பாட்டியை தீக்கிரையாக்கிய பேத்திகள் - நெல்லையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம்

பாட்டி கொலை
படக்குறிப்பு, மாரியம்மாள், மேரி
பிரசுரிக்கப்பட்டது

திருநெல்வேலியின் பேட்டை பகுதியில் வசித்து வரும் 80 வயது சுப்பம்மாள் என்ற மூதாட்டியை அவரது மகள் வழி பேத்திகள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொலை செய்துள்ள சம்பவத்தால் அப்பகுதிவாசிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த கொலைக்கான காரணம் என்ன?

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இருந்து பழைய பேட்டை செல்லும் வழியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சாலையோரம் பெண்ணின் சடலம் ஒன்று தீயில் எரிந்து கொண்டிருந்ததை பார்த்த ஆடு மேய்க்கும் சிலர் உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு கிடைத்த தடயங்களை சேகரித்தனர். பின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட பெண் யார்?

தீக்கிரையாக்கப்பட்ட அந்த பெண் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கொலை செய்து விட்டு தப்பி சென்றது இரு பெண்கள் என தெரிய வந்தது.

அந்த பெண்களை அழைத்துச் சென்ற ஆட்டோ டிரைவர் மாயாண்டி தானாக முன் வந்து காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில், கொலை செய்யப்பட்டவர் நெல்லை பேட்டையை சேர்ந்த 80 வயது சுப்பம்மாள் என்பதும், வயது முதிர்வு காரணமாக கவனிக்க ஆள் இல்லாததால் அவரின் மகள் வழி பேத்தி களான மாரியம்மாள் மற்றும் மேரி சுப்பம்மாளை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸார் கூறினர்.

இதையடுத்து மாரியம்மாள், மேரி ஆகிய இருவரையும் நெல்லை பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாட்டியுடன் தகராறு

பாட்டி எரித்துக் கொலை

பட மூலாதாரம், Getty Images

இந்த சம்பவம் குறித்து பேட்டை காவல் நிலைய போலீசார் பிபிசி தமிழிடம் கூறுகையில், "நெல்லை பேட்டையில் உள்ள மாரியம்மாள் வீட்டில் சுப்பம்மாள் வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு படியில் இருந்து சுப்பம்மாள் கீழே விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் அங்கிருந்து சுப்பம்மாள் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் அருகில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்க வைத்துள்ளனர். ஆனால் அங்கும் தங்காமல் 3 முறை அங்கிருந்து வீட்டுக்கு வந்து விட்டார்.

வீட்டிற்கு வந்த சுப்பம்மாள் வயது மூப்பின் காரணமாக பேத்தியுடன் தொடர்ந்து பிரச்னை செய்துள்ளார். நல்ல முறையில் கவனித்தும் தன்னை சரி வர மதிக்காமல் சண்டை போடுவதால் ஆத்திரமடைந்த மாரியம்மாள் அவருடைய தங்கை மேரியுடன் இணைந்து பாட்டி சுப்பம்மாளை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதற்காக மாரியம்மாள் கடந்த நான்கு நாட்களுக்கு முன் பெட்ரோல் பங்கில் 4 லிட்டர் பெட்ரோல் வாங்கி உள்ளார். ஆனால் தங்கை மேரிக்கு அதில் உடன்பாடு இல்லை.

கடந்த 2 நாட்களுக்கு முன் சுப்பம்மாளை பேத்தி மாரியம்மாள் வீட்டில் இருந்து புதுப்பேட்டையில் உள்ள தனது தங்கச்சி வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி மேரி மற்றும் மாரியம்மாள் ஆட்டோவில் அழைத்து வந்துள்ளனர்.

பேட்டை என்ற இடத்திற்கு அருகே வரும்போது இயற்கை உபாதைக்காக இந்த காட்டு பகுதிக்கு பாட்டியை அழைத்து செல்வதாக ஆட்டோ ஓட்டுநரிடம் தெரிவித்துவிட்டு மாரியம்மாள், மேரி மற்றும் சுப்பம்மாள் ஆகிய மூவரும் ஆட்டோவில் இருந்து இறங்கி சென்றுள்ளார்.

அங்கு உள்ள மறைவான பகுதிக்கு பாட்டியை மாரியம்மாள் அழைத்து சென்றுள்ளார். அப்போது மேரி சாலையில் நின்று யாராவது வருகிறார்களா என பார்த்துள்ளார். மாரியம்மாள் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி சுப்பம்மாள் பாட்டியை உயிருடன் எரித்துள்ளனர்.

வரும் போது பாட்டியுடன் மூன்று நபர்கள் வந்து விட்டு திரும்பி செல்லும் போது இருவர் மட்டும் அவசர அவசரமாக நடந்து சென்று அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்றில் ஏறி சென்றதையும், சந்தேகத்திற்கு இடமாக தீ எரிந்து கொண்டிருந்ததையும் பார்த்த அப்பகுதியில் ஆடு மேய்க்கும் ஒருவர் தீ எரியும் இடத்திற்கு சென்று பார்க்கும் போது சுப்பம்மாள் தீயில் எரிந்து கிடந்துள்ளார்," என்று கூறினர்.

கண்டுபிடித்தது எப்படி?

நெல்லை பாட்டி எரித்துக் கொலை

பட மூலாதாரம், Getty Images

இது குறித்து ஆடு மேய்க்கும் நபர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் சுப்பம்மாளின் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் மாரியம்மாள் வீட்டில் இருந்து சுப்பம்மாள் பாட்டியை அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் மாயாண்டி சமூக வலைதளத்தில் பேட்டை அருகே மூதாட்டி ஒருவர் எரிந்த நிலையில் கிடப்பதாக வீடியோ ஒன்றை பார்த்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த மாயாண்டி உடனடியாக அருகே உள்ள காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறியுள்ளார்.

மாயாண்டி அளித்த தகவலின் அடிப்படையில் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போலீசார் மூதாட்டியை எரித்து கொலை செய்தது மேரி மற்றும் மாரியம்மாள் தான் என உறுதி செய்தனர்.

இன்று காலை அவர்களை கைது செய்ய போலீசார் மாரியம்மாள் வீட்டுக்கு சென்ற போது, மாரியம்மாள் உடலில் கை, கால், முகம் உள்ளிட்ட இடங்களில் தீ காயம் ஏற்பட்டிருந்தது. இதுபற்றி அவரிடம் கேட்கும் போது பெட்ரோல் ஊத்தி எரிக்கும் போது திடீரென தீ தன் மீதும் பட்டதாகவும் வயது முதிர்வு காரணமாக கவனிக்க ஆள் இல்லாததால் பாட்டி சுப்பம்மாளை கொலை செய்ததாக மாரியம்மாள் ஒப்புக்கொண்டார்.

மேலும் இச்சம்பவம் குறித்து நேரடியாக போலீசாரிடம் தகவல் தெரிவித்த மாயாண்டியின் வாக்கு மூலத்தை சாட்சியாக கொண்டு மாரியம்மாள் மற்றும் மேரி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்றங்கள் குறித்து தகவல் தெரியும்போது அந்த நபர் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் குற்றங்கள் குறைய அதிக வாய்ப்பு உள்ளது. அதே போல் அந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் மீது குற்றம் சுமத்த வாய்ப்புகள் குறைவு என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இப்படியும் நடக்குமா?

இது குறித்து முதியோர் நல மருத்துவர் பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ் நடராஜன் பிபிசி தமிழிடம் பேசுகையில், வயது முதிர்வு காரணமாக கவனிக்க ஆள் இல்லாதவர்களை கருணைக் கொலை செய்வதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர்.

கருணைக்கொலை இரண்டு வகைகளில் செய்யப்படுகிறது. முதல் வகை சொத்துக்காகவும், நீண்ட நாட்கள் நோய் வாய்ப்பட்டு உள்ளவர்களையும் மருத்துவர்களைக் கொண்டு ஊசி போட்டு கொலை செய்வது இது 'Active Euthanasia' எனப்படும்.

மற்றொன்று நீண்டகாலமாக நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க பணம் இல்லாததாலும், தொடர்ந்து பணம் செலவு செய்தாலும் நோயிலிருந்து மீண்டு வர வாய்ப்பில்லை என்பவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை மருத்துகளை நிறுத்தி கருணை கொலை செய்வது இது 'Passive Euthanasia' எனப்படும்.

என்னை பொருத்தவரை இது கருணைக் கொலை அல்ல. கருணையற்ற கொலையாக பார்க்கிறேன். கருணைக் கொலை செய்ய உத்தரவிடும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு மட்டுமே உள்ளது. மற்றபடி யார் செய்தாலும் அது கொலையே.

மாவட்ட தலைமை இடத்தில் மட்டும் முதியோர் நல மருத்துவ பிரிவு இயங்கி வருகிறது. இதை கிராமப்புறங்களிலும், தாலுகா அளவில் முதியோர் நல மருத்துவ பிரிவை தொடங்கி அந்தப் பகுதிகளில் நீண்ட நாட்களாக நோயால் அவதியுற்று வரும் முதியோர்களை அனுமதித்து அவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருக்கக்கூடிய மருத்துவரை கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும் அப்படி செய்தால் இந்த கருணைக் கொலைகள் குறையும்.

திருநெல்வேலி பேட்டை பகுதியில் நடந்த சம்பவத்தை பொருத்தளவில் அந்த மூதாட்டிக்கு வயது மூப்பின் காரணமாக உளவியல் ரீதியான பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும், அதனால் தான் அவரை நீண்ட காலமாக பராமரித்து வந்த பேத்திகளுடன் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்துள்ளார்.

பேத்திகள் வேறு வழியில்லாமல் சூழ்நிலை காரணமாக இவ்வாறு கொலை செய்திருக்கலாம். இந்த கொலைக்கு அந்த மூதாட்டியும் காரணம். மூதாட்டிக்கு முன்னதாகவே உளவியல் ரீதியான கவுன்சிலிங் கொடுத்து இருந்தால் நிச்சயம் இதிலிருந்து மீண்டு கடைசி காலங்களில் பேத்திகளுடன் நல்ல முறையில் வாழ்ந்திருக்கலாம் என்கிறார் முதியோர் நல மருத்துவர் பத்மஸ்ரீ வி. எஸ். நடராஜன்

கவுன்சிலிங் தேவை

ராமநாதபுரம் கவுன்சிலிங்

பட மூலாதாரம், Getty Images

ராமநாதபுரம் மாவட்ட மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு தலைவர் பேராசிரியர் ஜேசுராஜ் பிபிசி தமிழிடம் பேசுகையில், நெல்லை மாவட்டத்தில் நடந்த அந்த கொலைக்கு நிச்சயம் அந்த பேத்திகள் காரணம்.

அவர்களுக்கும் அந்தப் பாட்டிக்கும் இடையே எந்த பிரச்சனை இருந்திருந்தாலும் தொடர்ந்து பாட்டியை கவனித்து இருந்திருக்க வேண்டும் அவர்கள் இதனை செய்திருக்க கூடாது. பேத்திகளுக்கு பாட்டியை பார்த்து கொள்ள கடமை உண்டு ஆனால் அவர்கள் அந்த கடமையை தவற விட்டதாக நான் பார்க்கிறேன்.

நிச்சயம் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். வயது மூப்பின் காரணமாக தொடர்ந்து பிரச்சனை செய்து வரும் அந்தப் பாட்டியை சரி செய்வதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. அதன் மூலம் அந்தப் பாட்டியை சரி செய்திருந்தால் நிச்சயம் அந்த பேத்திகளை பாராட்டி இருக்கலாம்.

வயது முதிர்வின் காரணமாக நிச்சயம் உளவியல் ரீதியான பாதிப்பு ஏற்படும், அந்த நபர்களை கண்டறிந்து அவர்களை முதியோர் நல மருத்துவ பிரிவில் அனுமதித்து சிகிச்சை மற்றும் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என ஜேசுராஜா கேட்டுக்கொண்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :