இலங்கை நெருக்கடி: "போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலை விவாதிக்க நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும்" - எதிர்க்கட்சி கோரிக்கை

பட மூலாதாரம், Lakshman Kiriella/Twitter
(இந்தியா, இலங்கையில் இன்று (24.07.2022) நாளிதழ்கள் மற்றும் இணையத்தில் வெளியான செய்திகளில் கவனிக்க வேண்டிய சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)
காலிமுகத் திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விவாதம் நடத்துவதற்கு நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு பிரதமரிடம் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளதாக வீரகேசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதுகுறித்த செய்தியின்படி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதான ஒருங்கிணைப்பாளும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கு கடிதம் மூலம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், "காலிமுகத் திடல் கோட்டா கோ கம அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அடக்குமுறை தாக்குதல் மற்றும் தாக்குதல் நடத்தப்பட்ட விதம் ஜனநாயகத்திற்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதைப் பலரும் வன்மையாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
காலிமுகத் திடல் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து விவாதம் நடத்துவதற்காக நாளைய தினம் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள்.
மேலும், காலிமுகத் திடல் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் கடுமையான தாக்குதல் தொடர்பில் பல்வேறு சர்வதேச சமூகம் சார்ந்த அமைப்புகளும் சர்வதேச நாடுகளும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், இவ்விடயம் இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை மேலும் உக்கிரமடையச் செய்யும்.
அதற்கமைவாக, குறித்த தாக்குதல் குறித்து விவாதிக்க நாளைய தினம் நாடாளுமன்றத்தைக் கூட்டி விவாதத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் கோரிக்கை விடுக்கிறோம்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத சுரங்கங்களை எதிர்த்து தீக்குளித்த சாமியார் மரணம்
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் செயல்பட்டு வரும் சட்டவிரோத சுரங்கங்களுக்கு எதிராகக் கடந்த 20-ஆம் தேதியன்று தீக்குளித்த சாமியார் விஜய் ராகவ் தாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதுகுறித்த செய்தியின்படி, ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் சட்டவிரோத சுரங்கங்கள், குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சட்டவிரோத சுரங்கங்களில் இருந்து கனிமங்கள், மணல் எடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனிடையே, இந்த சட்டவிரோத சுரங்கங்கள், குவாரிகள் அமைந்துள்ள பகுதி இந்து மத கடவுள் கிருஷ்ணர் சிறுவயதில் விளையாடிய பகுதி என்றும் இந்தப் பகுதிகளில் செயல்பட்டு வரும் சட்டவிரோத சுரங்கங்களை மூட வேண்டும் என்றும் கடந்த ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி முதல் விஜய் ராகவ் தாஸ் என்ற சாமியார் பசோபா என்ற கிராமத்தில் போராட்டத்தைத் தொடங்கினார்.
பல மாதங்களாக அவர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலை, போராட்டத்தில் 550-வது நாளான கடந்த 20-ஆம் தேதியன்று சாமியார் விஜய் ராகவ் தாஸ் அதிகாரிகள் முன்னிலையில் தீக்குளித்தார். அப்போது, அங்கிருந்த அதிகாரிகளும் காவல்துறையினரும் கடுமையான தீக்காயங்கள் அடைந்த சாமியார் விஜய் ராகவ் தாஸை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டதையடுத்து, சாமியார் ராஜஸ்தானிலிருந்து டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காகக் கொண்டு வரப்பட்டார். ஆனால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் சாமியார் ராகவ் தாஸ் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உயிரிழந்த சாமியார் விஜய் ராகவ் தாஸின் உடல் அவருடைய சொந்த ஊரான உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் இருக்கும் பர்சானா பகுதியில் நேற்று தகனம் செய்யப்பட்டது.
4 கோடி பேர் ஒரு டோஸ் கூட செலுத்திக் கொள்ளவில்லை
இந்தியாவில் இன்னமும் நான்கு கோடி பேர் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி கூட செலுத்திக் கொள்ளவில்லை என்று நாடாளுமன்ற கேள்விக்கான பதிலில் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் கூறியிருப்பதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியின்படி, நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் பாரதி பிரவின் பவார் அளித்த பதிலில், "கடந்த 18ஆம் தேதி நிலவரப்படி, மத்திய அரசின் இலவச கொரோனா வைரஸ் தடுப்பூரி திட்டத்தின் கீழ் 178, 38,52,566 டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 4 கோடி பேர் ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்திக் கொள்ளவில்லை" எனக் கூறப்பட்டுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டோரில் 98 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒரு டோசும் 90 சதவீதம் பேர் 2 டோசும் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஜூலை 15 முதல் 75 நாட்களுக்கு அரசு மையங்களில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணியளவில் வெளியிட்ட புள்ளி விவரத்தில், "கடந்த 24 மணி நேரத்தில் 21,411 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 5,25,997 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,50,100 ஆகியுள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரில் இது 0.34 சதவீதம். 98.46 சதவீதம் பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
தினசரி பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவோரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரின் விகிதம் 4.46 சதவீதமாகவும் வாராந்திர சராசரி 4.46 சதவீதமாகவும் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 201.68 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது," என்று கூறப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்






















