இலங்கை கடற்பகுதியில் மூழ்கும் கப்பல்: அச்சுறுத்தலில் கடல்வாழ் உயிரிகள்

உலக அளவிலும் தேசிய அளவிலும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளின் சுருக்கத்தை இந்த நேரலை பக்கத்தில் வழங்குகிறோம்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இன்றைய நேரலை நிறைவடைந்தது

    நேயர்களுக்கு வணக்கம், பிபிசி தமிழ் சேவையின் இன்றைய நேரலை தகவல்களை இத்துடன் நிறைவு செய்கிறோம். மீண்டும் நாளை (03 ஜூன் 2021, வியாழக்கிழமை) சந்திப்போம். உலக மற்றும் தேசிய செய்திகளுக்கு பிபிசி தமிழ் பக்கத்தில் இணைந்திருங்கள்.

    நன்றி.

  2. புதுச்சேரியில் சபாநாயகர் பதவி பாஜகவுக்கு ஒதுக்கீடு

    புதுச்சேரி

    புதுச்சேரியில் சபாநாயகர் பதவி பாஜகவிற்கு ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அமைச்சர்கள் எத்தனை என்பது கட்சியின் தேசிய தலைமை அறிவிக்கும் என்று புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.

    புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சித் தலைமை அலுவலகத்தில் பாஜக மற்றும் பாஜக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதுச்சேரியில் சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் தொடர்பாக தேசிய தலைமை எடுக்கும் முடிவுக்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

    ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பாஜக மாநில தலைவர் சாமிநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய‌ அவர், "புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுக்கான அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் தொடர்பாக தேசிய தலைமை கடந்த ஒரு வாரக் காலமாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமித் ஷா, புதுச்சேரி மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா உள்ளிட்டார் இணைந்து நடத்திய பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவிற்கு சபாநாயகர் பதவியை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அமைச்சரவையை பொறுத்தவரை என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு எத்தனை அமைச்சர்கள் ஒதுக்கப்பட உள்ளனர் என்பதை அடுத்த இரு தினங்களில் தேசிய தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்," என்றார்‌ அவர்.

    தொடர்ந்து பேசிய அவர், "அடுத்த ஐந்து ஆண்டுகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக இருக்கும். இதில் எந்த வியூகத்திற்கும் இடமில்லை. அடுத்த இரண்டு நாட்களில் சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் பொறுப்பேற்பார்கள். இதற்கிடையில் சபாநாயகர் தேர்தல் நடைபெறும். மேலும் கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகளும் அனைத்து முடிவுகளிலும் சுமுகமாக உள்ளன. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கொரோனா தொற்று காரணமாக சிகிச்சையிலிருந்த காரணத்தினால் இதுபோன்ற சூழலில் ஏதும் நடைபெறக்கூடாது என்பதற்காக காலதாமதமானது. ஆனால் இந்த சூழலை எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியில் குழப்பம் இருப்பது போன்று தவறான வதந்திகளைப் பரப்பியுள்ளனர்," என்று அவர் மேலும் கூறினார்.

  3. தமிழ்நாட்டில் புதிதாக 25,317 பேருக்கு கொரோனா பாதிப்பு

    தமிழகத்தில் புதிதாக 25,317 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

    இதன்படி, தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,48,346ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் மாநிலம் முழுவதும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 483 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 25,205ஆக உயர்ந்துள்ளது.

  4. மோதி - அமித் ஷாவுக்கு நேரடி சவால் விடுக்கத் துணிந்தாரா யோகி ஆதித்யநாத்?

    யோகி ஆதித்யநாத்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, யோகி ஆதித்யநாத்

    உத்தர பிரதேச மாநில அரசியலில் யாரும் எதிர்பாராத திருப்பமாக பல நிகழ்வுகள் சமீபத்திய வாரங்களாக அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் பலரும் உத்தர பிரதேசத்தில் முகாமிட்டு நடத்தி வரும் கூட்டங்கள், அம்மாநில அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    இந்த கூட்டங்களின் தாக்கமாக விரைவில் மாநில பாஜக அளவிலும் அமைச்சரவையிலும் மாற்றத்துக்கான சாத்தியம் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் நம்புகிறார்கள். இந்த விவகாரம் கட்சியின் எல்லா நிலைகளிலும் இப்போது பேசுபொருளாகியிருக்கிறது.

  5. இந்திய அரசின் தடுப்பூசி கொள்கை - உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

    இந்தியாவில் 45 வயதை கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாகவும் 18-44 வயதுடையவர்களுக்கு கட்டண அடிப்படையிலும் தடுப்பூசி வழங்கும் மத்திய அரசின் கொள்கை குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், நாகேஸ்வர ராவ், எஸ். ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கட்கிழமை விசாரித்தது. அதன் முழு விவரம் மற்றும் உத்தரவு செவ்வாய்க்கிழமை வெளியானது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் அரசு கடைப்பிடிக்கும் சில கொள்கை அல்லது திட்டம் எதேச்சதிகாரம் அல்லது முறையற்று உள்ளதாக கருத்து தெரிவித்தனர்.

  6. உத்தராகண்ட் மாநிலத்தில் +2 பொதுத்தேர்வு ரத்து

    உத்தராகண்ட் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவிப்பு.

  7. சீனா மீது மலேசியா குற்றச்சாட்டு

    சீனா - மலேசியா

    பட மூலாதாரம், Getty Images

    தனது நாட்டின் கிழக்கு மாநிலமான சரவாக் அருகே உள்ள சர்ச்சைக்குரிய கடற்பகுதியில் சீனாவின் 16 ராணுவ விமானங்கள் பறந்த விவகாரம் தொடர்பாக சீன தூதருக்கு சம்மன் அனுப்ப உள்ளதாக மலேசியா தெரிவித்துள்ளது.

    சீனாவின் இந்த செயல் "தேசிய இறையாண்மைக்கு கடுமையான அச்சுறுத்தல்" என்று மலேசியாவின் வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது.

    இந்த நிலையில், சர்வதேச சட்டத்திற்குக் கட்டுப்பட்டே தங்களது விமானங்கள் பறந்ததாக சீனா விளக்கம் அளித்துள்ளது.

  8. இலங்கை கடற்பகுதியில் மூழ்க தொடங்கியது எக்ஸ்பிரஸ் பெர்ல் கப்பல்

    இலங்கை கடற்பகுதியில் மூழ்க தொடங்கியது எக்ஸ்பிரஸ் பெர்ல் கப்பல்

    பட மூலாதாரம், SRI LANKA AIR FORCE

    ஒரு மிகப் பெரிய சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தும் என்று அஞ்சப்பட்ட ரசாயனம் நிரப்பப்பட்ட சரக்குக்கப்பல் ஒன்று இலங்கையின் கடலோர பகுதியில் மூழ்க தொடங்கியுள்ளது.

    சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் பெர்ல் (X-Press Pearl) என்ற இந்த கப்பல் சுமார் இரண்டு வாரங்களாக தீப்பற்றி எரிந்து வந்த நிலையில், தற்போது மூழ்க தொடங்கியுள்ளது.

    இந்த கப்பல் முற்றிலும் மூழ்கும் பட்சத்தில் அதிலுள்ள சில நூறு டன் எண்ணெய் கடலில் கொட்டி அது கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கக்கூடும்.

    இலங்கை மற்றும் இந்திய கடற்படைகள் கடந்த சில நாட்களாக கூட்டாக இணைந்து தீயை அணைக்கும் பணியிலும், கப்பல் உடைந்து மூழ்குவதைத் தடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டன.

    எனினும், கடற்பகுதியில் நிலவிய கடுமையான வானிலையால் இந்த பணியில் தொய்வு ஏற்பட்டது.

    இலங்கை கடற்பகுதியில் மூழ்க தொடங்கியது எக்ஸ்பிரஸ் பெர்ல் கப்பல்

    பட மூலாதாரம், SRI LANKA AIR FORCE

  9. மத்திய பிரதேசத்தில் +2 தேர்வு ரத்து

    மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான் அறிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  10. கொரோனா தடுப்பூசி: மத்திய அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்

    கொரோனா தடுப்பூசி: மத்திய அமைச்சருக்கு தமிழக முதல்வர்

    பட மூலாதாரம், Getty Images

    கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அமைச்சர் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு தமிழகம் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், "தமிழ்நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப ஒன்றிய அரசிடமிருந்து கொரோனா தடுப்பூசி வரப்பெறாததால் நிலவும் தட்டுப்பாட்டை நீக்க தடுப்பூசிகள் வழங்கவும், செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு கோரிக்கை விடுத்தும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  11. குழந்தை திருமணங்களை தடுக்க உடனடி நடவடிக்கை: கமல்ஹாசன்

    KAMAL HASSAN

    பட மூலாதாரம், Twitter

    “சத்தமில்லாமல் அதிகரிக்கும் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை," என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உறுதியான தடுப்பு நடவடிக்கை எடுக்கத் தவறினால், இந்த ஆண்டும் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள்," என்று கூறியுள்ளார்.

    "தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு குழந்தைகளின் பாதுகாப்பையும் உரிமையையும் உறுதி செய்வோம்," என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  12. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,32,788 பேருக்கு கொரோனா பாதிப்பு

    கொரோனா

    பட மூலாதாரம், Getty Images

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தி்ல் 1,32,788 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை தரவு கூறுகிறது.

    ஒரே நாளில் 3,207 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, 2,31,456 கொரோனா நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர். நாடு முழுவதும் இன்றைய நிலவரப்படி 17,93,645 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  13. வன்னியர் 10.5% இடஒதுக்கீடு: "இல்லாத காரணங்களைக் கூறி ஏமாற்றக்கூடாது!" - மருத்துவர் இராமதாசு கண்டனம்.

    Ramadoss

    பட மூலாதாரம், S. RAMADOSS

    தமிழ்நாட்டில் வன்னிய சமூகத்தினருக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் இல்லாத காரணங்களைக் கூறி ஏமாற்றக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் எஸ். இராமதாசு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

    தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இடஒதுக்கீடு வழங்கப் பட்டிருப்பதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அதை செயல்படுத்துவது என்ற அடுத்தக்கட்டத்திற்கு எங்களால் செல்ல முடியாது என்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்படோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியிருக்கிறார்.

    தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு என்று தனி அமைச்சகம் கிடையாது. ஆனால், சமூகநீதியை பாதுகாக்கும் கடமையும், பொறுப்பும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு தான் உள்ளது.

    அதை உணர்ந்து சமூகநீதியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் காக்க வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியாக இருந்தாலும், வன்னியர் சங்கமாக இருந்தாலும் அவை உருவாக்கப்பட்டதன் நோக்கம் சமூகநீதியை பாதுகாப்பது தான்.

    1980-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம் தான் 10 ஆண்டுகள் தொடர் போராட்டங்களை நடத்தி, 21 உயிர்களை தியாகம் செய்து வன்னியர்கள் உள்ளிட்ட 108 சமுதாயங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவிக்கச் செய்து 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது அனைத்திந்திய தொகுப்பு இடங்களுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கையில் பட்டியலினத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% என மொத்தம் 22.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

    தமிழ்நாட்டில் அருந்ததியருக்கு 3% உள் ஒதுக்கீடும், இஸ்லாமியர்களுக்கு 3.5% இட ஒதுக்கீடும் பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டங்களின் பயனாகவே வழங்கப்பட்டன. தேசிய அளவில் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடும் பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சியால் கிடைத்தது தான். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கூட்டத்தில் 27% இட ஒதுக்கீட்டு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று நான் போராடியதால் தான் அது சாத்தியமானது.

    அந்த வகையில் தான் கல்வியிலும், சமூகத்திலும், வேலைவாய்ப்பிலும் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர்கள் வாழ்வில் முன்னேற்றமடைய வேண்டும் என்பதற்காகத் தான் கடந்த 41 ஆண்டுகளாக ஏராளமான அறப்போராட்டங்களை நான் தொடர்ந்து நடத்தி வருகிறேன். வன்னியர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஆண்டில் தொடங்கி இந்த ஆண்டில் ஜனவரி - பிப்ரவரி மாதங்கள் வரை 6 கட்டங்களாக தொடர் போராட்டங்களை வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் நடத்தின.

    அதில் உள்ள நியாயத்தை புரிந்து கொண்ட அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையிலான அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் கொண்டு வந்து நிறைவேற்றியது. அந்த சட்டத்திற்கு ஆளுனரின் ஒப்புதல் பெற்று அரசாணையும் வெளியிடப்பட்டு விட்டது.

    அதன்படி அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் இந்த சட்டத்தின்படி இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணை உயர்கல்வித்துறையால் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டு விட்டது. மற்ற துறைகளிலும் இதேபோன்ற அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டிருக்கக்கூடும். அவற்றின் அடிப்படையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

    அதை உறுதி செய்ய வேண்டியது பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சகத்தின் முதன்மைப் பணியாகும். கல்வியைப் பொறுத்தவரை சட்டப்பல்கலைக்கழகத்தில் 10.50% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப் பட்டு விட்டது. அதே நேரத்தில் வேலைவாய்ப்பில் இந்த இட ஒதுக்கீடு இன்னும் நடைமுறைப்படுத்தப்பட வில்லை.

    மருத்துவத்துறையின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓமியோபதி மருந்து வழங்குனர், மருத்துவ உதவியாளர் பணிக்கு 555 பேரை தற்காலிகமாக நியமிப்பதற்கான அறிவிக்கையில் முந்தைய இட ஒதுக்கீட்டு முறையே கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கைகளில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் இறுதித் தீர்ப்பைப் பொறுத்து, வன்னியர்களுக்கான 10.50% உள் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.

    இந்த இரு நடவடிக்கைகளும் தவறானவையாகும். பணி நியமனங்கள் தொடர்பான இந்த அறிவிக்கைகளில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு இடம் பெறாதது தொடர்பாக உயர்நீதிமன்றம் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளை பிற்படுத்தப்பட்டோர் அமைச்சகம் தான் தொடர்பு கொண்டு, விளக்கம் கேட்டு, இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும்படி ஆணையிட்டிருக்க வேண்டும்.

    ஆனால், அந்தத் துறையின் அமைச்சரே உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம் காட்டி, வன்னியர் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த மறுக்கிறார் என்றால், இது அவரது நிலைப்பாடா.... இல்லை அரசின் நிலைப்பாடா? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும். சமூகநீதியை பாதுகாக்கும் நோக்கத்துடன் ஒவ்வொரு முறை புதிய இட ஒதுக்கீடுகள் சட்டமாக்கப்படும் போது அதை எதிர்த்து சமூகநீதிக்கு எதிரான சக்திகள் வழக்குத் தொடர்வது வாடிக்கையானது தான்.

    தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த 100% இட ஒதுக்கீட்டை ஒழிக்க செண்பகம் துரைராஜன் வழக்கு தொடர்ந்த நாள் முதல் இத்தகைய வழக்குகள் தொடரப்பட்டு தான் வருகின்றன. ஆனால், அந்த வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்காத வரை, அதை நடைமுறைப்படுத்த எந்தத் தடையும் இல்லை. இது தான் காலம் காலமாக கடைபிடிக்கப்படும் நடைமுறை. தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக 1994-ஆம் ஆண்டில் தொடங்கி 27 ஆண்டுகளாக ஏதேனும் ஒரு வழக்கு எங்காவது ஒரு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இப்போதும் கூட இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனாலும், 27 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.

    அதேபோல், இஸ்லாமியர்கள் உள் இட ஒதுக்கீடு, அருந்ததியர் உள் ஒதுக்கீடு குறித்த வழக்குகளும் நிலுவையில் தான் உள்ளன; இன்னும் இறுதித் தீர்ப்பு வழங்கப்படவில்லை. ஆனாலும், அந்த இட ஒதுக்கீடுகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.

    காரணம்.... அந்த இட ஒதுக்கீடுகளுக்கு எந்த நீதிமன்றத்திலும் தடை விதிக்கப்படவில்லை என்பது தான். அதேபோல், தேசிய அளவில் உயர்வகுப்பு ஏழைகளுக்கான (Economically Weaker Section- EWS) 10% இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு இரண்டரை ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. முதலில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்ட அவ்வழக்கு இப்போது 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    ஆனாலும், இந்த இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்கப்படவில்லை என்பதால், தேசிய அளவில் கல்வி - வேலைவாய்ப்பில் இந்த இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. வன்னியர்களுக்கான 10.50% இட ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ள போதிலும், அவற்றின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். அவ்வாறு இருக்கும் போது வன்னியர்கள் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த மறுப்பது சட்டத்தையும், சட்டப்பேரவையையும் அவமதிக்கும் செயலாகும்; இது தவிர்க்கப்பட வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு தவறுகளை களைய வேண்டும்.

    தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் ஒதுக்கீடு வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பாக இதுவரை பிறப்பிக்கப்பட்டுள்ள இரு அறிவிக்கைகளையும் திரும்பப்பெற்று, வன்னியர் இட ஒதுக்கீட்டையும் சேர்த்து புதிய அறிவிக்கைகளை வெளியிட வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்குகளை நடத்துவதற்கு சமூகநீதியில் அக்கறையும், வல்லமையும் கொண்ட மூத்த வழக்கறிஞர்கள் குழுவை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இராமதாசு அறிக்கையில் கூறியுள்ளார்.

  14. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வு: 2 நாட்களில் முதல்வர் முடிவெடுப்பார் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    CORONA

    பட மூலாதாரம், TWITTER

    தமிழ்நாட்டில் மாநில பாட திட்டத்தின்படி நடத்தப்படும் பிளஸ் டூ பொதுத்தேர்வுகளை நடத்துவதா வேண்டாமா என்பது குறித்து கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பல தரப்பினரின் கருத்துகளைப் பெற்றி இரண்டு நாட்களுக்குள் முதல்வர் மு.க. ஸ்டாலின் முடிவெடுப்பார் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் இன்று நடைபெற்ற முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில், மாணவர்களின் நலன்களே முக்கியம் என்றும் அதே சமயம், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாத வகையில் முடிவெடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

    எனவே, நிபுணர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் கருத்துகளைப் பெற்று அவற்றின் அடிப்படையில் தேர்வை நடத்துவதா வேண்டாமா என முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

  15. பிளஸ் டூ பொதுத்தேர்வு: தமிழக முடிவு குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

    Corona

    பட மூலாதாரம், M.K. STALIN

    நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக இந்திய அரசு நேற்று அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் மாநில அரசு பாட திட்டத்தின்படி நடத்தப்படும் பள்ளிகளில் பிளஸ் டூ பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  16. இந்திய கொரோனா திரிபுகளில் ஒன்று மீதே கவலை: WHO

    who

    பட மூலாதாரம், WHO

    இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா திரிபுகளில் ஒன்றுதான் மிகவும் கவலை தரும் பிரச்னையாக உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் இதுவரை மூன்று புதிய திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் B.1.617 என்ற வகை வைரஸ்தான் நாட்டில் இரண்டாம் அலை தீவிரம் அடைய காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    அந்த ஒரு திரிபுதான் மூன்றாக பிரிந்து மேலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக உலக சுகாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவை அதிவேகமாக பரவும் தன்மை கொண்டவை. மேலும் தடுப்பூசி மருந்துகளில் இருந்து நோயாளியை பாதுகாக்கும் சாத்தியமும் குறைவாக உள்ளதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

    இந்த திரிபு பரவும்போது அது மிகப்பெரிய அளவில் பொது சுகாதாரத்துக்கு ஆபத்தாக மாறும் என்று உலக சுகாதார அமைப்பின் தொற்று நோய் பரவல் தடுப்புப் பிரிவின் வாராந்திர செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வகை திரிபு மீதான மேலதிக ஆய்வுக்கு முன்னுரிமை கொடுத்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

  17. மெகுல் சோக்சியை இந்தியாவுக்கு நாடு கடத்த சட்ட நடவடிக்கை: இந்திய அதிகாரிகள்

    MEHUL CHOKSI

    பட மூலாதாரம், Getty Images

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து ரூ. 13,600 கோடி கடன் மோசடி செய்து விட்டு நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற வைர வியாபாரி மெகுல் சோக்சி இந்திய குடியுரிமையை ஒப்படைக்காத நிலையில், அவரை இந்தியராகவே கருதி ஒப்படைக்கும் வாதத்தை டொமினிகா நாட்டு நீதிமன்றத்தில் இந்திய அரசு முன்வைக்கவுள்ளது.

    அவர் ஆன்டிகுவா நாட்டில் குடியுரிமை பெற்று வசித்து வந்த நிலையில், கடந்த வாரம் அங்கிருந்து தப்பி டொமினிகாவுக்கு தப்பிச் சென்றபோது இன்டர்போல் (சர்வதேச காவல்துறை) அதிகாரிகளிடம் பிடிபட்டார்.

    இதைத்தொடர்ந்து அந்நநாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை அவர் குடியுரிமை பெற்றுள்ள ஆன்டிகுவாவிடம் ஒப்படைப்பதா அல்லது இந்தியாவிடம் ஒப்படைப்பதா என்ற சர்ச்சை நிலவி வருகிறது.

    ஆனால், ஆன்டிகுவா பிரதமர், மெகுல் சோக்சியை இந்தியாவிடமே நேரடியாக ஒப்படைக்கலாம் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில், அவர் இந்திய குடியுரிமையை ஒப்படைக்கும் நடைமுறைகளை முழுமையாக செய்யாத நிலையில், அவர் தொடர்ந்து இந்திய பிரஜையாகவே கருதப்படுவதாக இந்திய உள்துறை அமைச்சக உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அதன் அடிப்படையில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் சட்ட நடைமுறைகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். இதையொட்டி இந்திய உள்துறை, சிபிஐ அதிகாரிகள் அடங்கிய எட்டு பேர் குழு டொமினிகா நாட்டுக்கு சென்றுள்ளனர். அங்குள்ள நீதிமன்றத்தில் மெகுல் சோக்சியை நாடு கடத்தும் வாதத்தை அவர்கள் தரப்பு முன்வைக்க திட்டமிட்டுள்ளது.

  18. கொரோனா இரண்டாவது அலையில் 594 மருத்துவர்கள் உயிரிழப்பு - ஐஎம்ஏ

    கொரோனா

    பட மூலாதாரம், TWITTER

    கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தால் இந்தியாவில் இதுவரை 594 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) தெரிவித்துள்ளது.

    முன்பு ஒரே நாளில் நான்கு லட்சம் பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், தற்போது அந்த தாக்கம் குறைந்து காணப்படுவதாக கூறிய ஐஎம்ஏ, இரண்டாம் அலையில் மட்டும் 584 மருத்துவர்கள் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    இதில் அதிகபட்சமாக டெல்லியில் 107, பிகாரில் 96, உத்தர பிரதேசத்தில் 67, ஜார்கண்டில் 39, மேற்கு வங்கத்தில் 25, ஒடிஷாவில் 22, தமிழ்நாட்டில் 21 என்ற அளவில் மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக ஐஎம்ஏ பட்டியல் வெளியிட்டுள்ளது.