'ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடி’ இயக்கத்தின் கீழ் பறக்கவிடப்பட்ட கோடிக்கணக்கான கொடிகளுக்கு என்ன ஆகும்?

இந்திய தேசிய கொடி

பட மூலாதாரம், EPA

    • எழுதியவர், சரோஜ் சிங்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஆகஸ்ட் 13 முதல் 15 வரை, நீங்களும் உங்கள் வீடு, அலுவலகம், கார் அல்லது பைக்கில் இந்தியாவின் கொடியை பறக்கவிட்டிருக்கலாம்.

இந்தியாவில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி மூவர்ணக் கொடியை ஏற்றுவது புதிதல்ல. ஆனால் இந்த ஆண்டு முற்றிலும் வித்தியாசமானது.

ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதிவரை எல்லா இல்லங்களிலும் தேசியக்கொடியை பறக்கவிடுமாறு பிரதமர் நரேந்திர மோதி, பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்திய கலாசார அமைச்சகம், பிற அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து இதற்கான சிறப்பு ஏற்பாடுகளையும் செய்திருந்தது.

இந்த இயக்கத்திற்கு 'ஹர் கர் திரங்கா' என்று பெயரிடப்பட்டது.

இதில் 20-25 கோடி கொடிகளை பறக்கவிடும் இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது.

இந்தியாவின் குடிமக்கள் தேசியக் கொடியுடன் தனிப்பட்ட உறவை விட, முறை சார்ந்த மற்றும் நிறுவன ரீதியிலான உறவைக் கொண்டுள்ளனர் என்பது அரசின் வாதம்.

'ஹர் கர் திரங்கா' இயக்கத்திற்குப் பிறகு இந்த உறவு தனிப்பட்டதாக மாறும் என்று இந்திய அரசு கருதுகிறது. இந்த இயக்கம் மூலம், மூவர்ணக் கொடியுடனான குடிமக்களின் உறவு ஆழமடையும். இது குடிமக்கள் மத்தியில் தேசபக்தி உணர்வை மேலும் வலுப்படுத்தும்.

இதன் காரணமாக இந்திய மக்கள் 'ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடி' இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றனர்.

எத்தனை பேர் கொடி ஏற்றினார்கள்?

இந்த இயக்கம் ஹைப்ரிட் முறையில் கொண்டாடப்பட்டது. அதாவது சிலர் கொடியை வைத்து இணையதளத்தில் செல்ஃபியை பதிவேற்றம் செய்து டிஜிட்டல் முறையில் கொண்டாடினர். சிலர் தங்கள் வீடு, அலுவலகம் அல்லது காரில் கொடியை வைத்தனர்.

செவ்வாய்கிழமை நண்பகல் 12 மணி வரை, 'ஹர் கர் திரங்கா' பிரசாரத்தின் கீழ் 6 கோடி பேர் கொடியுடன் செல்ஃபிகளை பதிவேற்றியுள்ளனர் என்று கலாசார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய கொடி

பட மூலாதாரம், NurPhoto / Getty Images

ஆனால் செவ்வாய்கிழமை காலை வரை வீடு, கடை, கார், அலுவலகம் என எத்தனை பேர் கொடி ஏற்றினார்கள் என்ற புள்ளிவிவரத்தை கலாசார அமைச்சக அதிகாரிகளால் சேகரிக்க முடியவில்லை.

ஆனால், இந்தப் பிரசாரம் விளம்பரப்படுத்தப்பட்ட விதத்தை பார்க்கும்போது இந்த எண்ணிக்கையும் கோடிகளில் இருக்கும்.

இந்த மதிப்பீடு வணிக நிறுவனங்களால் வெளியிடப்பட்ட தரவுகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.

அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) படி, இந்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள வர்த்தகர்கள் வெவ்வேறு அளவுகளில் 30 கோடி கொடிகளை விற்றுள்ளனர். இவற்றின் மொத்த வர்த்தக மதிப்பு சுமார் 500 கோடி ரூபாய்.

கொடிகள் இவ்வளவு அதிக அளவில் விற்கப்பட்டுள்ள நிலையில், அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருப்பது மிகப்பெரிய பொறுப்பாகும். மூவர்ணக் கொடி இந்தியர்களின் பெருமையின் சின்னம்.

எனவே, ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பிறகு இந்த கொடிகளை என்ன செய்வது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தேசிய கொடி

பட மூலாதாரம், SOCIAL MEDIA

கொடிகளை ஒப்படைக்கும் முன்முயற்சி

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் ஒரு போஸ்டரைப் பகிர்ந்து இதற்கு பதில் அளித்துள்ளார்.

அவர் பகிர்ந்துள்ள போஸ்டரில் கூறியிருப்பதாவது:

"ஆகஸ்ட் 15க்குப் பிறகு கொடிகளை என்ன செய்வது? கவலை வேண்டாம். லக்னெளவில் உள்ள லா மார்டினியர் பெண்கள் கல்லூரியிடம் இதற்கான தீர்வு உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களின் குடியிருப்பு பகுதிகள், வீடுகள், பிற நிறுவனங்கள், சாலைகள் ஆகிய இடங்களில் இருந்து கொடிகளை நாங்கள் சேகரித்து வருகிறோம். நீங்கள் விரும்பினால் பயன்படுத்திய கொடிகளை தபால் மூலம் அனுப்பலாம். அதை கல்லூரியின் வாயிலிலும் டெபாசிட் செய்யலாம்."

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

லா மார்டினியர் பெண்கள் கல்லூரியின் முதல்வர் ஆஷ்ரிதா தாஸ் பிபிசியிடம், 'ஹர் கர் திரங்கா' இயக்கத்துடன் இந்த வழியில் இணைவது கல்லூரி நிர்வாகத்தின் முடிவு என்று கூறினார். இந்த முடிவில் மாநில நிர்வாகத்துக்கு எந்தப் பங்கும் இல்லை.

இந்த முன்முயற்சி குறித்து உள்ளூர் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாகவும், இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக உறுதியளித்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

ஆகஸ்ட் 15 அன்று மாலை தாமதமாகவே தான் இந்தப் போஸ்டரை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாக ஆஷ்ரிதா தாஸ் கூறினார். "இது ஆரம்ப நாட்கள்தான். ஆனால் இதுவரையிலான செயல்பாடு ஊக்கமளிக்கும் விதமாக இல்லை. மாநகராட்சி மற்றும் இங்கு படிக்கும் மாணவர்களிடமும் இது குறித்து பேசியுள்ளோம்," என்றார் அவர்.

லா மார்டினியர் பெண்கள் கல்லூரியைப் போலவே, இந்தியன் ஆயில் மும்பை கிளையும் ஆகஸ்ட் 16 முதல் கொடி சேகரிப்பு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. நீங்கள் மும்பைக்கு அருகில் வசிக்கிறீர்கள் என்றால், இந்தியன் ஆயிலின் பெட்ரோல் பம்ப்புக்குச் சென்று கொடியை அளிக்கலாம்.

அதே வழியில், மை கிரீன் சொசைட்டி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும் கொடி சேகரிக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

தனியார் மட்டத்தில் தொடங்கப்பட்ட சில தேர்ந்தெடுக்கப்பட்ட முயற்சிகள் இவை. பிரசாரத்தின் போது இது குறித்து எந்த அதிகாரபூர்வ தகவலும் மத்திய அல்லது மாநில அரசால் பகிரப்படவில்லை.

தேசிய கொடி

பட மூலாதாரம், SOCIAL MEDIA

விதிமுறைகள் என்ன?

ஆனால் கொடி சேகரிப்பவர்களிடம் மட்டுமே பொதுமக்கள் செல்ல வேண்டும் என்பது இல்லை. பொதுமக்கள் தங்கள் சொந்த மட்டத்தில் கொடியை பாதுகாக்கலாம் அல்லது அழிக்கலாம்.

'ஹர் கர் திரங்கா' பிரசாரம் குறித்து பல தவறான கருத்துகள் உள்ளன என்று இந்திய கொடி அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி அசீம் கோலி கூறினார்.

"ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதிக்குள்தான் கொடியை ஏற்றவேண்டும் என்று மக்கள் மனதில் தவறான கருத்து உள்ளது. ஆகஸ்ட் 15க்குப் பிறகு கொடியை அகற்றுமாறு மத்திய, மாநில அரசுகள் ஒருபோதும் சொல்லவில்லை.

முதலில் பொதுமக்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்," என்று பிபிசி உடனான உரையாடலில் அவர் தெரிவித்தார்.

"இந்தியாவில் ஆண்டின் 365 நாட்களும் வீடு, அலுவலகம் அல்லது எந்த பொது இடத்திலும் கொடி ஏற்ற பொதுமக்களுக்கு அனுமதி உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் 2004ஆம் ஆண்டு தீர்ப்புக்குப் பிறகு இது சாத்தியமாகியுள்ளது. இதனால் ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பிறகு வீடுகளில் கொடியை இறக்குவது கட்டாயமில்லை. நீங்கள் அதை இருக்கும் இடத்திலேயே விட்டுவைக்கலாம்," என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால் காற்றினால் கொடி கிழிந்துவிட்டாலோ அல்லது சில காரணங்களால் அழுக்காகிவிட்டாலோ - Flag code 2022 (இந்திய கொடி சட்டம்)இன் படி அதை அழிக்கலாம்.

இந்தியாவின் கொடிச்சட்டம் 2002 இல் உருவாக்கப்பட்டது. அதில் 2021 இல் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

இந்த சட்டத்தின்கீழ் கொடி கிழிந்துவிட்டாலோ அல்லது அழுக்காகிவிட்டாலோ, தனிமையில் அதை முற்றிலுமாக அழிக்கலாம். உரிய மரியாதையுடன் அதை எரிக்கலாம் அல்லது அழிக்கலாம்.

தேசிய கொடி

பட மூலாதாரம், EPA

இந்த மரியாதைக்குரிய அல்லது கண்ணியமான முறை என்ன என்பது பற்றி கொடி சட்டத்தில் விரிவாக எழுதப்படவில்லை.

ஆனால் இந்தக் கேள்விக்கு பதிலளித்த ஆசிம் கோலி, "சிலருக்கு மரியாதைக்குரிய முறை மண்ணில் புதைப்பதாக இருக்கலாம். சிலருக்கு கங்கையில் ஒழுகவிடுவதாக இருக்கலாம். சிலருக்கு எரிப்பது என்பது மரியாதைக்குரிய வழியாக இருக்கலாம். நீங்கள் இவற்றில் எதை வேண்டுமானாலும் பின்பற்றலாம். ஆனால் இதை தனிமையில் செய்யவேண்டும். தவறான வழியில் பயன்படுத்தப்படாமல் இருப்பதற்காக,அதன் வீடியோவை எக்காரணம்கொண்டும் எடுக்கக்கூடாது," என்று அவர் குறிப்பிட்டார்.

"இந்த வேலையை நீங்கள் உங்கள் வீட்டிலேயே செய்யலாம். கொடியை சேகரிப்பவர்களின் சேவை உங்களுக்கு தேவைப்படாது," என்கிறார் அசீம் கோலி.

காணொளிக் குறிப்பு, நேதாஜி படையில் இருந்த அனுபவத்தைப் பகிரும் 90 வயது பாட்டி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: