You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

சிபிஎஸ்இ பிளஸ் டூ பொதுத்தேர்வு இந்த ஆண்டு ரத்து - பிரதமர் மோதி அறிவிப்பு

உலக அளவிலும் இந்திய அளவிலும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளின் சுருக்கத்தை இந்த நேரலை பக்கத்தில் உங்களுக்கு வழங்குகிறோம்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இன்றைய நேரலை நிறைவடைந்தது

    நேயர்களுக்கு வணக்கம், பிபிசி தமிழ் சேவையின் இன்றைய நேரலை தகவல்களை இத்துடன் நிறைவு செய்கிறோம். மீண்டும் நாளை (02 ஜூன் 2021, புதன்கிழமை) சந்திப்போம். உலக மற்றும் தேசிய செய்திகளுக்கு பிபிசி தமிழ் பக்கத்தில் இணைந்திருங்கள்.

    நன்றி.

  2. சிங்கப்பூரில் மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி

    சிங்கப்பூரில் நான்கு லட்சம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. வரும் வியாழக்கிழமை முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படும். அண்மைய காலமாக சிங்கப்பூரில் பள்ளி மாணவர்கள் வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டதை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  3. சீனாவின் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி

    சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட சினோவாக் கொரோனா தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கி உள்ளது.

    சினோவாக்-கொரோனாவாக் கோவிட்-19 தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு உபயோகிக்க ஒப்புதல் அளித்துள்ள உலக சுகாதார நிறுவனம், அந்த தடுப்பூசி பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் உற்பத்திக்கான சர்வதேச தரங்களை பூர்த்தி செய்வதாகவும் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசியை பெய்ஜிங்கை தலைமையிடமாக கொண்ட மருந்து நிறுவனமான சினோவாக் தயாரிக்கிறது.

  4. கொரோனா ஊரடங்கு காலத்தில் வாட்ஸ்அப் குழு மூலம் மது விற்பனை செய்த இளைஞர்கள் கைது

    தமிழ்நாட்டின் வாணியம்பாடியில் சரக்கு என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு ஏற்படுத்தி அதன் மூலமாக மது விற்பனை செய்யும் ஆடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகியது. இதையடுத்து இதில் சம்மந்தப்பட்ட இளைஞர்கள் இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர பகுதியில், சரக்கு என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு உருவாக்கியுள்ளனர். இந்த வாட்ஸ்அப் குழுவில் மது விற்பனைக்காக சுமார் 150க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

    இந்த குழுவில், மதுபானம் வாங்க விருப்பம் உள்ளவர்கள் அவர்களுக்குத் தேவையான மதுபான விவரத்தை குழுவில் பதிவு செய்ததும், குழுவின் அட்மின் மதுபான பாட்டில்களின் விலையை சம்பந்தப்பட்ட உறுப்பினரிடம் தெரியப்படுத்துகிறார். பிறகு குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து மதுபான விநியோகம் நடக்கிறது.

    இந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் மதுபானங்கள் விலை கேட்பது போன்றும், அதற்கு விலைப் பட்டியலைக் குழுவின் அட்மின்களாக இருப்பவர்கள் தெரிவிப்பது போன்ற ஆடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியது.

    மேலும் இதில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பதில்லை என்றும், வாங்கி வரும் விலைக்கே விற்பனை செய்வதாக குழு நடத்துநர்கள் பேசுவது போன்ற ஆடியோக்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.

    முன்னதாக ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்காக இந்த குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாளடைவில் குழுவில் உள்ளவர்கள் தேவையறிந்து மதுவிற்பனை செய்ய இப்படி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இதையடுத்து இந்த குழுவில் தொடர்புடைய நபர்கள் வாணியம்பாடி நகர பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. பின்னர் அப்பகுதியில் காவல் துறையினர் ரோந்து மேற்கொண்டபோது, இந்த வாட்ஸ்அப் குழு மதுபான விற்பனை நபர்கள் பிடிபட்டனர். விசாரணையில், அவர்கள் வாணியம்பாடி நகர பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன், சரவணன் என தெரிய வந்துள்ளது.

    இது குறித்து பேசிய வாணியம்பாடி நகர காவல் நிலைய ஆய்வாளர் கோவிந்தசாமி, "இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வீட்டிலிருந்து மது விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். மது பானங்கள் அருகே உள்ள புதர்களில் பதுக்கி வைத்திருப்பது ஆய்வின் போது தெரிந்தது. மேலும், இவர்களிடம் இருந்து 100 லிட்டர் மேற்பட்ட சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது," என தெரிவித்தார்.

  5. வந்துகொண்டிருக்கும் செய்தி, சிபிஎஸ்இ பிளஸ் டூ பொதுத் தேர்வு ரத்து - பிரதமர் நரேந்திர மோதி அறிவிப்பு

    இந்தியாவில் தற்போது நிலவும் கொரோனா பெருந்தொற்று சூழலில் மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ பிளஸ் டூ பொதுத்தேர்வு இந்த ஆண்டு நடத்தப்படாது என்று பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மத்திய அமைச்சர்கள், அரசுத்துறை உயரதிகாரிகளுடன் பிரதமர் மோதி இன்று மாலை ஆலோசனை நடத்தினார்.

    இதன் முடிவில், தற்போதைய பெருந்தொற்று சூழல் மற்றும் கல்வியாண்டு அட்டவணைகள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பொதுத் தேர்வு நடத்துவது மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மத்தியில் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். அதனால் தேர்வுகளை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் மோதி தெரிவித்தார்.

    எனினும், கடந்த ஆண்டை போலவே, யாரேனும் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள விரும்பினால், அவர்களுக்கு தேவையான வாய்ப்புகளை, சூழ்நிலை இயல்பு நிலைக்கு திரும்பியதும் சிபிஎஸ்இ உருவாக்கித்தரும் என்று பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  6. மலேசியாவில் வைரஸ் தொற்றால் 82,341 குழந்தைகள் பாதிப்பு

    மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 82,341 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதம் பாபா தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் மலேசியாவில் மூன்றாவது முறையாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இன்று அமலுக்கு வந்துள்ளது. வரும் 14ஆம் தேதி வரை இந்த முழு முடக்கநிலை உத்தரவு அமலில் இருக்கும்.

    அண்மைய சில தினங்களாக மலேசியாவில் அன்றாடம் பதிவாகும் புதிய தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துவிட்டது.

    இந்நிலையில் குழந்தைகளும் அதிக அளவில் தொற்றுப் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

    "மலேசியாவில் நான்கு வயதுக்கு உட்பட்ட 19,851 குழந்தைகளும், 5 முதல் 6 வயதுக்குட்பட்ட 8,237குழந்தைகளும், 7 முதல் 12 வயதுக்குட்பட்ட 26,851 குழந்தைகளும், 13 முதல் 17 வயதுக்குட்பட்ட 27,402 குழந்தைகளும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்," என்று அமைச்சர் ஆதம் பாபா செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார்.

    எனினும் இவர்களில் யாரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படவில்லை என்றும், அவர் குறிப்பிட்டார்.

    இதையடுத்து மலேசியாவில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பொது நடமாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இக்குழந்தைகளை மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களுக்கு அழைத்துச்செல்ல தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு மன்றம் அறிவித்துள்ளது.

    அவசர தேவைகளுக்காகவும் மருத்துவ சிகிச்சைக்காகவும் குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்ல முடியும். மேலும், கல்வி மற்றும் உடற்பயிற்சி சார்ந்த நடவடிக்கைகளுக்கும் குழந்தைகள் வீட்டுக்கு வெளியே அழைத்துச் செல்ல அனுமதி உண்டு. இதர காரணங்களுக்கு அனுமதி இல்லை என பாதுகாப்பு மன்றம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, இந்த ஆண்டு இறுதிக்குள் மலேசிய குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுவிடும் என அந்நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

    மலேசிய தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படும் இவர், ஜூலை மாதத்துக்குள் 16 மில்லியன் தடுப்பூசிகள் மலேசியா வந்தடையும் எனக் கூறியுள்ளார்.

    மலேசியாவில் தற்போது சுமார் ஒரு லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், தடுப்பூசி போடும் விகிதம் நாள் ஒன்றுக்கு 150,000ஆக அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.

    அரசாங்கம் நிர்ணயித்த இலக்கை நிச்சயமாக அடைய முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  7. பிளஸ் டூ தேர்வுகள்: பிரதமர் நரேந்திர மோதி முக்கிய ஆலோசனை

    நாடு முழுவதும் பிளஸ் டூ வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை நடத்துவது தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை உயரதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோதி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டம் இன்று மாலை 6.15 மணிக்கு தொடங்கியது.

    இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுதாரர்கள், கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொதுத்தேர்வை ரத்து செய்ய உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

    சில மாநிலங்கள் தேர்வை நடத்த ஆதரவாக இருந்தாலும், பல மாநிலங்கள் அந்த யோசனையை ஏற்கவில்லை. மத்திய இடைநிலை பள்ளிக்கல்வி வாரியம் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 26க்கு இடைப்பட்ட காலத்தில் தேர்வை நடத்தலாம் என முன்மொழிந்துள்ளது.

    19 முக்கிய பாடங்களுக்கான தேர்வை மையங்களிலும் மற்ற தேர்வுகளை மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே நடத்தலாம் என்று சிபிஎஸ்இ யோசனை கூறியுள்ளது.

    இவை தொடர்பாக பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  8. அச்சுறுத்தும் வெள்ளைப் பூஞ்சை பாதிப்பு

    கொரோனா இரண்டாம் அலை ஏராளமான மக்களை அடித்துக் கொண்டுபோய் தீவிர சிகிச்சைப் பிரிவில் போட்டிருக்கிறது. அது பூஞ்சைகளை வரவழைக்கும் இடமாகப் பார்க்கிறார்கள்.

    முதலில் மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்புப் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டது. இது மிகவும் அரிதானது. அதே நேரத்தில் ஆபத்தானது. மூக்கு, கண், சில நேரங்களில் மூளை ஆகியவற்றை இது பாதிக்கும்.

    இப்போது ஆளைக் கொல்லும் மற்றொரு பூஞ்சை கொரோனா நோயாளிகளைத் தாக்கியிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

  9. உச்சம் தொட்ட பெட்ரோல், டீசல் விலை - ஒரு மாதத்தில் 17 முறை உயர்வு

    பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத உச்சமாக கடந்த ஒரு மாதத்தில் பதினேழு முறை உயர்த்தப்பட்டுள்ளது.

    புதிய விலை பட்டியலின்படி, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையில் 23 காசுகளும் டீசல் விலையில் 23 காசுகளும் உயர்த்தியுள்ளன.

    தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 94.49 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 85.38 ஆகவும் விற்கப்படுகிறது.

    பெட்ரோல், டீசல் விலை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட அவற்றின் விற்பனைக்கான உள்ளூர் வரிகள், மதிப்பு கூடுதல் வரி, போக்குவரத்து செலவினம் போன்றவை காரணமாகும்.

    இந்தியாவிலேயே ராஜஸ்தான் மாநிலத்தில்தான் அதிக விலைக்கு பெட்ரோல், டீசல் விற்கப்படுகின்றன. அதைத்தொடர்ந்து மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிக விலைக்கு பெட்ரோல், டீசல் விற்பனையாகின்றன.

    மும்பை நகரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 100.72 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு 92.69 ஆகவும் விற்கப்படுகிறது.

    கடந்த மே 4ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை 17 முறை உயர்த்தப்பட்டுள்ளன.

    இந்த பதினேழு முறை விலையேற்றத்தின் முடிவில் பெட்ரோல் விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மொத்தம் ரூ. 4.09 ஆகவும் டீசல் விலை ரூ. 4.65 ஆகவும் உயர்ந்துள்ளது.

    மேற்கு வங்க மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 18 நாட்களாக உயர்த்தப்படவில்லை. அங்கு சமீபத்தில்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது.

  10. "அடிப்படை உரிமைகளில் ஒன்றாக சுகாதார வசதி": ரவிக்குமார் எம்.பி வேண்டுகோள்

    சுகாதாரத்தை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும் என்று கோரி மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

    "கோவிட் 2019 என்னும் பெருந்தொற்று பொது சுகாதாரப் பிரச்னையாக மட்டுமின்றி இந்த நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரது பொருளாதார பிரச்னையாகவும் மாறியிருக்கிறது. அரசாங்கத்தின் சுகாதாரக் கட்டமைப்புகள் எவ்வளவுதான் சிறந்தவையாக இருந்தாலும் அனைவருக்கும் சுகாதாரம் என்பது தொலைதூரக் கனவாகவே இருக்கிறது. அதனால்தான் நமது அரசு தேசிய சுகாதார கொள்கை - 2017ஐக் கொண்டுவந்தது.

    அந்தக் கொள்கையில் ’மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதத்தை சுகாதாரத் துறைக்கு ஒதுக்குவது என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. துரதிர்ஷ்டவசமாக அதன் பின்னர் வந்த மத்திய அரசு நிதிநிலை அறிக்கைகளில் சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைந்துகொண்டே வந்தது. அதனால் மக்கள் தனியார் மருத்துவமனைகளாக இருந்தாலும் சரி, அரசு மருத்துவமனைகளாக இருந்தாலும் சரி தமது கையிலிருந்தே மருத்துவத்துக்கு செலவழிக்கும் நிலை ஏற்பட்டது.

    நமது அரசியல் அமைப்புச் சட்டம் சுகாதாரத்தை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் அதில் பொது சுகாதாரத்தைப் பற்றியும், குடி மக்களுக்கு சுகாதார வசதிகளை அரசு செய்து தர வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. சுகாதார உரிமைக்கான அடிப்படையை அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கியுள்ளன" என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அவர் இதே கருத்தை 2019ஆம் ஆண்டு செப்டம்பரில் 15வது நிதிக் குழுவின் கீழ் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு பரிந்துரை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    "இருபது ஆண்டுகளுக்கு முன்னால் 2002ஆம் ஆண்டு வாஜ்பாய் அவர்கள் தலைமையில் தான் கல்வி அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்கப்பட்டது. அத்குபோல அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து சுகாதாரத்துக்கான உரிமையை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்குவதற்கு இதுவே தகுந்த தருணம் ஆகும். எனவே எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 21இல் திருத்தி திருத்தம் செய்து சுகாதாரத்துக்கான உரிமையை அடிப்படை உரிமையாக ஆக்குவதற்கு மசோதா ஒன்றை தாங்கள் கொண்டு வர வேண்டும் என்று பணிவுடன் வேண்டுகிறேன்” என்று அக்கடிதத்தில் ரவிக்குமார் கூறியுள்ளார்.

  11. பாலியல் தொந்தரவு புகார்: தனியார் பள்ளி ஆசிரியருக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்

    சென்னை தனியார் பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்ற மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சென்னை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    இந்த வழக்கை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு துணை ஆணையாளர் தலைமையிலான குழு விசாரித்து வருகிறது.

  12. கொரோனா திரிபு வகைகளுக்கு கிரேக்க எழுத்துகளில் பெயர் சூட்டிய WHO

    கொரோனா திரிபு வகைகளுக்கு கிரேக்க எழுத்துகளில் உலக சுகாதார அமைப்பு பெயர் சூட்டியிருக்கிறது.

    இதன் மூலம் பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா திரிபுகள் கிரேக்க எழுத்துகளால் அடையாளப்படுத்தப்படும்.

    கொரோனா திரிபு தொடர்பான பல்வேறு தயக்கங்களை களையும் வகையில் இந்த புதிய முயற்சி கைகொடுக்கும் என்று நம்புவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கண்டறியப்பட்ட இந்திய வகை கொரோனா திரிபுக்கு B.1.617.2 என்று பெயரிடப்பட்டது.

    ஆனால், அந்த எழுத்துகளுடன் அலுவல்பூர்வமாக இந்திய வகை திரிபுவை உலக சுகாதார அமைப்பு அழைக்கத் தொடங்கவில்லை. இதற்கிடையே, கொரோனா திரிபுக்கு வெவ்வேறு பெயர் சூட்டும் உலக சுகாதார அமைப்பின் நடவடிக்கையை இந்தியா விமர்சித்தது.

    இருப்பினும், கொரோனா திரிபு வகைகள் தொடர்பாக எவ்வித தயக்கமோ தடங்கலோ இருக்கக் கூடாது என்றும் அந்த எண்ணத்துடன் எந்தவொரு நாட்டையும் வேற்றுமைப்படுத்திப் பார்க்கக் கூடாது என்ற நோக்கத்துடனும் அவற்றுக்கு பெயரிடப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சிக்குழு தலைமை அதிகாரி மரியா வேன் கெர்கோவ் தெரிவித்தார்.

    இத்தகைய எழுத்து வடிவ பெயர்கள், அறிவியல்பூர்வ அடிப்படையில் தரவுகளை அடையாளப்படுத்தி புரிந்து கொள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் என்று அவர் கூறினார்.

    கவலை தரக்கூடிய கொரோனா வைரஸ் திரிபுகளை அறியவும் அவை தொடர்பான தரவுகளை சேகரிக்கவுமே இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். எந்தெந்த கொரோனா வைரஸ் திரிபுவுக்கு என்ன பெயர் என்ற முழு விவரத்தையும் உலக சுகாதார அமைப்பு அதன் இணையதள இணைப்பில் பதிவேற்றியிருக்கிறது.

    ஒருவேளை 24க்கும் அதிகமான புதிய திரிபுகள் அலுவல்பூர்வமாக கண்டறியப்பட்டு அவற்றுக்கு உரிய கிரேக்க எழுத்துகளை பயன்படுத்த முடியாத நிலை எழுந்தால், புதிய பெயரிடும் திட்டத்தை உலக சுகாதார அமைப்பு பரிசீலிக்கும் என்றும் வேன் கெர்கோவ் தெரிவித்தார்.

  13. தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' - தொடக்க கல்வி இயக்குநர்

    தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளார், தொடக்க கல்வி இயக்குநர்.

    இந்த வகுப்புகளைச் சேர்ந்த எந்த மாணவரையும் தேக்க நிலையில் வைத்திருக்கக் கூடாது என்றும் எந்த குழந்தையையும் பள்ளியை விட்டு வெளியேற்றக்கூடாது என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

  14. டெல்லி: ஆன்லைனில் மதுபானங்கள் விற்பனை - வீட்டில் டெலிவரி செய்ய அரசு அனுமதி

    டெல்லியில் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வந்து மதுபானங்களை விற்பனை செய்யும் வசதிக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    இது தொடர்பாக டெல்லி கலால் விதிகளில் திருத்தம் செய்து அதன் விவரம் அரசிதழில் திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி எல்-13 உரிமம் பெற்றவர்கள், வீடுகளுக்கே சென்று மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவர்.

    இதன்படி இந்தியா மற்றும் பன்னாட்டு மதுபானங்களை ஆன்லைனில் செல்போன் செயலி அல்லது இணையதளம் மூலமாக ஆர்டர் செய்பவர்களுக்கு எல்-13 உரிமம் வைத்துள்ளவர்கள் வீட்டுக்கே பொருட்களை விநியோகம் செய்யலாம். விடுதிகள், அலுவலகங்கள், நிறுவனங்களில் விநியோகம் செய்ய அனுமதியில்லை.

    இந்த எல்-13 உரிமம் இல்லாதவர்கள், வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு சென்று மதுபானங்களை விற்கக் கூடாது. அதுவும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் மட்டுமே இந்த வகை விநியோகத்துக்கு அனுமதி உண்டு.

    கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடு காலத்தில் திறக்கப்பட்ட மதுபான கடைகள் முன்பு பெருமளவில் வாடிக்கையாளர் கூட்டம் காணப்படுவதால், தொற்று பரவும் ஆபத்து அதிகமாக உள்ளது. இதைத்தொடர்ந்து, மதுபான வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வீடுகளிலேயே மதுபானத்தை விற்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்திருந்தது.

  15. சேலம் - சென்னை விமான சேவை மீண்டும் தொடங்கியது

    தமிழ்நாட்டில் கொரோனா பொது முடக்க கட்டுப்பாடுகள் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சேலம் - சென்னை பயணிகள் விமான சேவை ஜூன் 1 முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரத்தில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமான சேவை தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியதால், விமான பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது. இதனால் சேலத்திலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் விமான சேவை கடந்த 13ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு நிறுத்தப்பட்டது.

    பிறகு மே 23ஆம் தேதி தொடங்கிய விமான சேவை மீண்டும் 25ஆம் தேதி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சேலம் - சென்னை இடையிலான பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கும் என்றும், வழக்கமான நேரப்படி விமானம் இயக்கப்படும் என்றும் சேலம் விமான நிலைய இயக்குநர் ரவீந்திர சர்மா தெரிவித்துள்ளார்.

    ட்ரூ ஜெட் நிறுவனம் இயக்கும் இந்த பயணிகள் விமானம், தினமும் சென்னையில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு சேலத்துக்கு காலை 8.15 மணிக்கு வந்தடையம். இதேபோல, சேலத்தில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு 9.35 மணிக்கு வந்தடையும்.

  16. மேற்கு வங்க மாநில முன்னாள் தலைமை செயலருக்கு மத்திய அரசு நோட்டீஸ்

    மேற்கு வங்க மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோதி கடந்த வாரம் பயணம் செய்தபோது அவர் தலைமையில் நடந்த யாஸ் புயல் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கத் தவறியது குறித்து அப்போது தலைமைச் செயலாளர் பதவியில் இருந்த அலப்பன் பந்தோபாத்யாயவிடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    தற்போது அவர் அரசுப் பதவியில் விலகி மமதா பானர்ஜியின் தலைமை ஆலோசகர் ஆக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

    மாநில அரசின் தலைமைச் செயலாளர் பதவி வகித்த அலப்பன் பந்தோபாத்யாயவின் பதவிக்காலம் மே 31ஆம் தேதி நிறைவடையவிருந்தது. இந்த நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அவருக்கு மத்திய அரசு மூன்று மாத பணி நீட்டிப்பு வழங்கியது.

    மாநிலத்தில் நிலவும் கொரோனா பெருந்தொற்று சூழல் மற்றும் யாஸ் புயல் பாதிப்புக்கு பிந்தைய நிலைமையை ஆய்வு செய்யும் பணிகளை கவனிக்க வசதியாக அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று மாநில முதல்வர் மமதா பானர்ஜி கேட்டுக் கொண்டிருந்தார்.

    அதை ஏற்று மத்திய அரசும் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கியது. இந்த நிலையில், கடந்த வாரம் பிரதமர் மோதி மேற்கு வங்கம் சென்றபோது அவரை வரவேற்க தலைமை செயலாளர் வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், பிரதமர் தலைமையில் நடைபெற்ற அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

    மத்திய அரசு அதிகாரிகள் கொடுத்த அழுத்தத்தின்பேரில் சில நிமிடங்கள் மட்டுமே அவர் முதல்வர் மமதா பானர்ஜியுடன் கூட்டம் நடந்த அறைக்கு வந்து விட்டு பிறகு முதல்வருடனேயே திரும்பச் சென்றார்.

    முன்னதாக, இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் மற்றும் முதல்வர் வருவதற்காக பிரதமர் தலைமையில் அதிகாரிகள் குழு சுமார் 15 நிமிடங்கள் வரை காத்திருந்தது.

    இதைத்தொடர்ந்து மறுநாள் மத்திய அரசிடம் இருந்து மேற்கு வங்க அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், உடனடியாக அலப்பன் பந்தோபாத்யாயவை விடுவித்து மத்திய பணிக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. அவர் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு டெல்லியில் மத்திய பணியாளர் நலத்துறையில் மத்திய பணியில் சேர வேண்டும் என்றும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.

    ஆனால், யாரும் எதிர்பாராத திடீர் திருப்பமாக திங்கட்கிழமை காலையில் மாநில அரசின் தலைமை செயலாளர் பதவியில் இருந்து அலப்பன் பந்தோபாத்யாய விலகி விட்டதாக முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்தார். அவர், தமது தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதைத்தொடர்ந்து மாநிலத்துக்கு புதிய அரசு தலைமை செயலாளராக ஹெச்.கே. துவிவேதி என்ற ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மமதா பானர்ஜி தெரிவித்தார்.

  17. ஆந்திர பிரதேசத்தில் கத்திரிக்காய் மூலிகை லேகியத்துக்கு அனுமதி

    ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூரின் கிருஷ்ணபட்டிண் கிராமத்தைச் சேர்ந்த போனஜி அனந்தய்யா என்வர் கொரோனா நோயாளிகளுக்காக தயாரித்த கத்திரிக்காய் மூலிகை லேகியத்தை பயன்படுத்த அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    அதே சமயம், அவர் தயாரித்த லேகியத்தை மட்டுமே கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தலாம் என்று அரசு அறிவித்துள்ளது. அவர் குறிப்பிட்ட ஒரு வகை கத்திரிக்காய் கூழ் சேர்த்து தயாரித்த கண் சொட்டு மருந்தை நோயாளிகளுக்கு வழங்க அரசு ஒப்புதல் வழங்கவில்லை.

    முன்னதாக, அனந்தய்யாவின் தயாரிப்புகளை அரசு நியமித்த மருத்துவ குழு ஆய்வு செய்தது. பிறகு இந்திய ஆயுஷ் அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

    அதில் அனந்தய்யாவின் மருந்தில் எந்த பக்க விளைவுகளும் இல்லை என்றும் அவை முறையான மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை வழங்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் கண்ணில் விடப்படும் சொட்டு மருந்து நீங்கலாக கத்திரிக்காய் லேகியத்தை மட்டும் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

    நெல்லூரில் அனந்தய்யா தயாரிக்கும் கத்திரிக்காய் மருந்துகள் ரூ. 1,500 முதல் ரூ. 2,000 வரை கள்ளச்சந்தையில் விற்பதாக புகார்கள் எழுந்துள்ளதையடுத்து அவரது தயாரிப்புகளை நெறிமுறைப்படுத்த அரசு பரிசீலித்து வருகிறது.

  18. கொரோனா தடுப்பூசி: ஜூலை-ஆகஸ்டில் ஒரு கோடி பேருக்கு போட இந்தியா இலக்கு

    கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் வரும் ஜூலை - ஆகஸ்ட் மாத இடைப்பட்ட காலத்தில் போதுமான அளவுக்கு கொரோனா தடுப்பூசி கையிருப்பில் இருக்கும் என்பதால் அப்போது தினமும் ஒரு கோடி பேருக்கு போட முடியும் என்று இந்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கொரோனா தடுப்பூசி பணிக்குழு தலைவர் என்.கே. அரோரா, வரும் ஆகஸ்ட் மாதம் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகள் சுமார் 250 மில்லியன் டோஸ்கள் கையிருப்பில் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறினார்.

    சீரம் இந்தியா நிறுவனம் அனுப்பியுள்ள கடிதத்தில் ஜூலை மாத இறுதியில் தங்களுடைய கொரோனா தடுப்பூசி உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும் என்றும் அப்போது முதல் மாதந்தோறும் 10-12 கோடி தடுப்பூசி டோஸ் மருந்துகளை தயாரிக்க முடியும் என்று கூறியுள்ளது என்றும் அரோரா தெரிவித்தார்.

    அந்த வகையில், மாதந்தோறும் 20-25 கோடி தடுப்பூசி டோஸ்கள் இந்தியாவில் இருக்கும் என்றும் தினமும் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போடுவதே நமது இலக்காக இருக்கும் என்றும் அரோரா கூறினார்.

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.27 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 2,796 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.