புதுச்சேரி: பரவும் காலராவை தடுக்க மக்கள் என்ன செய்ய வேண்டும்? - மருத்துவர் பதில்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரசாந்த் முத்துராமன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
புதுச்சேரியில் காலராவால் பாதிக்கப்பட்டு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் இணை நோய்களுடன் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் புதுச்சேரி அரசு தெரிவிக்கிறது.
நிலைமையின் தீவிரத்தன்மையைக் கணக்கில் கொண்டு, அங்கு பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காலரா பரவலுக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக, யூனியன் பிரதேச ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பிரதானமாக நீர் மாசுபாட்டால் பரவும் நோயான காலராவுக்கான அறிகுறிகள் என்ன? வரும் முன் காப்பது எப்படி? வந்தால் செய்ய வேண்டியவை என்ன? ஆகியவை குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இது குறித்து எளிமையாக விளக்குகிறார் மருத்துவர் பூபதி ஜான்.
காலரா பரவுவது எப்படி?
acute diarrhoeal disease எனப்படும், வயிற்றுப்போக்குடன் கூடிய உடல் உபாதைகள் வந்தாலே நாம் காலரா குறித்து சந்தேகம் கொள்வது நல்லது.
காலரா பரவுவதற்கு இரண்டு முக்கியமான காரணிகள் உண்டு. ஒன்று நீர் மற்றொன்று உணவு. மக்கள் பயன்படுத்தும் நீர் மாசடைந்திருந்தால் அதன் விளைவாக காலரா ஏற்படலாம். அதுபோலவே உணவும் சுகாதாரமற்றதாக இருந்தால் காலரா உருவாகலாம்.

பட மூலாதாரம், Getty Images
உணவைப் பொறுத்தவரை, ஈக்கள் முதன்மையான மாசுபடுத்திகளாக இருக்கின்றன.
குறிப்பாக,
- லேசாக அழுகிய பழங்களில் சிறுபகுதியை நீக்கிவிட்டு பயன்படுத்துவது,
- சுத்தமான நீரில் கழுவாமல் பயன்படுத்துவது
- சுகாதாரமற்ற நீரில் சமைக்கப்பட்ட உணவுகளை உண்பது ஆகியவற்றால் காலரா ஏற்படலாம்.
காலரா அறிகுறிகள் என்னென்ன?
- தொடர் வாந்தி அல்லது வாந்தி வருவது போன்ற உணர்வு
- வயிற்றுப்போக்கு
- காய்ச்சல்
- நா வறட்சி
- உடலில் நீரிழப்பு ஆகியவை காலராவின் பொதுவான அறிகுறிகள்.
இவை பொதுவான அறிகுறிகள் என்றாலும், காலராவில் சாதாரண நிலை, தீவிர நிலை, அதி தீவிர நிலை என்று மூன்று வகைகள் உண்டு.
சாதாரண நிலை:
- வயிற்றுப்போக்கு
- வாந்தி
- காய்ச்சல் ஆகியவை காலராவின் சாதாரண நிலைக்கான அறிகுறிகள்
தீவிர நிலை:
- வலியுடன் கூடிய அதிதீவிர வயிற்றுப்போக்கு
- அதீத தாகம்
- நா வறட்சி
- குறைந்த ரத்த அழுத்தம்,
- நீரிழப்பால் வரும் உடல் சோர்வு
- கண்கள் ஒளியிழந்து போதல்
- கண்ணங்கள் வற்றிப்போதல்
அதி தீவிர நிலை:
- சிறுநீரகம் செயலிழப்பு,
- மறதி,
- பார்வை மங்கல்,
- சுயநினைவு இழப்பு ஆகியவை காலராவின் அதிதீவிர நிலையின் அறிகுறிகளாகும்.
வருமுன் காப்பதற்கான வழிகள் என்ன?
சுகாதாரமான நீரும் உணவும்தான் வழி. நீரை எப்போதும் காய்ச்சிக் குடிக்க வேண்டும். காய்ச்சிக் குடிப்பதென்றால், நீர் சூடாகும் அளவுக்கு மட்டுமல்ல. நன்கு கொதிக்க வைத்து ஆறிய பின் பருக வேண்டும்.
சிலர், வெந்நீரில் சாதாரண நீரைக் கலந்து குடிக்கின்றனர். அது துளிகூட பயனற்றது. கிருமிகள் கொல்லப்பட்ட நீரில், மீண்டும் கிருமிகளைக் கலந்து குடிப்பது போலத்தான் இதுவும். எனவே, கொதிக்க வைத்த நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
பழங்கள், காய்கறிகளை கழுவி பயன்படுத்தும்போதும் கூட வெந்நீரை பயன்படுத்துவது சிறந்தது.
குளிர்பதனப் பெட்டியிலிருந்து எடுத்து அப்படியே சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
அத்துடன் உங்கள் பயன்பாட்டு நீர் சுகாதாரமாக உள்ளதா என்பதை உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் பரிசோதித்துக் கொள்ளலாம்.
இப்படியான வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் காலரா உள்ளிட்ட நீரினால் ஏற்படும் நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
ஒருவேளை வந்துவிட்டால் என்ன செய்வது?
பயப்பட வேண்டியதில்லை. முதலில் மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்து மாத்திரைகளையும் உட்கொள்ளக்கூடாது.

பட மூலாதாரம், Getty Images
தொடக்க நிலையில் வீட்டிலேயே, ஓ.ஆர்.எஸ் எனப்படும், உப்புக்கரைசல் (சோடியம்) வழங்குவது நீரிழப்பைத் தடுக்கும். பெரும்பாலான நேரங்களில் இந்த ஓ.ஆர்.எஸ். முறை மூலமே சரி செய்ய முடியும்.
இந்த ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள் அருகிலுள்ள மருந்துக்கடைகளில் கிடைக்கும்.
காய்கறிகள், பழங்கள் என நீர்ச்சத்து மிக்க உணவுப்பொருட்கள் சிலவற்றை பரிந்துரையுங்கள் என்றும் சிலர் கேட்கின்றனர். ஆனால், வயிற்றுப்போக்கு இருக்கும் சமயங்களில் திட உணவுகள் பரிந்துரைக்கு ஏற்றவை அல்ல.
மருத்துவரை அணுகியபின் நோயின் தீவிரத்தை பொறுத்து அவருக்கு குளுக்கோஸ் மற்றும் உடலுக்குத் தேவையான உப்புச்சத்துகள் உடலுக்குள் செலுத்தப்படும்.
வயது வந்த பெரியவர்களால் இதனைத் தாங்க முடியும். ஆனால், குழந்தைகள் இதனைத் தாங்க மாட்டர். அவர்களுக்குத்தான் உடனடியாக ஓ.ஆர்.எஸ். வழங்க வேண்டும்.
நாட்டு வைத்திய முறைகளைப் பின்பற்றுவதாக இலை, தழைகளை வழங்குவர். அது கூடாது.
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் என்றால், உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கிறார் மருத்துவர் பூபதி ஜான்.
முறையான மருத்துவச் சிகிச்சை வழங்கப்படாவிட்டால், காலரா உயிரைப்பறிக்கும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியது.
காலராவால் ஆண்டுதோறும் 13 லட்சம் முதல் 40 லட்சம் பேர் வரை பாதிக்கப்படுவதாகவும், 21,000 முதல் 1லட்சத்து 43ஆயிரம் பேர் வரை இறப்பதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையம் தெரிவிக்கிறது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்





















