மதுரையில் கலைஞர் நூலகம், சென்னையில் புதிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி தமிழ்நாடு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. பிபிசி தமிழ் இன்றைய நேரலை நிறைவடைந்தது

    பிபிசி நேயர்களுக்கு வணக்கம்,

    இத்துடன் இந்த நேரலை பக்கத்தை நிறைவு செய்கிறோம். உலக நிகழ்வுகளுக்கு தொடர்ந்து பிபிசி தமிழ் இணையதளம் மற்றும் சமூக ஊடக பக்கங்களில் இணைந்திருங்கள். நன்றி.

  2. கொரோனா காலத்தில் தமிழகத்தில் நடந்த 318 குழந்தை திருமணங்கள் - அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி காரணம்

    கீதா ஜீவன்

    பட மூலாதாரம், Geetha Jeevan FB

    `குழந்தைத் திருமணங்களை ஊக்குவிப்போர் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என தமிழக அரசு எச்சரித்துள்ளது. அதேநேரம், `குழந்தைகளின் உரிமைகளைக் கண்காணிக்கும் அமைப்புகள் செயலிழந்து விட்டன' என்கின்றனர் சமூக செயல்பாட்டாளர்கள். உண்மையில் என்ன நடக்கிறது?

    கொரோனா தொற்று ஊரடங்கு காலகட்டத்தில் பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதால் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து விட்டன. இந்த காலகட்டத்தில் 40 சதவிகிதம் வரையில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

    இதனைத் தடுப்பது குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாடு சமூக நலத்துறை சார்பில் கடந்த 31ஆம் தேதி அரசு தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

    இதில், மாவட்ட சமூக நல அலுவலர்கள், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள், 1098 சைல்டு லைன் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

    கூட்டத்தில் பேசிய தமிழக சமூக நலன் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் துறை அமைச்சர் கீதா ஜீவன், `குழந்தைத் திருமணங்களை நடத்துகிறவர்கள், அதனை ஊக்குவிப்பவர்கள், இத்தகைய திருமணத்தில் கலந்து கொள்கிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,' என எச்சரித்தார்.

  3. மெஹுல் சோக்சிக்கு டொமினிகா நீதிமன்றத்தில் பிணை மறுப்பு

    மெகுல் சோக்சி

    பட மூலாதாரம், ANI

    வைர வியாபாரி மெஹுல் சோக்சிக்கு பிணை வழங்க டொமினிகா நாட்டு நீதிமன்றம் மறுத்து விட்டது.

    இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி பெர்னீ ஸ்டீஃபன்சன், "முதலில் அவர் நாட்டுக்குள் எப்படி சட்டவிரோதமாக நுழைந்தார்?" என்பதை தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.

    அவருக்கு பிணை மறுக்கப்பட்ட தகவலை அவரது வழக்கறிஞர் விஜய் அகர்வால் உறுதிப்படுத்தினரார். இதையடுத்து, மேல் நீதிமன்றத்தில் மெஹுல் சோக்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று விஜய் அகர்வால் கூறினார்.

    முன்னதாக, டொமினிகா நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, "ஏற்கெனவே ஒரு நாட்டை விட்டு தப்பி வந்தவர், இங்கு பிணையில் விடுவிக்கப்பட்டால் பிறகு இங்கிருந்து தப்பிச் செல்ல மாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை," என்றார்.

  4. ஒலிம்பிக் இந்திய வீரர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள பிரதமர் அறிவுரை

    பிரதமர் மோதி

    பட மூலாதாரம், PMO PIB

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தயாராகி வரும் இந்திய வீரர், வீராங்கனைகளுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி இன்று ஆலோசனை நடத்தினார்.

    இந்திய ஒலிம்பிக் குழுவினருடன் ஜூலை மாதம் இணைவதாகக் கூறிய நரேந்திர மோதி, பெருமிதப்படும் தாய்நாடு அவர்களுடன் துணை நிற்கும் என்று தெரிவித்தார்.

    தடுப்பூசி முதல் பயிற்சி வசதிகள் வரை அனைத்து வீரர், வீராங்கனைகளின் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் 50 நாட்களே உள்ள நிலையில், அதில் பங்கேற்கும் இந்திய அணி தொடர்பான காணொளி விளக்கத்தை அதிகாரிகள் வழங்கினர்.

    சர்வதேச போட்டிகளில் பங்கேறும் இந்திய வீரர், வீராங்கனைகள் தவறாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோதி கேட்டுக் கொண்டார்.

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. . இதில் 11 விளையாட்டுப் பிரிவுகளில் 100 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். மேலும் 25 பேர் ஜூன் மாத இறுதியில் தகுதி பெறுவார்கள்.

  5. பதஞ்சலி கொரோனா கிட் விளம்பரத்தில் சர்ச்சை கருத்து: பாபா ராம் தேவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

    பாபா ராம் தேவ்

    பட மூலாதாரம், TWITTER

    கொரோனா வைரஸை குணப்படுத்துவதாகக் கூறி பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் வெளியிடும் கிட்டுகள் தொடர்பான வழக்கில், சர்ச்சைக்குரிய கருத்துகளை பாபா ராவ் தேவ் தவிர்க்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த விவகாரத்தில் அடுத்த விசாரணை நடைபெறவுள்ள ஜூலை 13ஆம் தேதிவரை ஆத்திரமூட்டக்கூடிய தகவல்களை தவிர்க்குமாறு பாபா ராம் தேவிடம் அறிவுறுத்துமாறு அவரது தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி சி. ஹரிசங்கர் கேட்டுக் கொண்டார்.

    கொரோனா வைரஸுக்கு ஆங்கில மருத்துவம் பயன் தராது என்ற வகையில் அடிப்படையற்ற, போலியான, உள்நோக்கத்துடன் கூடிய தகவல்களை பரப்புவதாக பாபா ராம் தேவை மீது டெல்லி ஐ.பி.எஸ்டேட் காவல் நிலையத்தில் டெல்லி மருத்துவ சங்கம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அவருக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பிய மருத்துவ சங்கம், தமது கருத்தை அவர் 15 நாட்களுக்குள் திரும்பப் பெறாவிட்டால் அவரிடம் இருந்து ரூ. 1,000 கோடி கோரப்படும் என்று கூறியிருந்தது.

    இந்த நிலையில், இது தொடர்பாக டெல்லி மருத்துவ சங்கத்தின் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணையின்போது, பாபா ராம் தேவ் வெளியிட்ட ஓர் காணொளியில் ஆங்கில மருத்துவத்தை எடுத்துக் கொண்ட லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பலியாவதாக பொருள்படும் வகையில் அவர் பேசியிருப்பதை மருத்துவ சங்கத்தின் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினர்.

    கொரோனாவுக்கு தமது தயாரிப்பு மருந்துதான் தீர்வு தரும் என்ற பதஞ்சலி நிறுவன விளம்பரத்தை நிறுத்த வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

    இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதி, "பாபா ராம்தேவின் கருத்து பேச்சு சுதந்திரத்தின் கீழ் வருகிறது. ஒருவேளை எனக்கு ஹோமியோபதி மருத்துவம் மீது நம்பிக்கை இல்லையென்றால் நாளை என் மீதே வழக்கு தொடரப்படுமா?"என்று கேள்வி எழுப்பினார்.

    இந்த விவகாரத்தில் வழக்காடுவதை விட, மருத்துவ சங்கத்தினர், தங்களுடைய பொன்னான நேரத்தை மோசமான கொடிய வைரஸில் இருந்து மக்களை காக்க செலவிட வேண்டும் என்று நீதிபதி கேட்டுக் கொண்டார்.

    முன்னதாக, டெல்லி மருத்துவ சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜிவ் தத்தா, "பாபா ராம் தேவின் பொய்யான பேச்சுகளால், மக்களில் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்குகிறார்கள்," என்று குறிப்பிட்டார்.

    இந்த விவகாரத்தில் ஏற்கெனவே பாபா ராம் தேவின் கருத்து ஏற்புடையதல்ல என்று கூறியுள்ள இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், உடனடியாக அந்த கருத்தை திரும்பப்பெறும்படி வலியுறுத்தியிருந்தார்.

  6. மதுரையில் கலைஞர் நூலகம், சென்னையில் புதிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, தமிழ்நாடு அரசு அறிவிப்பு

    மு.கருணாநிதி

    பட மூலாதாரம், Getty Images

    சென்னையில் 250 கோடி ரூபாய் செலவில் புதிதாக பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையும் மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில் புதிய நூலகமும் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பயணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி தமிழ்நாடு அரசு ஆறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்ட்டிடியூட் வளாகத்தில் 250 கோடி ரூபாய்செலவில் 500 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைஅமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தைப் போல மதுரையில் இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என்றும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இலக்கிய மாமணி விருது வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் மூன்று பேருக்கு வழங்கப்படும் இந்த விருதில், பாராட்டுப் பத்திரமும் ஐந்து லட்சம் ரூபாய் சன்மானமும் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல, அகில இந்திய அளவில் சாகித்ய அகாதெமி,ஞானபீடம் விருதுகளைப் பெற்றவர்களுக்கு, அவர்கள் சொந்த மாவட்டத்தில் அல்லது விரும்பிய மாவட்டத்தில் வீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    டெல்டா மாவட்டங்களில் விவசாய விளை பொருட்கள் மழையால் சேதமடைவதைத் தடுப்பதற்காக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, வலங்கைமான் ஆகிய இடங்களில் 16 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக்கிடங்குகள் கட்டப்படும் என்றும் தானியங்கள், பயறு வகைகளை உலரவைக்க 54 உலர் களங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஏற்கனவே பெண்களுக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோருக்கும் இனி கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு முடிவுக்குவந்ததும் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

  7. சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பிளஸ் டூ பொதுத்தேர்வு தேர்ச்சியை அளவிடும் நடைமுறைகள்: இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

    சிபிஎஸ்இ

    பட மூலாதாரம், Twitter

    சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ ஆகிய வாரியங்கள், பிளஸ் டூ வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி மதிப்பீட்டுக்கான அளவீடுகள் குறித்த அறிக்கையை இரு வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பான வழக்கை நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி அடங்கிய அமர்வு விசாரித்தது.

    அப்போது மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் (அட்டர்னி ஜெனரல்) கேகே. வேணுகோபால் மற்றும் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில் (சிஐஎஸ்சிஇ) வழக்கறிஞர் ஜே.கே. தாஸ் ஆகியோரிடம், "சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், பிளஸ் டூ மாணவர்களின் தேர்ச்சி மதிப்பீட்டுக்கான அளவீடுகள் எவ்வாறு நிர்ணயிக்கப்படும் என்பதை எழுத்துப்பூர்வமாக அறிய விரும்புகிறோம். இது பற்றிய அறிக்கையை இரு வாரங்களில் தாக்கல் செய்யவும்," என்று குறிப்பிட்டனர்.

    இந்த விஷயத்தில் மேற்கொண்டு அவகாசம் தர முடியாது என்று தெளிவுபடுத்திய நீதிபதிகள், முன்கூட்டியே மாணவர்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டால்தான் அவர்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளில் சேர வாய்ப்பு கிடைக்கும்," என்று தெரிவித்தனர்.

    எதிர்காலத்தில் மாணவர்கள் யாரேனும் தேர்ச்சி தொடர்பாக ஆட்சேபம் தெரிவித்தால் அரசு நிர்ணயிக்கும் அளவீடுகள் உதவியாக இருக்கும் என்று நீதிமன்றம் கூறியது.

    இதைத்தொடர்ந்து இந்த வழக்கை இரு வாரங்களுக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

    நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று தீவிரமாகி வருவதால் பிளஸ் டூ பொதுத்தேர்வை ரத்து செய்யும் முடிவை சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான உயர்நிலைக்குழு எடுத்தது. அப்போது தேர்ச்சி பெறும் மாணவர்களின் செயல்திறன் அளவீடுகள் தொடர்பாக மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் பின்னர் தெரிவிக்கும் என்று மத்திய அரசு கூறியது.

    முன்னதாக, இந்த விவகாரத்தில் பிளஸ் டூ தேர்வை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

  8. இரான் கடற்படையின் மிகப்பெரிய கப்பல் ஓமன் வளைகுடா கடல் பகுதியில் தீப்பிடித்து மூழ்கியுள்ளது

    இரான் கப்பல்

    பட மூலாதாரம், Reuters

    இரான் கடற்படையின் மிகப்பெரிய கப்பல் ஒமன் வளைகுடா கடல் பகுதியில் தீப்பிடித்து மூழ்கியுள்ளது.

    இரானிய ஊடக தகவல்களின்படி, கார்க் என்ற அந்த கப்பலில் இருந்த மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

    தீப்பிடித்த கப்பல் தொடர்பான மற்ற விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. அதே சமயம், சம்பவம் நடந்த பகுதி மிகவும் நுட்பமானதாக அறியப்படுகிறது.

    இரானுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான சமீபத்திய ஆண்டுகளாக நிலவிய பதற்றங்களின் மையப்பகுதியாக அந்த இடம் கருதப்படுகிறது.

    இரானும் இஸ்ரேலும் கடந்த மாதங்களாகவே தங்களின் கப்பல்கள் தாக்கப்படுவதாக பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.

  9. டோக்கியோ ஒலிம்பிக் நடப்பது "100%" உறுதி: விளையாட்டுக் குழு தலைவர்

    ஒலிம்பிக்

    பட மூலாதாரம், Getty Images

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடப்பது 100 சதவிகிதம் உறுதி என 2020 ஒலிம்பிக் விளையாட்டுக் குழுவின் தலைவர் செய்கோ ஹஷிமோட்டோ தெரிவித்துள்ளார். எனினும் பார்வையாளர்களுக்கு அனுமதியளிக்க வாய்ப்பில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

    உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் 50 நாள்களே இருக்கின்றன. வரும் ஜூலை 23-ஆம் தேதி போட்டிகளைத் தொடங்குவதற்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

    எனினும் ஜப்பானில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதன் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவது குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது.

    இப்போதைக்கு போட்டிகளை பாதுகாப்பான சூழலில் எப்படி நடத்துவது என்பது மட்டும்தான் கேள்வி என பிபிசி செய்தியாளர் லாரா ஸ்காட்டிடம் செய்கோ ஹஷிமோட்டோ தெரிவித்துள்ளார்.

  10. இந்தியாவில் புதிதாக 1.34 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு

    கொரோனா

    பட மூலாதாரம், EPA

    இந்தியாவில் புதிதாக 1.34 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இத்துடன் கொரோனா ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 17 லட்சத்து 34 ஆயிரத்து 154 பேராக உள்ளனர் என்று இந்திய சுகாதார அமைச்சக தரவுகள் கூறுகின்றன.

    கடந்த 24 மணி நேரத்தில் 2,887 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாகவும் அரசு கூறியுள்ளது.

    அதிக பாதிப்புகள் நிறைந்த மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு, கேரளா ஆகியவை உள்ளன. தமிழ்நாட்டில் கொரோனா புதிய பாதிப்பு எண்ணிக்கை 25,317 ஆகவும், கேரளாவில் 19,661 புதிய பாதிப்பு எண்ணிக்கை உள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.