திருநங்கையாக மாறிய மகன் - மஞ்சள் நீராட்டு விழா வைத்த குடும்பம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த கொளஞ்சி-அமுதா தம்பதியின் மகன் நிஷாந்த். இவரது தந்தை சுமை தூக்கும் கூலித் தொழில் செய்து வருகிறார். தாய் துப்புரவு பணியாளராக இருக்கிறார்.
10ஆம் வகுப்பு வரை படித்த நிஷாந்த் உடலில் செயல்பாடுகள் பெண்களை போன்று மாறத் தொடங்கியது. இதன்மூலம் தான் திருநங்கை என்பதை உணர்ந்து, பின்னர் திருநங்கையாக முழுவதுமாக மாறும் முயற்சியில் ஈடுபட்டார். நாளடைவில் பெற்றோர் அவரது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, அவர் வீட்டை விட்டு வெளியேறி கடலூரில் உள்ள திருநங்கைகள் ஆதரவில் வாழ்ந்தார். மேலும் தனது பெயரை நிஷா எனவும் மாற்றிக் கொண்டார்.
தன் பிள்ளையின் பிரிவு தாங்க முடியாமல் அவரை தன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நிஷாவின் தாய் நினைத்தார். மேலும் நிஷாவிற்கு இயற்கையாக ஏற்பட்ட இந்த மாற்றத்தை உணர்ந்த தாய் அவரை தேடிக் கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வந்தார்.
இதையடுத்து நிஷா பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்து திருநங்கையாக மாறினார். இதற்கு நிஷாவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் ஆதரவு அளித்தனர்.
மேலும் ஒருவர் சிகிச்சை செய்து திருநங்கையாக மாறினால், திருநங்கையாக மாறிய நபருக்கு 'வருட பூஜை' நடத்தி பெண்ணாக அங்கீகரிப்பது வழக்கம். இதனிடையே நிஷா கடந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி திருநங்கையாக பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட நாளை மஞ்சள் நீராட்டு விழாவாக நடத்த நிஷாவின் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
ஆகவே கடந்த மார்ச் 1ஆம் தேதி தனது பிள்ளை நிஷாவிற்கு அவருடைய 21 வயதில், அவர் பெண்ணாக மாறிய நாளை சிறப்பூட்டும் விதமாக அவரது குடும்பத்தினர் மஞ்சள் நீராட்டு விழா நடத்தினர். இந்த நிகழ்வில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், மற்றும் ஊர் மக்கள் பங்கேற்றனர்.
காணொளி தயாரிப்பு: நடராஜன் சுந்தர்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்