கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீச்சு - தொடரும் பதற்றம்

கோவை மாநகரின் சித்தாபுதூரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தை நோக்கியும் ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடை மீதும் வியாழக்கிழமை இரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி ஓடியுள்ளனர். இரண்டு இடங்களிலும் பெட்ரோல் குண்டுகள் வெடிக்காததால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இருப்பினும், சம்பவத்தின் தன்மையை கருத்தில் கொண்டு இரு இடங்களிலும் காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள் வீசப்பட்ட பகுதிகளுக்கு அருகே சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் பதிவான காட்சிகளை வைத்து, இந்த செயலில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இரவு 8 மணிக்கு மேல் நடந்த இந்த இரண்டு சம்பவங்களிலும் வெவ்வேறு இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் விளக்குத் திரியுடன் கூடிய பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த இரண்டு சம்பவங்களும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உள்ளவையா வெவ்வேறானவையா என்றும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் அதன் முக்கிய நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்கள் உள்பட 95 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை, இந்திய அமலாக்கத்துறை ஆகியவை வியாழக்கிழமை சோதனை நடத்தியது.
இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் இரண்டு வெவ்வேறு வழக்குகளில் அந்த அமைப்பைச் சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த அமைப்பை இலக்கு வைத்து மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசு மத்திய அமைப்புகளை பயன்படுத்துவதாக பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் குற்றம்சாட்டி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் பாஜக அலுவலகத்தை இலக்கு வைத்து பெட்ரோல் குண்டுகளை வீசினார்களா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை கண்டித்து கோவை மாவட்ட பாஜகவினர் சுமார் 50 பேர் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ அமைப்புக்கு எதிராக குரல் எழுப்பினர்.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே சில இடங்களில் ஆளும் திமுக மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலினை அவதூறாக பேசியதாகக் கூறி பாஜகவைச் சேர்ந்த சிலரை காவல்துறையினர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். இந்த நிலையில், பாஜக அலுவலகத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படும் சம்பவத்தைத் தடுக்க காவல்துறையினர் தவறியதாகக் கூறி மாவட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதைத்தொடர்ந்து காவல்துறை உயரதிகாரிகள் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சம்பவ பகுதியில் இருந்து கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்




















