திருத்தணியில் முதியவர் தற்கொலை - நீதி கேட்டு மறியல் செய்த பழங்குடியினர்

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஜாதி சான்றிதழ் வேண்டி 40 ஆண்டு காலமாக போராடிய பழங்குடி இனத்தைச் சார்ந்த முதியவர் தாலுகா அலுவலக வாயிலில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, பள்ளிப்பட்டு, பொதட்டூா்பேட்டை, அகூா், சொரக்காய்பேட்டை, பாண்ரவேடு மற்றும் சுற்றியுள்ள 11 கிராமங்களில் பழங்குடியின கொண்டா ரெட்டி மலை ஜாதி மக்கள் வாழ்ந்து வருகின்றனா். இவா்களுக்கு, கடந்த 50 ஆண்டுகளாக 'கொண்டா ரெட்டி' ஜாதி சான்றிதழ் வழங்கவில்லை என மாநில அரசிடமும், மத்திய அரசிடமும் தொடா்ந்து மேற்கண்ட கிராம மக்கள் தொடர்பு புகார் அளித்து வருகின்றனர்.

இதில் பள்ளிப்பட்டு அடுத்த கீளபூடி கிராமத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் ஜி.எம்.பெரியசாமி ரெட்டி என்பவர் தன் இன மக்களுக்காக திருவள்ளூர் மாவட்ட வருவாய் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் முதல் மாவட்ட ஆட்சியர் வரை ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி கடந்த 40 ஆண்டு காலமாக பல கட்டமாக போராட்டம் நடத்தி வந்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக 2021ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தின் போது முதியவர் ஜி.எம். பெரியசாமி ரெட்டி அதிகாரிகள் முன்னிலையிலே உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்டு பிறகு காப்பாற்றப்பட்டார்.

சுமார் 40 ஆண்டுகளாக போராடி வந்த அவர், தற்கொலை முயற்சி சம்பவத்துக்குப் பிறகும் போராட்டத்தைத் தொடர்ந்தார். ஆனால், அதற்குப் பலன் கிடைக்கவில்லை.

தாலுகா அலுவலக வளாகத்தில் சம்பவம்

இந்த நிலையில், தனக்கும் தனது இன மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. ஜூன் 4ஆம் தேதி அவர் பள்ளிப்பட்டு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள கொடி கம்பத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த மக்கள், தொடர்ந்து தாங்கள் அழைக்கழிக்கப்படுவதாகக் கூறுகின்றனர்.

பெரியவர் பெரியசாமி இறப்புக்குப் பிறகு கொண்டாரெட்டி மலைவாழ் மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் திருத்தணி அரசு மருத்துவமனையில் இருந்து பேரணியாக வந்து சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதற்கிடையே, மலைவாழ் மக்கள் சங்கத்தினர் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கொண்டா ரெட்டி மலை வாழும் மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும், அந்த இனமக்களை தரக்குறைவாக நடத்தக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்தனர். திருத்தணி ஆர் டி ஓ பவித்ரா அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதன் பிறகு கொண்டாரட்டி மலைவாழ் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஜாதி சான்றிதழ் வழங்குவதற்காக முழுமையாக ஆவணம் தயார் செய்யப்பட்டு அது வழங்கப்படும் வேளையில், அந்தப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் இட மாற்றம் செய்யப்படுகிறார்கள். அந்த இடத்துக்கு புதிய அதிகாரி வந்ததும், அவர் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து ஆவணம் தயாரிக்கும் பணியை மேற்கொள்கிறார். இதனாலேயே தாமதம் ஏற்படுகிறது. கடந்த 50 ஆண்டு காலமாக 11 கிராம மக்களுக்கு அவர்கள் சார்ந்த ஜாதி சான்றிதழ் சரிவர கிடைப்பதில்லை என்கிறார் உயிரிழந்த முதியவரின் மகன் மணி.

"2020ஆம் ஆண்டு தேசிய பழங்குடியினா் ஆணையத்தின் உறுப்பினா் மாயா சின்தமன் ஐவினேடி, அப்போதைய திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் ஆகியோா் திருத்தணி அருகே கீளபூடி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு, கொண்டா ரெட்டி இன மக்களிடம் கலந்துரையாடி, குறைகளைக் கேட்டறிந்தனா். அதில், கொண்டா ரெட்டி மக்களுக்கு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அப்போது திடீரென பரவிய கொரோனா காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்தது இதனால் மீண்டும் ஜாதிச் சான்றிதழ் வழங்கும் பணி கிடப்பில் போடப்பட்டது," என்கிறார் மணி.

பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்லும் பொழுது ஜாதி சான்றிதழ் இல்லாததால் மேற்படிப்பு படிப்பதில் பல்வேறு சிக்கல்களை மாணவர்கள் தொடர்ச்சியாக அனுபவித்து வருவதாக சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா எல்லப்பன் தெரிவித்தார்.

"பழங்குடியினர் என்பதற்கான ஜாதி சான்றிதழ் இல்லாத காரணத்தினால் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சலுகை எதையுமே எங்களால் அனுபவிக்க முடியவில்லை. மருத்துவ மேற்படிப்பு படிக்க வேண்டும் என்கின்ற கனவோடு இருக்கும் மாணவர்கள் இதில் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனது ஊராட்சி மன்றம் பழங்குடியினர் பிரிவில் ஒதுக்கப்பட்டது இந்த ஊராட்சியில் நான் போட்டியிடுவதற்கு ஜாதி சான்றிதழ் வாங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டேன். தற்பொழுது என் பிள்ளைகளுக்கு ஜாதி சான்றிதழ் இல்லை என்றார். 11 கிராமங்களில் இதுவரை 406 பேர் ஜாதி சான்றிதழ் கேட்டு சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர்கள் சான்றிதழுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் மனு மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. தற்போது தற்கொலை செய்து கொண்ட முதியவர் பல்வேறு அவமானங்களை கடந்த 40 ஆண்டுகளாக அனுபவித்து வந்தார். அதன் நீட்சியாகவே மன உளைச்சல் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்திருக்கிறார் என்பது வேதனை தருகிறது," என்கிறார் சரண்டா எல்லப்பன்.

1997 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை திருத்தணி தாலுகாவுக்கு உள்பட்ட பகுதியில் வசித்து வரும் கொண்டா ரெட்டி மக்களுக்கு ஜாதி சான்றிதழ் எதுவும் வழங்கப்படவில்லை அது ஏன் என்று தெரியவில்லை இனிமேல் தான் இது குறித்து விசாரிக்க வேண்டும் என திருத்தணி ஆர் டி ஓ பவித்ரா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டில் ஒருமுறை மட்டுமே இந்த இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. அந்த நடவடிக்கையும், தற்போது விசாரணை கமிட்டியின் பரிசீலனையில் இருக்கிறது. அதன் இறுதி முடிவு வந்த பிறகே முழுமையான தகவல் தெரிய வரும் என்கிறார் பவித்ரா.

மேலும் இது குறித்து உரிய விளக்கம் அளிக்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி அமைச்சர் கயல்விழி செல்வராஜை பலமுறை தொடர்பு கொண்டோம். அவர் பதில் அளிக்கவில்லை. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டபோதும் அவர் பதிலளிக்க விரும்பவில்லை என்ற தகவல் மட்டுமே நமக்கு வந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: