அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடக்குமா? தீவிரமாகிறது ஓபிஎஸ், இபிஎஸ் 'தலைமை சர்ச்சை'

அதிமுக தற்கொலை

பட மூலாதாரம், @AIADMKOfficial

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அ.தி.மு.க பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 'பொதுக்குழு கூட்டத்தை நிறுத்துவதற்கு வாய்ப்பே இல்லை. ஓ.பி.எஸ் கூறுவதுபோல சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பதற்கு விதிகளில் இடமில்லை' என்கின்றனர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர். என்ன நடக்கிறது அதிமுகவின் இந்த இரு தலைவர்களின் முகாம்களில்?

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் வரும் 23ஆம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஒற்றைத் தலைமையாக அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு எதிராக, கடந்த ஒரு வாரமாக ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் தரப்பினர் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் தொண்டர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவமும் நடந்தது.

இதையடுத்து, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தம்பிதுரை உள்ளிட்டோர் இரண்டு தரப்பிடமும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். இதில், ஓ.பி.எஸ் தரப்பினர் தங்கள் நிலையை தெளிவாகக் கூறிவிட்டதாகத் தெரிகிறது. இருவர் இடையே நடக்கும் சமாதான பேச்சுவார்த்தைகளில் சுமூகமான முடிவுகள் எதுவும் இதுவரையில் எட்டப்படவில்லை.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இந்த நிலையில் 'அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டவர்கள், பொதுக்குழுவில் இடையூறு ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதால், உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும்' எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மனு தாக்கல் செய்துள்ளார்.

பாதுகாப்பு கேட்டும் பதில் இல்லை

அதிமுக பொதுக்குழு ஓபிஎஸ் இபிஎஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

அந்த மனுவில், ' பொதுக்குழுவில் முன்னாள் முதலமைச்சர்கள், 65 எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர். அந்த கூட்டத்தில் 2,500 பேர் பங்கேற்க உள்ளனர். தனியார் மண்டபத்தில் நடக்கும் இந்தக் கூட்டத்துக்கு அனுமதி பெறத் தேவையில்லை என்றாலும் பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டவர்களால் இடையூறு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது தொடர்பாக கடந்த 7ஆம் தேதியே ஆவடி மாநகர ஆணையர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநரிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை' என பெஞ்சமின் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, பொதுக்குழு கூட்டத்துக்கு பாதுகாப்பு வழங்குமாறு டி.ஜி.பி, ஆவடி காவல் ஆணையர் மற்றும் திருவேற்காடு காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு உத்தரவிடுமாறு பெஞ்சமின் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கோரியுள்ளார்.

இதேவேளை, அ.தி.மு.க பொதுக்குழு தேதியை தள்ளிவைக்குமாறு எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் இடம்பெற்றுள்ள விவரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், 'வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பது குறித்து முடிவெடுக்க கடந்த 14ஆம் தேதி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி கூறினார். பொதுவாக மூத்த தலைவர்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைப்பது நடைமுறை.

பொதுக்குழு அஜெண்டா என்ன?

அதிமுக பொதுக்குழு ஓபிஎஸ் இபிஎஸ்

பட மூலாதாரம், @AIADMKOfficial

இதே மண்டபத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பலமுறை பொதுக்குழுவை நடத்தியபோது சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். தற்போது அதே மண்டபத்தில் கூட்டம் நடந்தாலும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு இல்லை எனக் கூறுவது ஏற்புடையதாக இல்லை. முன்னறிவிப்பு இல்லாமல் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விதிகள் அறியாமல் சிலர் கருத்து தெரிவித்தனர். இதனால் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தொண்டர்களும் கொதித்துப் போய் உள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட அசாதாரண சூழலில் பொதுக்குழுவின் அஜெண்டா பற்றிய தகவல் எதுவும் தங்களுக்குத் தரப்படவில்லை என மாவட்ட செயலாளர்களும், பொதுக்குழு உறுப்பினர்களும் என்னிடம் (ஓ.பி.எஸ்) முறையிட்டுள்ளனர். கூட்டத்துக்கான பொருள், அஜெண்டா ஆகியவற்றை நிர்ணயம் செயது நடத்துவது அவசியம் என சட்ட வல்லுநர்களும் தெரிவித்துள்ளனர். எனவே, பொதுக்குழுவுக்கான புதிய தேதியை கலந்து பேசிய பிறகு அறிவிக்கலாம்' எனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வைத்திலிங்கம் தெரிவித்தார்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 'காலத்தின் கட்டாயத்தால்தான் ஒற்றைத் தலைமை என்பது பிரதிபலிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. கட்சியைப் பொறுத்தவரையில் பொதுக்குழுதான் முடிவு செய்யும். திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும். அதில் சுமூகமான முடிவு எட்டப்படும்' என்றார்.

அதேநேரம், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வேலூர் உள்பட சில மாவட்டங்களில் ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருவதும் ஓ.பி.எஸ் தரப்பினரின் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, தனது ஆதரவாளர்களிடமும் ஓ.பி.எஸ் தீவிர ஆலோசனையை நடத்தி வருகிறார்.

கட்சி விதிகளில் இடமில்லை

அதிமுக பொதுக்குழு ஓபிஎஸ் இபிஎஸ்
படக்குறிப்பு, பாபு முருகவேல்

பொதுக்குழுவை ஒத்திவைப்பது தொடர்பாக ஓ.பி.எஸ் கடிதம் எழுதியுள்ளது குறித்து அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும் வழக்குரைஞருமான பாபு முருகவேலிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம்.

''பொதுக்குழு கூட்டத்தை நிறுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை. இந்தக் கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டும் என ஓ.பி.எஸ் கூறியுள்ளார். அவ்வாறு சிறப்பு அழைப்பாளர்களை அனுமதிப்பதற்கு கட்சி விதியில் இடமில்லை. முன்னாள் எம்.பி, முன்னாள் எம்.எல்.ஏக்களை பொதுக்குழு கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளர்களாக அழைப்பது என்பது மரபு; ஆனால் கட்டாயம் அழைக்க வேண்டும் என்பது விதியில்லை. அவர்களுக்கு கூட்டத்தில் வாக்களிக்கும் உரிமையும் இல்லை. அதனை ஒரு விஷயமாக ஓ.பி.எஸ் முன்னிறுத்துகிறார். அதற்கு வாய்ப்பில்லை. ஒற்றைத் தலைமைதான் வரவேண்டும் என்பதில் தொண்டர்கள் உறுதியாக உள்ளனர். அதிலும் எடப்பாடி பழனிசாமிதான் வரவேண்டும் என்பதையும் 90 சதவீதம் பேர் ஏற்றுக் கொண்டனர்,'' என்கிறார்.

''கூட்டத்துக்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுக்கப்பட்டுள்ளதே?'' என்றோம்.

''தேவையில்லாமல் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதுதான் பிரதான காரணம். அதனால்தான் நீதிமன்ற அனுமதியோடு போலீஸ் பாதுகாப்பு கோரியுள்ளோம். அனைத்தையும் சுமூகமாக நடத்தி முடிக்க வேண்டும் என விரும்புகிறோம். பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை என்பது பொதுச் செயலாளர் பதவியா அல்லது வேறு எதாவது புதிய பதவியா என்பது தெரிந்துவிடும். இந்தக் கூட்டத்தில் ஓ.பி.எஸ் தரப்பினர் பங்கேற்கிறார்களா என்பதும் அன்றைக்குத் தெரிந்துவிடும்'' என்கிறார்.

அதிகாரப் போட்டி ஏன்?

அதிமுக பொதுக்குழு ஓபிஎஸ் இபிஎஸ்

பட மூலாதாரம், @kovaisundhar260

அ.தி.மு.கவில் நிலவும் குழப்பம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, ''அ.தி.மு.க நிலவும் அதிகாரப்போட்டி என்பது பிளவை நோக்கிச் செல்கிறது. குறிப்பாக, இரண்டு சாதிகளுக்கிடையேயான அதிகாரப் போட்டியாக மாறி விட்டது. இதில் ஒற்றைத் தலைமையாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அவ்வாறு வருவதன் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலினுக்கு எதிராக தானே அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக களத்தில் நிற்க முடியும் என நினைக்கிறார். இரட்டைத் தலைமை தொடர்ந்தால் அதற்கான வாய்ப்பு குறைவு என எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார்'' என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், ''ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி வந்துவிட்டால் எந்தவித செல்வாக்கும் இல்லாதவராகத்தான் ஓ.பி.எஸ் பார்க்கப்படுவார். அதனால் இதனை ஏற்கக் கூடாது என ஓ.பி.எஸ் தரப்பில் நினைக்கின்றனர். அதனால்தான் பொதுக்குழுவை தள்ளிவைக்குமாறு கடிதம் எழுதினார். சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினுக்குப் போட்டியாக வர வேண்டும் என ஓ.பி.எஸ்ஸும் விரும்புகிறார். இவர்கள் பிளவுபட்டாலும் அதனால் பா.ஜ.கவுக்கு நட்டமில்லை,'' என்கிறார்.

''ஓ.பி.எஸ் கடிதத்தையும் மீறி பொதுக்குழு கூட்டம் நடந்தால் என்ன நடக்கும்?'' என்றோம்.

''இரட்டை இலையை முடக்குவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. பொதுக்குழு கூட்டம் நடந்தால் டெல்டா மற்றும் தென்மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.கவினர் பிரச்னை செய்யலாம். இந்த விவகாரத்தில் டெல்லி தலைமையும் நடுநிலை வகிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் என நம்புகிறேன்,'' என்கிறார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: