கொரோனா வைரஸ்: "2009-ஐ விட உலக பொருளாதாரம் மோசமடையும்"

உலகம் முழுவதும் 6,02,262 பேருக்கு கோவிட்-19 தொற்றுக்கு உள்ளானது உறுதியாகியுள்ளது. அவர்களில் 27,889 பேர் உயிரிழந்துள்ளனர்; 1,32,688 பேர் குணமடைந்துள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. எந்தெந்த நாடு என்னென்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது?

    கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலகில் உள்ள பல்வேறு நாடுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

    அயர்லாந்தில் இரண்டு வாரத்திற்கு மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் மருந்து பொருட்கள் வாங்க மட்டுமே மக்கள் வீட்டில் இருந்து வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள்.

    ரஷ்யாவில் ஊதியத்துடன் சேர்த்து ஒரு வாரத்திற்கு விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பார், உணவு விடுதிகள் மற்றும் அத்தியாவசிய தேவைகள் விற்பனை செய்யப்படாத கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் உண்மையில் மக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதா என்ற குழப்பம் அங்கு நிலவுகிறது.

    ஐரோப்பாவின் மால்ட்டா நாட்டில் 65 வயதை கடந்த முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், தீவிரமான உடல்நல பிரச்சனைகள் உள்ள நபர்கள் வீட்டை விட்டு வெளியேவர கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ஹங்கேரியில் பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய விதிகளின்படி மக்கள் தங்கள் அலுவலகப் பணிக்கு செல்ல வீட்டை விட்டு வெளியே வரலாம்.

    ஆனால் மக்கள் பெரிய குழுக்களாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மிகவும் பரபரப்பாக இயங்கும் ஐரோப்பாவின் ஃபின்லாந்தில் உள்ள உசிமா மாகாணத்தில் மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா வைரசால் உசிமா மாகாணம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விதிகளை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க ராணுவத்தினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து செயல்படுகின்றனர்.

    coronavirus

    பட மூலாதாரம், Getty Images

  2. “உலக பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்திக்கும்”

    கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலால், நடப்பு நிதியாண்டில் உலக பொருளாதாரம் 2009ஆம் ஆண்டு அடைந்த வீழ்ச்சியை விட மோசமாக வீழ்ச்சி அடையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறியுள்ளார்.

    “கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக உலகம் தற்போது எதிர்பாராத தடையை சந்தித்து வருகிறது. இதனால் 2020-21ஆம் நிதி ஆண்டில் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும். ஆனால், அது 2021இல் மீண்டும் சரியாக வாய்ப்புள்ளது; அது மிகப் பெரிய எழுச்சியாகவும் இருக்கும். பணப்புழக்க பிரச்சனைகள் கடன் பிரச்சனைகளாக மாறாமல் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்” என்று நேற்று நடந்த சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர்கள் குழு கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்தார்.

    கிறிஸ்டலினா ஜார்ஜீவா

    பட மூலாதாரம், Getty Images

  3. 585 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியத்தை பயன்படுத்த கோரிக்கை

    21 நாட்கள் இந்தியா முழுவதும் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளதால் உள்நாட்டிலேயே குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பலர் வேலை இழந்துள்ளனர்.

    அவர்கள் தாங்கள் இருக்கும் நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கும் திரும்ப முடியாமல், வேலை செய்யும் ஊர்களிலும் தங்க முடியாமல் உள்ளனர்.

    இவர்களில் கணிசமானோர் வீடற்றவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் முறையான ஆவணங்கள் இல்லாதவர்கள் என்பதால் அரசின் உதவிகளை பெறுவதிலும் சிக்கல் உள்ளது.

    அங்கன்வாடிகள், அரசு கல்லூரிகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், சமுதாயக் கூடங்கள் ஆகியவற்றில் அவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று இந்தியா முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், பொருளாதார வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் அரசுக்கு கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்திய உணவுக் கழகம் மற்றும் மத்திய அரசின் கிடங்குகளில் இருக்கும் 585 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியத்தை இவர்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  4. 6,02,262 பேருக்கு கோவிட்-19 தொற்று

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உண்டாகும் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை ஆறு லட்சத்தை கடந்துள்ளது.

    அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தகவல் மையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்திய நேரப்படி சனிக்கிழமை 03.00 மணி வரை உலகம் முழுவதும் 6,02,262 பேருக்கு கோவிட்-19 தொற்றுக்கு உள்ளானது உறுதியாகியுள்ளது.

    அவர்களில் 27,889 பேர் உயிரிழந்துள்ளனர்; 1,32,688 பேர் குணமடைந்துள்ளனர்.

  5. ஸ்பெயினில் ஒரே இரவில் 832 பேர் மரணம்

    ஸ்பெயினில் கொரோனா வைரஸால் ஒரே இரவில் 832 பேர் இறந்துள்ளனர்.

    தற்போது அந்த நாடு முழுவதும் இறந்தவர்கள் எண்ணிக்கை 5,690. இத்தாலிக்கு அடுத்தபடியாக கொரோனா தொற்றால் இறந்தவர்கள் அதிகம் உள்ள நாடு ஸ்பெயின்.

    84,498 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்ட இத்தாலியில் 9,134 பேர் இறந்துள்ளனர் என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழத்தில் தரவுகள் தெரிவிக்கின்றன.

  6. வுஹான் நகரில் மீண்டும் துளிர்விடும் இயல்பு வாழ்க்கை

    தற்போது உலகியே அச்சுறுத்திவரும் கோவிட்-19 தொற்றுக்கு காரணமான கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்திவரும் சூழலில், கொரோனா பரவல் தொடங்கிய நகரில் மீண்டும் இயல்பு வாழ்க்கை ஓரளவு ஆரம்பமாகியுள்ளது.

    சென்ற டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது.

    இரண்டு மாத காலத்துக்கும் மேலாக வெளியுலகத்துடன் எந்தவிதமான போக்குவரத்துத் தொடர்பும் இல்லாமல் இருந்த நிலையில் அங்கு இன்று, சனிக்கிழமை, நள்ளிரவு ஒரு ரயில் வந்தடைந்ததாக சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

    அந்த நகரில் உள்ளூர் போக்குவரத்து, வர்த்தக நிறுவனங்கள் செயல்பாடு ஆகியவை மீண்டும் சிறிய அளவில் இயங்கத் தொடங்கியுள்ளன.

    ஹூபே மாகாணத்தில் மட்டும் கொரோனவால் இதுவரை 3300 பேர் இறந்துள்ளனர்.

    Chinese city at centre of outbreak eases restrictions

    பட மூலாதாரம், AFP

  7. உடடினயாக வென்டிலேட்டர் கருவிகளே தேவை - தனியார் நிறுவனத்திற்கு உத்தரவிட்ட டிரம்ப்

    டிரம்ப்

    பட மூலாதாரம், Getty Images

    அமெரிக்காவின் மோட்டார் வாகனம் தயாரிக்கும் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், வெண்டிலேட்டர் கருவிகளைதயாரிக்கும்படி அமெரிக்கஅதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, வென்டிலேட்டர்களின் தட்டுப்பாடு நிலவுவதால், டிரம்ப் இந்த முடிவை அறிவுறுத்தியுள்ளார்.

    அமெரிக்காவில் இதுவரை 104,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.சுமார் 1,700 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் அமெரிக்க நிறுவனங்கள் பல தாங்களாகவே முன்வந்து கொரோனா வைரசுடன் போராட துவங்கியுள்ளதால், அமெரிக்காவில் ராணுவ கட்டுப்பாடு விதிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்று முன்னதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 40,000 வென்டிலேட்டர் கருவிகளை தயாரித்து கொடுப்பதாக உத்தரவாதம் அளித்ததாகவும் அதனை கடைபிடிக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார் டிரம்ப்

  8. முகக்கவசம் தயாரிக்க தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்ட பெண்கள்

    முகக்கவசம் தயாரிக்க தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்ட பெண்கள்

    பட மூலாதாரம், CONSOMED/AFP

    ஆப்பிரிக்காவின் துனிசியாவில் தொழிற்சாலை ஊழியர்கள் 150 பேர், தொழிற்சாலையின் உள்ளே சென்று தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு முகக்கவசம் தயாரிப்பதற்கான பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

    இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள். முகக்கவசம் தயாரிப்பதற்காக தொழிற்சாலைக்குலேயே தங்களை ஒரு மாதத்திற்கு தனிமைப்படுத்திக் கொள்வதாக அவர்கள் கூறியுள்ளனர்.

    வட ஆப்பிரிக்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து மக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு இதுவரை 227 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு முகக்கவசம் செய்வதில் ஈடுபட்டுள்ள பெரும்பாலனவர்கள் கிராமபுரத்தை சேர்ந்தவர்கள்.

    குறிப்பிடப்பட்டுள்ள தொழிற்சாலையில் 110 பெண்கள் தங்குவதற்கான படுக்கை வசதியும் 40 ஆண்கள் தங்குவதற்கான படுக்கை வசதியும் செய்யப்பட்டுஉள்ளது.

  9. கொரோனா வைரஸ்: கேரளாவில் முதல் மரணம் பதிவானது

    இந்தியாவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று கேரளா.

    அங்கு 60க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் மரணம் பதிவாகி இருக்கிறது.

    கொச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 64 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்ததாக எர்ணாகுளம் மாவட்ட மருத்துவ அதிகாரி குட்டப்பன் தெரிவித்தார்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  10. தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா

    தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா

    பட மூலாதாரம், Getty Images

    தமிழகத்தில் சனிக்கிழமை (மார்ச்28) வெளிநாட்டிலிருந்து தமிழகம் திரும்பிய இரண்டு நபர்களுக்குகொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தற்போதுகொரோனாவால்பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 40ஆக உயர்ந்துள்ளது.

    பாதிக்கப்பட்ட 35 இரண்டு நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் ஒரு நபர் காலமாகிவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சனிக்கிழமை அன்றுநோய்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட இரண்டு நபர்களில் ஒருவர் மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து திரும்பியவர் என்றும் 42 வயதான அவர்கும்பகோணத்தைசேர்ந்தவர் என்பதால், தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இரண்டாவது நபர் வேலூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 49 வயதான இவர் காட்பாடியைச் சேர்ந்தவர் என்றும் ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து திரும்பியவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  11. கொரோனா வைரஸ் - எந்த விலங்கிடமிருந்து பரவியது?

    கொரோனா வைரஸ் - எந்த விலங்கிடமிருந்து பரவியது?

    பட மூலாதாரம், Getty Images

    உலகை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் எப்படி விலங்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியது என்பதைத் தெரிந்து கொள்ள ஹெலன் பிரிக்ஸ் விஞ்ஞானிகளிடம் சென்றார்.

    சீனாவில் ஓர் இடத்தில், வானில் பறந்து கொண்டிருந்த நோய் தொற்று கொண்டிருந்த வௌவால் மேலிருந்து கீழே மலத்தைக் கழித்தது. அது ஒரு காட்டில் விழுந்தது. அங்கேயே இருக்கும் ஒரு விலங்கு, (ஒரு எறும்புத்தின்னி) இரையைத் தேடும்போது அந்த மலத்திலிருந்த வைரஸ் தொற்று அதற்குப் பரவியது. அது காட்டிலிருக்கும் பிற விலங்குகளுக்கும் பரவியது . அந்த விலங்கு ஒரு மனிதரிடம் சிக்கியது எனவே அந்த விலங்கின் மூலம் அந்த மனிதருக்கும் வந்திருக்கலாம்.

    பிறகு அவரிடமிருந்து அவரின் வேலையாட்கள் என இப்படி உலகம் முழுவதும் பரவுவது தொடங்கியிருக்கலாம்.

    விரிவாகப் படிக்க:

  12. கொரோனா வைரஸ் தாக்கம்: சர்வதேச அளவில் ஆணுறைகள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

    கொரோனா வைரஸ் தாக்கம்: சர்வதேச அளவில் ஆணுறைகள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

    பட மூலாதாரம், Getty Images

    கொரோனா வைரஸால் சமுக முடக்கம் செய்யப்பட்டதை அடுத்து ஆணுறைகள் நுகர்வு ஒருபக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இன்னொருபக்கம் சர்வதேச அளவில் ஆணுறை தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது,

    சர்வதேச அளவில் அதிகளவில் ஆணுறை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்தியதை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

    இது நீண்டகாலத்திற்கு சமூகத்தில் தாக்கம் செலுத்தும்.

    காரெக்ஸ் பெர்ஹாடின் மூன்று மலேசிய ஆணுறை உற்பத்தி தொழிற்சாலைகள் கடந்த 10 நாட்களாக உற்பத்தியை நிறுத்தி உள்ளது. இதன் காரணமாக ஏறத்தாழ 10 கோடி ஆணுறைகள் உற்பத்தி குறைந்துள்ளது என்கிறது ராய்ட்டர்ஸ் செய்தி முகமை.

    உலகின் ஐந்து ஆணுறைகளில் ஒன்று இந்த நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுகிறது.

    சமூக முடக்கத்தில் பகுதி அளவாவது தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென இப்போது இந்த நிறுவனம் மலேசிய அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.

    தென்கிழக்கு ஆசியாவில் மலேசியாதான் கொரோனா தொற்றால் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரத்தின்படி மலேசியாவில் 26 பேர் பலியாகி உள்ளனர். 2,161 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கோ, "இந்த நிறுவனம் திறக்கப்படவில்லை என்றால், சர்வதேச அளவில் ஆணுறை தட்டுப்பாடு ஏற்படும். இதௌ பல்வேறு விதங்களில் பல மாதங்களுக்கு சமூகத்தில் தாக்கம் செலுத்தும்," என்றார்.

    மேலும் அவர், "சர்வதேச அளவில் சூழல் இப்படியானதாக இருக்கும் போது பல தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை. இதன் காரணமாக ஆணுறைகளின் தேவையும் அதிகம் இருக்கிறது," என்று தெரிவிக்கிறார்.

    டுயுரெக்ஸ் (Durex), பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை மற்றும் ஐ.நா மக்கள் தொகை நிறுவனம் ஆகியவற்றுக்கு காரெக்ஸ்தான் ஆணுறை விநியோகம் செய்கிறது.

  13. கொரோனா வைரஸுக்கு மத்தியில் பரவிய போலி செய்தி

    கொரோனா வைரஸுக்கு மத்தியில் பரவிய போலி செய்தி

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, சித்தரிப்புக்காக

    இலங்கையிலுள்ள பிரபல சிவன் ஆலயமொன்றின் கோபுரம் உடைந்து வீழ்ந்துள்ளதாக வெளியான போலி செய்தி (வதந்தி) காரணமாக, நாட்டிலுள்ள இந்து மக்கள் மத்தியில் மிகுந்த குழப்பகர நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

    சிவன் ஆலயமொன்றின் கோபுரம் உடைந்து வீழ்ந்துள்ளதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசியூடாக அதிகாலை 3 மணி முதல் தகவலொன்று பரவ ஆரம்பித்திருந்தது.

    நாட்டிலுள்ள சிவன் ஆலயமொன்று உடைந்து வீழ்ந்தால் ஆண்களுக்கு சரியில்லை எனவும், அதற்கு

  14. “ஒரு லட்சம் பேர் பாதிப்பு, 2 டிரில்லியன் நிதி”

    கொரொனா வைரஸ் தொற்றால் அமெரிக்கா கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 2 டிரில்லியன் டாலர்கள் மதிப்பிலான நிவாரணத் தொகைக்கு கையெழுத்திட்டார் அந்நாட்டு அதிபர் டொனாலட் டிரம்ப்.

    அமெரிக்க வரலாற்றிலேயே கையெழுத்தான மிகப் பெரிய நிவாரண நிதி இதுதான்.

    ஜனநாயக கட்சியினரும், குடியரசுக் கட்சியினரும், தங்கள் வேறுபாடுகளைக் களைந்து ஒன்றாக இருந்து இதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்காக அதிபர் டிரம்ப் இரு கட்சியினருக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார்.

    Trump

    பட மூலாதாரம், Getty Images