திருப்பூர் நகைக்கடை கொள்ளை: வட மாநில கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
திருப்பூர் நகை அடகுக்கடை ஒன்றில் இருந்து கிலோ கணக்கில் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற வடமாநில கொள்ளையர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
`வடஇந்திய கொள்ளையர்களிடம் இருந்து அவ்வளவு எளிதாக நகைகளை மீட்க முடியாது. தனிப்படை போலீஸாரின் செயல்பாடுகளும் நாக்பூர் போலீஸாரின் ஒத்துழைப்புமே குற்றவாளிகள் சிக்குவதற்கு காரணமாக அமைந்தன' என்கிறார் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு ஐ.பி.எஸ்.
3 கிலோ தங்கம், 28 கிலோ வெள்ளி
திருப்பூர் மாவட்டம், கே.பி.என் காலனியில் ஜெயக்குமார் என்பவர் தனது வீட்டின் முன்புறம் நகை அடகுக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் வேறொரு இடத்தில் தங்கியிருந்து தினமும் கடைக்கு வந்து சென்றுள்ளார்.
இந்தநிலையில், கடந்த 3 ஆம் தேதியன்று அதிகாலையில் வீட்டின் பின்புற இரும்புக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள், கடையில் இருந்த 3 கிலோ தங்கம், வெள்ளிப் பொருள்கள், 15 லட்ச ரூபாய் ரொக்கம் என அனைத்தையும் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
5 தனிப்படைகள், சிக்கிய நால்வர் கும்பல்
மறுநாள் (4 ஆம் தேதி) காலை கடையைத் திறக்கச் சென்ற ஜெயக்குமார், பூட்டு உடைக்கப்பட்டு நகைகளும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக, திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றையும் கொடுத்தார். இதையடுத்து, சம்பவ இடத்தில் காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்தச் சம்பவத்தில் நான்கு பேர் ஈடுபட்டிருப்பதை அறிந்த போலீஸார், அவர்களை சி.சி.டி.வி மற்றும் டவர் லோக்கெஷன்களின் உதவியோடு கண்காணித்தனர். ஒருகட்டத்தில் கொள்ளையர்கள் ரயில் மூலம் பிகார் செல்வதை அறிந்து நாக்பூர் போலீஸாரின் உதவியை திருப்பூர் கமிஷனர் ஏ.ஜி.பாபு நாடினார்.
இதையடுத்து, கடந்த 6 ஆம் தேதி கொள்ளையர்கள் சென்ற ரயில் சந்திராபூர் மாவட்டம், பல்லார்ஷா அருகே சென்றபோது ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் அவர்களைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3.25 கிலோ தங்க நகைகள், 28 கிலோ வெள்ளி நகைகள், 15 லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த மக்தாப் ஆலம், முகமது சுபான், பத்ரூல், திலகாஸ் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு திருப்பூர் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குற்றவாளிகள் பிடிபட்டது எப்படி?
திருப்பூரில் கொள்ளை நடந்த ஓரிரு நாள்களில் மொத்த கும்பலையும் வளைத்ததில் மாநகர காவல்துறை ஆணையாளர் ஏ.ஜி.பாபுவின் செயல் பாராட்டைப் பெற்றுள்ளது. இவர் வேலூர் சரக டி.ஐ.ஜியாக இருந்த காலகட்டத்தில்தான் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை சம்பவத்தின் குற்றவாளியை கைது செய்த சம்பவம் நடந்தது.
திருப்பூர் கொள்ளைச் சம்பவத்தில் வடமாநில குற்றவாளிகள் பிடிபட்டது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு ஐ.பி.எஸ், ``ஊத்துக்குளி சாலையில் உள்ள நகைக்கடையில் வியாழக்கிழமை (3 ஆம் தேதி) காலையில் கொள்ளை நடந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. நான், துணை ஆணையர் உள்பட போலீஸ் டீமுடன் அங்கு சென்றோம். நகைக்கடையில் சி.சி.டி.வி கேமராக்கள் இருந்துள்ளன. ஆனால், அவை அனைத்தையும் கொள்ளையர்கள் துண்டித்துவிட்டனர். ஆனால், ஒரே ஒரு இடத்தில் மட்டும் டேபிளின் மீது ஒரு கேமரா இருந்துள்ளது. அது அவர்களுக்குத் தெரியவில்லை. இதர சி.சி.டி.வி காட்சிகளை பதிவு செய்யும் டி.வி.ஆர் கருவியையும் அப்புறப்படுத்திவிட்டனர்.
டார்ச் லைட் வெளிச்சம், தலைப்பாகை
கொள்ளைக்கு முன்னதாக, மின்சாரத்தைத் துண்டித்துவிட்டனர். இதனால் டேபிள் மேல் இருந்த சி.சி.டி.வியில் பதிவான காட்சிகள் அனைத்தும் இருட்டாக இருந்தன. அதேநேரம், கொள்ளையர்கள் டார்ச் விளக்கை பயன்படுத்தியுள்ளனர். அவர்களின் முகங்கள் சரிவரத் தெரியவில்லை. தலைக்கு தொப்பியும் முக கவசமும் அணிந்துள்ளனர். அதில் ஒருவரின் முகக்கவசம் சற்று விலகியதால் அவரது முகம் ஓரளவுக்குத் தெரிந்தது'' என்கிறார்.
தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர், `` கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக ஐந்து தனிப்படைகளை அமைத்தோம். அதில் ஒரு குழுவினர், எங்கெல்லாம் சி.சி.டி.வி கேமரா இருக்கிறதோ அதில் பதிவான காட்சிகளை சேகரித்தனர். இன்னொரு குழுவை ரயில் நிலையம், பேருந்து நிலையம், சுங்கச் சாவடிகள் ஆகியவற்றுக்கு அனுப்பி வைத்தோம். மூன்றாவது குழுவினரை தனியார் விடுதிகளில் சோதனை நடத்துமாறு கூறினோம். நான்காவது குழுவினர், செல்போன் எண்களை வைத்து ஆய்வு நடத்துமாறு கூறினோம். ஐந்தாவது டீமில் இருந்தவர்களிடம், வெளிமாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு வந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களின் பட்டியலை சேகரிக்குமாறு கூறினோம். இதில், சி.சி.டி.வி காட்சிகளை சேகரித்த தனிப்படையினர் 2 மணிநேரத்தில் 10 இடங்களில் இருந்த காட்சிகளை சேகரித்துவிட்டனர். அது எங்களுக்கு உதவியாக இருந்தது'' என்கிறார்.

சிக்க வைத்த சி.சி.டி.வி காட்சிகள்
`` நகைக்கடைக்கு 50 மீட்டர் தொலைவில் உள்ள கட்டடத்தில் சாலை நன்றாகத் தெரியுமாறு கேமராவை வைத்துள்ளனர். அதில், ஒருவர் பையை மாட்டிக் கொண்டு வேலூர் சம்பவம் போலவே நடந்து போகும் காட்சிகள் தெரிந்தன. அவர் தலைப்பாகை கட்டியிருந்தார். அந்தக் காட்சியும் நகைக்கடை உள்ளே கிடைத்த காட்சியும் பொருந்திப் போனது. நகைக்கடையில் எங்களுக்குக் கிடைத்த 15 நிமிட புட்டேஜில் அதிகாலை 2.50 முதல் 3.05 காட்சிகள் இருந்தன. இவர்கள் வெளியில் செல்வதைக் காட்டும் சி.சி.டி.வி காட்சியில் 3.41 மணிக்கு ஒருவர் நடந்து கொள்கிறார். அதன்பிறகு மூன்று நிமிட இடைவெளியில் மூன்று பேர் நடந்து செல்கின்றனர். அதில் ஒருவர் தலையில் தலைப்பாகை உள்ளது. எனவே, நான்கு பேர் கொண்ட கும்பல் குற்றச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது'' என்கிறார் கமிஷனர் ஏ.ஜி.பாபு.
`` இதன்பிறகு குற்றவாளிகளை நெருங்குவது எளிதானதாக இருந்ததா?'' என்றோம். `` நிறைய சவால்கள் இருந்தன. அவர்கள் எந்தப் பக்கம் செல்கிறார்கள் என சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்தபோது ரயில் நிலையம் நோக்கிச் செல்வது தெரியவந்தது. அதனை உறுதிப்படுத்திய பிறகு பிளாட்ஃபார சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்தபோது அதிகாலையில் 4.34 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வரும் ரயிலில் ஏறியுள்ளனர். அங்கு பிளாட்ஃபார்மில் வைத்து தலையில் கட்டியிருந்த தலைப்பாகையையும் முகக்கவசத்தையும் நீக்கிவிட்டனர். அப்போது அவர்களின் முகம் தெளிவாகத் தெரிந்தது. அவர்கள் ஒரு பெட்டிக்கு ஏற முயன்றபோது அது பூட்டியிருந்ததால் திரும்பவும் ஓடிவந்து வேறொரு பெட்டியில் ஏறியுள்ளனர். குற்றவாளிகள் சென்னை செல்வது உறுதியானதால், தமிழ்நாடு ரயில்வே போலீஸ், ரயில்வே பாதுகாப்புப் படை ஆகியவற்றுக்குத் தெரிவித்தோம்.
காட்டிக் கொடுத்த குரூப் டிக்கெட்

பட மூலாதாரம், Getty Images
தவிர, இந்த புட்டேஜ் எல்லாம் மதியம் 2 மணிக்குத்தான் கிடைத்தன. ஆனால், அந்த ரயில் காலை 11 மணிக்கெல்லாம் சென்னை சென்றுவிட்டது. உடனே சேலத்துக்கு ஒரு குழுவையும் சென்னைக்கு ஒரு குழுவையும் அனுப்பி வைத்தோம். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளையும் சேகரித்தோம். எங்களிடம் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை அனுப்பினோம். ஆனால், அவர்கள் எந்த ரயிலில் சென்றார்கள் எனத் தெரியவில்லை'' என்கிறார்.
இதன்பிறகு சென்னை ரயில் நிலையத்தில் உள்ள காட்சிகளை தீவிரமாக ஆராய்ந்தபோது இரவு 8.20 மணியளவில் திரிபுரா செல்லும் பாகமதி ரயிலில் அவர்கள் ஏறிய தகவல் போலீஸாருக்குக் கிடைத்துள்ளது. அதன்பிறகு நான்கு பேருக்கும் சேர்த்து மொத்தமாக டிக்கெட் எடுத்துள்ளனரா என்பதை ஆய்வு செய்தபோது பிகாருக்கு பயணச் சீட்டு எடுத்துள்ளதை போலீஸார் உறுதி செய்துள்ளனர். இதன்பிறகு மொத்த ரயில் பாதையையும் அலர்ட் செய்துள்ளனர். ரயில் வாரங்கல் தாண்டிவிட்டதால் நாக்பூருக்கு முன்னதாக உள்ள பல்லார்ஷா ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
`` இந்த விவகாரத்தில் நாக்பூர் போலீஸ் கமிஷனரின் உதவியை மறக்க முடியாது. கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக எங்கள் குழுவில் உள்ள ஒரு டீம் நாக்பூருக்கும் இன்னொரு டீம் ஜபல்பூருக்கும் செல்லும் வகையில் விமான டிக்கெட்டை பதிவு செய்திருந்தோம். ஆனால், அதிர்ஷ்டவசமாக பல்லார்ஷா ரயில் நிலையத்தில் நான்கு பேரும் சிக்கிவிட்டனர். இன்று (7 ஆம் தேதி) இரவுக்குள் குற்றவாளிகள் திருப்பூர் வந்துவிடுவார்கள்'' என்கிறார், கமிஷனர் ஏ.ஜி.பாபு.
திருப்பூரில் உதவியவர்கள் யார்?
``இந்த வழக்கில் பிடிபட்டவர்கள் திருப்பூரில் வேலை பார்த்து வந்தார்களா? என்றோம். `` திருப்பூரில் எத்தனை நாள்கள் வேலை பார்த்து வந்தார்கள் என்பதை விசாரித்தோம். அதில், குற்றம் நடப்பதற்கு ஒருநாள் முன்புதான் மூன்று பேர் வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் மட்டும் திருப்பூரில் நீண்டநாள்கள் இருந்துள்ளார். அவருக்கு இங்கு உதவியவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்க இருக்கிறோம்'' என்கிறார்.
`` பொதுவாக, வடஇந்திய கொள்ளையர்களிடம் இருந்து நகைகளை அவ்வளவு எளிதாக மீட்க முடியாது. திருப்பூரில் பிரபல நகைக்கடையில் கொள்ளை நடந்தபோதும் நகைகள் பிடிபடவில்லை. பிகார்-ஜார்க்கண்ட்-மேற்குவங்க எல்லையில் மால்டா என்ற இடம் உள்ளது. அங்குதான் நிறைய கொள்ளையர்கள் உள்ளனர். அங்கு தமிழ்நாடு போலீஸார் சென்றாலும் உரிய முறையில் பதில் கிடைப்பதில்லை. இந்தமுறை நாக்பூர் போலீஸ் உள்பட அனைவரின் ஒத்துழைப்பும் இருந்ததால் கொள்ளை போன மொத்தப் பொருள்களையும் மீட்க முடிந்தது'' என்கிறார் ஏ.ஜி.பாபு ஐ.பி.எஸ்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்





















