டிஜிட்டல் பிட்காயின் மோசடி: தருமபுரி, கிருஷ்ணகிரியில் 40 பேர் புகார் - இருவர் கைது

டிஜிட்டல் காயின் நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தருமபுரியில் மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி இரண்டு பேரை கைது செய்துள்ளனர். என்ன நடக்கிறது இந்த மாவட்டங்களில்?
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா அங்கம்பட்டி அருகே உள்ள வசந்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர். இவர் கிருஷ்ணகிரியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல்த்துறையினரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில், "எனது உறவினர் யுவராஜ் என்னை ஓசூர் ராமகிருஷ்ணா நகரில் உள்ள ஏ.கே.டிரேடர்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வரும் அருண்குமாரிடம் கடந்த ஏப்ரல் மாதம் அழைத்து சென்றார். அப்போது அவருடன் நந்தகுமார், சங்கர், சினிவாசன், பிரகாஷ், வேலன் ஆகியோர் இருந்தனர்.
அவர்கள் என்னிடம் உங்களுடைய முதலீட்டுத் தொகையை யுனிவர்காயின் என்ற கிரிப்டோ கரன்சி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார்கள். அதை நம்பி நான் ரூ.5 லட்சம் வங்கி கணக்கிற்கு கொடுத்தேன். அதன் பிறகு ரூ.1 லட்சத்து 93 ஆயிரத்தை ரொக்கமாவும், மேலும் ரூ.77 ஆயிரத்தை அவர்கள் கூறிய வங்கிக் கணக்குக்கும் அனுப்பினேன். இவ்வாறு ரூ.7 லட்சத்து 70 ஆயிரம் வரை அவர்கள் கூறியபடியே முதலீடு செய்தேன்.
அதன் பிறகு என்னிடம் அவர்கள் எனது வங்கி கணக்கிற்கு வாரந்தோறும் ஊக்கத்தொகை வரும் என கூறினார்கள். ஆனால் அப்படி எந்த தொகையும் வரவில்லை. என்னை போல அவர்கள் பலரை ஏமாற்றி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது தொகையை மீட்டு தர வேண்டும்," என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த புகார் மனு மீது கிருஷ்ணகிரி பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் விவேகானந்தன் வழக்குப் பதிவு செய்து ஓசூர் ஏ.கே.டிரேடர்ஸ் உரிமையாளர் அருண்குமார், கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி புதிய வீட்டு வசதி வாரியத்தில் வசித்து வரும் நந்தகுமார், பர்கூர் தாலுகா பெருகோபனப்பள்ளி கிட்டனூர் சங்கர், பர்கூர் தாலுகா ஒரப்பம் செட்டிப்பள்ளியைச் சேர்ந்த சீனிவாசன், பெருகோபனப்பள்ளி கிட்டனூரை சேர்ந்த பிரகாஷ், தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி வேலன் ஆகிய 6 பேர் மீது நம்பிக்கை மோசடி, மோசடி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்களில் 50க்கும் மேற்பட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவலர்கள் திடீரென சோதனை நடத்தினார்கள்.
இது பற்றிய தகவல் வெளிவரத் தொடங்கியதுமே குற்றம்சாட்டப்பட்ட நபர்களால் தாங்களும் ஏமாற்றப்பட்டதாகக் கூறி மேலும் சிலர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
மோசடி நடந்தது எப்படி?

இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தவர்களில் ஒருவரான பிரகாஷிடம் பிபிசி தமிழுக்காகப் பேசினோம்.
"கடந்த திங்களன்று நாங்கள் சுமார் 60 பேர் மாவட்ட ஆட்சியரிடம் டிஜிட்டல் காயின் மோசடியில் நாங்கள் ஏமாந்து போனதை விவரித்து மனுவாக கொடுத்தோம். நான் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். போர் வெல் கம்பெனி நடத்தி வந்த சீனிவாசனிடம் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னிடம் டிஜிட்டல் காயினில் பணம் முதலீடு செய்தால் வாராவாரம் உங்களுக்கு பணம் கிடைக்கும் என்று கூறினார் . டிஜிட்டல் காயினில் ரூ. 77 ஆயிரம் முதலீடு செய்தால் அதற்கு வாரம் ரூ 6,200 ஊக்கத்தொகையாக கிடைக்கும்," என்றார்.
"அதை நம்பி அவரிடம் நான் சர்வீஸில் இருக்கும் போதே பதினாறு லட்சம் ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்து இருந்தேன். பிறகு ரூ. 14 லட்சம் என மொத்தம் 30 லட்சம் ரூபாய் கொடுத்திருந்தேன். அப்போது அவர் அந்த பணத்தை அருண்குமார் என்பவரிடம் கொடுத்து ஏகே டிரேடர்ஸ் என்ற பெயரில் உள்ள ஒரு செக்கும் ஒரு ஆவணத்தையும் எனக்கு கொடுத்தார்கள். எனக்கு நாலு வாரம் பணம் கொடுத்தார்கள். வாரம் ரூ. 96 ஆயிரம் கொடுத்தார்கள் இந்த தகவல் வெளியே பரவவே நிறைய பேர் அவரிடம் பணம் முதலீடு செய்து செய்தது தெரிய வந்தது. இப்போது திடீரென நாலாவது வாரத்துக்குப் பிறகு பணத்தை நிறுத்தி விட்டார்கள்," என்று பிரகாஷ் கூறினார்.
நான் பலமுறை சீனிவாசனிடம் தொடர்பு கொண்டு போனில் பேசினேன். அவர் பணம் தருவதாக இல்லை. ஒரு கட்டத்தில் நேரடியாக உனக்கு பணம் தர முடியாது. உன்னால் முடிந்ததை பார் என்று சொல்லி விட்டார். பிறகு நான் வெளியே விசாரித்ததில் என்னைப் நூற்றுக்கணக்கானோர் இவர்களிடம் ஏமாந்திருப்பது தெரியவந்தது பிறகு பாதிக்கப்பட்டவர்கள் சேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம் என்கிறார் பிரகாஷ்.
போலீஸ் சோதனையில் சிக்கிய ரொக்கம்

இதற்கிடையே, டிஜிட்டல் காயின் நிறுவனம் நடத்தி பல கோடி மோசடி செய்தததாக புகாருக்குள்ளான 6 பேரின் வீடுகள், அலுவலகங்களில் ஒரே நேரத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் 12 பவுன் நகையும், ரூ.50 லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.30 லட்சம் மதிப்புள்ள ஒரு சொகுசு கார், ரூ.5 லட்சம் மதிப்புள்ள ஒரு கார், ரூ.10 லட்சம் மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக காவல் துறையினர் கூறுகின்றனர்.
இதையடுத்து பிரகாஷ், சீனிவாசன் ஆகிய 2 பேரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் பிபிசி தமிழுக்காக நாம் பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் விவேகானந்தனிடம் பேசினோம்.
"டிஜிட்டல் காயின் என்ற பெயரில் நடந்த மோசடி குறித்து இதுவரை 40 பேரிடம் இருந்து புகார் மனுக்கள் வந்துள்ளன. அவற்றின் அடிப்படையில் சீனிவாசன், பிரகாஷ் ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்ற காவலில் வைக்க நடவடிக்கை எடுத்தோம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏழு இடங்களிலும் தருமபுரி மாவட்டத்தில் ஒரு இடத்திலும் என எட்டு இடங்களில் சோதனை நடந்தது. அருண்குமார் என்பவர் தான் ஏகே டிரேடர்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டு இருக்கிறார் என்று தெரிய வருகிறது. சம்பந்தப்பட்டவர்களின் சொத்துக்களை முடக்கி அதன் மூலம் பணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வருகிறது. அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள். இதுவரை 78 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன," என்கிறார் ஆய்வாளர் விவேகானந்தன்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்




























