தமிழக மீனவ பெண்கள் நெருக்கடி: அரசு பேருந்துகளில் விற்பனை மீன்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் கவலை

மீனவப் பெண்களின் வாழ்வாதாரமான மீன் விற்பனை தொழில் பாதிப்பு
    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

தமிழக கடலோர பகுதிகளில் வசித்து வரும் மீனவ பெண்களின் வாழ்வாதாரமான மீன் விற்பனை தொழில் போக்குவரத்து பேருந்து சேவைகளில் திடீரென அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. விற்பனைக்காக கொண்டு செல்லும் மீன் பொருட்களை அரசு பேருந்துகளில் எடுத்துச் செல்ல தனி வசதி செய்து தரக்கோரி மீனவ பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி முதல் பழவேற்காடு வரை உள்ள கடலோர மாவட்டங்களில் வசிக்கும் மீனவர்கள் மீன்பிடி தொழிலையும், அவர்களது வீட்டில் உள்ள பெண்கள் மீன்பிடி சார்பு தொழிலையும் நம்பி வருவாய் ஈட்டி வருவது வழக்கம். அப்படி தான் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவர்களும், மீனவப் பெண்களும் மீன்பிடி மற்றும் மீன்பிடி சார்பு தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான விசைப்படகுகள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் உள்ளன. இந்த படகுகளை நம்பி லட்சக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர்.

இலங்கை கடற்படை பிரச்னை

கடந்த சில ஆண்டுகளாக இலங்கை கடற்படையின் தொடர் பிரச்னை, டீசல் விலை உயர்வு, மீனவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு உரிய விலை இல்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மீன்பிடித்தொழில் அழிந்து வருகிறது. இதனால் பெரும்பாலான மீனவர்கள் மாற்று தொழில் தேடி அண்டை மாநிலங்களுக்கு சென்று விட்டனர்.

இதனால் ராமநாதபுரம் மாவட்ட மீனவ கிராமங்களில் வசிக்கக்கூடிய மீனவ மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குரியதாகி வருகிறது. இதில் இருந்து மீள்வதற்கு மீனவ பெண்கள் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை விற்பனை செய்தல், கருவாடு விற்பனை செய்தல் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகின்றனர்.

மேலும், இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூட்டில் பலியாகும் மீனவர்கள், பேரிடர் காலங்களில் மீன்பிடிக்கச் சென்று கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர்களின் குடும்ப பெண்கள் இந்த மீன்பிடி சார்பு தொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.

காணொளிக் குறிப்பு, பொது போக்குவரத்தைப் பயன்படுத்த முடியாமல் தவிக்கும் ராமநாதபுரம் மீனவப் பெண்கள்

மீன் விற்பனையில் பெண்கள்

மீனவ பெண்கள் மீன் வியாபாரத்துக்காக வெளி மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டத்திற்குள் செல்லும் போது மீன் கூடைகளை அரசு பேருந்துகளில் ஏற்ற அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் அவர்கள் அதிக பணம் செலவு செய்து சரக்கு வாகனங்களில் சென்று மீன்கள் மற்றும் கருவாடுகள் விற்பனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக மீனவ பெண்களுக்கு கிடைக்கும் லாபத்தில் ஒரு தொகையை போக்குவரத்திற்கு செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த பெண்கள் மீன் கூடைகளை அரசு பேருந்துகளில் கொண்டு செல்ல தனி வசதி செய்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

ராமேஸ்வரத்தை அடுத்துள்ள பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திற்கு உச்சிப்புளி, கீழக்கரை, திருப்புல்லாணி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பெரும்பாலான பெண்கள் வாகனங்களில் வந்து மீன்களை ஏலம் எடுத்து பின் பாம்பனில் இருந்து சரக்கு வாகனங்களில் கொண்டு சென்று சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

மீனவப் பெண்களின் வாழ்வாதாரமான மீன் விற்பனை தொழில் பாதிப்பு

மீன் விற்பனையை தவிர எனக்கு வேறு தொழில் தெரியாது

இவ்வாறு மீன் வியாபாரத்தில் ஈடுபடும் மீனவ பெண் ஆறுமுகம் பிபிசி தமிழிடம் பேசுகையில், நான் கடந்த 42 ஆண்டுகளாக மீன் வியாபாரம் செய்து வருகிறேன். எனது சொந்த ஊர் தினைக்குளம். அங்கிருந்து சுமார் 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திற்கு மீன் வாங்க தினசரி காலை 4 மணிக்கு வீட்டில் இருந்து சரக்கு வாகனத்தில் புறப்படுகிறேன். பாம்பனில் மீன் வாங்கி கீழக்கரையில் விற்பனை செய்து வருகிறேன்.

எனது கணவர் சிறு வயதில் உயிரிழந்தார். இந்த மீன் வியாபாரத்தில் கிடைக்கும் வருமானத்தை வைத்து எனது மகளை திருமணம் செய்து கொடுத்தேன். எனக்கு இந்த தொழிலை விட்டால் வேறு எந்த தொழிலும் தெரியாது.

மீன் கூடைகளுடன் வரும் என்னை போன்ற மீனவப் பெண்களை யாரும் அரசு பேருந்துகளில் ஏற்ற முன் வருவதில்லை, பல நேரங்களில் மீன் கூடையை இறக்கி விட்டு செல்கின்றனர்.

இதனால் சரக்கு வாகனங்களை வாடகைக்கு எடுத்து மீன்களை வாங்கி ஏற்றி சென்று விற்பனை செய்து வருகிறோம். தனியாக ஒரு வாகனத்தை வாடகைக்கு எடுத்து வந்தால் அதிக செலவாகும் என்பதால் 5 பெண்கள் சேர்ந்து ஒரு வாகனத்தை வாடகைக்கு எடுத்து மீன்களை வாங்கி சென்று கீழக்கரையில் விற்பனை செய்வோம்.

அரசுப் பேருந்துகளில் வருவதைக் காட்டிலும் வாடகை வாகனத்தில் வருவதால் எங்களுக்கு அதிக பணம் செலவாகிறது. இருப்பினும் மீன்கள் விரைவில் கெட்டு போய்விடும் என்பதால் அரசு பேருந்துகளை நம்பாமல் சரக்கு வாகனம் மூலம் மீன்களை சரியான நேரத்தில் மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறேன், என்கிறார்.

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை மற்றும் மீனவ கிராமங்களில் பெண்கள் கருவாடு காய வைத்திருப்பதை அதிகம் காண முடியும். மீன்பிடி சார்பு தொழிலில் மிக முக்கியமானது கருவாடு விற்பனை. எனவே பெரும்பாலான பெண்கள் கருவாடு விற்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மீனவ பெண் ஆறுமுகம்
படக்குறிப்பு, மீனவ பெண் ஆறுமுகம்

கருவாடு தயாரிப்பில் ஆர்வம் காட்டும் மீனப் பெண்கள்

கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக பாம்பனில் கருவாடு வியாபாரம் செய்து வரும் குளோரி பிபிசி தமிழிடம் பேசுகையில், "எங்கள் குடும்பத்தை பொருத்தளவு ஆண்கள் மீன்பிடிக்கச் செல்வார்கள். பெண்கள் நாங்கள் அவர்கள் பிடித்து வரும் மீன்கள் மற்றும் மீன்களை உலர வைத்து கருவாடாக சந்தை மற்றும் வீடுகளுக்கு நேரடியாக சென்று விற்பனை செய்து வருகிறோம்.

நாட்டுப்படகுகளில் மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் பாம்பன் வடக்கு மீன் பிடி துறைமுகத்தில் ஏலம் விடப்படும். ஏலத்தில் மீன்களை வாங்கி அதன் பின் மீன் வயிற்று பகுதியில் இருக்கக்கூடிய குடல் உள்ளிட்டவைகளை எடுத்து பின்னர் அதற்கு உப்பு போட்டு பாம்பன் கடற்கரையில் வெயிலில் காலை முதல் மாலை வரை காய வைத்து உலர்த்தி பின்னர் கருவாடு தயாரித்து வியாபாரம் செய்கிறேன்.

இந்த கருவாட்டு தொழிலில் கிடைக்கும் வருமானத்தை வைத்து நானும் எனது பிள்ளைகளும் வாழ்ந்து வருகிறோம். மீன்பிடி தடை காலங்களின் போது மீன்கள் வரத்து இல்லாததால் கருவாடு களுக்கு நல்ல விலை கிடைக்கும். ஆனால் அந்த நேரங்களில் எங்களுக்கு மீன்கள் கிடைக்காததால் நாட்டுப் படகில் அதிக விலை கொடுத்து மீன்களை வாங்கி அதை உலர வைத்து விற்பனை செய்வோம்.

மழை காலங்களில் மீன்களை உலர வைக்க முடியாது என்பதால் அந்த நேரங்களில் காலங்களில் கருவாடு விற்பனை முற்றிலும் முடங்கி விடும். மீன்களை காட்டிலும் கருவாட்டில் இருந்து அதிக வாசனை வருவதால் அதனை பேருந்துகளில் ஏற்றினால் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இதனால் பேருந்து நடத்துனர்கள் எங்களை ஏற்றுவதில்லை.

அரசு பேருந்தில் சென்றால் எங்களுக்கு 50 ரூபாய் செலவாகும். ஆனால் சரக்கு வாகனத்தில் செல்வதால் 40 கிலோ எடை கொண்ட கருவாட்டு கூடை ஒன்றுக்கு 400 வரை செலவாகிறது. இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறோம்," என்கிறார்.

மீனவப் பெண்களின் வாழ்வாதாரமான மீன் விற்பனை தொழில் பாதிப்பு

பாரம்பரிய கரைவலை மீன் பிடிப்பு

ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி, பாரப்பட்டி, அரிச்சல்முனை, தாவுகாடு, முகுந்தராயர் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவ பெண்கள் பாரம்பரிய முறையான கரை வலை மீன் பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண்கள் பிடிக்கும் மீன்களை கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வாளியில் எடுத்துக் கொண்டு இடுப்பளவு தண்ணீரில் நடந்து கரை வந்து சேர்கின்றனர்.

பெண்கள் பிடிக்கும் மீன்களை சந்தைப்படுத்த ராமேஸ்வரம் மீன் மார்க்கெட்டிற்கு எடுத்து வருவார்கள். மீன்களை ஏற்ற அரசு பேருந்துகளில் நடத்துனர்கள் முன்வராததால் தனியார் சரக்கு வாகனங்களில் எடுத்து வருகின்றனர்.

தனுஷ்கோடி வரும் சுற்றுலா பயணிகள் எதிர்ப்பு

கரைவலை மீன்பிடியில் ஈடுபட்டுள்ள மீனவ பெண் பகவதி பிபிசி தமிழிடம் பேசுகையில், நான் சிறுவயதிலிருந்தே கரைவலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன்.

மீனவப் பெண்களின் வாழ்வாதாரமான மீன் விற்பனை தொழில் பாதிப்பு

நாங்கள் பிடிக்கும் மீன்களை வலையில் இருந்து எடுத்து அலுமினிய வாளியில் போட்டு சுமார் 50 கிலோ எடை கொண்ட அந்த வாளியை தலையில் சுமந்து இடுப்பளவு தண்ணீரை கடந்து கரைக்கு வந்து சேர்கிறோம்.

அப்படி சிரமப்பட்டு வரும் எங்களை தனுஷ்கோடியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி செல்லும் நகர் பேருந்துகளில் சிலர் ஏற்ற மறுக்கின்றனர். காரணம் தனுஷ்கோடி மிக முக்கிய சுற்றுலா தளம் என்பதால் தனுஷ்கோடி வரும் சுற்றுலா பயணிகள் அரசு பேருந்துகளில் வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள் எங்கள் மீது மீன் வாடை வருவதாக தெரிவிப்பதால் பேருந்தை விட்டு இறங்கி விடுகின்றனர். அரசு பேருந்தில் அழைத்துச் செல்ல நடத்துனர்கள் விரும்பினாலும் சுற்றுலா பயணிகள் எங்களை இறக்கி விட சொல்கின்றனர்.

எனவே நாங்கள் தனுஷ்கோடியில் இருந்து மார்க்கெட்டிற்கு செல்ல சரக்கு வாகனத்தில் கூடுதல் கட்டணம் செலுத்தி செல்கிறோம் என்கிறார் பகவதி.

மீனவ பெண் வட கொரியா
படக்குறிப்பு, மீனவ பெண் வட கொரியா

மீனவ பெண்களுக்கு அரசு நலத்திட்டங்கள் உண்டா?

மீனவப் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் மீனவ பெண் வட கொரியா பிபிசி தமிழிடம் பேசுகையில், தமிழக அரசு மீனவர்களுக்கும், மீனவப் பெண்களுக்கும் பல நலத்திட்ட உதவிகள் செய்துள்ளது.

சமீபத்தில் கூட நகர் பேருந்துகளில் பெண்கள் பயணம் செய்ய இலவசம் என அறிவித்துள்ளனர். ஆனால் எங்களுடைய மீனவ பெண்களால் அந்த இலவச பயணத்தை அனுபவிக்க முடியவில்லை. காரணம் அவர்களுடன் எடுத்து வரும் மீன் கூடைகளை காரணம் காட்டி அவர்களை அரசு பேருந்துகளில் ஏற்ற மறுக்கின்றனர். இதனால் அரசு நலத்திட்டங்கள் மீனவப் பெண்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை.

மீனவ பெண்கள் எடுத்துச் செல்லும் மீன் பொருட்களை தடையில்லாமல் பொது போக்குவரத்தில் எடுத்து செல்ல அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என வட கொரியா கோரிக்கை வைத்துள்ளார்.

2px presentational grey line

இலங்கை நெருக்கடி: சமீபத்தி நிலையை விவரிக்கும் களத்தகவல் - காணொளி

காணொளிக் குறிப்பு, சனிக்கிழமை இரவு முதல் இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளது

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: