உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் சீனா கூறும் எண்ணிக்கை குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளார்.
"சீனாவில் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை என்னவென்று உங்களுக்கு தெரியாது," என்று அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த, இதுவரை 21 அமெரிக்க மாகாணங்கள் மக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளன.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவின்படி, கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனா (81,828), இந்த தொற்றால் பேரழிவை சந்தித்து வரும் இத்தாலி (80,589) உள்ளிட்ட நாடுகளை விஞ்சிய அமெரிக்காவில் இதுவரை 85,991 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எனினும், உயிரிழப்புகளை பொறுத்தவரை, அமெரிக்காவைவிட (1296) இத்தாலி (8,215), ஸ்பெயின் (4,365) மற்றும் சீனாவில் (3,296) ஆகியவை அதிக இழப்புகளை சந்தித்துள்ளன.