திருப்பூர் பின்னலாடை தொழில் வட மாநில தொழிலாளர்கள் இல்லாவிட்டால் ஸ்தம்பிக்குமா? கள நிலவரம்

காணொளிக் குறிப்பு, வட மாநிலத் தொழிலாளர்கள் இல்லாமல் திருப்பூர் பின்னலாடைத் தொழில் நடக்காதா? நிலவரம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

திருப்பூர் மாநகரில் வட மாநில தொழிலாளர்களும் தமிழ்நாட்டு தொழிலாளர்களும் மோதிக் கொண்டது போன்ற வீடியோ ஒன்று கடந்த ஜனவரி 26ஆம் தேதி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியிருந்தது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இதற்கு எதிர்வினையாற்றி இருந்தனர்.

ஆனால் இந்தச் சம்பவம், வீடியோ வெளியாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு நிகழ்ந்தது. ஜனவரி 14ஆம் தேதி திருப்பூர் மாநகர் வேலம்பாளையம் திலகர் நகர் பகுதியில் உள்ள ரியா பேஷன்ஸ் என்கிற நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு தான் இந்த சண்டைக்குக் காரணம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து திருப்பூரில் சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க திருப்பூர் மாநகர காவல்துறை இரு தனிப்படைகளை அமைத்துள்ளது. மேலும் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களுடன் இந்த வீடியோக்களை பகிர்ந்தவர்கள் யார் என சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கடந்த ஜனவரி 30 ஆம் தேதி இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரஜத்குமார், பரேஷ்ராம் என்கிற இருவரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் சிலரையும் தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

திருப்பூரில் நிகழ்ந்த சம்பவம் தமிழ்நாட்டில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக பல்வேறு விவாதங்களைத் தூண்டியுள்ளன.

இந்த நிலையில் திருப்பூரில் தற்போது எத்தகைய சூழல் நிலவுகிறது என்பதை அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.

திருப்பூரில் தற்போது எத்தகைய சூழல் நிலவுகிறது என்பதை அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.

மோதல் சமபவம் நடைபெற்ற திலகர் நகர் பகுதியில் ரியா பேஷன்ஸ் நிறுவனத்தின் முன்பும் மோதல் நடைபெற்றதாக வீடியோவில் பதிவாகியிருந்த வீதியிலும் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

ரியா பேஷன்ஸ் நிறுவனத்தில் வழக்கம் போல பணிகள் நடைபெற்று வந்தன. மோதல் சம்பவம் தொடங்கிய இடமாகக் கருதப்படும் தேநீர் கடை தற்போது மூடப்பட்டுள்ளது.

ரியா பேஷன்ஸ் நிறுவனத்தினரை தொடர்பு கொள்ள முயன்றபோது தொடர்பு கொள்ள முடியவில்லை.

"இந்தப் பகுதியில் இதற்கு முன்பாக இத்தகைய சம்பவம் நிகழவில்லை. இங்கு அத்தகைய பதற்றமான சூழலுல் இருக்கவில்லை. கடந்த மாதம் நடைபெற்ற சம்பவம் ஒரு தனிப்பட்ட தகராறு. அதன் பின்னர் வேறு எந்த பிரச்னைகளும் இங்கு எழவில்லை" என அங்கு பணியிலிருந்த காவல் துறை அதிகாரிகள் நம்மிடம் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டிற்கு வேலைக்காக வரும் பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகம் வரும் மாவட்டங்களில் திருப்பூர் முதன்மையாக உள்ளது. ஜவுளி நிறுவனங்கள் தான் இங்கு பிரதானம் என்றாலும் கட்டுமானம், தூய்மைப் பணி என்று பல வேலைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் 3 லட்சம் வட மாநில தொழிலாளர்கள் இருக்கலாம் என ஜவுளி நிறுவனத்தினரும் 2 லட்சம் வட மாநில தொழிலாளர்கள் இருக்கலாம் என தொழிற்சங்கத்தினரும் தெரிவிக்கின்றனர். ஆனால் இது தொடர்பாக எவ்வித துல்லிய தரவுகளும் கிடையாது.

தமிழ்நாட்டு தொழிலாளர்களைவிட, வட மாநில தொழிலாளர்கள் குறைவான சம்பளத்திற்கு வேலை செய்வதால் தான் அவர்கள் அதிக அளவில் வேலைக்கு இருப்பதாக கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் இதில் முற்றிலும் உண்மை இல்லை என்ற வாதங்களும் வைக்கப்படுகின்றன.

இந்தக் காணொளியின் எழுத்து வடிவ செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

தயாரிப்பு: மோகன்

காணொளி, படத்தொகுப்பு: மதன்

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்