தமிழகத்தில் மேலும் 765 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு; உயிரிழப்பு 111ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில், சனிக்கிழமை காலை நிலவரப்படி, சுமார் 52,71,047 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன. உலகெங்கும் 3 லட்சத்து 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.

    நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும். மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.

  2. கொரோனா வைரஸ் - இன்று நடந்த முக்கிய நிகழ்வுகள்

    • கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் கொரோனா மரண எண்ணிக்கை 100க்கும் குறைவாக பதிவாகியுள்ளது.
    • கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனா நகரமான வுஹானில் நேற்று ஒரே நாளில் 11 லட்சம் பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அந்த நகரத்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • சிங்கப்பூரில் இன்று புதிதாக 548 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது. அங்கு வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கை 31,616 ஆக அதிகரித்துள்ளது.
    • மலேசியாவில் இன்று ஒரே நாளில் 60 பேருக்கு கோவிட்-19 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். இதையடுத்து கொரோனா வைரஸ் தொற்றியோரின் எண்ணிக்கை 7,245 ஆக அதிகரித்துள்ளது.
    • கொரோனா வைரஸ் தடுப்பூசியை எலிக்கு செலுத்தியதில் நல்ல முடிவுகள் வந்ததால், தற்போது அதை குரங்கின் மீது சோதனை செய்யும் பணியினை தாய்லாந்து துவங்கியுள்ளது.
    • இந்தியாவில் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு விமானம், ரயில் மற்றும் பேருந்தில் பயணிக்கும் பயணங்களுக்கான வழிகாட்டுதல்களை இந்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
    • தமிழகத்தில் இன்று மேலும் 765 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277ஆக உயர்ந்துள்ளது.
  3. வுஹானில் ஒரே நாளில் 11 லட்சம் பேருக்கு பரிசோதனை

    கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனா நகரமான வுஹானில் நேற்று ஒரே நாளில் 11 லட்சம் பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அந்த நகரத்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நேற்று முன்தினம் 14 லட்சம் பேருக்கு நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    தங்களது நகரத்தில் உள்ள 1.1 கோடி மக்களுக்கும் இரண்டு வாரத்திற்கும் குறைவான காலத்தில் கோவிட்-19 நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் வுஹான் நகர அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

    இதுபோன்ற பெரும் பரிசோதனைகளின் மூலமாகவே தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களை முழுமையாக செயல்பட வைக்க முடியுமென்றும், நோய் அறிகுறியற்றவர்களை கண்டறிய முடியுமென்றும் அவர்கள் நம்புகின்றனர்.

    சீனா

    பட மூலாதாரம், Getty Images

  4. ஊரடங்கு முடியும் நேரத்தில் நீங்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி?

    உங்களோடு வரிசையில் நிற்கும் ஒருவர் திடீரென தும்மினால், அது உங்களுக்கு எந்த அளவிற்கு ஆபத்தாக அமையும்? நீங்கள் உணவு விடுதிக்குப் போகலாமா? அரசின் பேருந்து அல்லது ரயில் சேவையை பயன்படுத்தலாமா?

    உலக நாடுகள் பலவும், தற்போது ஊரடங்கிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரத்தொடங்கியுள்ளன. பொது வெளிகளில் மக்கள் செல்ல அரசுகள் மெதுவாக அனுமதிகளை வழங்கத் தொடங்கியுள்ளன இந்த நிலையில், ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றிற்கு ஆளாவதற்கான மற்றும் வைரஸை பரப்புவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. இதன்மூலமாக, வைரஸ் இரண்டாவது முறையாக நாட்டினுள் பரவலாம் என்ற அச்சமும் மக்களிடையே காணப்படுகிறது.

    இதுகுறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

  5. இலங்கையில் நிலவரம் என்ன?

    இலங்கையில் கோவிட்-19 தொற்று காரணமாக 1,118 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

    சுகாதார அமைச்சின் தகவல்களின் பிரகாரம், 435 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அத்துடன், 674 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள அதேவேளை, 97 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தொடர்ந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    7 ஆண்களும், 2 பெண்களும் கோவிட்-19 தொற்று காரணமாக இலங்கையில் உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில், இலங்கையில் இதுவரை 53,000க்கும் அதிகமான நோய்த்தொற்றை கண்டறியும் பி.சி.ஆர். பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

    இலங்கை

    பட மூலாதாரம், Getty Images

  6. சிங்கப்பூரில் புதிதாக 548 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு

    சிங்கப்பூரில் இன்று புதிதாக 548 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது. அங்கு வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கை 31,616 ஆக அதிகரித்துள்ளது.

    நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 13,873 ஆகும். நேற்று ஒரே நாளில் 927 நோயாளிகள் வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோரின் மொத்த விகிதம் 45 விழுக்காடாக உயர்ந்துள்ளது என சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

    சிங்கப்பூரில் நடத்தப்பட்ட ஆய்வில் புதிய தகவல்

    கொரோனா வைரஸ் தொற்றின் மிக அபாயகரமான அம்சமே அதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ஏராளமானோருக்கு அது பரவும் என்பதுதான். இந்நிலையில் இந்த அச்சத்தை ஓரளவு போக்கியுள்ளது சிங்கப்பூரில் நடத்தப்பட்ட அண்மைய ஆய்வின் முடிவு.

    கோவிட்-19 நோய்த்தொற்று உள்ள ஒருவரிடமிருந்து 11 நாட்களுக்குப் பிறகு கொரோனா வைரஸ் மற்றவர்களுக்கு பரவாது எனத் தெரியவந்துள்ளது. மொத்தம் 73 கோவிட்-19 நோயாளிகளை இந்த ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர்.

    இந்தப் புதிய ஆய்வின் முடிவுகளை சிங்கப்பூர் சுகாதார அமைச்சு ஆராய்ந்து வருகிறது. ஒருவேளை ஆய்வு முடிவு சரியாக இருப்பதாக அந்த அமைச்சு ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் கோவிட்-19 நோய் கண்டவர்களை சிகிச்சைக் காலம் முடிவடைந்த பிறகு மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வீடு திரும்ப அனுமதிக்கும் நடைமுறையில் சில மாற்றங்கள் வரக்கூடும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

    அதாவது 11 நாட்களுக்குப் பிறகு வைரஸ் தொற்றியவரிடம் இருந்து அது பரவ வாய்ப்பில்லை என்பதால் பெரும்பாலான நோயாளிகள் 11 நாட்களுக்குப் பிறகு வீடு திரும்ப அனுமதிக்கப்படுவர் எனக் கூறப்படுகிறது.

    சிங்கப்பூரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த வெளிநாட்டு தொழிலாளர்கள் பலர் கப்பல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, சிங்கப்பூரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த வெளிநாட்டு தொழிலாளர்கள் பலர் கப்பல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
  7. ஹைட்ராக்ஸிகுளோராகுயின்: மறுபரிசீலனை செய்ய பிரான்ஸ் உத்தரவு

    கொரோனா

    பட மூலாதாரம், Reuters

    கொரோனா வைரஸுக்கு சிகிச்சை அளிக்க ஹைட்ராக்ஸிகுளோராகுயின் மருந்து பயன்படுத்தப்படுவதை மறுபரிசீலனை செய்யுமாறு பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் வெரன் உத்தரவிட்டுள்ளார்

    மலேரியாவிற்கு வழங்கப்படும் மருந்தான ஹைட்ராக்ஸிகுளோராகுயின் மருந்தை கொரோனா நேயாளிகளுக்கு அளிப்பதால் எந்த பயனும் இல்லை என்றும், மாறாக அதனால், நோயாளிகள் இறக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக லேன்செட் அறிவியல் சஞ்சிகையில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

    ஆனால், கொரோனா சிகிச்சைக்கு தொடர்ந்து ஹைட்ராக்ஸிகுளோராகுயின் மருந்தை ஊக்குவித்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்த மருந்தை தாம் எடுத்துக் கொள்வதாக கூறியிருந்தார்.

  8. மருத்துவப் பணியாளர்களுக்கு ஓய்வு தேவை; இனி பொதுமக்கள் பங்களிக்க வேண்டும்: மலேசிய அரசு

    மலேசியா

    பட மூலாதாரம், Getty Images

    கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தால் மலேசியாவில் இன்று நோன்புப் பெருநாள் வழக்கத்தைவிட மிக அமைதியாகக் கழிந்தது.

    சொந்த ஊர்களுக்குச் செல்லவும், மாநிலங்களுக்கு இடையேயான பயணத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதால் ஆயிரக்கணக்கானோர் குடும்பங்களுடன் சேர முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    தகுந்த காரணங்கள் இன்றி மாநில, மாவட்ட எல்லைகளைக் கடக்க முயன்றவர்களின் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

    இன்றைய நிலவரம்:

    மலேசியாவில் இன்று ஒரே நாளில் 60 பேருக்கு கோவிட்-19 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். இதையடுத்து கொரோனா வைரஸ் தொற்றியோரின் எண்ணிக்கை 7,245 ஆக அதிகரித்துள்ளது.

    இன்று 33 பேர் வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,945 ஆகும். இன்று உயிரிழப்புகள் ஏதுமில்லை என இன்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

    தற்போது மலேசியாவில் உள்ள மருத்துவமனைகளில் 1,185 பேர் மட்டுமே கோவிட்-19 நோய்த்தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருவதாக கூறிய அவர், உள்நாட்டில் ஏற்படக்கூடிய புதிய நோய்க்குழுமங்களை (Clusters) கண்டறிவதற்கான நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.

    "இதுவரை மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர் என போராட்டக் களத்தின் முன்வரிசையில் தைரியமாக செயல்பட்டவர்களுக்கு ஓய்வு தேவை. எனவே இப்போது முதல் நோய்த்தொற்றுப் பரவலை தடுப்பதில் தங்களுக்கு மாற்றாக பொதுமக்கள் மிகப்பெரிய பங்களிப்பை வழங்க முடியும் என அவர்கள் நம்புகின்றனர்," என்றார் நூர் ஹிஷாம்.

  9. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 16 ஆயிரத்தை தாண்டியது

    தமிழகத்தில் இன்று மேலும் 765 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277ஆக உயர்ந்துள்ளது.

    இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டவர்களில் 587 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இதன் மூலம், சென்னையில் மட்டும் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்துள்ளது.

    தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸால் 8 பேர் உயிரிழந்ததையும் சேர்த்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111ஆக அதிகரித்துள்ளது.

  10. கொரோனா தடுப்பூசியை குரங்கின் மீது சோதனை செய்யும் தாய்லாந்து

    கொரோனா வைரஸ் தொடர்பாக சில ஆசிய நாடுகளில் நிகழ்ந்த செய்திகளை இங்கே பார்க்கலாம்.

    • சீனாவில் இன்று புதிதாக மூன்று பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிற்பகுதியில் இங்கு கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்து முதல் முறையாக நேற்றுதான் புதிய தொற்று எதுவும் இல்லாத நாளை சீனா பார்த்தது.
    • தென்கொரியாவில் சனிக்கிழமையன்று 23 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் அதிகமானோர் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள சோல் நகரத்தை சேர்ந்தவர்கள்.
    • கொரோனா வைரஸ் தடுப்பூசியை எலிக்கு செலுத்தியதில் நல்ல முடிவுகள் வந்ததால், தற்போது அதை குரங்கின் மீது சோதனை செய்யும் பணியினை தாய்லாந்து துவங்கியுள்ளது.
    • இந்தோனேசியாவில் நேற்று 949 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. கிழக்கு ஜாவா மாகாணத்தில் அதிகபட்சமாக 466 புதிய தொற்று பதிவாகியுள்ளது.
  11. கொரோனா: முதல் பக்கம் முழுவதும் இறந்தவர்களின் பெயர்களை வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ்

    கொரோனா

    பட மூலாதாரம், @nytimes

    அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்குகிறது.

    இந்த நிலையில், இன்று வெளியான நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் முதல் பக்கம் முழுவதும், கொரோனாவால் இறந்த 1000 நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

    ’’கணக்கிட முடியாத இழப்பு’’ என அதற்கு தலைப்பும் வைத்துள்ளது.

    அமெரிக்காவில் கொரோனா தொற்றின் மையமாக நியூயார்க் உள்ளது. இங்கு இதுவரை 28,000 பேர் இறந்துள்ளனர்.

  12. கொரோனாவுக்கு சீனா இழப்பீடு வழங்கும் என கனவு காண வேண்டாம்

    யாங் இ

    பட மூலாதாரம், Getty Images

    ஒவ்வொரு ஆண்டும் சீனாவின் நாடாளுமன்ற கூட்டம் நடந்து முடிந்த பிறகு வெளியுறவுத்துறை சார்பில் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம்.

    கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் இந்த ஆண்டும் செய்தியாளர்களை சந்தித்த சீன வெளியுறத்துறை அமைச்சர் யாங் இ, அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான பிரச்சனை குறித்து பேசினார்.

    அப்போது அவர், அமெரிக்கா மக்கள் விரைவாக கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வருவார்கள் என நம்பியதாகவும், ஆனால், அமெரிக்காவில் அரசியல் வைரஸ் பரவி வருவதாகவும், சந்தர்ப்பம் கிடைக்கும்போது சீனா மீது அவதூறுகளை பரப்புகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

    கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, சீனா இழப்பீடு வழங்கும் என கனவு கண்டு அமெரிக்கா நேரத்தை வீணாக்க வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

    உலக சுகாதார அமைப்புக்கு ஆதரவாக பேசிய அவர், அந்த அமைப்பின் ஆலோசனைகளை நிராகரித்த நாடுகள் தற்போது அதற்கான பலனை அனுபவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

  13. பொது முடக்கம் மே 31-ம் தேதியுடன் முடிந்துவிடும் என சொல்ல முடியாது

    இன்று மகாராஷ்டிரா மக்களிடம் ஆன்லைனில் பேசிய அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே,’’ பொது முடக்கம் மே 31-ம் தேதியுடன் முடிந்துவிடும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வரும் காலம் கடுமையானதாக இருக்கும்’’ என கூறியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  14. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கான வழிகாட்டுதல்கள்

    இந்தியா

    பட மூலாதாரம், Getty Images

    வெளிநாடுகளில் இந்தியா வரும் பயணிகளுக்கான வழிகாட்டுதல்களை இந்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

    இந்தியா வரும் பயணிகள் கட்டாயம் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். அதில் 7 நாட்கள் அவர்களது சொந்த செலவில் அரசு குறிப்பிடும் இடங்களில் இருக்க வேண்டும். மீதமுள்ள 7 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும்.

    உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், கர்பிணிப்பெண்கள், 10 வயதுக்கும் குறைவான குழந்தைகள் அழைத்து வருபவர்கள், இறுதி சடங்குற்கு வருபவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருந்தால் போதும்.

    அனைவரிடமும் ஆரோக்கிய சேது ஆப் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  15. கொரோனா வுஹான் ஆய்வகத்தில் இருந்து பரவவில்லை

    கொரோனா

    பட மூலாதாரம், Getty Images

    கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுஹான் நகரத்தில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது.

    இந்தநிலையில் வுஹானில் உள்ள சீன நோய்க்கிருமியியல் ஆய்வு நிறுவன இயக்குனர், தங்களது ஆராய்ச்சி மையத்தில் வௌவால்களின் மூன்று வகை கொரோனா வைரஸ் கிருமிகள் இருப்பதாவும், ஆனால் கோவிட் 19 வைரஸ் உடன் அவை ஒத்துப்போகவில்லை என்றும் கூறியுள்ளார்.

    தங்களது ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து வைரஸ் பரவியது என கூறப்படுவதை நிராகரிப்பதாக சீனா அரசு தொலைக்காட்சியான சிஜிடிஎன்க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    ‘’முற்றிலும் கற்பனையில் இந்த குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது’’ என அவர் தெரிவித்துள்ளார்.

    வுஹானில் உள்ள இறைச்சி மார்க்கெட்டில் வௌவால்களிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவியது என நம்பப்படுகிறது. ஆனால், எதிர்பாராத விதமாக ஆராய்ச்சி மையத்தில் இருந்து இந்த வைரஸ் வெளியானது என்றும், அதை சீனா மறைக்கிறது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இதனை சீனா மறுத்து வருகிறது.

  16. விமானம், ரயில், பேருந்து பயணங்களுக்கான வழிகாட்டுதல்கள்

    இந்தியாவில் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு விமானம், ரயில் மற்றும் பேருந்தில் பயணிக்கும் பயணங்களுக்கான வழிகாட்டுதல்களை இந்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

    பயணிகள் அனைவரும் ஆரோக்கிய சேது மொபைல் ஆப் வைத்திருக்க வேண்டும்.

    அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு அறிகுறி இல்லாதவர்கள் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், பயணித்திற்கு பின்பு 14 நாட்கள் உடல் நலனை கவனித்துக்கொள்ள வேண்டும்.

    பயணிகளை தனிமைப்படுத்துதல் குறித்து மாநிலங்கள் சொந்த நெறிமுறையை உருவாக்கிக்கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

  17. நாளை முதல் இயக்கப்படும் விமானங்கள்: நடவடிக்கைகள் தீவிரம்

    இந்தியாவில் நாளை (மே 25) முதல் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட உள்ளது.

    டெல்லி விமான நிலையத்தில் டெர்மினல்- 3இல் இருந்து அனைத்து விமானங்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க தேவையான நடவடிக்கைகளை ஊழியர்கள் எடுத்து வருகின்றனர். அத்துடன் விமான நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  18. புதுச்சேரியில் மதுக் கடைகள் திறக்க அனுமதியளித்தார் ஆளுநர் கிரண்பேடி

    மதுக்கடை

    பட மூலாதாரம், Getty Images

    புதுச்சேரியில் சமூக முடக்கம் காரணமாக மூடப்பட்டுள்ள மதுக்கடைகளை திறக்க கடந்த வாரம் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டு, அதற்காகத் துணைநிலை ஆளுநரிடம் ஒப்புதலைப் பெற ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது.

    ஆனால், அமைச்சரவையில் மதுபானங்களுக்கு கொரோனா வரி விதிப்பது குறித்து முடிவு செய்யப்படாத காரணத்தினால், மே 18ஆம் இரவு அவசரமாக அமைச்சரவை கூட்டப்பட்டது.

    அதில், புதுச்சேரி மாநிலத்தில் விற்கப்படும் மது பானங்களுக்கு 25 சதவீதம் கொரோனா வரி விதிக்க ஆலோசனை செய்யப்பட்டு, அதற்கான கோப்பு ஆளுநர் கிரண்பேடிக்கு அனுப்பப்பட்டது.

    இதனையடுத்து, ஆளுநர் மது பானங்களுக்குக் கூடுதல் வரி விதிக்க பரிந்துரை செய்து மதுக்கடைகள் திறக்க அனுமதியளிக்க மறுத்துவிட்டார்.

    இதன்பிறகு மீண்டும் அமைச்சரவையில் ஆளுநர் பரிந்துரைக்கு இணங்க மது பானங்களுக்கு அதிக வரியை விதிக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தமிழகத்திற்கு இணையாக வரியை விதிக்க கோப்பு தயார் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள மதுபான கடைகள் திறப்பதற்கான கோப்பிற்கு நேற்றிரவு ஒப்புதல் அளித்தார் கிரண்பேடி.

    இதற்கான அரசாணை இன்று ஏற்பாடு செய்யப்பட்டு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை மதுக்கடைகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  19. வந்துகொண்டிருக்கும் செய்தி, விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு

    விமனம் மூலம் தமிழகம் வரும் பயணிகள் தங்கள் விவரங்களை TNePass தளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் .

    கொரோனா அறிகுறி இல்லாதவர்களும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

    பயணிகள் விமான நிலையம் வருவதற்கு பயன்படுத்தும் வாகனத்தையும் TNePass தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    சென்னை வரும் பயணிகள், TNePass மையத்தில் தங்களது முன்பதிவை காட்ட வேண்டும். இல்லை என்றால் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்பட மாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  20. எய்ம்ஸ் மருத்துவர் கொரோனாவுக்கு மரணம்

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

    79 வயதான ஜிதேந்திர நாத் பாண்டே, எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் துறையின் இயக்குநராகவும், பேராசிரியராகவும் இருந்துள்ளார்.

    ஜிதேந்திர நாத் பாண்டேவுக்கு அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது கடந்த செவ்வாய்கிழமை தெரியவந்தது. அவருக்கு லேசான அறிகுறிகளே இருந்ததால், வீட்டிலே தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குளேரியா தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு