You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

ஓஎன்வி விருதை திருப்பி தருவதாக வைரமுத்து அறிவிப்பு

கேரளாவின் மரியாதைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான ஓஎன்வி குறுப் இலக்கிய விருது பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், அதனை மறுபரிசீலனை செய்யப்போவதாக விருது ஓஎன்வி கல்சுரல் அகாதெமி தெரிவித்திருந்தது

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. கொரோனா: 45 வயதுக்கு மேற்பட்டோர் 100% தடுப்பூசி செலுத்தி கொண்ட புதுவை கிராமம்

    புதுச்சேரியைச் சேர்ந்த புதுக்குப்பம் கிராமம், 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொண்ட கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தடுப்பூசி எடுத்துக் கொண்ட காரணத்தினால் கடந்த நான்கு வாரங்களாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை என அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர்.

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த கூடுதல் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணியை அரசு துரிதப்படுத்தியுள்ளது. இருப்பினும் பொதுமக்களில் ஒரு சிலர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தயக்கம் காட்டி வருவதால் கிராம வாரியாக பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்த முகாம்கள் அமைக்கப்பட்டு 100% தடுப்பூசி செலுத்த புதுச்சேரி அரசு முடிவு செய்தது.

  2. திமுக துணை பொதுச் செயலாளர் ஆ ராசாவின் மனைவி பரமேஸ்வரி காலமானார்

    மக்களவை உறுப்பினர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரான ஆ ராசாவின் மனைவி பரமேஸ்வரி கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    கடந்த ஆறு மாத காலமாக, தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்ததாக ரெலா மருத்துவமனை விளக்கத்தில் கூறப்பட்டிருந்தது.

    அவர் சிகிச்சை பலனின்றி இன்று (29.05.2021) இரவு 7.05 மணிக்கு உயிரிழந்ததாக ரெலா மருத்துவமனையில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது.

    தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி வெளியாகி இருக்கிறது.

    அதில் “தி.மு.கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ஒன்றிய முன்னாள் அமைச்சர் திரு.ஆ.ராசா அவர்களின் வாழ்விணையர் திருமதி பரமேஸ்வரி அவர்கள் மரணமடைந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

    திராவிடத் தத்துவத்தினை அரசியல் பாடமாகப் பயின்று பொதுவாழ்வில் ஈடுபட்ட ஆ.ராசா அவர்களின் உயர்விலும் - தாழ்விலும், நெருக்கடிகளிலும் - சோதனைகளிலும் தோன்றாத் துணையாக உடனிருந்து அவரது வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தவர் அம்மையார் பரமேஸ்வரி.

    அவரது மறைவு ஏற்படுத்தும் பெருந்துயரால் வாடும் திரு. ஆ.ராசா அவர்களின் கரங்களைப் பற்றி ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். திருமதி.பரமேஸ்வரி அம்மையாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    திரு. ஆ.ராசா அவர்கள் இந்தத் துயரில் இருந்து மீண்டெழ, உடன்பிறப்பு என்ற சொல்லுக்கேற்ப கழகம் தோள் கொடுத்துத் துணை நிற்கும்” என அவ்விரங்கல் செய்தியில் கூறப்பட்டிருக்கிறது.

  3. கங்கைக் கரை மணலில் புதைக்கப்பட்ட பெருமளவு சடலங்கள் – பாரம்பரியமா?

    பிரயாக்ராஜில் (அலகாபாத்) கங்கைக் கரையில் சில இடங்களில் மணலில் புதைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சடலங்களின் படங்களும் வீடியோக்களும் தேசிய அளவிலும் உலகளவிலும் விவாதப் பொருளாக ஆனபோது, இந்த நூற்றுக்கணக்கான மரணங்கள் குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன.

    கடந்த வாரம், இந்நகரில் இருந்த மாநில அமைச்சர் மகேந்திர பிரதாப் சிங், இப்படிப் புதைப்பது 'பிரயாக்ராஜின் பழமையான பாரம்பரியம்' என்று கூறினார்.

    கடந்த இரண்டு மாதங்களில், பிரயாகராஜில் உள்ள ஷ்ரிங்வெர்பூர் அருகே கங்கைக்கு மிக அருகில் எண்ணிலடங்காத அளவு சடலங்கள் புதைக்கப்பட்டன.

    இந்தச் சடலங்கள் மீது போர்த்தப்பட்டிருந்த துணியும் சில இடங்களில் இறந்தவர்களின் உடல் பாகங்களும் கூட வெளியில் தெரியும் அளவிற்கு அவசர அவசரமாக இவை புதைக்கப்பட்டுள்ளன. அந்த உடல் பாகங்களை இரையாகக் கொள்ள, விலங்குகளும் கழுகுகளும் காகங்களும் சுற்றிச் சுற்றி வந்தன.

  4. வந்துகொண்டிருக்கும் செய்தி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் போட்டிகள்

    2021ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று கொண்டிருந்த வேளையில், கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்ததால் போட்டிகள் பாதியில் ரத்து செய்யப்பட்டன.

    இந்நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என தற்போது பிசிசிஐ தெரிவித்துள்ளது.

  5. ஓஎன்வி விருதை திருப்பி தருவதாக வைரமுத்து அறிவிப்பு

    ஓஎன்வி இலக்கிய விருதைத் திருப்பித் தருவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

    கேரளாவின் மரியாதைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான ஓஎன்வி குறுப் இலக்கிய விருது பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், அதனை மறுபரிசீலனை செய்யப்போவதாக விருது ஓஎன்வி கல்சுரல் அகாதெமி தெரிவித்திருந்தது இந்நிலையில்தான் வைரமுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    மேலும் பரிசுத்தொகையை கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திருப்பி அனுவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    ஓஎன்வி குறுப் விருது என்பது ஞானபீட விருது பெற்ற ஓஎன்வி குறுப் பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவரும் இலக்கிய விருதாகும். இந்த ஆண்டுக்கான விருது தமிழ்நாட்டைச் சேர்ந்த பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு அளிக்கப்பட்டது.

    வைரமுத்து மீது பாடகி சின்மயி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிலர் பாலியல் சீண்டல் புகார்கள் அளித்திருந்த நிலையில்,பெருமைக்குரிய இந்த விருதை அவருக்கு அளித்தது குறித்து தமிழிலும் மலையாளத்திலும் பல்வேறு தரப்பினர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்

    இது தொடர்பாக காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளவைரமுத்து, ''காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலபேரின் குறுக்கீட்டினால் அந்த விருது மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டிருப்பதாய் அறிகிறேன். இது என்னையும் கவிஞர் ஓ.என்.வி குரூப்பையும் சிறுமைப் படுத்துவதாகுமோ என்று சிந்தையழிகிறேன். அறிவார்ந்த நடுவர் குழுவும் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடாதே என்றும் தவிக்கிறேன். அதனால் சர்ச்சைகளுக்கிடையே இந்த விருதைப் பெறுவதை நான் தவிர்க்கவே விரும்புகிறேன்,''என தெரிவித்துள்ளார்.மேலும் தான் மிக மிக உண்மையாய் இருப்பதாகவும்,தன்னுடைய உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.''ஓ.என்.வி இலக்கிய விருது அறிவிப்பை நான் ஓ.என்.வி கல்சுரல் அகாடமிக்கே திருப்பி அளிக்கிறேன். எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகை ரூபாய்3லட்சத்தைக் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன்.

    மற்றும் மலையாள மண்மீதும் மக்கள்மீதும் நான் கொண்டிருக்கும் அன்பின் அடையாளமாக என்னுடைய பங்குத்தொகையாக ரூபாய்2லட்சத்தைக் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனிப்பட்ட முறையில் நான் வழங்குகிறேன்,''என தெரிவித்துள்ளார்.தமிழுக்கும் மலையாளத்துக்குமான சகோதர உறவு தழைக்கட்டும் என்று கூறியுள்ள வைரமுத்து,விருது அறிவிப்பைக் கேட்டு தன்னை பேருள்ளத்தோடு வாழ்த்திப் பெருமை செய்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும்,உள்ளன்போடு வாழ்த்திய உலகத் தமிழர்களுக்கும்,ஊடக உறவுகளுக்கும் நன்றி தெரிவிப்பதாக அறிக்கையில் கூறியுள்ளார்.

  6. `நாடுகள் ஒன்றிணைந்து சீனாவை எதிர்க்க வேண்டும்`

    சீனாவின் வளரும் பொருளாதாரம் மற்றும் புவிசார் வற்புறுத்தலை நாடுகள் ஒன்றாக இணைந்து எதிர்க்க வேண்டும்; தனி ஒரு நாடாக சீனாவை எதிர்த்தால் அந்நாட்டைச் சீனா தண்டிக்கும் என முன்னாள் ஆஸ்திரேலியா பிரதமர் கெவின் ரட்பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

    மனித உரிமைகள் தொடர்பான விஷயங்களில் மேற்கத்திய நாடுகள் சீனாவை எதிர்க்கதயங்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    சீனாவின் அதிகரிக்கும் ஆதிக்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு புதிய புவிஅரசியல் பாதையை நோக்கி உலக நாடுகள் சென்று கொண்டிருக்கின்றன.

    “நாடுகளுக்கு சீனாவுடன் எதிர்ப்பு இருந்தால், தனியாக எதிர்ப்பதை காட்டிலும் பிற நாடுகளுடன் இணைந்து சீனாவை எதிர்ப்பதே சிறந்தது. அப்போதுதான் சீனா அந்த நாட்டுக்கு எதிரான இருதரப்பு கொள்கையை செயல்படுத்த இயலாது” என பிபிசியின் `டாக்கிங் பிசினஸ் ஏசியா`நிகழ்ச்சியில் பேசிய ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.

  7. கணினித் தமிழ் வளர்ச்சிக்கு பெரும் பங்களித்த கல்வியாளர் மு.ஆனந்தகிருஷ்ணன் மறைவு

    அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் முன்னாள் துணைத் தலைவர், ஐஐடி கான்பூரின் முன்னாள் இயக்குநர் குழுத் தலைவர்,கணினித் தமிழ் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய தமிழ்நாட்டின் மூத்த கல்வியாளர் மு.ஆனந்தகிருஷ்ணன் கொரோனா தொற்றுக்குப் பலியானார்.ஆனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையின் பேரிலேயே அப்போதைய தமிழ்நாடு முதல்வர் மு.கருணாநிதி பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்தார் என்று தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார் தமிழ்நாட்டில் நீண்ட காலம் கல்வி தொடர்பான செய்திகளை அளித்துவரும் மூத்த செய்தியாளர் டி.சுரேஷ்குமார். சொந்தமாக கார் கூட வைத்துக்கொள்ளாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்தவரான ஆனந்தகிருஷ்ணன், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நிலவுவதாக குற்றச்சாட்டு முன்வைத்ததாகவும் குறிப்பிடுகிறார் சுரேஷ்குமார். தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவியல் ஆலோசகராகவும் செயல்பட்டுள்ள ஆனந்தகிருஷ்ணனுக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கிப் பாராட்டியது.

  8. 12-15 வயது குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பு மருந்து வழங்க அனுமதி

    ஐரோப்பிய மருந்துகள் முகமை ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பு மருந்தை 12-15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வழங்கலாம் என ஒப்புதல் வழங்கியுள்ளது.

    ஐரோப்பிய மருந்துகள் முகமை என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துகளை மதிப்பிட்டு கண்காணிக்கும் ஒரு முகமையாகும்.

    12-15 வயது வரையிலான குழந்தைகளுக்கு முதல் டோஸ் வழங்குவதற்கான அனுமதியைதான் ஐரோப்பிய மருந்துகள் முகமை தெரிவித்துள்ளது.

    இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவும் கனடாவும் ஃபைசர் மருந்தை பதின்ம வயதினருக்கு செலுத்த ஒப்புதல் வழங்கியிருந்தது.

    உலக சுகாதார நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியத்தில் தடுப்பு மருந்து செலுத்தும் பணி வேகமாக நடைபெற வேண்டும் என்ற அறிவித்ததையடுத்து ஐரோப்பிய மருந்துகள் முகமையின் இந்த ஒப்புதல் வந்துள்ளது.

    உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பா பிரிவு இயக்குநர் ஹன்ஸ் க்லஜ், 70 சதவீத மக்களுக்கு தடுப்பு மருந்து வழங்கவில்லை எனில் பெருந்தொற்று முடிவடையாது என தெரிவித்துள்ளார்.

  9. நேயர்களுக்கு காலை வணக்கம்...!

    இன்றைய தமிழ்நாடு,இந்தியா தொடர்பான செய்திகளையும்,உலகச் செய்திகளையும் இந்த நேரலைப் பக்கத்தில் தொடர்ந்து வழங்குகிறோம். நம்மைச் சுற்றியுள்ள உலகில் இப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த நேரலைப் பக்கத்தில் இணைந்திருக்கும்படி நேயர்களை வேண்டுகிறோம். –பிபிசி தமிழ்