இன்றைய நேரலை நிறைவு பெற்றது
நேயர்களே, இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம். மீண்டும் மே 21ஆம் தேதி சந்திப்போம். அதுவரை உலகம் மற்றும் இந்திய நிகழ்வுகளின் விரிவான தகவல்களுக்கு பிபிசி தமிழ் இணையதள பக்கத்தில் இணைந்திருங்கள். வணக்கம்.
கேரளா முதல்வராக பதவியேற்றுள்ள பினராயி விஜயனின் அமைச்சரவையில் முந்தைய ஆட்சியில் அமைச்சர்களாக இடம்பெற்ற ஒருவர் கூட அமைச்சராகவில்லை. பினராயி நீங்கலாக அவரது தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்ற அனைவரும் புது முகங்கள்.
நேயர்களே, இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம். மீண்டும் மே 21ஆம் தேதி சந்திப்போம். அதுவரை உலகம் மற்றும் இந்திய நிகழ்வுகளின் விரிவான தகவல்களுக்கு பிபிசி தமிழ் இணையதள பக்கத்தில் இணைந்திருங்கள். வணக்கம்.
தமிழ்நாடு அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்று, இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய ஆணையிட வேண்டும் என்று இந்திய குடியரசு தலைவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த வழக்கில் தண்டனை காலம் முடிந்த பிறகும் பல ஆண்டுகளாக ஏழு பேரும் சிறைகளிலேயே உள்ளதாகவும், அவர்களின் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவரின் முடிவே இறுதியானது என ஆளுநர் கூறிவிட்டதால், 2018இல் அமைச்சரவை வழங்கிய பரிந்துரையை ஏற்று, நளினி, முருகன், சாந்தன், ஏ.ஜி. பேரறிவாளன், ஜெயகுமார், ராபர்ட் பயாஸ், பி. ரவிச்சந்திரன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொள்வதாக முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், TNDIPR

பட மூலாதாரம், TNDIPR

பட மூலாதாரம், Mamata Banerjee
இந்திய பிரதமர் நரேந்திர மோதி அழைப்பு விடுத்த கொரோனா நிலவரம் தொடர்பான காணொளி கூட்டத்தில் மாநில முதல்வர்களுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்ட செயலை கடுமையாகச் சாடியிருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.
"பிரதமரின் கூட்டத்தில் மாநில முதல்வர்கள் பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றால் பிறகு ஏன் முதல்வர்களை அழைக்க வேண்டும். இதை மற்ற மாநில முதல்வர்கள் எதிர்க்க வேண்டும்," என்று வலியுறுத்தியுள்ளார் மமதா பானர்ஜி.
முதல்வர்களுடனான பிரதமரின் சமீபத்திய கூட்டம், சூப்பர் ஃபிளாப் (சூப்பர் தோல்வி) மற்றும் "அவமதிப்பு" என்றும் அவர்.அழைத்துள்ளார்.
இந்த செய்தியை விரிவாக படிக்க

பட மூலாதாரம், AICC
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் பிள்ளைகளுக்கு நாடு முழுவதும் உள்ள நவோதயா மத்திய பள்ளிகளில் இலவசமாக கல்வி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோதியை கேட்டுக் கொண்டுள்ளார் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி.
அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் இணைத்துப் பகிர்ந்துள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
அது தொடர்பான பதிவில், "கொரோனா பெருந்தொற்றால் பெற்றோரை இழந்து மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்களாகியிருப்பது சிறார்கள் என்பதால் அவர்களின் நலன் காக்க நாடு முழுவதும் உள்ள நவோதயா பள்ளிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச கல்வி வழங்க சோனியா காந்தி தெரிவித்துள்ள யோசனையை மத்திய அரசு கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் இறந்த தினம், தீவிரவாத எதிர்ப்பு தினமாக மே 21ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிலையில், ராஜீவ் காந்தியின் கனவுத்திட்டங்களில் ஒன்றான நவோதயா பள்ளிகள் மூலம் நவீன கல்வி வசதியை அனைவரும் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று சோனியா காந்தி தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
கோவிட்-19 தொற்றால் கடுமையான துயரத்தை அனுபவிக்கும் சிறார்கள், கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அந்த சோகத்தில் சிக்கி விடாமல் இருக்கவும் அவர்களின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் வகையிலும் நவோதயா பள்ளிகளில் இலவச கல்வி வழங்க வேண்டும் என்று சோனியா காந்தி கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு

பட மூலாதாரம், Pinarayi Vijayan
கேரள மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக பினராயி விஜயன் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்புப்பிரமாணமும் செய்து வைத்தார்.
76 வயதாகும் பினராயி விஜயன் அமைச்சரவையில் கடந்த முறை அவரது ஆட்சியில் இடம்பெற்ற யாரும் இடம்பெறவில்லை. இம்முறை அவரது அமைச்சரவையில் இடம்பெற்ற அனைவரும் புது முகங்கள்.
திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் ஸ்டேடியத்தில் இதையொட்டி நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் என்சிபியின் ஏ.கே. சசீந்திரன், இந்திய தேசிய லீக்கின் அகமது தேவர்கோவில், ஆர். பிந்து, பி.ஏ. முகம்மது ரியாஸ் உள்ளிட்டோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்ற கேரள மாநில சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 140 இடங்களில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி 99 இடங்களில் வென்றுள்ளது.

பட மூலாதாரம், TNDIPR
தமிழ்நாட்டில் 18-44 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமை முதல் முயற்சியாக திருப்பூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்துள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
தடுப்பூசியே கொரோனா பெருந்தொற்றை வெல்லும் பேராயுதம்.. எனவே, தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்திடும் நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுபடுத்தியுள்ளது என்று திட்டத்தை தொடக்கி வைத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

பட மூலாதாரம், RADHAKRISHNAN
தமிழ்நாட்டில் 9 பேருக்கு மியூகோர்மைகாசிஸ் என்ற கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் இந்த நோய் பாதிப்பு அதிகமாகி வருவதையடுத்து, இதை அறிவிக்கப்பட வேண்டிய நோய் ஆக அம்மாநில அரசு வகைப்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் கருப்புப்பூஞ்சை பாதிப்பு, சர்க்கரை நோயாளிகள் ஏழு பேர் உள்பட 9 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
தற்போது அவர்கள் நலமுடன் உள்ளதாகக் கூறிய அவர், கருப்பு பூஞ்சை பல ஆண்டுகளாக இருக்கக்கூடிய ஒரு பாதிப்புதான் என்றும் விளக்கினார்.
இந்த கருப்பு பூஞ்சை குறித்து மக்கள் தேவையின்றி பீதியடைய வேண்டாம். அது பற்றிய வாட்ஸ் அப் வதந்திகளை நம்ப கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்.
ஸ்டிராய்ட் எடுப்பவர்கள், சர்க்கரை வியாதி,ஐசியூவில் பல நாட்களாக உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை ஏற்படலாம். கருப்பு பூஞ்சை அறிவிக்கப்பட வேண்டிய நோய் என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.
யாருக்கு கருப்பு பூஞ்சை ஏற்பட்டாலும் மருத்துவமனை நிர்வாகம் பொது சுகாதார இயக்குநரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் இது குணப்படுத்த கூடிய நோய்தான் என்றும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக சேலம் வந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள சேலம் உருக்காலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.
இந்த மையமானது, ஆக்ஸிஜன் வசதியோடு கூடிய படுக்கை பற்றாகுறையை சமாளிக்க சேலம் இரும்பாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
20 ஆயிரம் சதுர அடி பரப்பில் 500 படுக்கைகளோடு கொரோனா சிகிச்சை மையத்திற்கு உருக்காலையிலிருந்து ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.
சேலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியுள்ளன.
சேலத்தில் நேற்று (19 05.21) கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 795 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆகவும் உள்ளது.
சேலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
படுக்கை வசதி ,ஆக்சிஜன் , மற்றும் பிறவசதிகளை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், உருக்காலை வளாகத்தில் இன்னும் 10 நாட்களுக்குள் கூடுதலாக 500 படுக்கை வசதிகளை அமைக்க உத்தரவிட்டுள்ளார்.


பட மூலாதாரம், CNSA
செவ்வாயிலிருந்து முதல் புகைப்படத்தை அனுப்பியுள்ளது சீனா அனுப்பிய சுரொங் ரோவர் (ஊர்தி).
அந்த ரோவரின் முன் பகுதியில் எடுக்கப்பட்ட படம் நில அமைப்பை காட்டுகிறது. பின் பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் சுரொங்கின் சூரிய சக்தி தகடுகளை காட்டுகிறது.
இந்த சுரொங் ரோவர் சீன நேரப்படி ஞாயிற்றுக்கிழமை செவ்வாயில் தரையிறங்கியது. செவ்வாயில் விண்கலனை வெற்றிகரமாகத் தரையிறக்கும் இரண்டாவது நாடாகியுள்ளது சீனா. இதுவரை அமெரிக்கா மட்டுமே அந்த சிறப்பைப் பெற்றிருந்தது.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர்.
விலகிய பலர் கமல் ஹாசன் மீதும் தேர்தல் சமயத்தில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் மீதும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யக் கட்சியின்பொதுச்செயலாளராகபதவி வகித்துவந்த சி.கே.குமரவேல் இன்று கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
அதுகுறித்து கமல் ஹாசனுக்கு அவர் அனுப்பியுள்ள கடித்தத்தில், “நமது தோல்விக்கான காரணங்களையும் காரணிகளையும் இதற்கு முன் விலகிய பொறுப்பாளர்கள் உங்கள் முன்னும், ஊடகங்கள் முன்னும் வைத்துவிட்டார்கள், அவர்கள் முன் வைத்த காரணங்களில் உண்மை இல்லாமல் இல்லை என்பது நீங்களும் அறிவீர்கள் புதிதாக நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை,” என குறிப்பிட்டிருந்தார்

ஆறு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகும் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்திய மலையாள பிக் பாஸ் அரங்கிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த பிக் பாஸ் பங்கேற்பாளர்கள் வெளியேற்றப்பட்டு, சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
மோகன்லால் தொகுத்து வழக்கும் பிக்பாஸ் மலையாளம் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு சென்னைக்கு அருகில் பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிடியில் அரங்கு அமைத்து நடைபெற்றுவந்தது. இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் தவிர பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்களும் இந்த அரங்கில் பணியாற்றிவந்தனர். சில நாட்களுக்கு முன்பாக இந்த ஊழியர்கள் ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
ஆனால், அதற்குப் பிறகும் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்துவந்தது. "படப்பிடிப்பே நடத்தக்கூடாது என்ற நிலையில், தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். இவர்கள் படப்பிடிப்பில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வெளியிலிருந்து உணவு தொடர்ந்து சென்றுகொண்டிருந்தது. அவர்களைப் பின்பற்றி உள்ளே சென்றோம். உள்ளே 60க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றிவந்தனர். இதற்குப் பிறகு விசாரணை நடத்தி அரங்கை மூடி சீல் வைத்திருக்கிறோம். அரங்கில் பங்கேற்பாளர்களாக இருந்த ஆறு பேர் வெளியேற்றப்பட்டனர். மற்ற ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர்" என பிபிசியிடம் தெரிவித்தார் திருவள்ளூர் மாவட்ட துணை ஆட்சியர் ப்ரீத்தி பார்கவி.
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களிடம் விசாரணை நடத்திய பிறகு பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005ன் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. மேலும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
அரங்கில் இருந்த நடிகர், நடிகைகள் தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு வெளியேற அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. அவர்கள் பிபிஇ கிட், முகக் கவசம் அணிந்து தங்கள் உடமைகளுடன் அங்கிருந்து வெளியேறினர். இப்படி வெளியேறியவர்கள் ஒரு இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். அங்கு பணியாற்றிவந்த 60க்கும் மேற்பட்ட ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர்.
இந்த அரங்கில் ஊரடங்கு காலம் முடியும்வரை தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. வெளியேற்றப்பட்ட நடிகர், நடிகைகளுக்கு தற்போது இ - பாஸ் எடுக்கப்பட்டு, அவர்கள் கேரளாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும்ப்ரீத்தி பார்கவி தெரிவித்தார்.
மலையாளம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸன் இப்போது நடைபெற்று வருகிறது. இது ஏசியா நெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியில் மணிக்குட்டன், மிச்செல் ஆன் டேனியல், நோபி மார்கோஸ், ரெம்யா பணிக்கர், அனூப் கிருஷ்ணன், சாய்னா ஃபிரோஸ், ஏஞ்சல் தாமஸ், சாய் விஷ்ணு, சூர்யா மேனன், ஃபிரோஸ் கான், ஃபிரோஸ் அஜீஸ், லக்ஷ்மி ஜெயன், ரிது மந்த்ரா, ரம்ஜான் முகமது, சந்தியா மனோஜ், பாக்யலட்சுமி, டிம்பல் பால் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
ஃபிப்ரவரி 14ஆம் தேதி துவங்கிய இந்த நிகழ்ச்சி, ஜூன் மாத மத்தியில் நிறைவுக்கு வருவதாக இருந்தது.
இஸ்ரேல் மற்றும் காசாவின் ஆயுதக் குழுவினர் ஒரிரு நாட்களில் மோதலை முடிவுக்கு கொண்டு வருவார்கள் என தான் எதிர்ப்பார்ப்பதாக ஹமாஸ் குழுவின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
வியாழன்று ஹமாஸின் கட்டடங்கள் மீது 100க்கும் மேற்பட்ட வான் தாக்குதல்களை நடத்தியது இஸ்ரேல்.
இதற்கு பாலத்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் பதில் தாக்குதல்களை தொடுத்தது.
முன்னதாகஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் காசாவில் நடைபெற்று வரும் மோதலை நிறுத்த வேண்டும் என கோரியிருந்தார். மேலும் சண்டையை நிறுத்துவதற்கான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என அவர் விரும்புகிறார் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை புதன்கிழமையன்று தெரிவித்துள்ளது.
இருப்பினும் "இஸ்ரேல் குடிமக்களுக்கு அமைதியும் பாதுகாப்பும்" கிடைக்கும் வரை சண்டையை தொடர "தான் உறுதியாக இருப்பதாக" இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு தெரிவித்துள்ளார் என இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் – பாலத்தீன மோதல் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2 லட்சத்து 76 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 874 பேர் உயிரிந்துள்ளனர்.
மேலும் இதுவரை 2 லட்சத்து 87 ஆயிரத்து 122 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். 2.5 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆறுதல் அளிக்கும் ஒரு விஷயமாக ஓரிரு நாட்களாக தொடர்ந்து 3 லட்சத்துக்கும் குறைவாக புதிய தொற்று எண்ணிக்கை இந்தியாவில் பதிவாகி வருகிறது.
பிபிசி தமிழ் வழங்கும் இந்த நேரலை பக்கத்தில் நீங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.