கொடைக்கானல் - பழனி கேபிள் கார் யோசனை: சூழலியலுக்கு ஆபத்து - எச்சரிக்கும் நிபுணர்கள்

    • எழுதியவர், பிரசன்னா வெங்கடேஷ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

"ஒரு சில ஆண்டுகளில் கேபிள் கார்கள் யானையின் தலைக்கு மேலே செல்லும். இனி யானைகளின் தலையின் மீது நேரடியாகவே குப்பைகளைக் கொட்டலாம். இன்னும் இந்த யானைகள் எத்தனை துயரங்களைச் சகித்துக் கொள்ள வேண்டும்" என்று உத்தேச பழனி-கொடைக்கானல் கேபிள் கார் யோசனை குறித்து சூழலியல் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமான கொடைக்கானல் மற்றும் அறுபடை வீடுகளில் மூன்றாவதான பழனி மலை ஆகியவற்றுக்கு இடையே கேபிள் கார் சேவை தொடங்குவது சாத்தியமா என்று ஆராய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோடை காலத்தில் தமிழ்நாடு மட்டுமல்லாது வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து கொடைக்கானலுக்கு லட்சக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். இதேபோல் ஆண்டு முழுவதும் பழனி மலைக்கும் லட்சக்கணக்கில் ஆன்மிகப் பயணிகள் வந்து செல்கிறார்கள்.

எனவே, பழனி மலைக்கும் கொடைக்கானல் மலையின் மேற்குப் பகுதிக்கும் இடையே சுமார் 12 கி.மீ. தூரத்துக்கு கேபிள் அமைப்பது குறித்து இந்திய அரசு யோசிக்கிறது. இதையடுத்து, இந்தத் திட்டம் சாத்தியமா என்பது குறித்து ஆராய தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அனுமதி அளித்துள்ளது தேசிய நெடுஞ்சாலைகள் லாஜிஸ்டிக்ஸ் மேலாண்மை லிமிடெட். இது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் செயல்படும் ஒரு நிறுவனம் ஆகும்.

நாடு முழுவதும் 12 இடங்களில் கேபிள் கார் திட்டங்கள்

நாடெங்கும் 12 இடங்களில் கேபிள் கார் திட்டங்களைத் தொடங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கேபிள் கார் சேவைகள் தொடங்குவது சாத்தியமா என்ற ஆராய்ச்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த 12 உத்தேச கேபிள் கார் பாதைகளில், உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடால், தமிழ்நாட்டின் கொடைக்கானல் - பழனி ஆகிய இடங்களில் உத்தேசிக்கப்பட்டிருக்கும் பாதைகள்தான் மிக நீளமானவை.

ஆஸ்திரேலிய பொறியியல் குழுவினர் ஆய்வு

தமிழ்நாட்டில் பரிந்துரைக்கப்பட்ட பழநி - கொடைக்கானல் கேபிள் கார்த் திட்டத்தின் உத்தேசப் பாதையில், கொடைக்கானல் வில்பட்டி, புலியூர், குறிஞ்சி ஆண்டவர் கோவில் உள்ளிட்ட இடங்களை ஆஸ்திரேலியாவை சேர்ந்த பொறியியல் வல்லுநர்கள் ஆய்வு செய்தனர். இந்த வல்லுநர் குழுவுடன் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையின் உயர் அதிகாரிகளும் இருந்தனர்.

கேபிள் கார் அமைப்புக்கு சூழலியல் ஆர்வலர்கள் எதிர்ப்பு

ஆனால் இந்த கேபிள் கார் அமைப்பை உருவாக்க சூழலியல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

"இந்த கேபிள் கார் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அது யானையின் தலைக்கு மேலே செல்லும். இனி யானைகளின் தலையில் நேரடியாகவே குப்பைகளைக் கொட்டலாம். இன்னும் இந்த யானைகள் எத்தனை துயரங்களை சகித்துக் கொள்ள வேண்டும்?" என்று சூழலியல் கட்டுரையாளர் பா.சதீஸ் முத்து கோபால் கேள்வி எழுப்புகிறார்.

இதுகுறித்து இவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, "கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளால் ஒட்டு மொத்த மலைத் தொடரும் குப்பைமேடாகி வருகிறது. பல்வேறு அணில் இனங்கள் வாழும் இந்த மலைத் தொடரில் தான் அவற்றின் வாழிடம் தொலைந்து கொண்டிருக்கிறது. குதிரையாறு பகுதியில் காணப்பட்ட நீர் நாய்கள் இப்போது இல்லை.

ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான கால கட்டத்தில் இங்கு காட்டுத்தீ விபத்துகளுக்கும் குறைவில்லை. மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே வாழும் சோலைமந்திகள் பழனி மலைத் தொடரில் முற்றிலும் அழிந்துவிட்டன. தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடு சொற்ப எண்ணிக்கையிலேயே உள்ளது. இருவாச்சி பறவைகளையும் பார்க்க முடிவதில்லை. அந்நிய மரங்களின் அதிக வளர்ச்சியால் சோலைக் காடுகளும் புல்வெளிகளும் சிதைக்கப்பட்டுள்ளன."

இந்த நிலையில், "பழனி மலையில் இருந்து சுமார் 2,000 மீட்டர் உயரத்திற்குச் செல்லும் இந்த கேபிள் கார்களை அமைக்க பல இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். இதனால் மீதமிருக்கும் காடுகளும் அழிவுக்கு உள்ளாகவே வாய்ப்புகள் அதிகம்," என்கிறார் பா. சதீஸ் முத்து கோபால்.

யானைகள் சகித்துக் கொள்ள வேண்டும்!

"பழனி மலைத் தொடர் தமிழ்நாட்டில் உள்ள யானை வழித்தடங்களில் மிகவும் முக்கியமானது. கொடைக்கானல் செல்லும் ஆம்னி பேருந்துகளின் ஒலிப்பான்களால் காடே அதிரும். தற்போதைய இந்த சூழலில் ஒரு குறுகிய காட்டுக்குள்தான் இந்த பேருயிர்கள் தங்கள் எல்லைகளைச் சுருக்கிக் கொண்டு வாழ வேண்டும். எல்லாவற்றையும் இந்த யானைகள் சகித்துக் கொள்ள வேண்டும்.

இது மாதிரியான கேபிள் கார்கள் மற்ற நாடுகளில் செயல்படுத்தப்படுவதும் உண்மைதான். அங்கே நிலை வேறு. அந்த சூழல் வேறு. அங்கே மக்களின் மன நிலையும் வேறு. இங்கே அப்படியில்லை. தற்போது யானைகளா, கேபிள் காரா எது முக்கியம் என்பதை அனைவரும் யோசிக்க வேண்டும்," என்றார் அவர்.

'வியாபார நோக்கத்திற்காக அமையும் திட்டம்'

கேபிள் கார் சேவையை அமைக்க அவர்கள் முடிவு செய்தால் எதிர்காலத்தில் அது முற்றிலும் தனியார் வசம்தான் ஒப்படைக்கப்படக்கூடும். எனவே யாரோ ஒருவர் சம்பாதிப்பதற்கு பசுமையான காடுகளை ஏன் அழிக்க வேண்டும் என்று பறவையியலாளர் ரவீந்திரன் நடராஜன் பிபிசி தமிழிடம் கேட்டார்.

"ஏற்கெனவே கொடைக்கானலுக்கு சாலை மார்க்கமாக ஐந்து வழிகள் உண்டு. இதற்கிடையில் புதிதாக கேபிள் கார் சேவை முற்றிலும் வியாபார நோக்கிலேயே உருவாக்கப்படுகிறது. இதனால் காட்டின் ஒரு பகுதி அழிந்து, காட்டுயிர்கள் பாதிக்கப்படும் என்பது குறித்து யாரும் கவலைப்படவில்லை.

கேபிள் கார் கட்டுமான பணியின்போது அதன் உயரத்திற்கு தகுந்தாற்போல் காட்டில் இருக்கக்கூடிய மரங்கள் சுமார் 12 கிலோமீட்டர் நீளத்திற்கு, 15 முதல் 30 மீட்டர் அகலத்திற்கு வெட்டப்படும். இதனால் யானைகள், சிறுத்தைகள், மான்கள் போன்ற காட்டுயிர்கள் இந்த இடைப்பட்ட பகுதியைக் கடந்து செல்வதற்கு வாய்ப்புகள் இல்லாத நிலை இனி ஏற்படும்," என்கிறார் ரவீந்திரன் நடராஜன்.

மேலும், "பழனி மலைத்தொடரில் தான் காட்டுயிர்களின் வழித்தடங்கள் அதிகம் உள்ளன. இதனால் ஏற்படும் பாதிப்பை இனி ஒருபோதும் சரி செய்ய முடியாது என்பதை அனைவரும் உணர வேண்டும். கேபிள் கார் சேவை தொடங்கப்படுவதால் தற்போது உள்ள சாலைகளில் எத்தனை சாலைகள் அரசால் மூடப்படும் என்கிற கேள்வி எல்லோரிடமும் எழுகிறது.

இதுவரையில், சுற்றுலாப் பயணிகளுக்கு கொடைக்கானலில் என்ன அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன? கழிவுநீர் பிரச்னை, குடிநீர் பிரச்னை, போக்குவரத்து பிரச்னை என கொடைக்கானலில் அனைத்து பிரச்சனைகளும் உள்ளன. முதலில் இவற்றுக்குத் தீர்வு காண வேண்டும். ஒருமுறை இந்த வனத்தை அழித்துவிட்டால் இதை மீண்டும் புதிதாக உருவாக்க முடியாது," என்றார் ரவீந்திரன் நடராஜன்.

சர்வதேச தரம் இல்லை

பழனி கொடைக்கானல் ஆகிய இரண்டு இடங்களுக்கும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் மக்கள் வருகிறார்கள். ஆனால் சர்வதேச சுற்றுலா தலத்திற்கு ஏற்ற அளவில் இங்கே தரத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்கிறார் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி.

"பழனி மலையைச் சுற்றித்தான் அங்கு வசிக்கும் மக்களுக்கு வாழ்வாதாரம் இருக்கிறது. இதைத் தாண்டி தொழில் வளம் பெரிதாக ஏதும் ஏற்படுத்தப்படவில்லை. இதே போல் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதி என்பதும் இல்லை. அதிக மழை பெய்தால் மக்கள் படும் பாடு பெரும்பாடாய் இருக்கிறது. சர்வதேச சுற்றுலா தலத்திற்கு ஈடாக போக்குவரத்து, குடிநீர், தூய்மை போன்றவற்றை இன்னும் மேம்படுத்த வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளில் காட்டில் பல மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அடிவாரத்தில் இருந்து கொடைக்கானலை பார்த்தால் தற்போது கட்டடங்கள் அதிக அளவில் தெரிகின்றன. அந்த அளவுக்கு மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. சமவெளியில் என்ன வெப்பநிலை இருக்கிறதோ அதே வெப்பநிலைதான் தற்போது கொடைக்கானலில் நிலவி வருகிறது. மரங்களும் வளங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகின்றன என்பதை வனத்துறை நிச்சயம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதை மத்திய மாநில அரசுகள் இணைந்து கவனத்தில் எடுத்துக்கொண்டு காட்டைக் காப்பதற்கு முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்கிறார் பாலபாரதி.

ஆய்வு நடக்கிறது

"கேபிள் கார் சேவை திட்ட யோசனை தற்போது ஆரம்ப நிலையில்தான் இருக்கிறது. மேலும் இந்தத் திட்டத்தை நெடுஞ்சாலைத் துறையினர்தான் மேற்கொள்கிறார்கள். எனவே இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. பழனி மலை தொடர்களில் யானைகள் மற்றும் இதர விலங்குகளின் நடமாட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த யோசனை ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறது என்பதால் இதுகுறித்து இவ்வளவுதான் கூற முடியும்," என திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் டாக்டர் திலீப் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"கேபிள் கார் சேவை யோசனைக்கான சாத்தியக்கூறு ஆய்வுப்பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சுற்றுலாத் துறையிடம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை போன்ற தரவுகள் கேட்கப்பட்டுள்ளன. அதன்படி பயணிகளின் எண்ணிக்கையைக் கணக்கில் வைத்து கேபிள் கார்களின் எண்ணிக்கை கணக்கிடப்படும். காட்டுயிர்கள் கணக்கெடுப்பு, காட்டின் நடுவே சர்வே எடுக்கும் பணிகள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும்," என்று தேசிய நெடுஞ்சாலைத் துறையின் திண்டுக்கல் மண்டல பொறியாளர் சங்கர சுப்பிரமணியன் பிபிசி தமிழிடம் கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: