திருக்குறளை ஆன்மிக நீக்கம் செய்துவிட்டதாக கூறும் ஆளுநர் ரவி: அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்?

பட மூலாதாரம், YOGESH_MORE / GETTY IMAGES
சில நாள்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த திருக்குறள் மாநாடு ஒன்றில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, திருக்குறளை ஆன்மிக நீக்கம் செய்து, அதனை வெறும் வாழ்வியல் நெறி நூலாக மட்டும் சுருக்கிவிட்டார்கள் என்றும், ஜி.யு.போப், கால்டுவெல் போன்றவர்கள் திருக்குறளின் ஆன்மிக நீக்கம் செய்யப்பட்ட மொழிபெயர்ப்புக்குக் காரணம் என்றும் கூறினார்.
12க்கு மேற்பட்ட நூல்களின் உதவியோடு தாம் ஒவ்வொரு திருக்குறளின் பொருளையும் கற்றுவருவதாக கூறிய அவர், திருக்குறள் இந்தியாவின் ஆன்மிகத்தை கொண்டிருப்பதாகவும் கூறினார்.
இதனை கடுமையாக மறுத்தார் சென்னை பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் வீ.அரசு. பிபிசி தமிழிடம் பேசிய அவர், ஆளுநரின் பேச்சு அடிப்படை அற்ற பேச்சு என்று கூறியதுடன், மனுஸ்மிருதி, பகவத் கீதை போன்ற பாகுபாடு காட்டும் இந்திய நூல்களோடு திருக்குறளை ஒப்பிட முடியாது என்றார்.
திருக்குறளின் முதன் மூன்று அதிகாரங்கள் பிற்காலத்தில் எழுதிச் சேர்க்கப்பட்டவை என்று கூறிய அவர், அவற்றில் கூட உருவமோ, கடவுளோ இல்லை என்றும் அவர் கூறினார். அத்துடன், நீட்டலும், மழித்தலும் வேண்டாம் உலகம் பழித்தது ஒழித்துவிடின் என்ற குறளை அவர் சமய மறுப்புக்கான குறளாக அவர் எடுத்துக் காட்டினார்.
இந்த உலகில் பிச்சை எடுத்து வாழும் நிலையில் ஒருவன் இருந்தால், இந்த உலகைப் படைத்தவன் என்று இருந்தாலும்கூட அவன் கெட்டு ஒழியட்டும் என்கிறார் வள்ளுவர். அதைப் போல பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்ற குறள் எல்லோரும் சமம் என்பதை வலியுறுத்துகிறது. ரவி போன்றவர்கள் குறிப்பிடும் ஆன்மிகத்துக்கு இது முரணானது என்று கூறிய பேராசிரியர் அரசு, ஆளுநரின் தொடர்ந்த இது போன்ற பேச்சு திருக்குறளை இழிவுபடுத்தும் நோக்கம் கொண்டது. திருவள்ளுவர் உருவத்துக்கு காவி நிறம் பூசினார்களே அதைப் போன்றது என்றார் அவர்.
தமிழ் ஆய்வறிஞர் புலவர் செந்தலை கவுதமன், இது குறித்துப் பேசும்போது, சிக்கலே இல்லாத சிக்கலைப் பேசிப் பேசி, உண்மையான சிக்கல்களில் இருந்து திசை திருப்பும் நோக்கத்தோடு ஆளுநர் பேசி வருவதாகக் கூறினார்.

திருக்குறள் வழியில் ஆட்சி நடத்தப்பட்டதாக கூறும் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன என்று கூறிய அவர், திருக்குறள் வாழ்க்கை நெறிமுறை நூலாகவே இருந்துள்ளது என்றார். திருக்குறளின் பெருமையை சிதைத்து பகவத் கீதையை முன்னிறுத்துவதே ஆளுநரின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில் டெல்லி தமிழ்க் கல்விக் கழகம் நடத்தும் லோதி சாலை பள்ளியில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையைத் திறந்துவைத்த ஆர்.என்.ரவி திருக்குறளை ஜி.யு.போப் மொழி பெயர்த்தபோது ஆன்மிகத்தைப் பிரித்துவிட்டார் என்ற கருத்தை முதல் முதலாகப் பேசினார்.
ஆதி பகவன் என்ற சொல்லை அவர் பிரைமல் டெயிட்டி என்று மொழி பெயர்த்திருந்தார். இது தவறு என்று கூறிய அவர், ஜி.யு.போப் ஒரு கிறித்துவ மத போதகர் என்பதையும் வலியுறுத்திப் பேசியிருந்தார். அதே கருத்தைத்தான் அவர் தனது அண்ணா பல்கலைக்கழகப் பேச்சிலும் தெரிவித்திருந்தார்.
அப்போது இதற்கு எதிர்வினையாற்றிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று சனாதனத்தை தோலுரித்த வள்ளுவர் பற்றியும், 40 ஆண்டுகள் தமிழ்த் தொண்டாற்றிய ஜீ யூ போப் பற்றியும் பாடம் எடுக்கும் ஆளுநரே, கடவுள் வாழ்த்தே இல்லாமல் இந்திய அரசியல் சாசனம் ஏன் உருவாக்கப்பட்டது என்பதை படித்துப்பாருங்கள். ஆன்மீகத்தின் பெயரால் வெறுப்பை விதைப்பவர்களை வள்ளுவர் மனிதனாகவே மதிப்பதில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். உளறல்களை நிறுத்துங்கள்," என்று அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்





























