கன்னத்தில் அறை வாங்கிய பிரான்ஸ் அதிபர் மக்ரோங்

உலகம், தேசிய அளவில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. தனியாரில் செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகளுக்கு விலை நிர்ணயம்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    தனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியைச் செலுத்துவதற்கான அதிகபட்ச கட்டணத்தை மத்திய சுகாதார அமைச்சகம் நிர்ணயித்து இருக்கிறது.

    கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளர்கள் நிர்ணயித்திருக்கும் விலைக்கு, சரக்கு மற்றும் சேவை வரியையும் சேர்த்து, சேவைக் கட்டணமாக 150 ரூபாய் மட்டுமே கூடுதலாக வசூலிக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ஆக, கோவிஷீல்ட் தடுப்பூசி ஒரு டோஸ்க்கு 780 ரூபாயும், கோவேக்சின் தடுப்பூசிக்கு 1,410 ரூபாயும், ஸ்புட்னிக் V தடுப்பூசிக்கு 1,145 ரூபாயும் அதிகபட்சமாக வசூலிக்கலாம் என அமைச்சகம் அறிவித்திருப்பதாக ஏஎன்ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

  2. பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்த நபர் கைது

    பிரான்ஸ்

    பட மூலாதாரம், AFP

    பிரான்ஸ் நாட்டின் தென் கிழக்கு பகுதிக்கு அதிகாரபூர்வ வருகை தந்த அந்நாட்டின் அதிபர் எமானுவேல் மக்ரோங் கன்னத்தில் அறையப்பட்டார்.

    இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

    அதில் வேலன்ஸ் நகருக்கு வெளியே உள்ள பகுதியில் இருக்கும் ஓரிடத்திற்கு நடந்து சென்ற போது பச்சை நிற உடை அணிந்த நபர் ஒருவர், அதிபர் மக்ரோங்கின் கன்னத்தில் அறைகிறார்.

    உடனே பாதுகாப்பு அதிகாரிகள் நடுவில் புகுந்தனர். அதிபர் உடனே பின் இழுக்கப்பட்டார்.

    இது தொடர்பாக இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அந்த நபர் அதிபர் மக்ரோங் கன்னத்தில் அறையும் போது, “மக்ரோங் ஒழிக” என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

  3. தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

    11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டப்பட்டுள்ளது.

    தமிழக அரசு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்தது.

    இந்நிலையில் ஜூன் 3வது வாரத்தில் இருந்து 11ஆம் வகுப்புகளுக்கான வகுப்புகளை தொடங்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  4. தமிழகத்தில் புதிதாக 18,023 பேருக்கு கொரோனா

    தமிழ்நாட்டில் இன்று புதிதாக 18,023 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 409 பேர் உயிரிழந்துள்ளனர். 31,045 பேர் குணமடைந்துள்ளனர்.

    சென்னையிலும் புதிதாக தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை லேசாக குறைந்து 1437ஆக இருக்கிறது.

    தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

  5. காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு ஏழாண்டுகள் சிறை: டர்பன் நீதிமன்றம்

    லதா ராம்கோபின்

    பட மூலாதாரம், TWITTER/@TIMESLIVE

    படக்குறிப்பு, லதா ராம்கோபின்

    காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு ஏழு ஆண்டுகள் சிறை - மோசடி வழக்கில் தென்னாப்பிரிக்க நீதிமன்றம் தீர்ப்பு காந்தியின் கொள்ளுப்பேத்தி ஆஷிஷ் லதா ரம்கோபின் (56), எஸ்.ஆர். மகாராஜ் என்ற ஆடை தயாரிப்பு நிறுவன அதிபரிடம் ரூ. 3.22 கோடி அளவுக்கு பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் அவருக்கு தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பன் நீதிமன்றம் ஏழரை ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதித்துள்ளது.

    இந்த வழக்கில் தேசிய விசாரணை ஆணையம் சார்பில் ஆஜரான பிரிகேடியர் ஹங்வானி முலாட்ஸி, இந்தியாவில் இருந்து கைத்தறி பொருட்கள், துணி வகைள் கொண்ட இல்லாத மூன்று கன்டெய்னர் சரக்குகளை வரவழைக்க பணம் தேவை எனக்கூறி எஸ்.ஆர். மகாராஜ் என்ற உள்ளூர் தொழிலதிபரிடம் ரசீதுகளை ஜோடித்து லதா ராம்கோபின் அளித்தது தெரிய வந்துள்ளதாக கூறினார்.

    கன்டெய்னர் சரக்குகள் கைக்கு வந்ததும் அவற்றை பங்கிட்டுக் கொள்ளும் விதமாக காந்தி குடும்பத்து பின்புலத்தை கொண்ட லதா ராம்கோபினுடன் கூட்டாளியாக சேரும் உடன்படிக்கையை மகாராஜ் செய்து கொண்டார்,

    ஒரு கட்டத்தில் லதா ராமகோபின் அளித்த ஆவணங்கள் மோசடியானவை என்றும் தான் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் அறிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக லதா ராம்கோபினுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பு வெளிவந்துள்ளது.

    காந்தியின் குடும்பத்தில் வழியாக வந்துள்ள அவரது கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்திகள் மனித உரிமை செயல்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களாக உள்ளனர்.

    லதா ராம்கோபினுடைய உறவினர்களான கீர்த்தி மேனன், மறைந்த சதீஷ் துபேலியா, உமா துபேலியா மெஸ்த்ரின் ஆகியோரும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்கள்.

    லதா ராம்கோபினின் தாய் இலா காந்தி, சுற்றுச்சூழல், மனித உரிமை விவகாரங்களில் குரல் கொடுத்தவர் என்பதற்காக தென்னாப்பிரிக்கா, இந்தியா மற்றும் உலகின் பல அரங்குகளில் கெளரவிக்கப்பட்டிருக்கிறார்.

  6. வந்துகொண்டிருக்கும் செய்தி, பிபிசி, நியூயார்க் டைம்ஸ், கார்டியன் உள்பட பல சர்வதேச ஊடக இணையதளங்கள் சில நிமிடங்கள் முடங்கின

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    உலகின் மிகப்பெரிய ஊடகங்களாக அறியப்படும் பிபிசி, நியூயார்க் டைம்ஸ், கார்டியன் உள்பட பல சர்வதேச ஊடக இணையதளங்கள் மற்றும் அமேசான், ரெட்டிட், ட்விட்ச் உள்ளிட்ட நிறுவனங்களின் இணையதளங்கள் சில நிமிடங்கள் முடங்கின.

    இந்த இணையதளங்களை திறக்க முயன்றபோது, 'Error 503 Service Unavailable' என்ற தகவல் மட்டுமே இடம்பெற்றது. எந்த காரணத்துக்காக இந்த பிரச்னை ஏற்பட்டது என்பதை இணைய தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

    இதற்கிடையே, சுமார் அரை மணி நேர முடக்கத்துக்கு பிறகு இந்த இணையதள சேவைகள் சீரடைந்துள்ளன.

  7. பிறப்பு, இறப்பு பதிவு காலதாமத கட்டணத்தில் இருந்து விலக்கு - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    தமிழ்நாட்டில் பிறப்பு, இறப்பு நடந்த 21 நாட்களுக்குப் பிறகு பதிவு செய்வோரிடம் காலதாமத கட்டணத்தை வசூலிக்காமல் விலக்கு அளித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இதுவரை அமலில் உள்ள நடைமுறைப்படி பிறப்பு, இறப்பு நடந்த 21 நாட்களுக்குப் பிறகு பதிவாளரிடம் விண்ணப்பிப்போருக்கு 21 நாட்கள் முதல் 30 நாட்கள்வரை காலதாமத கட்டணமாக ரூ.100, 30 நாட்களுக்குப் பிறகு ஓராண்டுக்குள்ளாக ரூ. 200, ஓராண்டுக்கு மேல் என்றால் ரூ. 500 ஆக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த காலதாமத கட்டணத்தை வசூலிக்க வேண்டாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி, ஜனவரி 1, 2020 முதல் நிகழ்ந்த பிறப்பு, இறப்பு பதிவில் தாமதம் ஏற்பட்டால் அதற்கான தாமத கட்டணத்தை வசூலிக்காமல் இருக்க விலக்கு அளிக்கப்படுகிறது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த தாமத கட்டணத்தால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படும் இழப்பை தமிழக அரசே ஈடு செய்யும் என்றும் அரசு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  8. பாகிஸ்தான் நடிகையின் நேரலையில் பாலியல் சீண்டல்: விஷம நபரின் திடீர் செயலால் சர்ச்சை

    பாலியல்

    பட மூலாதாரம், Getty Images

    "பெண்கள் மீது வெறுப்பை உமிழும் இந்த உலகில் அவர்களின் செயல்பாட்டை மதிப்பிடுவதில் இரட்டை நிலை தான் ஆதிக்கம் செலுத்துகிறது. இங்கே மற்றவர்களின் கருத்து மதிக்கப்படுவதில்லை. ஒரு பெண்ணை வெறுக்கும் ஒரு ஆண் பாராட்டப்படுகிறான், ஆனால் அதையே ஒரு பெண் செய்தால், அது வெறுக்கப்படுகிறது. ஒரு பெண் காதலிப்பதோ தனது அன்புக்குரியவர்களுடன் பேசுவதோ கூட தவறாகக் கருதப்படும் இச்சமூகத்தில், ஒரு பெண்ணின் படத்திற்கு முன்னால் ஒரு மனிதன் சுயஇன்பத்தில் ஈடுபடும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது."

    இவை பாகிஸ்தான் நடிகை ஹனியா ஆமிர் கூறிய வார்த்தைகள். இதை அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு காணொளியுடன் பதிவிட்டுள்ளார்.

  9. அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டம்: காத்திருப்பு முடிவுக்கு வருமா?

    ஜாதி

    பட மூலாதாரம், Getty Images

    தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரையும் கோவில்களில் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் பயிற்சியை முடித்த மாணவர்கள் 12 ஆண்டுகளுக்கு மேலாக கோவில்களில் பணிபுரியும் வாய்ப்பிற்காகக் காத்திருக்கின்றனர். தகுதியின் அடிப்படையில் தங்களை கோவில்களில் நியமிக்க வேண்டும் என்கிறார்கள் அவர்கள்.

    2006ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கப்படலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டு, இதற்கென திறக்கப்பட்ட பயிற்சிப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கோவில்களில் தங்கள் நியமனத்திற்காகக் காத்திருக்கின்றனர்.

    தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோவில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க அனுமதிக்கும் வகையில் 2006ஆம் ஆண்டில் இருந்த தி.மு.க. அரசு சட்டம் ஒன்றை இயற்றியது. இதற்கென அரசாணை ஒன்றும் வெளியிடப்பட்டது. அந்த அரசாணையின் அடிப்படையில், நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு அர்ச்சக மாணவர்களின் தகுதி, பாடத்திட்டம், பயிற்சிக் காலம், கோவில்களில் நடைபெறும் பூஜை முறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து பரிந்துரைகளை அளித்தது.

    இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் சென்னை பார்த்தசாரதி கோவில், திருவரங்கம் ஆகிய இடங்களில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் மதுரை, திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் உருவாக்கப்பட்டன.

  10. புதுச்சேரி: ஊரடங்கு தளர்வுக்கு பிறகு திறக்கப்பட்ட மதுபான கடைகளில் குவியும் மது பிரியர்கள்

    பார்

    புதுச்சேரியில் அமலுக்கு வந்துள்ள ஊரடங்கு தளர்வுகளைத் தொடர்ந்து, 42 நாட்களுக்கு பிறகு மதுபானக்கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்த மது பிரியர்கள் மதுபானத்தை வாங்கிச் செல்கிறார்கள்.

    புதுச்சேரியில் மாநிலத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய தளர்வுகள் இன்று முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது.

    இதில் அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், நீண்ட நாட்களுக்கு பிறகு அனைத்து கடைகளும் இன்று திறக்கப்பட்டன.

    அதேபோல் வழிபாட்டுதலங்கள் மற்றும் கடற்கரை சாலை திறக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்து, ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட பொது போக்குவரத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த மதுபான கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், புதுச்சேரியில் உள்ள மதுபானக் கடைகள் அனைத்தும் 42 நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டன.

    முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்கப்படுகின்றன. இதேபோல் மதுக்கடை ஊழியர்கள், மது வாங்க வருபவர்களை சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்து, வெப்ப பரிசோதனையும் மேற்கொண்டு கடைக்குள் அனுமதிக்கின்றனர்.

    அனைத்து மதுபானக்கடைகளிலும் கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் மதுக்கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் 15 நாட்களுக்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமெனவும் கலால் துறை உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    bar
  11. ஆக்ரா: ஒத்திகைக்காக ஐசியு நோயாளிகளின் ஆக்சிஜனை துண்டித்ததாக சர்ச்சை: தனியார் மருத்துவமனை செயல்பாட்டை விசாரிக்க உத்தரவு

    கொரோனா

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கோப்புப்படம்

    உத்தர பிரதேச மாநிலத்தின் ஆக்ராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவிய காலத்தில், ஆக்சிஜனின்றி எவ்வளவு நோயாளிகள் தாக்குப்பிடிப்பார்கள் என்பதை அறிய சோதனை நடத்தியதாக அதன் உரிமையாளர் பேசியதாக வெளியான காணொளி சர்ச்சையாகியிருக்கிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

    தனியார் மருத்துவமனையின் உரிமையாளர் அரின்ஜே ஜெயினின் குரல் என நம்பப்படும் காணொளி தனியார் ஊடக ட்விட்டர் பக்கத்தில் வெளியானது. அதில் அரின்ஜே ஜெயினின் உருவம் தெரியவில்லை. அவரது குரல் மட்டுமே கேட்கிறது. அந்த ஆடியோவில், "உத்தர பிரதேச முதல்வராலேயே மாநிலத்துக்கு தேவையான ஆக்சிஜனை பெற முடியவில்லை.

    எனவே, நோயாளிகளை விரைவாக டிஸ்சார்ஜ் செய்யுங்கள். மோதி நகரில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாங்கள் நோயாளிகளின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூற தொடங்கினோம். சிலர் நாங்கள் சொல்வதை கேட்டனர். சிலர் மருத்துவமனையில் புறப்பட தயாராக இல்லை. எனவே. ஒத்திகை போன்ற ஒன்றை நடத்த முடிவெடுத்தேன். அதன் மூலம் யாருக்கெல்லாம் ஆக்சிஜன் தேவை, யாருக்கெல்லாம் தேவைப்படாது என்பதை அறிய திட்டமிட்டோம்.

    அதை நாங்கள் செய்தது யாருக்கும் தெரியாது. காலை 7 மணிக்கு நடந்த ஒத்திகையின் அங்கமாக ஆக்சிஜன் மூலம் சிகிச்சை பெற்று வந்த 22 நோயாளிகளை அடையாளம் கண்டோம். அவர்களுக்கான ஆக்சிஜனை 5 நிமிடங்களுக்கு துண்டித்தோம்.

    அதில் பலரது உடல் நீல நிறமாக மாறியது. அவர்கள் எல்லாம் ஆக்சிஜன் தீவிர தேவை உடையவர்கள் என கண்டறிந்தோம்," என்று பேசுகிறார்.

    ஒன்றரை நிமிடம் ஓடக்கூடிய அந்த காணொளி, ஏப்ரல் 28ஆம் தேதி பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த காணொளியில் இடம்பெற்ற குரல் பதிவு, பிற தனியார் ஊடகங்களில் திங்கட்கிழமை வைரலானது. இது தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர் பிரபு என். சிங், காணொளியில் கூறப்பட்ட நாளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

    எனினும், அந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து வருகிறோம்," என்று கூறினார். கடந்த ஏப்ரல் 26,27 ஆகிய தேதிகளில் குறிப்பிட்ட அந்த மருத்துவமனையில் ஏழு கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

    எனவே, ஊடகங்களில் வெளிவருவது போல அந்த மருத்துவமனையில் 22 பேர் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்ததாக வெளிவரும் தகவலில் உண்மை இல்லை என்று மாவட்ட ஆட்சியர் பிரபு என். சிங் தெரிவித்தார்.

  12. வந்துகொண்டிருக்கும் செய்தி, இந்தியாவில் கொரோனா தொற்று ஒரு லட்சத்துக்கு கீழ் குறைந்தது

    கொரோனா

    பட மூலாதாரம், Getty Images

    இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று 66 நாள்களுக்குப் பிறகு ஒரு லட்சத்துக்குக் கீழ் குறைந்தது.

    நேற்றைய பதிவுகளின்படி 86,498 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 4.63 சதவிகிதமாக உள்ளது.

    கடந்த 15 நாள்களாகவே இந்த அளவு 10 சதவிகிதத்துக்கும் குறைவாக உள்ளது. 24 மணி நேரத்தில் 1.82 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

    குணமடையும் விகிதம் 94.29 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.

  13. கனடாவில் முஸ்லிம் குடும்பம் மீது வாகனத்தை மோதவிட்டு படுகொலை

    கனடா

    பட மூலாதாரம், Reuters

    கனடாவில் முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் முன்னரே திட்டமிட்டு வாகனத்தால் மோதி படுகொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள லண்டன் நகரில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. அந்தக் குடும்பத்தில் 9 வயதான சிறுவன் மட்டும் உயிர்பிழைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

    இந்தப் படுகொலை தொடர்பாக 20 வயதான கனடிய நபர் மீது கொலை வழக்கும் கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    2017-ஆம் ஆண்டு க்யூபெக் மசூதியில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு நடந்திருக்கும் மிக மோசமான தாக்குதலாகும் இது.

    முஸ்லிம்கள் என்பதற்காகவே அவர்கள் தாக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி பால் வைட் தெரிவித்துள்ளார்.

    74 வயதான பெண், 44 வயதான மற்றொரு பெண், 46 வயதான ஆண், மற்றும் 15 வயதான சிறுமி ஆகியோர் இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.