கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் புதிதாக 447 பேருக்கு தொற்று - அண்மைய தகவல்கள்

ஜூன் 30-ம் தேதி வரை வழக்கமான ரயில்களில் பயணம் செய்வதற்காக செய்யப்பட்ட எல்லா முன்பதிவுகளும் ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இவர்களுக்கு முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும். மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.

  2. இதுவரை நடந்த சில முக்கிய நிகழ்வுகள்

    • ரேஷன் அட்டை இல்லாத உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு இலவசமாக ஐந்து கிலோ அரசி அல்லது கோதுமை வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
    • சிங்கப்பூரில் இன்று புதிதாக 752 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 958 பேர் கோவிட் 19 நோயிலிருந்து மீண்டுள்ளனர்.
    • பிரான்ஸ் குடிமக்கள் வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் சுற்றுலாவுக்கு செல்ல முடியும் என அந்நாட்டின் பிரதமர் எட்வர்ட் பிலிப்பி தெரிவித்துள்ளார்.
    • தமிழ்நாட்டில் இன்று புதிதாக 447 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 363 பேருக்கு அத்தொற்று ஏற்பட்டுள்ளது.
    • ரஷ்யாவில் சுமார் 2 லட்சத்து 52 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு 2305 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
  3. சிவகங்கையில் 11 நாட்களுக்குப் பிறகு புதிதாக ஒருவருக்கு கொரோனா

    சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 11 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லாமல் இருந்த நிலையில் இன்று புதிதாக ஒருவருக்கு அந்நோய்த் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இவர்கள் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தனர். இவர்களில் கடைசி நோயாளி மே 2ஆம் தேதி குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், கடந்த 11 நாட்களாக அந்த மாவட்டத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை. 23 நாட்களாக புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.

    இந்த நிலையில், காரைக்குடியை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தினர் மும்பையிலிருந்து சில நாட்களுக்கு முன்பாக ஊர் திரும்பினர். அவர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதில், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 29 வயதுப் பெண்ணுக்கு அந்நோய் இருப்பதுகண்டறியப்பட்டுள்ளது. அவர் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

  4. கொரோனாவுக்கு பின் உலகெங்கும் குழந்தைகளைத் தாக்கும் புதிய நோய்

    குழந்தை

    பட மூலாதாரம், Getty Images

    தோல் அழற்சியை உண்டாக்கும், கொரோனா வைரஸ் உடன் தொடர்புடையது என்று கருதப்படும், ஒரு விதமான நோய்க்கு அமெரிக்கா மற்றும் மற்றும் பிரிட்டனில் உள்ள பல குழந்தைகள் ஆளாகியுள்ளனர்.

    இவர்களில் மிகச் சிறிய எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும் நிலையும் உள்ளது.

    பிரிட்டனில் இதன் காரணமாக சுமார் 100 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிற ஐரோப்பிய நாடுகளிலும் தோலில் வீக்கமடைந்து சிவந்து போதல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் குழந்தைகளுக்கு இந்த நோய் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

  5. தமிழகம், இந்தியா மற்றும் உலகளவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்

  6. நிர்மலா சீதாராமன் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அறிவித்த திட்டங்கள் என்னென்ன?

    ரேஷன் அட்டை இல்லாத உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு இலவசமாக ஐந்து கிலோ அரசி அல்லது கோதுமை வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, செவ்வாய் இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது அறிவித்த 'ஆத்ம நிர்பார் பாரத் அபியான்' (தற்சார்பு இந்தியா திட்டம்) என்ற பொருளாதார உதவி தொகுப்பு குறித்த விவரங்களை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்றும் இன்றும் வெளியிட்டார்.

    நேற்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், அரசாங்க ஒப்பந்ததாரர்கள், தொழிலாளர் வைப்பு நிதி செலுத்துபவர்கள் உள்ளிடவர்களுக்கான 15 அம்ச திட்டங்களை அறிவித்திருந்த நிர்மலா சீதாராமன் இன்று, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள், சாலையோர வியாபாரிகள் பயன்பெறும் திட்டங்களை அறிவித்தார்.

  7. மலேசியாவில் இன்றைய நிலவரம்

    malaysia

    பட மூலாதாரம், Getty Images

    மலேசியாவில் இன்று புதிதாக மேலும் 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 70 பேர் குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்த நோயாளிகளில் இதுவரை 78.47 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர் என்றும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பலியானோர் எண்ணிக்கை 112ஆக அதிகரித்துள்ளது என்றும் மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

    மலேசியாவில் அதிரடிச் சோதனை நடவடிக்கைகள் நீடிக்கும் அரசு அறிவிப்பு

    மலேசியாவில் நிபந்தனையுடன் கூடிய பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருக்கும்வரை அதிரடிச் சோதனை நடவடிக்கைகள் நீடிக்கும் எனஅந்நாட்டுஅரசு தெரிவித்துள்ளது.

    நேற்று நாடு முழுவதும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டதாக மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

    பேரங்காடிகள், உணவகங்கள், வங்கிக்கிளைகள், வழிபாட்டுத் தலங்கள், பொழுதுபோக்கு மையங்களில் பரவலாக சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்ட அவர், சுமார் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களும் சோதனையிடப்பட்டதாகக் கூறினார். நேற்று ஒரே நாளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதாக 10 பேர் கைதாகி உள்ளனர்.

    இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்றுக் குறித்துப் பொய்யான தகவல்களைப் பரப்பியதாக266 புகார்கள்எழுந்துள்ளதாகவும், அவற்றின் பேரில் இதுவரை 30 பேர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்றும் மூத்த அமைச்சர் தெரிவித்தார்.

    கடந்த ஏப்ரல் 3ஆம் தேதியிலிருந்து வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய 33,807 மலேசியக் குடிமக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் என்றும் அவர்களில் 26,121 பேர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டஅவர், மலேசியாவில் பொதுநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை 90 விழுக்காட்டினர் பின்பற்றுவதாக காவல்துறை தம்மிடம் தெரிவித்துள்ளது என்றார்.

  8. சிங்கப்பூர் நிலவரம், 3.23 லட்சம் அந்நியத் தொழிலாளர்களில் 7%க்கு வைரஸ் தொற்று

    சிங்கப்பூர்

    பட மூலாதாரம், Getty Images

    சிங்கப்பூரில் இன்று புதிதாக 752 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 958 பேர் கோவிட் 19 நோயிலிருந்து மீண்டுள்ளனர்.

    இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக ஒரு நாளில் பதிவான புதிய நோயாளிகளைவிட,குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகி உள்ளது.

    இன்று நண்பகல் நிலவரப்படி நோய்வாய்ப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 26,098 என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் விடுதிகளில் தங்கியுள்ள 3 லட்சத்து 23 ஆயிரம் அந்நியத் தொழிலாளர்களில் 7 விழுக்காட்டினருக்கு வைரஸ் தொற்று இருப்பதாகவும் அந்த அமைச்சு உறுதி செய்துள்ளது.

    இதற்கிடையே மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என திரைப்பட நடிகர் சூரி கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் பேசும் காணொளிப் பதிவு ஒன்று வெளியாகி உள்ளது. அதில் சிங்கப்பூர் அரசாங்கம் வெளிநாட்டு ஊழியர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும்,தொழிலாளர்களைப் பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்து உணவும் உரிய மருந்துகளும் கொடுத்து கவனித்துக் கொள்வதாகவும்சூரி குறிப்பிட்டுள்ளார்.

    "உங்கள் குடும்பத்தார் எப்படியெல்லாம் உங்களைக் கவனித்துக் கொள்வார்களோ அதேபோன்றுதான் சிங்கப்பூர் அரசாங்கமும் கவனித்துக் கொள்கிறது. உங்களைப் பத்திரமாக உங்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பதாகவும் அந்தஅரசு உறுதி அளித்துள்ளது.

    "உலகின்எந்தமூலையிலும்யாருக்கேனும் உடல்நலம் பாதித்தால் கடைசி நம்பிக்கையாக சிங்கப்பூருக்கு அழைத்துச்சென்றால் காப்பாற்றி விடலாம் என்பார்கள். அப்படிப்பட்ட ஒரு நாட்டில் நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.

    "தமிழகத்தில் உள்ள உங்களது குடும்பத்தார் அனைவருமே உங்களை நினைத்துதான் கவலைப்படுகிறார்கள். எனவே, நீங்கள் அவ்வப்போது குடும்பத்தாரைத் தொடர்பு கொண்டு பேசுங்கள். நீங்கள் தைரியமாக இருந்தால்தான் குடும்பத்தாரும் தைரியமாக இருப்பார்கள்,"என்று நடிகர் சூரி அந்தக் காணொளிப் பதிவில் தெரிவித்துள்ளார்.

    வெளிநாடுகளில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அச்சம் கொள்ளவேண்டாம் என்று தெரிவித்து நடிகர்கள் ரஜினி, கமல்இருவரும்ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

  9. ’பிரான்ஸ் குடிமக்கள் விரைவில் சுற்றுலாவுக்கு செல்லலாம்’ : பிரதமர்

    France

    பட மூலாதாரம், Reuters

    பிரான்ஸ் குடிமக்கள் வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் சுற்றுலாவுக்கு செல்ல முடியும் என அந்நாட்டின் பிரதமர் எட்வர்ட் பிலிப்பி தெரிவித்துள்ளார்.

    அந்நாட்டு சுற்றுலாத்துறைக்கு 18 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான நிவாரண உதவியை அறிவித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    தற்போதைக்கு பிரான்ஸில் உள்ள உணவகங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் மூடப்பட்டுள்ளன. இருந்த போதும் , கடும் கட்டுப்பாடுகளுடன் சில கடற்கரைகள் திறக்கப்பட்டுள்ளன.

    ’’நவீன வரலாற்றில் சுற்றுலாத்துறை சந்தித்துள்ள மிகப்பெரிய சவால் இதுதான். பிரான்ஸ் அரசின் வருவாயில் சுற்றுலாத்துறை முக்கிய பங்கு வகித்து வருகிறது. எனவே அதற்கு எப்போதும் முன்னுரிமை வழங்கப்படும்.’’ என தெரிவித்துள்ளார்.

  10. ஜப்பான் மற்றும் தைவானில் நிலவரம் என்ன?

    Japan

    பட மூலாதாரம், Getty Images

    • புதிய கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறைந்ததை தொடர்ந்து, ஜப்பானில் அமல்படுத்தப்பட்டுருந்த அவசர நிலை தளர்த்தப்பட்டுள்ளது. ஆனால் டோக்யோ, ஒசாகா,ஹோக்கைடோ தீவுகள் ஆகியவற்றில் மட்டும் தொடர்ந்து அவசர நிலை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர நிலை தளர்த்தப்பட்டாலும் மக்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் முகக்கவசம் அணிவது போன்ற கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • தைவானில் கடந்த ஒரு மாதம் முழுவதும் கொரோனா தொற்றின் உள்ளூர் பரவல் ஏதும் கண்டறியப்படவில்லை. இந்த காலகட்டத்தில் அந்த நாட்டில் உறுதி செய்யப்பட்ட கொரோனா தொற்றுகள் அனைத்தும் வெளிநாடுகளிலிருந்து தைவான் வந்தவர்கள் ஆவர். இதுவரை அந்த நாட்டில் 440 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 7 பேர் அந்த வைரஸுக்கு பலியாகியுள்ளனர்.
  11. தமிழ்நாட்டில் 447 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

    தமிழ்நாடு

    பட மூலாதாரம், Getty Images

    தமிழ்நாட்டில் இன்று புதிதாக 447 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 363 பேருக்கு அத்தொற்று ஏற்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 11965 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.இதுவரை ஒட்டுமொத்தமாக 2,91,492 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. சோதனை செய்யும் லேப்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. இதில் 38 லேப்கள் அரசு மருத்துவமனைகளில்இயங்கிவருகின்றன.

    கடந்த 24 மணி நேரத்தில் 64 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 2240 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

    சென்னையில் 2 பேர் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிர் இழந்துள்ளனர். இவர்கள் இருவருக்குமே கடுமையான உடல் நல பாதிப்புகள் இருந்துள்ளன. ஒருவருக்கு 43 வயது. மற்றொருவருக்கு 45 வயது. இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை66ஆக உயர்ந்துள்ளது.

    தற்போது 7365 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

    சென்னையில் இன்று மட்டும் 363 பேருக்கு புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், தலைநகரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5637ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டில் 9 பேருக்கும் திருவள்ளூரில் 15 பேருக்கும் காஞ்சிபுரம், திருவண்ணாமலைமாவட்டங்களில் தலா 8 பேருக்கும் இந்நோயத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்ட்ராவிலிருந்து தமிழகம் வந்த 22 பேருக்கும் கத்தாரிலிருந்து வந்த 2 பேருக்கும் இந்நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து தமிழகம் திரும்பியவர்களிடம் கடந்த 9ஆம் தேதி முதல்15ஆம் தேதிவரை நடத்தப்பட்ட சோதனைகளில்பத்தாம் தேதி குவைத்திலிருந்து வந்த 4 பேருக்கும் 12ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து வந்தவர்களில் ஐந்து பேருக்கும் நோய்த் தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

    தற்போதைய சூழலில் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தற்போது ஒரு கொரோனா நோயாளிகூட இல்லை என சுகாதாரத் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 11 நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில் ஒரு நோயாளிகூட இல்லாமல் இருந்தநிலையில், இன்று ஒருவருக்கு நோய்த் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

  12. வந்துகொண்டிருக்கும் செய்தி,

    தமிழ்நாட்டில் இன்று புதிதாக 447 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 363 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மாநிலத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 9674ஆக அதிகரித்துள்ளது.

  13. கொரோனா மரணங்களை குறைத்துக் காட்டும் ரஷ்யா

    ரஷ்யாவில் சுமார் 2 லட்சத்து 52 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு 2305 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    இந்த புள்ளிவிவரங்கள், அங்கு எப்படி இறப்பு விகிதம் இவ்வளவு குறைவாக உள்ளது என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

    கோவிட்-19 தோற்றால் இறந்தவர்களுக்கு ஏற்கனவே மிகவும் மோசமான வேறு உடல்நல பாதிப்புகள் இருந்திருக்க வாய்ப்புண்டு என்ற காரணத்தினால் பெரும்பாலான உயிரிழப்புகளை கொரோனா வைரஸ் மரணங்கள் பட்டியலில் சேர்க்கவில்லை என்று ரஷ்ய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    ரஷ்ய அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் நம்பும்படியாக இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    coronavirus mortality low in russia

    பட மூலாதாரம், Getty Images

  14. தமிழ்நாட்டில் புதிய பயண விதிமுறைகள் என்ன?

    தமிழகத்திற்குள் பயணம் செய்பவர்கள், தமிழ்நாட்டிற்கு வெளியில் இருந்து உள்ளே வருவோர் உள்ளிட்டவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்த அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

  15. 'கமல் படத்துக்கே முதல் அனுமதி' - தமிழக அமைச்சர்

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, "கமல்ஹாசன் தமிழகத்தில் எந்த துறையை ஆய்வு செய்தார். கொரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக அவர் நடித்த இந்தியன்-2 திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெறாமல் இருந்தன. இதே போல், படப்பிடிப்பு முடிந்த பின்னர் நடைபெறும் பணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என திரைப்பட தயாரிப்பு குழுவினர் என்னை வந்து சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். அதனை நான் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். திரைப்படத்துறை தொழிலாளர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதால், அவர்கள் மனு வழங்கிய மறுநாளே போஸ்ட் புரெடக்ஷன் பணிகளுக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது."

    "ஒரே நாளில் திரைப்படத்துறையினரின் கோரிக்கையை நிறைவேற்றியது முன்னேற்றமா, அல்லது பின்னேற்றமா என்பதை கமல்ஹாசன் தான் கூற வேண்டும். அதிலும், முதல் படமாக அவர் நடித்த இந்தியன் 2 திரைப்படத்துக்குத்தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதே போல் தான் அனைத்துறைகளும். மக்கள் அவரை எடைபோடுவதற்கு பொத்தாம் பொதுவாக அவர் கூறும் கருத்துகளே போதும்," என்றார்.

    Indian 2 Kamal hassan movie

    பட மூலாதாரம், LYCA

  16. உலகெங்கும் கோவிட்-19 பாதிப்பு எவ்வளவு?

    உலக சுகாதார நிறுவனத்தால் 'பெருந்தொற்று' என்று அறிவிக்கப்பட்டுள்ள கோவிட்-19 தொற்றால் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பாதிப்பு என்பதை நீங்கள் இங்கே அறிந்து கொள்ளலாம்.

    coronavirus worldwide data
  17. ஹாங்காங் விமான நிலையத்திலேயே பரிசோதனை

    விமானம் மூலம் ஹாங்காங் வந்தடையும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    பரிசோதனை முடிவுகளுக்காக விமான நிலையத்திலேயே பல மணி நேரம் காக்க வைக்கப்படுவதாகவும் விமானம் மூலம் ஹாங்காங் வந்து இறங்கும் பயணிகள் செல்பேசியில் அவர்களைக் கண்காணிப்பதற்கான செயலி நிறுவப்படுவதாகவும் அப்பயணிகள் தெரிவிக்கின்றனர்.

    கண்காணிப்பு பிரேஸ்லெட் ஒன்றை அவர்கள் தொடர்ந்து அணிவதும் கட்டாயம்.

    இதுவரை சுமார் 1000 பேர் ஹாங்காங்கில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  18. கொரோனா தொற்றுக்கு மருந்து தயாரிக்கும் இந்தியா, பாகிஸ்தான்

    இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் கோவிட்-19 சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டிசீவர் மருந்தை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த கைலீட் எனும் மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்று கையெழுத்திட்டுள்ளது.

    அமெரிக்காவின் கைலீட் மற்றும் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள காப்புரிமை பெறப்படாத மருந்துகளைத் தயாரிக்கும் ஐந்து நிறுவனங்களிடையே கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தம் 127 நாடுகளுக்கான வைரஸ் மருந்தை தயாரிப்பதற்கு உதவும்.

    ரெம்டிசீவர் இபோலா நோய்த் தொற்று சிகிச்சைக்காக முதல் முதலில் உருவாக்கப்பட்டது.

    coronavirus medicine coronavirus treatment india pakistan

    பட மூலாதாரம், AFP

  19. வந்துகொண்டிருக்கும் செய்தி,

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். இன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், சிறு தொழிலாளர்கள், மற்றும் விவசாயிகளுக்கான திட்டங்களை அறிவிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

  20. ஆய்வகத்தில் தோன்றியதா கொரோனா வைரஸ்?, உண்மை பரிசோதிக்கும் குழு

    நிதின் கட்கரி

    பட மூலாதாரம், Getty Images

    கொரோனா வைரஸ் ஆய்வகம் ஒன்றில்தான் உருவானது என்னும் கருத்தை ஆமோதிப்பது போல பேசியுள்ளார் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி.

    கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவானது என்பதற்கு எந்த ஒரு அறிவியல்பூர்வ ஆதாரமும் இல்லாத நிலையில், ஏற்கனவே அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோ கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் மாகாணத்தில் உள்ள ஆய்வகம் ஒன்றில்தான் தோன்றியது என்று கூறியிருந்தார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே சீனா, கொரோனா வைரஸ் பரவலை கையாண்ட விதம் குறித்து விமர்சித்து வருகிறார்.

    இந்த கூற்றுகளை சீனாவும் நிராகரித்துவிட்டது.

    இந்நிலையில்தான் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில், “இது இயற்கையாக உருவான வைரஸ் அல்ல. இது செயற்கையாக தோன்றியது. இது ஆய்வகத்திலிருந்து தோன்றிய வைரஸ்,” என்று தெரிவித்துள்ளார்.

    இந்த கொரோனா வைரஸ் விலங்குகளிமிருந்து உருவானதாகதான் அறிவியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

    பிபிசியின் அறிவியல் பிரிவு ஆசிரியர், பால் ரின்கன், கோவிட் 19க்கு காரணமான Sars-CoV-2 வுஹானில் உள்ள எந்த ஒரு ஆய்வகத்திலும் தோன்றியதாக எந்த ஒரு செய்தியும் இல்லை என்கிறார்.