யுக்ரேன் போர், சீனாவுடனான எல்லை பிரச்னை - ஜி7 மாநாட்டில் இந்தியாவுக்கு அழுத்தம் ஏற்படுமா?

பிரிக்ஸ் அமைப்பு

பட மூலாதாரம், TWITTER/@MEAINDIA

    • எழுதியவர், தில்நவாஸ் பாஷா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

பிரதமர் நரேந்திர மோதி வியாழக்கிழமையன்று பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாட்டில் வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் பங்கேற்றார். இதில் சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோதி ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜெர்மனி சென்றுள்ளார். ஜி-7 அமைப்பில் உறுப்பினராக இந்தியா இல்லை. ஆனால் இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பின் பெயரில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்றுள்ளார்.

யுக்ரேனில் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், சர்வதேச அமைப்புகளின் இத்தகைய மாநாடுகள் நடைபெறுகின்றன. அரசியல் ரீதியாகவும், ராஜரீக அடிப்படையிலும் உலகம் பிளவுபட்டு இருப்பது போன்ற சூழல் நிலவுகிறது.

பிரிக்ஸ் மாநாட்டில், சீன அதிபர் ஷி ஜின்பிங் 'நாடுகள் குழுவாக செயல்படுவதை குறிப்பிட்டு பேசினார். அவர் நேரடியாக எந்த பெயர்களையும் குறிப்பிடவில்லை. ஆனால் அவர் நேட்டோ போன்ற ராணுவ கூட்டமைப்பு மற்றும் குவாட் போன்ற அமைப்புகள் பற்றி பேசுகிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது.

இந்தியா நேட்டோவில் அங்கம் வகிக்கவில்லை. ஆனால் குவாட் அமைப்பின் முக்கிய உறுப்பினராக இந்தியா உள்ளது.

ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், TWITTER/@AMBQINGANG

பிரிக்ஸ் மாநாட்டில், ஷி ஜின்பிங் மேற்கத்திய நாடுகளையும் அவற்றின் குழுக்களையும் கடுமையாக தாக்கிப் பேசினார். ஆனால், பிரதமர் நரேந்திர மோதி பேசியப்போது, ​​அவர் அதிகம் பேசவில்லை. அவர் யுக்ரேன் போர் பற்றி பேசவில்லை. பிரிக்ஸ் அமைப்பின் கூட்டறிக்கையில் கூட யுக்ரேன் போர் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், நேட்டோ மற்றும் குவாட் ஆகியவற்றை குறிப்பிட்டு பேசியதைத் தவிர, ஷி ஜின்பிங் ரஷ்யாவுக்கு ஒருதலைப்பட்ச பொருளாதாரத் தடைகளை விதித்ததாகக் கூறி, அந்நாட்டிற்கு ஆதரவாக குரல் எழுப்பினார். அதே சமயம், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பொருளாதார தடைகளை குறித்து கேள்வி எழுப்பினார்.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், இந்தியாவை குறிவைத்து சீன அதிபர் ஷி ஜின்பிங் பேசியதாக நம்பப்படுகிறது. தற்போது ஜி-7 மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோதி செல்வதால், அங்குள்ள மேற்கத்திய நாடுகளின் தூதரக அழுத்தத்தை அவர் சந்திக்க நேரிடலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

உலகம் மிகவும் கடினமாக காலகட்டத்தில் உள்ள நிலையில், இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையை தெளிவாகக் கடைப்பிடிக்கிறது.

இந்தியா ஒருபுறம் சீனா மற்றும் ரஷ்யாவுடன் கூட்டு வைத்துள்ள அதே சமயத்தில், மேற்கத்திய நாடுகள், ஆசிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடனும் நல்லுறவை கொண்டுள்ளது.

இந்தியாவின் புதிய கூட்டணி, குவாட் அமைப்பாகும். இது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நாடுகளின் பாதுகாப்பு ஒத்துழைப்புக்காக உள்ளது.

இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும்?

மனோகர் பாரிக்கர் இன்ஸ்டிடியூட் ஃபார் டிஃபென்ஸ் ஸ்டடீஸ் அண்ட் அனாலிசிஸ் என்ற கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளரும் சர்வதேச விவகார நிபுணருமான ஸ்வஸ்தி ராவ், இந்தியா தனது அனைத்து வழிகளையும் திறந்து வைத்திருப்பது அவசியம் என்று கூறுகிறார்.

மேலும் அவர் கூறுகையில், "இந்தியா போன்ற நடுத்தர அளவிலான வலிமை கொண்ட நாடு, அதன் அனைத்து வழிகளையும தொடர்ந்து திறந்து வைத்திருக்க வேண்டும். இந்தியாவின் ராஜரீக மற்றும் மூலோபாயம், உத்திமுறை தன்னாட்சியை அடிப்படையாகக் கொண்டது. முன்பு இது அணிசேரா என்று அழைக்கப்பட்டது. இந்தியா எதிலும் சேர விரும்பவில்லை என்பதே இதன் அர்த்தம். இந்தியா தனது தேசிய நலன்களை முதன்மையாக கொண்டு, அதன் உத்திமுறை சுயாட்சியைப் பாதுகாக்க வேண்டும்."

கேட்வே ஹவுஸ் ஆய்வு கழகத்தை சேர்ந்த இந்தியாவின் முன்னாள் தூதுவரும், பல நாடுகளில் பணிபுரிந்த அனுபவமும் கொண்டவரான ராஜீவ் பாட்டியா, இந்தியா தனது நலன்களை முதன்மைப்படுத்தும் கொள்கையைப் பின்பற்றுகிறது என்று கருதுகிறார்.

இது குறித்து பாட்டியா கூறும்போது, "கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை நன்றாக உள்ளது. இப்போது இந்தியா தமது தோழமை நாடு என்பதை மேற்கத்திய நாடுகள் அறிந்து கொண்டாலும், ஒரு கட்டத்தைத் தாண்டி இந்தியாவை அடக்க முடியாது என்பதையும் புரிந்துக்கொண்டிருக்கின்றன.

மறுபுறம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்னைகள் தீர்க்கப்படாத வரை , மற்ற துறைகளில் அதன் உறவுகள் வலுப்பெறாது என்பதில் சீனாவுக்கும் தெளிவாகியுள்ளது. இந்தியா-ரஷ்யா இடையிலான உறவும் வலுவாக உள்ளது என்று தெளிவாக கூறலாம். ஆனால் ரஷ்யா எது செய்தாலும், அதை இந்தியா ஆதரிக்கும் என்று அர்த்தம் இல்லை. எவ்வளவு உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்னைகள் இருந்தாலும், இன்று இந்தியா வெளியுறவுக் கொள்கையை மிகவும் புத்திசாலித்தனமாக கையாண்டு வருகிறது." என்கிறார்.

இந்தியா ஏன் பிரிக்ஸ் அமைப்பில் உள்ளது?

14வது பிரிக்ஸ் உச்சி மாநாடு

பட மூலாதாரம், TWITTER/@MEAINDIA

படக்குறிப்பு, 14வது பிரிக்ஸ் உச்சி மாநாடு

பிரிக்ஸ் அமைப்பில் இருப்பதால், இந்தியாவுக்கு எந்த பிரத்யேக நன்மையும் இல்லை. ஏனெனில், சீனாவாக இருந்தாலும், அதற்கு பெரிய பொருளாதார சக்தி எதுவும் இல்லை. இதற்கு அதிக ராஜரீக பலமும் இல்லை.

ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள் கொண்ட ஓர் அமைப்பில், அமெரிக்காவுடன் உறவு வைத்திருக்கும் நாடுகளோ அல்லது ஜனநாயக நாடுகளோ எப்போதும் சமநிலையற்றதன்மையில் இருக்கும். இப்போது கேள்வி என்னவென்றால் இந்தியா ஏன் பிரிக்ஸ் அமைப்பில் உள்ளது என்பதுதான்.

அதற்கான காரணத்தை விளக்கும் ஸ்வஸ்தி ராவ், "பிரிக்ஸ் அமைப்பு என்பது வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட அமைப்பாக இருப்பது முதல் காரணம். எதிர்காலத்தில் அவை இன்னும் பெரியதாக உருவாகக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், இந்தியா எந்த வாய்ப்பையும் விட்டு வைக்க விரும்பவில்லை.

இதன் மூலம், உலகளாவிய தெற்கில் (பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் நாடுகள்) நாம் நமது இடத்தை தக்க வைத்துக் கொள்கிறோம். இதில் லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா மற்றும் ஆசியா ஆகியவற்றின் பொருளாதாரங்களும் அடங்கும்.

நாடுகளிடையிலான நமது எல்லையளவை தக்கவைக்க ஒரு சிறந்த வழியாக பிரிக்ஸ் அமைப்பு இருக்கும். உலகில் டாலரின் பயன்பாட்டை நிறுத்துதல், இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் அதற்கு இணையான கட்டண முறைகளை உருவாக்க 'ஸ்விஃப்ட்' வங்கியைத் தவிர, தங்கள் சொந்த வங்கி அமைப்புகளை உருவாக்குகின்றன.

அதே நேரத்தில், பிரிக்ஸ் அமைப்பு என்பது ரஷ்யாவும் சீனாவும் இருக்கும் ஒரு தளமாகும் அத்தகைய சூழ்நிலையில் அதன் வெளியுறவுக் கொள்கையில் சமநிலையைக் காக்க இந்தியாவுக்கு அது வாய்ப்பாக இருக்கும்.

பிரிக்ஸ் அமைப்புக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் இப்போது இந்தியாவுக்கு குறைந்துவிட்டது என்றும் ராஜீவ் பாட்டியா கருதுகிறார். இதுபற்றி பாட்டியா கூறுகையில், "இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு இன்னும் கடினமாக உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோதி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்று இருக்கலாம். ஆனால் அங்கு மிக குறைவாகவே பேசினார். இந்த சமயத்தில், பிரிக்ஸ் அமைப்பின் மீதான இந்தியாவின் ஆர்வம் முன்பைவிட குறைந்து விட்டது," என்கிறார்.

இந்தியா ஏன் குவாட் அமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறது?

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

குவாட் அமைப்பு என்பது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய அமைப்பாகும். குவாட் அமைப்பின் பொருளாதார, அரசியல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கும். ஏனெனில், இதில் இந்தியாவுடன் இருக்கும் நாடுகளுக்கு பொருளாதார பலம் அதிகமாக உள்ளது. உலகின் பொருளாதாரத்தில் வலுவான நாடுகளான ஜப்பானும் அமெரிக்காவும் உள்ளன.

ஆஸ்திரேலியா தாமாக பொருளாதாரத்தில் வலுவாக உள்ள நாடு. அது சீனாவுடன் நேரடியாகப் போட்டியிடுகிறது.

இதுபற்றி ஸ்வஸ்தி ராவ் கூறுகையில் "பிரிக்ஸ் அமைப்புடன் இணைவதால் இந்தியாவுக்கு பெரிய நன்மை இல்லை. ஆனால் அப்படி இணையாவிட்டால், இந்தியாவுக்குதான் இழப்பு அதிகமாக இருக்கும். அதேசமயம், குவாட் அமைப்பு இந்தியாவுக்கு மிகவும் பயனுள்ள அமைப்பாகும். அத்தகைய சூழ்நிலையில், இந்தியா இப்போது குவாட் அமைப்புக்கு முன்னுரிமை அளிக்கிறது." என்கிறார்.

"இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய நோக்கங்களுக்கு குவாட் முக்கியமானது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த அமைப்பின் மூலம் இந்தியாவும் தனது கடற்படை பாதுகாப்பை பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கிற்கு பதிலடி கொடுக்க இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இவ்வாறான சூழ்நிலையில், இந்தியா மேற்கத்திய நாடுகளின் பக்கம் சாய்வதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன.

குவாட் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குவாட் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி

ராஜீவ் பாட்டியா கூறும்போது, "குவாட் அமைப்பில் இந்தியாவுக்கும் முக்கியப் பங்கு உண்டு. ஒரு புதிய அமைப்பு உருவாகிய நிலையில், இந்திய-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பில் இந்தியா முன்னணியில் உள்ளது. இவை அனைத்திலும் சீனா மற்றும் ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு சற்றே கடினமாகிவிட்டது என்று தெளிவாகிறது. அதே சமயத்தில், மேற்கத்திய நாடுகளுடனான இந்தியாவின் உறவு வலுவாக உள்ளது.

ஜி-7 மாநாட்டில் ரஷ்யாவை விமர்சிக்க மோதிக்கு அழுத்தமா?

ஜி-7 என்பது உலகின் பொருளாதாரம் அடிப்படையில் மிகவும் வளர்ந்த நாடுகளைக் கொண்டுள்ள அமைப்பாகும். இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன.

முன்பு, ரஷ்யா அதன் உறுப்பினராக இருந்தது.ஆனால் கிரிமியா மீது ரஷ்யா படையெடுப்பிற்குப் பிறகு, ரஷ்யா அதிலிருந்து நீக்கப்பட்டது. இதில் சீனாவால் எப்போதும் இடம் பிடிக்க முடியவில்லை.

இம்முறை ஜி-7 உச்சி மாநாட்டிற்கு இந்தியாவும், தென்னாப்பிரிக்காவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆசியான் அமைப்பின் வளரும் நாடான இந்தோனேஷியாவுக்கும் இம்முறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளை அழைப்பதற்கு அரசியல் காரணங்கள் உள்ளன. ஏனெனில் இந்த நாடுகளை ஈடுபடுத்துவதன் மூலம், யுக்ரேன்ன் போரின் பின்னணியிலும், இந்தோ-பசிபிக் மூலோபாயத்தின் பின்னணியிலும், வளர்ந்த நாடுகள் உலகளவில் தெற்கு நோக்கி உதவி கேட்க முடியும். இது தவிர பருவநிலை மாற்றம், தடுப்பூசி ராஜரீகம் குறித்தும் பேசலாம். வளர்ந்த நாடுகள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.

ஜி-7 மாநாட்டிலும் யுக்ரேன் போர் பிரச்னை குறித்து பேசப்படலாம், யுக்ரைன் பற்றி ஏதாவது பேச வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோதிக்கு அழுத்தம் கொடுக்கப்படலாம். எப்படி இருந்தாலும், அழுத்தம் இருந்தபோதிலும், இந்தியா இதுவரை தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதுபற்றி ஸ்வஸ்தி ராவ் கூறுகையில், "ஜி-7 மாநாட்டிற்கு இந்தியா அழைக்கப்படுவதற்கு முக்கியக் காரணம், மேற்கத்திய நாடுகள் மீண்டும் இந்தியாவுடன் இணைய விரும்புகின்றன. ஆனால், யுக்ரைன் போர் குறித்து இந்தியா எந்த நிலைப்பாட்டும் எடுக்காது என்று தெளிவுபடுத்தி விட்டது.

பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், @MEAINDIA

நீங்கள் ரஷ்யாவை வெளிப்படையாக விமர்சிக்காவிட்டாலும், பகிரப்பட்ட ஓர் ஜனநாயக நிலைப்பாட்டில் இணைந்திருங்கள் என்று மேற்கத்திய நாடுகள் இந்தியாவிடம் சொல்ல விரும்புகின்றன.

ஜி-7 மாநாட்டில் மோதிக்கு அழுத்தம் இருக்குமா என்பது குறித்து, பாட்டியா கூறுகையில், "அந்த அழுத்தம் இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம். ஆனால் மேற்கத்திய அரசுகளுக்கு இது நன்றாகத் தெரியும் என்று நம்பிக்கையுடன் கூறலாம். யுக்ரேன் குறித்து இந்தியாவின் நிலைப்பாடு என்பது புதிதல்ல.

பனிப்போர் முடிவுக்கு வந்த பிறகு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை சரியாக கையாளவில்லை என்பதுதான் புதிது. அதுதான் இன்றைய நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

இந்தியா இதில் ஆக்கப்பூர்வமாக செயல்பட முயற்சிக்கிறது. போரினால் எந்தப் பிரச்னையும் தீர்க்கப்படாது என்பது இந்தியாவின் நிலைப்பாடு. அது ராஜரீக முறையில்தான் தீர்க்க முடியும் என்று நினைக்கிறது. இத்தகைய அழுத்தம் இந்திய அரசுக்கு எப்போதெல்லாம் எழுகிறதோ, அப்போதெல்லாம் போரை விட்டு விலகி ராஜரீக பாதையில் செல்லுங்கள் என்று இந்திய அரசு கூறும். இத்தகைய சூழ்நிலையில், இந்தியப் பிரதமருக்கு எந்த அழுத்தமும் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரியவில்லை. அழுத்தங்களுக்கு அடிபணியும் பேச்சுக்கே இடமில்லை," என்கிறார்.

மறுபுறம், யுக்ரேன் மீதான இந்தியாவின் நிலைப்பாடு சார்பற்றதாக இருக்கும் என்று ஸ்வஸ்தி ராவ் நம்புகிறார். அவர், "யுக்ரேனைப் பொறுத்தவரை இந்தியாவின் தரப்பு தொடக்கம் முதலே சார்பற்றதாக இருந்ததுள்ளது. இனியும் அப்படித்தான் இருக்கும். இந்த நிலைப்பாடு காரணமாக, இந்தியா பிரிக்ஸ் அமைப்பில் உள்ளது; குவாட் அமைப்பில் உள்ளது; அது ஜி-7 மாநாட்டிற்கு அழைக்கப்படுகிறது. மேலும் பிரதமர் நரேந்திர மோதி மற்ற சர்வதேச மாநாடுகளுக்கும் செல்கிறார்."

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: