கொரோனா தடுப்பூசி மருந்து கொள்முதல் விவகாரத்திலும் அவற்றை ஒரே சீரான விலையில் நாடு முழுதும் விற்பனை செய்யும் நடவடிக்கையிலும் காணப்படும் முரண்பாடுகள் குறித்து அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் விநியோகம், மருந்து விற்பனை, தடுப்பூசி மருந்து கொள்கை தொடர்பாக தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த விவகாரத்தை நீதிபதிகள் தனஞ்ஜெய ஒய். சந்திரசூட், எல். நாகேஸ்வர ராவ், ஸ்ரீபதி ரவீந்திர பட் அடங்கிய அமர்வு திங்கட்கிழமை விசாரித்தது.
இந்த வழக்கில் அரசுக்கு நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள் மற்றும் விசாரணையின்போது தெரிவித்த கருத்துகளில் முக்கிய அம்சங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
அதிக அளவில் கொரோனா தடுப்பூசி வாங்குவதாக மத்திய அரசு கூறுகிறது.பிறகு ஏன் மாநிலங்களில் அதே தடுப்பூசி அதிக விலைக்கு விற்கப்படுகிறது? இந்த பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் ஒரே சீரான விலையில் தடுப்பூசி மருந்து கிடைக்க வேண்டும்.
தடுப்பூசி மருந்து போடுவதில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மருந்தை பெற பொறுப்பேற்றுக் கொள்ளும் மத்திய அரசு, ஏன் 45 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான தடுப்பூசி மருந்துகளை பெறும் பொறுப்பை மாநிலங்களிடம் விடுகிறது? அப்படியென்றால் இந்த விஷயத்தில் யார் நலிவற்றவர்கள், யார் பொருளாதார ரீதியாக பலவீனமானவர்கள் என்ற தரம் எவ்வாறு கண்டறியப்படுகிறது? இதை மத்திய அரசு எவ்வாறு நியாயப்படுத்துகிறது?
கோவின் செயலி மூலம் 18 வயதை கடந்தவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்பதிவு செய்வது கட்டாயம் என்ற அரசின் நடைமுறை குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஒரு கிராமவாசியிடம் செல்பேசி இல்லையென்றால் அவரால் எப்படி தடுப்பூசி மையத்துக்கு சென்று பதிவு செய்ய முடியும்?
குடியேறி தொழிலாளர்கள் தடுப்பூசி பெறுவதை எப்படி அரசு உறுதிப்படுத்துகிறது என்று நீதிபதிகள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "கோவில் செயலி அல்லது இணையதளம் மூலம் தடுப்பூசி பதிவு செய்யலாம். பஞ்சாயத்துகள் மூலம் பதிவு செய்ய வசதி உள்ளது. இன்டர்நெட் வசதி இல்லாதவர்கள் நண்பர்கள், உறவினர்கள் மூலம் தடுப்பூசி பெறலாம். நேரடியாக தடுப்பூசி மையத்துக்கு வந்து ஊசி போட்டுக் கொள்வதென்றால் கூட்ட நெரிசல் ஏற்படும். அதனாலேயே ஆன்லைன் பதிவை அறிமுகப்படுத்தினோம்," என்று கூறினார்.
அரசை பொறுத்தவரை தடுப்பூசி திட்டத்தை பணியிடங்களில் செயல்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது. வீடு, வீடாக சென்று தடுப்பூசி போட முடியாது என்பதால் குடியிருப்போர் நலச்சங்கம், அவசர ஊர்தி வாகனங்கள் மூலம் தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று துஷார் மேத்தா தெரிவித்தார்.
இந்த வழக்கில் நீதிமன்றதத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, "தடுப்பூசி விவகாரத்தில் அரசின் கொள்கையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவின் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 45 வயதை கடந்தவர்கள் தடுப்பூசி மையத்துக்கு சென்று தடுப்பூசி போடும் நிலை நீடிக்கிறது," என்று கூறினார்.
இதையடுத்து நீதிபதி பட், நாட்டின் பல்வேறு நகரங்களில் தடுப்பூசி பெற முன்பதிவு செய்ய ஆன்லைனில் நுழைந்த இரண்டு, மூன்று நிமிடங்களிலேயே அந்த பதிவு முடிந்து விடுவதாக பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள் என்று கூறினார்.
நீதிபதி நாகேஸ்வர ராவ், "தற்போதைக்கு அரசு நடைமுறைப்படுத்தும் தடுப்பூசி திட்டம் கிராமப்புறங்களை உள்ளடக்கியதாக தோன்றவில்லை. அத்தகைய பகுதிகளையும் சேர்க்காதவரை இந்த விவகாரத்தில் எடுக்கப்படும் முடிவு தன்னிச்சையானதாக இருக்கும்.
எனவே, கொள்கையில் திருத்தம் தேவை," என்று கூறினார்.
நீதிபதி சந்திரசூட், "தடுப்பூசி மருந்து கொள்முதல் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் அமெரிக்கா சென்று பேசியதில் இருந்தே இந்த விவகாரத்தின் தீவிரத்தை நீதிமன்றத்தால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த விஷயத்தில் தேசத்தின் கரங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்," என்று கூறினார்.
இந்த வழக்கு விசாரணையின்போது கங்கையில் தூக்கி வீசப்படும் சடலங்களின் காட்சிகள் தொடர்பான ஊடக செய்திகள் குறித்தும் நீதிபதிகள் தெரிவித்து தங்களுடைய கவலைகளை வெளிப்படுத்தினர்.