You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வன்னியர் 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து: “தமிழக அரசு மீண்டும் சட்டம் இயற்ற வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்
வன்னியர் உள் இடஒதுக்கீடு சட்டம் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யும் வகையில், 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அதன்பின் இது தொடர்பான அரசாணை திமுக ஆட்சியில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், 10.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், ''சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும், அவ்வாறு முறையாக கணக்கெடுக்காமல் எப்படி இடஒதுக்கீட்டை வழங்க முடியும்? அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டே இந்தச் சட்டம் அவசரமாக இயற்றப்பட்டுள்ளது. இதனை இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா?'' எனக் கேள்வியெழுப்பினர்.
''சாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டினை வழங்க முடியுமா? இதுதொடர்பாக முறையான தரவுகள் இல்லாமல் இடஒதுக்கீட்டை வழங்க முடியுமா என்பன உள்பட ஏழு கேள்விகளை எழுப்பினோம். அதற்கு அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை. எனவே, வன்னியர் சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு செல்லாது'' எனத் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது.
இந்த விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஷ்வர ராவ் மற்றும் பி. ஆர் கவாய் ஆகியோரின் முன்னிலைக்கு விசாரணை வந்தது.
இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், 'மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் வன்னியர்கள் தனிப்பிரிவாக பார்க்கப்பட வேண்டும் என்பதற்கான தரவுகளை கொடுப்பதற்கு தமிழக அரசு தவறிவிட்டது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பாமகவின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், இதை சமூக நீதிக்கு எதிராக தீர்ப்பாக பார்ப்பதாக தெரிவித்தார்.
மேலும், "வன்னியர்களின் சமூக பின் தங்கிய நிலையை நிரூபிக்கும் விதமான தரவுகள் இல்லை என இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்து. இது ஒரு தொடக்கம்தான். தமிழக அரசு உடனடியாக புள்ளி விவரங்களை சேகரித்து இதை தமிழக சட்டமன்றத்தில் சட்டமாக இயற்றப்பட வேண்டும்." என்றார்.
'அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அரசு ஆலோசிக்கும்'
தீர்ப்பு குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், "எந்த ஒரு பிரிவினருக்கும் உள்ஒதுக்கீடு வழங்கிட மாநில அரசுக்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், இந்த சிறப்பு ஒதுக்கீட்டிற்கு அடிப்படையான தரவுகள் சரியாக இல்லை என்றும், இதற்காக அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் சரியான ஆதாரங்களின்றி வழங்கப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கருணாநிதி கொண்டு வந்த அருந்ததியினர் மற்றும் இஸ்லாமியருக்கான உள்ஒதுக்கீட்டு முறைகள் அனைத்திற்கும் சரியான ஆதாரங்களின் அடிப்படையில் சட்டங்கள் முறையாக இயற்றப்பட்டதால், அனைத்து நீதிமன்றங்களாலும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழ்நாட்டில் சமூகநீதி நிலைநாட்டப்பட்டுள்ளதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
ஆனால், முந்தைய அதிமுக ஆட்சியில், தேர்தல் நேரத்தில் அரசியல் காரணங்களுக்காக அவசர கோலத்தில் அள்ளித்தெளித்தது போல சரியான அடிப்படைத் தரவுகள் இன்றி இந்த சிறப்பு ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதால் தான் உச்ச நீதிமன்றத்தால் இச்சட்டம் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது.
முதல்வர் அறிவுறுத்தியபடி, மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, இந்த வழக்கு தொடர்பாக அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு முழுமூச்சுடன் மேற்கொண்டும், இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்களிடம் தீவிரமாக கலந்தாலோசித்து தமிழக அரசு முடிவு எடுக்கும்" என தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்