You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கல்வி அரசியல்: இஸ்லாமியப் பேரரசுகளைப் பற்றிய பாடங்களை நீக்கிய சிபிஎஸ்இ
(இலங்கை, இந்தியாவில் இன்றைய நாளின் நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியானவற்றில் கவனிக்க வேண்டிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.)
ஜனநாயகம் மற்றும் இஸ்லாமிய பேரரசுகளின் எழுச்சி ஆகிய பாடங்களை பாடத்திட்டத்திலிருந்து CBSE நீக்கியதாக இந்து தமிழ் திசை இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
சிபிஎஸ்இ 11, 12-ம் வகுப்புக்கான வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத் திட்டத்திலிருந்து பனிப்போர் யுகம், ஆப்ரிக்க-ஆசியாவில் இஸ்லாமிய பேரரசுகளின் எழுச்சி, முகலாய அரசவைகளின் வரலாறு, தொழிற்புரட்சி ஆகியப் பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.
அதைப் போலவே 10-ம் வகுப்பு பாடத்திலிருந்து உணவுப் பாதுகாப்பு என்ற பிரிவில் வேளாண் துறையில் உலக மயமாக்கலின் தாக்கம் என்ற பகுதியும் நீக்கப்பட்டுள்ளது.
மேலும் ஃபயஸ் அகமது பயஸ் என்ற உருதுக் கவிஞரின் 2 கவிதைகள் மதம், வகுப்புவாதம் மற்றும் அரசியல் - வகுப்புவாதம், மதச்சார்பற்ற அரசு என்ற பிரிவில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இடம்பெற்று இருந்தன. அந்த கவிதைகளும் நீக்கப்பட்டுள்ளன.
மேலும் சிபிஎஸ்இ தனது பாடத்திட்டத்தில் இருந்து ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை ஆகிய பாடங்களை நீக்கியுள்ளது' என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) பரிந்துரையின் பேரில் இந்தப் பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. வரும் கல்வியாண்டில் (2022-23) இந்தப் பாடங்கள் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் இருக்காது. பல ஆண்டுகளாக பாடத் திட்டத்தில் நீடித்த பாடங்களை முதல்முறையாக சிபிஎஸ்இ நீக்கியுள்ளது என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி விவாதங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
'அவதூறான தலைப்புகள் மற்றும் விவாதங்களைத் தவிா்க்க வேண்டும்' என்று தனியாா் தொலைக்காட்சி சேனல்களுக்கு கடுமையான அறிவுறுத்தலை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.
குறிப்பாக, 'உக்ரைன்-ரஷியா போா் மற்றும் தில்லி கலவரம் தொடா்பாக சில தனியாா் தொலைக்காட்சி சேனல்கள் இதுபோன்ற தலைப்புகளையும், விவாதங்களையும் நடத்தியதாகவும், கேபிள் தொலைத்தொடா்பு ஒழுங்குமுறைச் சட்டம் 1995 விதிமுறைகளுக்கு எதிரான இதுபோன்ற ஒளிபரப்புகளை உடனடியாகத் தவிா்க்க வேண்டும்' என்று அந்த அறிவுறுத்தலில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
'கண்ணியத்துக்கு எதிரான மற்றும் நட்பு நாடுகளை விமா்சிக்கும் வகையிலான செய்திகள், மதங்கள் அல்லது சமூகங்கள் மீது தாக்குதலை தொடுக்கும் வகையிலான கருத்துகளை உள்ளடக்கிய தகவல்களை ஒளிபரப்பக் கூடாது' என்று கேபிள் தொலைத்தொடா்பு ஒழுங்குமுறைச் சட்டம் 1995-இன் பிரிவு 6 குறிப்பிடுகிறது. இந்த சட்ட நடைமுறைகளுக்கு எதிரான கருத்துகள் மற்றும் செய்திகள் ஒளிபரப்பப்படுவதை தொலைக்காட்சி சேனல்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எப்படி கடனை அடைப்பீங்க? இலங்கைக்கு கேள்வி
கடனை எப்படி இலங்கை திரும்ப செலுத்தும் என்பது தொடர்பான அறிக்கையை சர்வதேச செலாவணி நிதியம் இலங்கையிடம் கோரியுள்ளது. எனவே தேசிய மற்றும் சர்வதேச கலப்பு பொருளாதார நிபுணர்களைக் கொண்ட குழுவை உடனடியாக அமைத்து 3 வாரங்களுக்குள் அறிக்கையை சர்வதேச செலாவணி நிதியத்திடம் கையளிக்கவுள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார் என்று வீரகேசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் சர்வதேச செலாவணி நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கும் வரையிலான இடைப்பட்ட காலப்பகுதியில் நெருக்கடிகளை தவிர்த்துக் கொள்ள இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நட்பு நாடுகளின் ஒத்துழைப்பை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.
சர்வதேச செலாவணி நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக வாஷிங்டன் சென்றுள்ள நிதி அமைச்சர் அலி சப்ரி அங்கிருந்து நடந்த மெய்ந்நிகர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இந்த விடயங்களைத் தெரிவித்தார் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டும் IMF :
நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை மீள்வதற்காக சர்வதேச செலாவணி நிதியத்தின் கடன் உதவிகளைப் பெறுவது தொடர்பாக, இலங்கை அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவுற்றதாக ஐ.எம்.எஃப். அறிவித்துள்ளது என்று இலங்கையின் டெய்லி மிர்ரர் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க, `வலுவான ஒத்திசைவுள்ள திட்டம்` ஒன்றை இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும். அதன்மூலம், வறுமையில் இருக்கும் மக்கள் மீட்டெடுக்கப்படுவதுடன் தொழில் வளர்ச்சியும் நாட்டில் உண்டாக வேண்டும் என்ற நோக்கில் இந்த பேச்சுவார்த்தை நிகழ்த்தப்பட்டதாக நிதியம் தெரிவித்தது.
அத்துடன், நெருக்கடிகளை சமாளிக்கும் பொருட்டு, இலங்கை அரசுடன் இனி நெருக்கமாக இணைந்து பணியாற்றப் போவதாகவும், சர்வதேச பங்குதாரர்கள் மூலம் நிலைமையை சரி செய்ய சர்வதேச செலாவணி நிதியம் ஒத்துழைக்கும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்ததாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்