இந்த வாரம் வெளியாகும் படங்கள், ஒடிடி தொடர்கள் எவை? எங்கு பார்க்கலாம்?

பிரசுரிக்கப்பட்டது

இந்த வாரம் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' வெளியாவதால், திரையரங்குகளில் 'நானே வருவேன்' படத்தைத் தவிர வேறு தமிழ்ப்படங்கள் ஏதும் வெளியாகவில்லை. ஆனால், ஓடிடிகளில் வழக்கம்போல தொடர்கள் வெளியாகின்றன.

1. பொன்னியின் செல்வன்: மணிரத்னம் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு அறிமுகம் தேவையில்லை. கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருக்கும் இந்தத் திரைப்படம், வெள்ளிக்கிழமையன்று சுமார் 1,000 திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. IMAX வடிவிலும் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

2. நானே வருவேன்: செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் இந்தப் படம் ஒரு பேய் - சைக்கோ - த்ரில்லர். வியாழக்கிழமையே ரிலீஸான இந்தப் படத்திற்கு விமர்சனங்கள் தற்போது வெளியாகிவருகின்றன. படத்தின் முதல் பாதி வெகு சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இரண்டாம் பாதி வழக்கமான பாணியில் எடுக்கப்பட்டிருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

3. விக்ரம் - வேதா (இந்தி): புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த விக்ரம் வேதா திரைப்படத்தின் இந்தி ரீ - மேக். இந்தப் படத்தில் ஹ்ரித்திக் ரோஷனும் சாயிஃப் அலிகானும் நடித்திருக்கின்றனர். இந்தித் திரையுலகை தற்போது ஆட்டிப்படைத்துவரும் boycott பிரச்சனைக்குள் இந்தப் படமும் சிக்கினாலும், படம் நன்றாக இருப்பதாகவே விமர்சனங்கள் வெளியாகிவருகின்றன.

4. Reyiki Veyyi Kallu (Telugu): 2018ல் தமிழில் அருள்நிதி, மஹிமா நம்பியார் நடித்து வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படம் தெலுங்கில் 'ரெயிக்கி வெய்யி கல்லு' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு Aha ஓடிடியில் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது.

5. Karm Yuddh: டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த வாரம் வெளியாகும் தொடர். ஒரு பெரிய தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்படுகிறது. அதில் 40 பேர் உயிரிழக்கிறார்கள். ஆனால், அதன் பின்னணியில் பெரும் தொழில் சாம்ராஜ்யத்தை கைப்பற்ற நடக்கும் யுத்தம் இருக்கிறது. அதிகாரத்திற்கான சண்டை, குடும்ப மோதல், பழிவாங்கல் அனைத்தும் நிறைந்த தொடர்.

6. Mad Company - Season 1: அண்ணன், தம்பி, தங்கை, அக்கா, தாய், தந்தை போன்ற உறவுகளை, தேவைப்படும் குணத்துடன் வாடகைக்கு விடுகிறது Mad Company என்ற நிறுவனம். அதனால் ஏற்படும் குழப்பங்களே இந்தத் தொடரின் கதை. பிரசன்னா, கனிகா, தான்யா பாலகிருஷ்ணன் போன்றவர்கள் நடித்திருக்கிறார்கள். Aha ஓடிடியில் தமிழில் வெளியாகிறது.

7. Plan A Plan B: தமன்னா, ரித்தேஷ் தேஷ்முக், பூனம் தில்லான் ஆகியோர் நடித்த இந்தப் படம் நெட்ஃப்ளிக்சில் இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. திருமண ஜோடிப் பொருத்தம் பார்த்துவைக்கும் பெண்ணாக தமன்னா வருகிறார். விவாகரத்து வாங்கித் தரும் வழக்கறிஞராக ரித்தேஷ் வருகிறார். இருவரது பாதையும் ஓரிடத்தில் குறுக்கிடுகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

இது தவிர ஏற்கனவே திரையரங்குகளில் வெளியான சில படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகின்றன. பா. ரஞ்சித் இயக்கத்தில் சில வாரங்களுக்கு முன்பாக வெளியான 'நட்சத்திரம் நகர்கிறது' தற்போது நெட்ஃப்ளிக்சில் வெளியாகியுள்ளது. விக்ரம் நடித்த 'கோப்ரா' திரைப்படம் Sony livல் வெளியாகிவிட்டது.

மலையாளத்தில் பிரித்விராஜ் நடித்து வெளியான 'தீர்ப்பு' இந்த வாரம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. ஆர்யா நடித்து வெளியான 'கேப்டன்' திரைப்படம் தமிழிலும் தெலுங்கிலும் ZEE5 ஓடிடியில் வெளியாகிவிட்டது. நிவேதா தாமஸ், ரெஜினா கஸாண்ட்ரா நடித்து தெலுங்கில் வெளியான 'சாக்கினி தாக்கினி' நெட்ஃப்ளிக்ஸில் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

கன்னடப் படமான '777 Charlie' அமெசான் பிரைமில் இந்த வாரம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. தெலுங்குப் படமான 'Ranga Ranga Vaibhavanga' அக்டோபர் 2ஆம் தேதி நெட்ஃப்ளிக்சில் வெளியாகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: