நயன்தாரா - விக்னேஷ் சிவன் இரட்டைக் குழந்தை: "அவர்களுக்கு குழந்தை, எங்களுக்கு பிழைப்பு" - ஒரு வாடகைத் தாயின் கதை
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு சமீபத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் வாடகைத் தாய் முறை மூலம் பிறந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
வாடகைத் தாய் குறித்த பல்வேறு விதமான விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், சென்னையில் வாடகைத் தாயாக இருந்த ஒரு பெண்ணின் கதை இது.
இருட்டான வீட்டில் விளக்கை ஏற்றி வைப்பது தான் வாடகைத் தாய் செய்யும் வேலை. குழந்தை இல்லாதவர்கள் ஒரு குழந்தை கிடைப்பது எவ்வளவு பெரிய புண்ணியம்," என்கிறார் வாடகைத் தாயாக இருந்த சுமதி.
"நான் வாடகைத் தாயாகச் சென்றபோது எனக்கு 33 வயது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு பயந்து பயந்து வாடகைத் தாயாக இருக்கத் தொடங்கினோம். அதில் சுயநலமும் இருந்தது. அவ்வளவு வறுமையில் இருந்தோம்," என்று கூறும் சுமதி, வறுமையில் பணத் தேவைக்காக கடன் வாங்கி, அதைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அவமானப்படுவதற்கு பதிலாகத் தனது கருப்பையை வாடகைக்கு விட முடிவு செய்தார்.
"அந்தக் குழந்தை கிடைப்பதால் அவர்களுக்கும் நன்மை, அந்தக் குழந்தையின் மூலம் எங்களுடைய பிரச்னைக்கும் வழி கிடைக்கிறது," என்கிறார் சுமதி.
"அது ஒரு மாதிரியான வலி நிறைந்தது. தாய், தந்தையின் குழந்தையாக இருந்தாலும், 8 மாதங்களுக்கு அதை எங்கள் குழந்தையைவிட மிகவும் பத்திரமாக எங்கள் வயிற்றில் பராமரிப்போம். அப்படிச் சுமந்து பெற்றெடுத்த பிறகு அதன் முகத்தைக்கூட பார்க்க முடியாமல், பையனா, பெண்ணா என்றுகூடத் தெரியாமல் இருந்ததில் மிகவும் வருந்தினேன். அதிலிருந்து மீண்டு வர சில காலம் பிடித்தது."
"ஆனால், இதற்குக் காரணமும் உண்டு. அப்படி குழந்தையை ஒருவேளை பார்த்துவிட்டால் அதன்மீது பாசம் ஏற்பட்டு அதன்மூலம் குழந்தையின் குடும்பத்திற்குப் பிரச்னை வரக்கூடிய சிக்கலும் உண்டு. அதனால் குழந்தையின் முகத்தைக் கூடப் பார்க்காமல் கொடுத்தாக வேண்டும்," என்கிறார் சுமதி.
தயாரிப்பு, ஒளிப்பதிவு & படத்தொகுப்பு - ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்