போராட்டம்

    பெட்ரோல்

    பட மூலாதாரம், ANI

    பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி இன்று நாடு முழுவதும் போராட்டம் நடத்துகிறது.

    முக்கிய நகரங்களின் பெட்ரோல் நிலையங்கள் முன்பு இந்தப் போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

    கடந்த புதன்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் இதைத் தெரிவித்திருந்தார். கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றி போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

    டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் முக்கியத் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்திருக்கிறது. சென்னையில் பெட்ரோலின் விலை ரூ.97.19.

  6. ஏழை நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசி வழங்க ஜி-7 நாடுகள் திட்டம்

    தடுப்பூசி

    பட மூலாதாரம், PA Media

    உலகின் பிற நாடுகளுக்கு நூறு கோடி தடுப்பூசிகளை ஜி-7 நாடுகள் அளிக்கும் என பிரிட்டன் அறிவித்துள்ளது.

    ஏற்கெனவே 50 கோடி தடுப்பூசிகளை அளிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    பிரிட்டன் மட்டும் சுமார் 10 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசியை வழங்கும் என்று அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

    முதல் 50 லட்சம் டோஸ்கள் வரும் செப்டம்பர் மாதத்துக்குள்ளாகவும் மேலும் 2.5 கோடி டோஸ்கள் ஆண்டு இறுதிக்குள்ளாகவும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

    பிரிட்டனில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  7. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் இந்தப் பகுதியில் தொகுத்து வழங்குகிறோம்.