மொபைல், டிவியில் இருந்து விடுதலை; தினம் மக்கள் உரையாட வழி செய்யும் மகராஷ்டிர கிராமம்

Two children playing on a mobile phone
படக்குறிப்பு, வட்கான் கிராமம் அதன் குழந்தைகள் டிவி மற்றும் மொபைல் இணையத்தை நம்பியிருப்பதை உணர்ந்தது
    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி இந்தி
  • பிரசுரிக்கப்பட்டது

நவீனகாலத்தில் மொபைல் இன்டர்நெட், தொலைகாட்சி என மக்களை அடிமைப் படுத்தும் பழக்கங்களில் இருந்து விடுதலை பெறுவதாக மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்று அறிவித்துள்ளது. தினமும் சில மணி நேரங்களுக்காகவது இந்த விடுதலையை அந்த கிராம மக்கள் அனுபவிக்கின்றனர்.

சங்கிலி மாவட்டம் வட்கான் கிராமத்தில் தினமும் மாலை 7 மணிக்கு சைரன் ஒலிக்கிறது. இந்த முன்னெச்சரிக்கை ஒலியானது கிராமத்தில் உள்ள மக்கள் தங்களுடைய தொலைக்காட்சிப் பெட்டிகள், மொபைல்களை அணைத்து வைக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

மக்களை அடிமைப்படுத்தும் இந்த இரண்டையும், இரவு 8.30 மணிக்கு சைரன் ஒலி எழுப்பும்போது மீண்டும் இயக்க கிராமத்தின் கவுன்சில் அனுமதிக்கிறது.

"இந்திய சுதந்திர தினத்துக்கு முந்தைய நாளில் அதாவது கடந்த ஆகஸ்ட் 14 ம் தேதி கிராமத்தில் நடந்த கூட்டத்தில், நம்மை அடிமைப்படுத்தும் இந்தப் பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டிய தேவை இருப்பதாக நாங்கள் தீர்மானித்தோம்," என்று பிபிசி இந்தியிடம் கிராம கவுன்சில் தலைவரான விஜய் மோஹிடீ குறிப்பிட்டார். "அடுத்த நாளில் இருந்து சைரன் ஒலி எழுப்பிய உடன் அனைத்து தொலைகாட்சிப் பெட்டிகளும், மொபைல் போன்களும் அணைத்து வைக்கப்பட்டன," என்றார்.

வட்கான் கிராமத்தில் 3,000 மக்கள் வசிக்கின்றனர். பெரும்பாலானோர் விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைப் பணியாளர்கள் ஆவர்.

கோவிட்-19 பெருந்தொற்றின் போது ஆன்லைன் வகுப்புகள் காரணமாக குழந்தைகள் அதிக அளவுக்கு மொபைல்போன்கள், தொலைகாட்சி பெட்டிகளை சார்த்திருப்பவர்களாக மாறினர் என மோஹிடீ கூறினார். இந்த ஆண்டு கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டு விட்டன. குழந்தைகள் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் சென்று தங்களது நேரடி வகுப்புகளில் பங்கேற்றனர்.

தினமும் மக்கள் உரையாட வழி செய்யும் மகாராஷ்டிரா கிராமம்

பட மூலாதாரம், Getty Images

"ஆனால், அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்ததும்(வகுப்பில் இருந்து) மொபைல் போனில் விளையாடினர் அல்லது தொலைகாட்சி பார்த்துக் கொண்டே இருந்தனர்," என்று அவர் கூறினார். "அதே போல பெரியவர்களும் அதிக நேரம் தங்களது மொபைலில் நேரத்தை செலவழித்தனர். ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வது கூட இல்லை," என்றார்.

வந்தனா மோஹிடீ (கிராம கவுன்சில் தலைவர் மொஹிடீக்கும் இவருக்கும் தொடர்பில்லை)என்பவர், தனது இரண்டு குழந்தைகளை கவனித்துக் கொள்வது மிகவும் சிரம மாக இருந்தாக சொல்கிறார்." குழந்தைகள் இருவரும் முழுவதுமாக மொபைல் போனில் விளையாடுவதிலும் தொலைகாட்சி பார்ப்பதிலும் கவனம் செலுத்தினர்," என்றார்.

"ஆனால், இந்த புதிய நடைமுறை தொடங்கியதில் இருந்து, இது என் கணவருக்கு மிகவும் எளிதான செயலாக ஆகிவிட்டது. அலுவலகத்தில் இருந்து திரும்பி வந்த உடன் குழந்தைகள் படிக்க அவர் உதவி செய்கிறார். எனவே நான் சமையலறையில் அமைதியாக சமைக்க முடிகிறது," என்று மேலும் அவர் கூறினார்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

இந்த டிஜிட்டல் விஷத்தில் இருந்து விடுபடுவதற்கான யோசனைக்கு மக்களின் சம்மத த்தை பெறுவது கிராம கவுன்சிலுக்கு அவ்வளவு எளிதாக இல்லை.

தொடக்கத்தில் கவுன்சிலில் இந்த விஷயம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் இந்த முன்மொழிவு கிராம மக்களிடம் எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால், கிராமத்தில் உள்ள ஆண்கள் இதனை கிண்டல் செய்தனர் என கவுன்சில் தலைவர் மோஹிடீ சொல்கிறார்.

பின்னர் கவுன்சில் சார்பில் பெண்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. நிறைய தொலைக்காட்சி தொடர்களை பார்ப்பதற்கு ஈர்க்கப்படுவதாக அவர்கள் திறந்த மனதுடன் ஒப்புக்கொண்டனர். ஒட்டு மொத்த கிராம மும் தொலைக்காட்சி பெட்டிகள், மொபைல் போன்களை சில மணி நேரத்துக்கு அணைத்து வைப்பதற்கு சம்மதம் தெரிவித்தது.

தினமும் மக்கள் உரையாட வழி செய்யும் மகாராஷ்டிரா கிராமம்
படக்குறிப்பு, "இந்த புதிய நடைமுறை தொடங்கியதில் இருந்து, என் கணவர் அலுவலகத்தில் இருந்து திரும்பி வந்த உடன் குழந்தைகள் படிக்க உதவி செய்கிறார்."

இன்னொருமுறை நடந்த கவுன்சில் கூட்டத்தில், கிராமத்தின் கோயிலுக்கு மேலே ஒலி எழுப்பும் சைரனை நிறுவுவது என தீர்மானிக்கப்பட்டது.

இந்த முடிவை அமல்படுத்துவது அவ்வளவு எளிதாக இல்லை. சைரன் ஒலி எழுந்த உடன், கவுன்சில் பணியாளர்கள், கிராமக் குழுவினர் தெருக்கள் தோறும் சுற்றி வந்து, மக்களிடம் தொலைகாட்சிகள், மொபைல் போன்களை அணைத்து வைக்குமாறு வலியுறுத்தினர்.

"இப்போது, இந்த முடிவு இறுதியாக கிராமம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது," என்றார் கிராம கவுன்சில் தலைவர் மோஹிடீ.

சில மணி நேரங்கள் மட்டும் தொலைகாட்சி பெட்டிகள், மொபைல் போன்களை அணைத்து வைப்பது பலன் தருமா?

முடியும் என்கிறார் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தில் (நிம்ஹான்ஸ்) மருத்துவ உளவியல் பேராசிரியர் மருத்துவர் மனோஜ் குமார் சர்மா.

"கோவிட் தொற்று காரணமாக ஆன்லைன் செயல்பாடுகளின் முக்கியத்துவம் அல்லது ஆன்லைன் செயல்களில் நேரம் செலவிடுவது அதிகரித்து விட்டது," என்றார் அவர்.

மருத்துவர் சர்மாவும் அவருடன் பணியாற்றுவோரும் பெரியவர்கள் 682 பேரிடம் (495 பெண்கள், 187 ஆண்கள்) 2020ம் ஆண்டு ஜூலை-டிசம்பர் மாதங்களுக்கு இடையே ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் வாயிலாக இளம் வயதினரிடமும், பதின்ம வயதினர் மத்தியிலும் பிரச்னைக்குரிய இணைய உபயோகம் சீராக அதிகரிக்கும் நிகழ்வாக இருப்பது தெரியவந்தது. அதிகரித்த இணையப் பயன்பாட்டில் இருந்து வெளிப்பட்ட மிக முக்கியமான சவால்களில் இதுவும் ஒன்றாகும்.

"உற்பத்தி சார்ந்ததாக அல்லாத மிகையான இன்டர்நெட்டின் உபயோகத்தால், பிரச்னைக்குரிய உபயோகத்தின் அபாயம் அதிகரித்திருப்பது, மன அழுத்தத்தை அதிகரிக்கக்கூடியது,"என ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. "இது பல்வேறு வகைகளிலும் பதின்ம வயதினரின் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடும்."

தினமும் மக்கள் உரையாட வழி செய்யும் மகாராஷ்டிரா கிராமம்
படக்குறிப்பு, குழந்தைகள் போதுமான ஓய்வு நேரங்களை ஆஃப்லைனில் செலவழிப்பதை உறுதி செய்வது முக்கியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்

மனம் மகிழ்ச்சியற்ற உணர்ச்சி வசப்பட்ட நிலைகளில், தற்காலிகமாக அதில் இருந்து விடுதலை பெற இன்டர்நெட்டை அதன் பல வடிவங்களில் உபயோகிப்பதால் இளம் பருவத்தினர் உளவியல் அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் அல்லது மன அழுத்தத்தை அனுபவிப்பவர்கள் ஆகின்றனர்.

"விழிப்புணர்வுடன் கூடிய டிஜிட்டல் நிராகரிப்பை கடைபிடிப்பதன் மூலம், ஆன்லைன் செயல்பாடுகளை சார்ந்திருப்பதை குறைத்து, ஒரு குடும்பமாக தரமான செயல்பாடுகளில் ஈடுபடுவது ஒரு நல்லதாக இருக்கிறது," என்றார் மருத்துவர் சர்மா.

"நீங்கள் குழந்தைகளுடன் பேச வேண்டிய தேவை இருக்கிறது. அவர்கள் உடல் ரீதியாக அல்லது ஆன்லைன் சாராத பொழுது போக்குகளில் ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும். அதே போல அவர்கள் போதுமான உணவு உண்பதையும், உறங்குவதையும் உறுதி செய்ய வேண்டும்," என்றும் அவர் கூறினார்.

பள்ளி செல்லும் மூன்று குழந்தைகளின் தந்தையான கரும்பு விவசாயி திலீப் மோஹிடீ, தொலைகாட்சி பெட்டிகள், மொபைல்கள் அணைத்து வைக்கப்பட்ட பிறகு வித்தியாசத்தை பார்க்க முடிவதாக கூறினார்.

"குழந்தைகள் முன்பு படிப்பில் கவனம் செலுத்தவில்லை," என்று அவர் கூறுகிறார். "இப்போது, பெரியவர்களிடையே சாதாரண உரையாடல் (வீட்டில், கூட) உள்ளது," என்றார்.

Banner
காணொளிக் குறிப்பு, "அவர்களுக்கு குழந்தை - எங்களுக்கு பிழைப்பு" - ஒரு வாடகைத் தாயின் கதை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: