மத்தியப் பிரதேச காவல் நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அரை நிர்வாணமாக்கபட்டதாக கூறப்படும் விவகாரம் - நடந்தது என்ன?

கனிஷ்க் திவாரி

பட மூலாதாரம், Kanishka Tiwari

படக்குறிப்பு, கனிஷ்க் திவாரி
    • எழுதியவர், தில்நவாஸ் பாஷா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்திலிருந்து வெளியான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் படத்தில் அரை நிர்வாணமாக சிலர் நிற்பதை பார்க்க முடிகிறது. இதில், கவனிக்க வேண்டியது, காவல் நிலையத்திற்குள் அரை நிர்வாணமாக நிற்பவர்கள் உள்ளூர் பத்திரிகையாளர்கள் என்று சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பற்றிய முழுமையான தகவலை சேகரிக்க பிபிசி முயற்சித்தது.

முழு விவகாரம் என்ன?

இந்த படம் சித்தி கோட்வாலியில் (காவல் நிலையம்) ஏப்ரல் 2 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் எடுக்கப்பட்டதாகும். படத்தில் அரை நிர்வாணமாக இருக்கும் எட்டு நபர்களில் இருவர் உள்ளூர் பத்திரிகையாளர்கள் மற்றும் மீதமுள்ளவர்கள் நாடக கலைஞர்கள்.

உள்ளூர் நாடகக் கலைஞர் ஒருவரைக் கைது செய்ததற்கு இவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு போலீசார் அனைவரையும் பிடித்துவந்து அவர்களின் உடைகளை கழற்றி காவல் நிலையத்தில் அணிவகுத்து நிறுத்தினர்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

ஆனால், இந்தக்குற்றச்சாட்டுகள் அனைத்தையும் போலீசார் நிராகரித்துள்ளனர்.

"இந்தப் படத்தில் இருப்பவர்களில் இருவர் பத்திரிக்கையாளர்கள். ஒருவர் நான் மற்றும் ஒருவர் எனது ஒளிப்பதிவாளர். மற்றவர்கள் உள்ளூர் நாடக கலைஞர்கள் மற்றும் RTI ஆர்வலர்கள். நாடக கலைஞர் நீரஜ் குந்தர் கைது செய்யப்பட்டதற்கு இவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்," என்று படத்தில் காணப்படும் பத்திரிகையாளர் கனிஷ்க் திவாரி, பிபிசியிடம் பேசுகையில் தெரிவித்தார்.

மேலும் ​​"உள்ளூர் எம்.எல்.ஏ கேதார்நாத் சுக்லாவுக்கு எதிராக போலியான ஃபேஸ்புக் சுயவிவரத்தை உருவாக்கி தரக்குறைவான கருத்துகளை கூறிய குற்றச்சாட்டின் பேரில் நீரஜ் குந்தரை உள்ளூர் போலீசார் கைது செய்தனர். இதற்கு நாடக கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நான் எனது கேமராமேனுடன் இந்த செய்தியை சேகரிக்க சென்றிருந்தேன்," என்று கூறினார்.

கனிஷ்க் திவாரி

பட மூலாதாரம், @mpsandeshnews24

படக்குறிப்பு, கனிஷ்க் திவாரி

நீரஜ் குந்தர் கைது செய்யப்பட்டது குறித்த செய்தியை தனது யூடியூப் சேனலில் தெரிவித்து வந்ததாக கனிஷ்க் திவாரி கூறுகிறார்.

உள்ளூர் பாஜக எம்.எல்.ஏ கேதார்நாத் சுக்லாவுக்கு எதிராக தான் செய்திகளை வெளியிட்டு வருவதாகவும், அவரது உத்தரவின் பேரில் போலீசார் , நாடக கலைஞர்களோடு கூடவே தன்னையும் கைது செய்து அடித்ததாகவும் கனிஷ்க் குற்றம் சாட்டினார்.

"நாடக கலைஞர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் காவலில் எடுத்தபோது, ​​நான் அதுபற்றி கவரேஜ் செய்து கொண்டிருந்தேன். போலீசார் என் ஒளிப்பதிவாளருடன் என்னையும் கைது செய்தனர். எங்களை அரை நிர்வாணமாக்கி காவல் நிலையத்தில் அணிவகுத்து நிற்க வைத்தனர். பின்னர் இந்த படம் காவல் நிலைய பொறுப்பதிகாரியின் அறையில் எடுக்கப்பட்டது," என்று அவர் குறிப்பிட்டார்.

"இந்த சம்பவத்திற்குப் பிறகு, காவல்துறையின் தவறான நடத்தை குறித்து புகார் அளிக்க பலமுறை முயற்சித்தேன். ஆனால் அதற்கு எந்தப்பலனும் இல்லை," என்றும் கனிஷ்க் கூறுகிறார்.

போலீஸ் என்ன சொல்கிறது?

"நீரஜ் குந்தர் ஒரு நாடகக் கலைஞர். அவர் கைது செய்யப்பட்ட பிறகு, காவல் நிலையத்திற்கு வெளியே ஆட்சேபகரமான முழக்கங்களை எழுப்பியபடி சிலர் எதிர்ப்பு தெரிவிக்க வந்தனர். போலீசார் அவர்களை விளக்கினர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. போராட்டக்காரர்கள் நள்ளிரவில் காவலில் வைக்கப்பட்டனர். 151 வது பிரிவின் கீழ் முறையாக கைது செய்யப்பட்டனர்," என்று இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய ​​சித்தி மாவட்ட எஸ்எஸ்பி முகேஷ் குமார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்கள் அரை நிர்வாணமாக இருப்பது மற்றும் அவர்களின் புகைப்படம் தொடர்பான கேள்விக்கு, பதிலளித்த காவல்துறை கண்காணிப்பாளர், "இந்தப் படங்கள் எடுக்கப்பட்டது எனக்குத்தெரியும். எந்த சூழ்நிலையில் இந்த படங்கள் எடுக்கப்பட்டன என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. இது குறித்த விசாரணை டிஎஸ்பியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கைக்கு பிறகு தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும்."என்றார்.

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் இந்தப் படத்தில், பத்திரிக்கையாளர்கள் மற்றும் பலர் அரை நிர்வாணமாக காணப்படுகின்றனர். இந்தப் படம் மனித மாண்புக்கு எதிரானது. இருப்பினும், 'எந்த விதியின் கீழ்' இது நடந்துள்ளது என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

​​"இது விதிமுறைகளுக்கு எதிராக இருந்தால் காவல் நிலைய பொறுப்பாளர் உட்பட எல்லா போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்," என்று முகேஷ் குமார் குறிப்பிட்டார்.

"விசாரணை அறிக்கை எதிர்பார்க்கப்படுகிறது. அறிக்கையில் போலீசார் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுப்போம் ,"என காவல்துறை கண்காணிப்பாளர் கூறுகிறார்.

காணொளிக் குறிப்பு, நடன பயிற்சி மூலம் கைதிகளுக்கு மன அழுத்தத்தை போக்கு முயற்சியை முன்னெடுத்த மத்திய சிறை

பத்திரிகையாளராக காவல்துறை கருதவில்லை

படங்களில் இருப்பவர்கள் பத்திரிக்கையாளர்களா என்ற கேள்விக்கு, பதிலளித்த காவல்துறை கண்காணிப்பாளர், "அவர் பைட் எடுப்பார். ஆனால் அவர் எந்த அங்கீகரிக்கப்பட்ட ஊடகத்திலும் இல்லை. எனக்குத் தெரிந்தவரை அவர் யூடியூப்பில் செய்திகளை வெளியிடும் உள்ளூர் யூட்யூபர்." என்றார்.

உள்ளூர் எம்எல்ஏவின் உத்தரவின் பேரில் காவல்துறை இதைச் செய்ததாக கனிஷ்க் திவாரி குற்றம் சாட்டுகிறார்.

யாராவது நெருக்குதல் அளித்ததன் பேரில் காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்ததா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது. கனிஷ்க் திவாரி மீது ஏற்கனவே ஒரு வழக்கு உள்ளது. அது விசாரணையின் கீழ் உள்ளது. 2021 இல் அவர் ஒரு ஹாஸ்டலுக்குள் அனுமதியின்றி நுழைந்தார். ஐபிசி 452 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், அவர் எந்த வழக்கிலும் கைது செய்யப்படவில்லை" என்று குறிப்பிட்டார்.

எம்.எல்.ஏ என்ன சொல்கிறார்?

உள்ளூர் பாஜக எம்எல்ஏ கேதார்நாத் சுக்லா காவல்துறை மீது செல்வாக்கு செலுத்தியதாக கனிஷ்க் திவாரி குற்றம் சாட்டியுள்ளார். தனது யூடியூப் சேனல் மூலம் எம்எல்ஏவுக்கு எதிராக செய்திகளை எழுதி வருவதாகவும், அதனால் தான் குறிவைக்கப்பட்டதாகவும் கனிஷ்க் குற்றம் சாட்டியுள்ளார்.

இருப்பினும், இந்தக்குற்றச்சாட்டுகளை கேதார்நாத் சுக்லா மறுத்துள்ளார்.

"பத்திரிகையாளர்களுக்கு எதிராக எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லை. எந்த பத்திரிகையாளரும் குற்றச்சாட்டுகளை கூறவில்லை. அந்த நபர் பத்திரிகையாளர் இல்லை. நீங்கள் அவரை பத்திரிகையாளர் என்று அழைக்க வேண்டாம். அதற்கு மேல் இந்த விஷயத்தில் சொல்வதற்கு எதுவும் இல்லை," என்று பிபிசியிடம் பேசிய எம்எல்ஏ சுக்லா தெரிவித்தார்.

இந்த சம்பவம் காவல் நிலையத்தில் நடந்ததா இல்லையா என்று எம்.எல்.ஏ.விடம் பிபிசி கேட்டபோது, ​​"இந்த சம்பவம் நடந்துள்ளது ஆனால் எந்த பத்திரிக்கையாளரும் இதில் சம்மந்தப்படவில்லை," என்றார்.

அதே நேரத்தில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட 'எம்பி சந்தேஷ் நியூஸ்' என்ற யூடியூப் சேனலை தான் நடத்துவதாக கனிஷ்க் கூறுகிறார். தனக்கு தேசிய ஊடகங்களுடனும் தொடர்பு இருப்பதாக கனிஷ்க் மேலும் குறிப்பிடுகிறார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: