வீங்கிய கண்கள், கைகளில் காயம் – வெளியானது சோக்ஸியின் புகைப்படமா?

பிரேசிலில் கொரோனா தொற்று பரவலை சரியாக கையாளவில்லை என அதிபர் போல்சனாரூ அரசுக்கு எதிராக மக்கள் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இன்றைய நேரலை நிறைவடைந்தது

    நேயர்களுக்கு வணக்கம்,பிபிசி தமிழ் சேவையின் இன்றைய நேரலை தகவல்களை இத்துடன் நிறைவு செய்கிறோம். மீண்டும் நாளை (31 மே 2021, திங்கட்கிழமை) சந்திப்போம். உலக மற்றும் தேசிய செய்திகளுக்கு பிபிசி தமிழ் பக்கத்தில் இணைந்திருங்கள்.

    நன்றி.

  2. தமிழர்கள், முஸ்லிம்களுக்கு குரல் கொடுத்துவந்த இலங்கை பௌத்த பிக்கு பத்தேகம சமித தேரர் கொரோனாவுக்கு பலி

    இடதுசாரிக் கட்சியான லங்கா சம சமாஜக் கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தி, காலி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்குத் தெரிவான இவர், 2001 தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரை அந்தப் பதவியை வகித்து வந்தார்.

    தமிழ், முஸ்லிம் மக்களின் நலன்கள் தொடர்பில் அதீத அக்கறையுடன் செயற்பட்டு வந்த இவர், சிறுபான்மை மக்களுக்கு அரசியல் தீர்வொன்று கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இளமைக் காலம் முதல் - இடதுசாரிக் கட்சியான லங்கா சம சமாஜக் கட்சியுடன் இணைந்து - சமித தேரர் செயற்பட்டு வந்தார் என்றும், அதனால்தான் அவர் இனவாதத்துக்கு எதிரான தீவிர கருத்துக்களைக் கொண்டவராக இருந்தார் எனவும், மூத்த பத்திரிகையாளர் என்.எம். அமீன் கூறுகிறார்.

    "அவர் முற்போக்கான ஒரு பௌத்த பிக்கு. தமிழ், முஸ்லிம் மக்களின் நலன்களில் தீவிர அக்கறை கொண்டவராக இருந்தார். இலங்கைக்கான பாலத்தீன தூதுவரை சென்று சந்தித்த இவர், பாலத்தீன ஒருமைப்பாட்டு இயக்கத்தை தனது காலி மாவட்டத்தில் ஆரம்பித்தார்.

    தென் மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு இன ரீதியான பிரச்சினைகள் ஏற்பட்ட போதெல்லாம் அவர் முஸ்லிம் சமூகத்துக்கு ஆதரவாகச் செயற்பட்டார்" என, தேரர் தொடர்பில் தனது நினைவுகளை அமீன் பிபிசி யிடம் பகிர்ந்து கொண்டார்.

    பௌத்த பிக்கு பத்தேகம சமித தேரர்

    பட மூலாதாரம், FACEBOOK/BAKEERMARKAR

  3. கோவை புறக்கணிக்கப்பட்டதா? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

    கடந்த 10ஆம் தேதி முதல் கோவை மாவட்டத்தில் அதிக அளவிலான பரிசோதனைகளை செய்து வருகிறோம். இதுவரை கோவை மாவட்டத்தில் 5,85,713 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

    நாங்கள் ஆட்சி பொறுப்பேற்று கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 1,51,061 நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கிறது. கோவை மாவட்டம் மட்டுமின்றி எந்த மாவட்டத்திலும் படுக்கை வசதி இல்லை என்கின்ற நிலை இல்லை என்ற நிலைதான் தற்போது உருவாகி இருக்கிறது என்றார் முதல்வர்.

    கொரோனா தடுப்பு பணிகளில் கோவை புறக்கணிக்கப்பட்டதாக சிலர் புகார்களை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என நானும் கேள்விப்பட்டேன். அவர்களுக்கு அரசியல் ரீதியாக பதில் சொல்ல விரும்பவில்லை.

    அவர்கள் அரசியல் நோக்கத்தோடு கருத்துக்களைச் சொல்லலாம், ஆனால் நான் அவர்களுக்கு தெளிவாக சொல்ல விரும்புவது ,நாங்கள் உருவாக்கி வைத்திருக்கக்கூடிய கட்டமைப்பு வசதிகளை அவர்கள் நேரடியாக பார்வையிட வேண்டும். அப்படி பார்வையிட்டால் இந்த விமர்சனத்தை அவர்கள் வைக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.

    தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவையில் ஆய்வு
  4. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் மைதிலி சிவராமன் இச்சமூகத்துக்கு செய்தது என்ன?

    1968ம் ஆண்டு கீழ்வெண்மணியில் 44 விவசாயத் தொழிலாளர்கள் உயிரோடு கொளுத்தப்பட்ட கொடூரம் நிகழ்ந்தது. ரேடிகல் ரிவ்யூ பத்திரிகையில் அதை ஆவணப்படுத்தி, அக்கொடூரச் சம்பவத்தை தன் எழுத்துக்கள் மூலம் உரக்கப் பேசி, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தவர்களில் முக்கியமானவர் மைதிலி.

    கீழ்வெண்மணி படுகொலை குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட கணபதியா பிள்ளை ஆணையத்துக்கு பல்வேறு ஆவணங்களை திரட்டிக் கொடுத்து உதவினார்.

    கல்லுடைக்கும் தொழிலாளர் போராட்டம், டேப்ளட் தொழிலாளர் போராட்டம், டன்லப் தொழிற்சங்கம், பொன்வண்டு சோப் கம்பெனி, பாலு கார்மெண்ட்ஸ், குவாரி தொழிற்சங்கம் என பல தொழிற்சங்கங்களில் தொழிலாளிகளின் உரிமைகளுக்காக போராடியவர். குறிப்பாக கார்மென்ட் தொழில்களில் பெண்கள் மீது தொடுக்கப்படும் பொருளாதார சுரண்டல்களையும், பாலியல் தாக்குதல்களையும் வலுவான முறையில் தலையிட்டு சட்டரீதியாக தடுத்து நிறுத்தியதில் பெரும் பங்கு மைதிலி சிவராமனுக்கு உண்டு.

    மைதிலி சிவராமன்

    பட மூலாதாரம், K BALAKRISHNAN, FACEBOOK

  5. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கோவையில் முதல்வர் ஆய்வு

    தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான ஈரோடு,திருப்பூர் மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றுஅம்மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    இன்று காலை ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வுகளை முடித்துவிட்டு கோவை வந்தடைந்த முதல்வர்,சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.

    கொரோனா பாதிக்கப்பட்டு இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை பாதுகாப்பு உடை அணிந்து நேரில் சந்தித்து முதல்வர் நலம் விசாரித்தார்.

    மேலும்,கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்குஅளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் தொடர்பாகவும் முதல்வர் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    முன்னதாக,கோவை மாநகராட்சியி்ன்5மண்டலங்களுக்கு தலா10கார் ஆம்புலன்ஸ் வீதம், 50கார் ஆம்புலன்ஸ் சேவையை தமிழக முதல்வர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    இந்த ஆய்வின்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி,வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்,கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன்,இஎஸ்ஐ மற்றும் அரசு மருத்துவமனை முதல்வர்கள்,சுகாதாரத்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதனையடுத்து,இன்று மாலை கோவை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் தமிழக முதல்வர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

    இக்கூட்டத்தில் அமைச்சர்கள்,மாவட்ட ஆட்சியர்கள்,கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

  6. வீங்கிய கண்கள், கைகளில் காயம் – வெளியானது சோக்ஸியின் புகைப்படமா?

    ஆன்டிகா நியூஸ்ரூம் என்ற செய்தி வலைதளம் மெஹூல் சோக்ஸியின் புகைப்படம் என்று கூறி ஒரு படத்தை வெளியிட்டு அவர் ஆன்டிகாவின் எதிர்க்கட்சியான யுபிபிக்கு நிதியுதவி செய்து வருவதாக தெரிவித்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸில் செய்தி வெளியாகியுள்ளது.

    டோமினிகா காவல்துறையின் கட்டுப்பாட்டில் சிறையில் உள்ள அவரின் இரண்டு புகைப்படங்களை வெளியிடுவதாக ஆன்டிகா நியூஸ்ரூம் தெரிவித்துள்ளது.

    ஒரு புகைப்படத்தில் சோக்ஸி சிறைக்கம்பிகளுக்கு பின்னால் இருப்பது போல தெரிகிறது. அதில் அவரின் ஒரு கண் வீங்கியுள்ளது.

    இரண்டாவது அவரின் கைகளில் காயம் ஏற்பட்டுள்ள புகைப்படம்.

    மேலும் அந்த புகைப்படத்தில் அவர் எடை மிகவும் குறைந்து காணப்படுகிறது.

    ஆன்டிகா வலைதளம் இந்த புகைப்படங்களை தானாக எடுத்ததா அல்லது சோக்ஸியின் வழக்கறிஞரிடமிருந்து இந்த புகைப்படத்தை பெற்றனரா என்பது தெரியவில்லை.

    சோக்ஸியின் வழக்கறிஞர், மெஹூல் சோக்ஸி இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட ஆன்டிகாவிலிருந்து டோமினிகாவிற்கு கடத்தி செல்லப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. கொரோனா நெருக்கடி: பிரேசிலில் அதிபரை எதிர்த்து போராட்டம்

    பிரேசிலில் கொரோனா தொற்று பரவலை சரியாக கையாளவில்லை என அதிபர் போல்சினாரோ அரசுக்கு எதிராக மக்கள்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில்,நாடாளுமன்றத்திற்கு முன் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் அதிபர் போல்சினாரோ பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும்,போதுமான தடுப்பூசிகள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ரியோ டி ஜெனிரோ உட்பட பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    போல்சினாரோ கொரோனா தொற்றைக் கையாண்ட விதம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் ஏற்கனவே எழுந்துள்ளன.

    பிரேசிலில் 4லட்சத்து60ஆயிரம் பேர்கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.அமெரிக்காவுக்கு பிறகு அங்குதான் அதிகம் பேர் உயிரிழந்தனர்.

    மேலும் அமெரிக்கா,இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரேசிலில்தான் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு ஒரு கோடியே60லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  8. நேயர்களுக்கு காலை வணக்கம்...!

    இன்றைய தமிழ்நாடு,இந்தியா தொடர்பான செய்திகளையும்,உலகச் செய்திகளையும் இந்த நேரலைப் பக்கத்தில் தொடர்ந்து வழங்குகிறோம். நம்மைச் சுற்றியுள்ள உலகில் இப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த நேரலைப் பக்கத்தில் இணைந்திருக்கும்படி நேயர்களை வேண்டுகிறோம். –பிபிசி தமிழ்