"குலக்கல்வித் திட்டத்தை திணிக்க மத்திய அரசு முயற்சி" - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

"கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட மெயிலுக்கு எவ்வித பதிலும் வரவில்லை. பதில் வரும் என எதிர்பார்க்கிறோம். வராத பட்சத்தில்டெல்லிக்கு சென்று எங்களுடைய கருத்துகளை முன்வைக்க உள்ளோம். புதிய கல்வி கொள்கை பாதகமானது. குலக்கல்வித் திட்டத்தை நினைவுபடுத்துகிறது."

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. குஜராத்தில் 160 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்தது டோக்டே புயல்

    டோக்டே புயல்

    பட மூலாதாரம், EPA

    இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் டோக்டே புயல் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்தது. இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதிகளில் டோக்டே புயல் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலால் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.இந்திய வானிலை மையம் திங்கள் மாலை, “அதிக தீவிரமான டோக்டே புயல்” கரையை கடக்க தொடங்கியது என தெரிவித்திருந்தது.குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இதுகுறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.1998ஆம் ஆண்டு பிறகு ஏற்பட்ட புயல்களில் டோக்டே வலுவான புயலாக கருதப்படுகிறது.குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்திருந்தாலும், இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கம் இன்னும் குறையவில்லை. இந்த நிலையில்தான் டோக்டே புயலின் பாதிப்புகளும் வந்து சேர்ந்துள்ளன. இருமாநிலங்களில் பல்வேறு மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வீடுகள் சேதமடைந்தன. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

  2. இஸ்ரேல் - காசா மோதல்: போலிச் செய்திகளும் உண்மையும்

    இஸ்ரேல்

    பட மூலாதாரம், Getty Images

    இஸ்ரேல்-பாலத்தீன மோதல் அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான பல போலி செய்திகள் சமூக வலைத் தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

    இருதரப்பிலும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ள சில தகவல்களை நாம் பரிசோதித்தோம்.

  3. ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி: 2 மாதங்களில் இந்தியாவில் உற்பத்தி?

    ரஷ்யாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசியான ஸ்புட்னிக்கை இந்தியாவில் நிர்வகிக்கும் டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், அப்பல்லோ மருத்துவமனை குழுமத்துடன் இணைந்து இன்று முன்னோட்ட திட்டம் ஒன்றை தொடங்கியதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக பேசிய டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தீபக் சப்ரா, இந்தியாவில் ஸ்பூட்னிக் தடுப்பூசியை சரிவர அறிமுகப்படுத்துவதற்கான ஒரு முன்னோட்டமே இது என்று கூறினார்.இந்த முயற்சி, தடுப்பூசி பராமரிப்பு மற்றும் விநியோக சங்கிலி குறித்து அறிவதற்கு பயன்படும் என்று அவர் மேலும் கூறினார்.இந்த தடுப்பூசி ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் ஜிஎஸ்டி உட்பட 995 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், இந்தியாவில் இதன் உற்பத்தி தொடங்கினால் செலவு குறையும் என்றும், அது இரண்டு மாதங்களில் நடைபெறும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

    ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி: 2 மாதங்களில் இந்தியாவில் உற்பத்தி

    பட மூலாதாரம், RDIF HANDOUT VIA REUTERS

  4. அதிக நேரம் வேலை செய்து அநியாயமாக சாகும் ஊழியர்கள்

    மிகவும் நீண்ட நேரம் வேலை செய்வதால் ஆண்டுதோறும் லட்சக் கணக்கானவர்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

    2016ஆம் ஆண்டு மட்டும் 7,45,000 பேர் பக்கவாதம் மற்றும் இதய நோய் காரணமாக உயிரிழக்க நீண்ட வேலை நேரம் காரணமாக இருந்தது என்று இத்தகைய பாதிப்புகள் குறித்த முதல் சர்வதேச ஆய்வில் தெரியவந்தது.

    தென்கிழக்கு ஆசியப் பிராந்தியம் மற்றும் மேற்கு பசிஃபிக் பிராந்தியம் ஆகியவற்றில் நீண்ட வேலை நேரம் காரணமாக நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கை உலகின் பிற பகுதிகளில் உள்ள எண்ணிக்கையை விடவும் கூடுதலாக உள்ளதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் இந்த நிலை மேலும் மோசமடையக் கூடும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

  5. இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் சரமாரி ஏவுகணை தாக்குதல்

    இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் சரமாரியான ஏவுகணை தாக்குதல்

    பட மூலாதாரம், Reuters

    இஸ்ரேல் மீது சரமாரியான ராக்கெட் தாக்குதலை தொடுத்துள்ளது ஹமாஸ் குழு.இஸ்ரேலின் தெற்கு பகுதியில் மீண்டும் சைரன் ஒலிகள் கேட்க தொடங்கியுள்ளன. இந்த தாக்குதல் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கான பதிலடி என பாலத்தீனிய ஆயுத குழுவான ஹமாஸின் ஆயுத பிரிவான இச்சிதின் அல் கசாம் தெரிவித்துள்ளது.பீர்ஷபா, அஷ்டோத் மற்றும் அஷ்கெலான் உள்ளிட்ட நகரங்களில் சைரன் ஒலிகள் கேட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன.

  6. "குலக்கல்வித் திட்டத்தை திணிக்க மத்திய அரசு முயற்சி"

    "குலக்கல்வித் திட்டத்தை திணிக்க மத்திய அரசு முயற்சி"

    பட மூலாதாரம், Facebook

    புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் ஆலோசனை கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்துள்ளது.

    இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "புதிய கல்வி கொள்கை குறித்த மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகள் மட்டும் பங்கேற்க வேண்டும் என்ற அறிவிப்பு கூட்டாட்சி தத்துவத்திற்கு வேட்டு வைப்பது போல் இருப்பதாக தமிழக முதல்வர் கூறியுள்ளார். கூட்ட அறிவிப்பு குறித்து நாங்கள் மின்னஞ்சல் அனுப்பி இருந்தோம். ஆனாலும் எவ்வித பதிலும் வரவில்லை. எனவே கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் நாங்கள் கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என புரிந்து கொள்ளக் கூடாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    "கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட மெயிலுக்கு எவ்வித பதிலும் வரவில்லை. பதில் வரும் என எதிர்பார்க்கிறோம். வராத பட்சத்தில்டெல்லிக்கு சென்று எங்களுடைய கருத்துகளை முன்வைக்க உள்ளோம். புதிய கல்வி கொள்கை பாதகமானது. குலக்கல்வித் திட்டத்தை நினைவுபடுத்துகிறது."

    தமிழக அரசு சொல்லும் திருத்தங்களை ஏற்றுக் கொண்டால் புதிய கல்விக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் புதிய கொள்கையில் மும்மொழி கல்வித் திட்டத்தை ஏற்பதாக இல்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

  7. இலங்கை துறைமுக நகரம் - இலங்கை மக்கள் காங்கிரஸ் புதிய முடிவு

    இலங்கை துறைமுக நகரம்

    பட மூலாதாரம், CHEC

    துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிக்க வேண்டுமென, றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

    அந்தக் கட்சியின் தலைவர் - நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணையின் பொருட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

    தலைவருடன் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏற்கனவே அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த தமது கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கட்சியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

    சீனாவின் ஆதரவுடன் கடலை மூடி நிர்மாணிக்கப்பட்டு வரும் துறைமுகத்துக்கு அதிகாரமளிக்கும் இந்த சட்ட மூலம் நாட்டின் இறைமைக்கு ஆபத்தானது என எதிர்கட்சிகளால் விமர்சிக்கப்படுகிறது.

  8. ஸ்டெர்லைட் ஆலையில் சோதனை ஓட்டம்

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தில் பழுது சரி செய்யப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

    ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தில் இஸ்ரோ தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஸ்டெர்லைட் ஊழியர்கள் இணைந்து பழுதை சரி செய்துள்ள நிலையில் அது தற்போது சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது.

    இரண்டு தினங்கள் நடைபெறும் இந்த சோதனை ஓட்டத்தில் பழுது ஏற்படாமல் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டால் வரும் 19-ம் தேதி முதல் ஆக்சிஜன் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

  9. கொரோனா தொற்றியிருந்தது குணமடைந்தார் புதுச்சேரி முதல்வர்

    புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கொரோனா‌ தொற்று காரணமாக கடந்த 9ஆம் தேதி இரவு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வார காலமாக சிகிச்சை பெற்றுவந்த அவர், தற்போது கொரோனா தொற்றியிருந்தது குணமடைந்துள்ளார்.

    ரங்கசாமி

    பட மூலாதாரம், NR CONGRESS

    படக்குறிப்பு, ரங்கசாமி
  10. இந்தியாவில் கொரோனா

    கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் 2,81,386 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது என்று இந்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை தெரிவித்துள்ளது

    கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,106 என புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

  11. இந்திய அரசை விமர்சித்த வைராலஜிஸ்ட் பதவி விலகல்

    கடந்த ஆண்டு, இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் திரிபுகளைக் குறித்து ஆராய Indian SARS-CoV-2 Genome Sequencing Consortia (INSACOG) என்கிற ஆலோசனைக் குழுவை நிறுவியது ஒன்றிய அரசு. அதற்கு இந்தியாவின் மூத்த வைராலஜிஸ்டான ஷாஹித் ஜமீல் தலைவராக இருந்தார்.

    'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் "கொரோனா வைரஸில் இருந்து இந்தியா எப்படி தப்பிக்கும், தடுப்பூசிகள் மட்டுமே நாட்டை பாதுகாத்துவிடாது" என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார். அது மே 13 அன்று பிரசுரமானது.

    இந்நிலையில் அவர் நேற்று பதவி விலகியுள்ளார்.

    ஷாஹித் ஜமீல்

    பட மூலாதாரம், shahid jameel / facebook

  12. மேற்கு வங்கத்தில் 4 முன்னாள் அமைச்சர்கள் கைது - சிபிஐ அலுவலகத்தில் மமதா

    மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மமதா பானர்ஜியின் ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த நால்வரை ‘நாரதா லஞ்ச' வழக்கில் கைது செய்துள்ளது.

    ஃபரீத் ஹகிம், சுப்ரதா முகர்ஜி, மதன் மித்ரா, சோவன் சேட்டர்ஜி(இவர் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தார். பிறகு அக்கட்சியில் இருந்தும் விலகிவிட்டார்) என நான்கு முன்னாள் அமைச்சர்களை, நாரதா ஊழல் பதிவு வழக்கின் கீழ் சிபிஐ கைது செய்துள்ளதாக, முதன்மை தகவல் அதிகாரி ஆர்.சி. ஜோஷி கூறியதாக ஏஎன்ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

    கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், நாரதா ஊழல் பதிவு தொடர்பாக சிபிஐ அமைப்பு கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு தொடுத்ததும் நினைவுகூரத்தக்கது.

    திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் கைதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் மமதா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு வந்தது மேலும் பரபரப்பை அதிகரித்தது.

    “அமைச்சர்களை கைது செய்யும் போது சிபிஐ விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை. சிபிஐ அமைப்பு என்னையும் கைது செய்ய வேண்டும்” என மமதா கூறியுள்ளார்.

    திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது நாரதா லஞ்ச வழக்கில் இடம் பெற்றிருந்த முகுல் ராய் மற்றும் சுவெந்து அதிகாரி போன்றவர்கள் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இருக்கிறார்கள். அவர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    mamata

    பட மூலாதாரம், sanjay das / bbc

  13. நடிகர் நித்திஷ் வீரா கொரோனா தொற்றால் உயிரிழப்பு

    நடிகர் நித்திஷ் வீரா கொரோனா தொற்று காரணமாக இன்று காலை உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 45.

    தமிழில் 'வல்லரசு' படம் மூலமாக அறிமுகமானவர் நடிகர் நித்திஷ் வீரா. கூத்துப்பட்டறை நடிகரான நித்திஷ், இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் 2006ல் வெளியான 'புதுப்பேட்டை' படம் மூலம் பரவலாக அறியப்பட்டார்.

    nitheeshveeraa

    பட மூலாதாரம், nitheeshveeraa instagram

  14. இந்தியாவில் தயாரான கொரோனா மருந்து வெளியீடு

    இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) தயாரித்துள்ள கொரோனா வைரஸ் மருந்தான 2-டியாக்சி- டி-குளுக்கோஸ் (2-deoxy-D-glucose) இன்று வெளியிடப்பட்டது.

    இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோர் இந்த மருந்தை இன்று வெளியிட்டனர்.

    இந்த மருந்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் ஓர் ஆய்வகமான இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் சயின்ஸ் (INMAS-DRDO), ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டிஸ் லெபோரட்டரீஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது.

    இந்த மருந்தின் முதல் மற்றும் இரண்டாவது தொகுப்புகள் எய்ம்ஸ் மருத்துவமனை, பாதுகாப்பு படைகளால் நடத்தப்படும் மருத்துவமனைகள், டிஆர்டிஓ நடத்தும் மருத்துவமனைகள் போன்ற இடங்களில் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயன்படுத்தப்படும் என்று டிஆர்டிஓ தலைவர் டாக்டர் ஜி. சதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  15. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும், தமிழ்நாட்டிலும் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உங்களுக்கு இந்தப் பக்கத்தில் செய்தியாகத் தொகுத்து வழங்குகிறோம்.