மேலவளவு படுகொலை நடந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகும் அடிப்படை வசதிகள் இல்லை

பிரசுரிக்கப்பட்டது

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மேலவளவு கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் முருகேசன். தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர், தலைவரானதை அப்பகுதியைச் சார்ந்த மற்றொரு சமூகத்தினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தேர்தலில் போட்டியிடும்போதே முருகேசனை எதிர்த்துள்ளனர். மேலும் கொலை செய்து விடுவதாக மொட்டை கடுதாசி அனுப்பியுள்ளனர். அவர்களின் அடக்குமுறையை மீறி முருகேசன் ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்தார்.

ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசனும் அவரது சமூகத்தைச் சேர்ந்த 5 பேரும் கடந்த 1997ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றுவிட்டு மேலூர் அருகே பேருந்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த சிலர் ஓடும் பேருந்தை வழிமறித்து பேருந்துக்குள் ஏறி முருகேசனை வெட்டினர். மேலும் ஐந்து பேரையும் பேருந்திலேயே வெட்டிப் படுகொலை செய்தனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரையும் அதேநாளில் படுகொலை செய்தனர்.

இந்த படுகொலை சம்பவம் நடைபெற்று ஏறத்தாழ 25 ஆண்டுகள் கடந்து விட்டன. இருப்பினும் மேலவளவு காலனி பகுதி இன்னும் முழுமை பெறாமலே தனித்து விடப்பட்டுள்ளது. காலனியில் பெரும்பாலான வீட்டில் கழிப்பறை வசதி இல்லை. கழிப்பறை வசதி இல்லாததால் இன்னமும் திறந்த வெளியில்தான் மலம் கழிக்கின்றனர்.

தயாரிப்பு: பிரசன்னா வெங்கடேஷ்

படத்தொகுப்பு: ஜனார்த்தனன் மாதவன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :