You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

நீட் பாதிப்பை ஆராய, மாற்று சேர்க்கை முறையை பரிந்துரைக்க ஏ.கே.ராஜன் தலைமையில் குழு

சமூக நீதியில் நீட் தேர்வு எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் தமிழக அரசு உயர்நிலைக்குழு அமைக்கும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இன்றைய நேரலை நிறைவு பெற்றது

    நேயர்களுக்கு வணக்கம்,பிபிசி தமிழ் சேவையின் இன்றைய நேரலை தகவல்களை இத்துடன் நிறைவு செய்கிறோம். மீண்டும் நாளை சந்திப்போம். உலகம் மற்றும் தேசிய செய்திகளுக்கு பிபிசி தமிழ் பக்கத்தில் இணைந்திருங்கள். நன்றி.

  2. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து - மதிப்பெண் எவ்வாறு வழங்கப்படும்

    தமிழ்நாட்டில் மாநில பாடத் திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவிருந்த மாணவர்களுக்கு, பொதுத் தேர்வு நடத்தப்படாது என அறிவித்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

    மாணவர்களின் உடல் நலம் மற்றும் மன நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அரசின் செய்தியறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    கொரோனா இரண்டாம் அலை மாநிலத்தின் பல பகுதிகளில் இன்னும் தீவிரமாகவே இருந்து வருவதாலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த இயலும் என்பதாலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மாணவர்களை தேர்வு எழுத அழைப்பது தொற்றினை அதிகரிக்கச் செய்யலாம் என்பதை கருத்தில் கொண்டும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பதாக அவ்வறிக்கையில் குறிபிடப்பட்டிருக்கிறது.

    சமீபத்தில் தான் மத்திய அரசு சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்துக்கான 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்தது. அதனைத் தொடர்ந்து தற்போது பல்வேறு மாநில அரசுகளும், தங்கள் மாநில பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யத் தொடங்கின.

  3. ரூ.20 லட்சம் கோடி நிதி தொகுப்பு என்ன ஆனது?

    மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிவரம், வேலையின்மை விகிதம் (இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது), பணவீக்க விகிதம் (உணவுப் பொருட்கள் விலைகள் உயர்ந்து கொண்டிருக்கின்றன), மக்களின் செலவு செய்யும் திறன் (வருமானம் இல்லாத நிலையில் செலவு எப்படிச் செய்வது).

    கடந்த ஓராண்டாக, இதில் எந்த அம்சத்திலும் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு இதுவே காரணம்.

    பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் திறன் வாய்ந்த அரசாகக் கூறிக்கொள்ளும் மோதி அரசின் எந்த முயற்சியும் பொருளாதாரத்தைச் சீர் செய்வதில் பலனளிக்கவில்லை. எனவே தவறு எங்கே நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

    வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் முழுவதுமாக நொடித்துப் போய்விடாமல் இருக்க, கொரோனாவின் முதல் அலையில், மோடி அரசு 20 லட்சம் கோடி நிவாரணப் தொகுப்பை அறிவித்தது.

  4. தமிழகத்தில் எந்தெந்த ஊரில் முழு ஊரடங்கு? எங்கெல்லாம் தளர்வுகள்?

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜுன் 14ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  5. தமிழகத்தில் நீட் தேர்வு - ஆராய குழு அமைத்த அரசு

    சமூக நீதியில் நீட் தேர்வு எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்தும், அவற்றைச் சரி செய்யும் வழிமுறைகள், மாற்று சேர்க்கை முறை - சட்ட வழிமுறைகளை அரசுக்குப் பரிந்துரை செய்திட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்படுகிறது என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இந்த தேர்வு பின்தங்கிய மாணவர்களை பாதித்துள்ளது என்றால், இதற்கான மாற்று முறைகளை இந்த முழு ஆராய்ந்து பரிந்துரைக்கும் என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    பல்லேறு வல்லுநர்களும் நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கும், அரசு மற்றும் தமிழ்வழி கல்வியில் படித்தவர்களுக்கும் வாய்ப்பளிக்கவில்லை என்று கூறுகின்றனர் என்றும் சமூக நீதியை நிலைநாட்டும் வரலாற்று பொறுப்பு தமிழகத்திற்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  6. கொரோனா இருப்பது தெரியாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் என்னவாகும்?, விஷ்ணுப்ரியா ராஜசேகர், பிபிசி தமிழ்

    கொரோனா தடுப்பூசி குறித்து நேயர்கள் பிபிசியின் சமூக வலைதள பக்கங்களில் கேட்ட கேள்விகளுக்கான நிபுணர்களின் பதில்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம். இருபாகங்களாக வெளியாகவிருக்கும் தொகுப்பு

  7. டெல்லியில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு

    இந்திய தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், தளர்வுகளை அறிவித்துள்ளார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

    • 50 சதவீத இருக்கைகளுடன் டெல்லி மெட்ரோ ரயில் சேவை தொடங்கும்
    • தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி.
    • சந்தைகள், மால்கள் ஆட் – ஈவன் அடிப்படையில் இயங்க அனுமதி
    • இந்த தளர்வுகளுடன் மீதமுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்

    மேலும், மூன்றாவது அலையை எதிர்கொள்ள டெல்லி தயாராக இருப்பதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

    குழந்தைகளை மூன்றாவது அலை அதிகம் தாக்கும் என்ற எச்சரிக்கை இருக்கும் நிலையில், குழந்தைகள் நல குழு ஒன்று அமைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

    மேலும் 420 டன் ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கு தயார் செய்யப்பட்டு வருவதாகவும், புதிய உருமாற்றம் அடையும் வைரஸ் திரிபுகளை கண்டறிய இரண்டு ஆய்வகங்கள் அமைக்கப்படுவதாகவும் முதல்வர் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.

  8. தமிழ்நாட்டில் ஊரடங்கு: என்னென்ன தளர்வுகள்? எதற்கெல்லாம் அனுமதி?

    தமிழ்நாட்டில் தற்போது கொரோனா நோய்த் தொற்று பரவலாக பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்துள்ள போதிலும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் நோய்த் தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள், எதற்கெல்லாம் அனுமதி என்பதை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

  9. இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1.20 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 58 நாட்களில் இதுவே குறைந்த எண்ணிக்கை.

    கடந்த 9 நாட்களாக 2 லட்சத்துக்கும் கீழ் புதிய கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகி வருகிறது.

    கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1,97,894 பேர் இத்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 2.67 கோடியாக இருக்கிறது. இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 93.38 சதவீதமாக உள்ளது.

  10. தமிழ்நாட்டில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜுன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே அமலில் இருக்கும் முழு ஊரடங்கு வரும் 7ஆம் தேதி காலை முடிவுக்கு வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கின்போது அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  11. டிரம்பின் ஃபேஸ்புக் கணக்கு இரண்டு ஆண்டுகள் முடக்கம்

    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை இரண்டு ஆண்டுகளுக்கு நீக்கியுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.

    கடந்த ஜனவரி மாதம், அமெரிக்க கேப்பிடோல் அலுவலகத்தில் நடந்த வன்முறை குறித்து அவர் இட்ட பதிவுகளுக்காக ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், டிரம்பின் கணக்கை முற்றிலும் முடக்கியது. ஆனால், இந்த முடிவு, ஃபேஸ்புக் மேற்பார்வை ஆணையத்தால் கடந்த மாதம் விமர்சனத்திற்கு உள்ளானது.

    “டிரம்பின் செயல் ஒரு தீவிர விதிமுறை மீறல்” என்று ஃபேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டது.

    கடந்தாண்டு அதிபர் தேர்தலில் தனக்கு வாக்களித்த லட்சக்கணக்கான மக்களை இது “அவமானப்படுத்தும் செயல்” என்று டிரம்ப் இந்த நடவடிக்கையை விமர்சித்திருந்தார்.

    ஃபேஸ்புக்கின் புதிய விதிமுறை படி வன்முறை அல்லது அமைதியின்மையை ஏற்படுத்துவது போல பதிவிடும் முக்கிய நபர்களின் கணக்குகள் ஒரு மாதம் அல்லது தீவிர வழக்குகளில் இரண்டு ஆண்டுகள் வரை சஸ்பெண்ட் செய்யப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

  12. பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!

    இன்று உலகம், இந்தியா மற்றும் தமிழகத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த நேரலை பக்கத்துடன் இணைந்திருங்கள்