நீலகிரி வனவிலங்கு மரணத்துக்கு தமிழக மின்துறைதான் காரணம் - தீர்ப்பாயம்

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

மனிதனுக்கு உள்ள அதே உரிமைகள் விலங்குகளுக்கும் உண்டு, மனித உரிமைகள் பாதுகாக்கப்பட விலங்குகளின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சமீபத்திய தீர்ப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.

நீலகிரி வனப்பகுதிக்குள் மின்சாரம் தாக்கி வனவிலங்குகள் உயிரிழந்ததற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ) தான் காரணம் எனத் தீர்ப்பளித்துள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வன விலங்குகளின் உயிரிழப்புக்கு ரூ.75 லட்சம் இழப்பீடு செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

வன விலங்குகளின் உயிரிழப்புக்கு ஒரு அரசுத்துறை தான் காரணம் எனக்கூறி அதற்காக அபராதமும் விதிக்கப்பட்டிருப்பது இது தான் முதல்முறை எனவும் இந்தத் தீர்ப்பு மிகச்சிறந்த முன்னுதாரணமாக அமையும் எனவும் கூறுகிறார்கள் காட்டுயிர் ஆர்வலர்கள்.

இந்த வழக்கின் பின்னணி குறித்து பார்ப்போம். 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் உள்ள சேரம்பாடி வனப்பகுதியில் ஒரு ஆண் யானை, நான்கு காட்டுப்பன்றிகள், ஒரு கீரி மற்றும் ஒரு காகம் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

அடர்ந்த வனப்பகுதி என்பதால் சம்பவம் நிகழ்ந்து சில நாட்கள் கழித்து தான் வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு உயிரிழந்த விலங்குகளின் உடல்கள் முறைப்படி வனத்துறையால் புதைக்கப்பட்டன.

வனப்பகுதிக்குள் செல்லும் மின் பாதையை சரியாக பராமரிக்கப்படவில்லை என்றும் இதற்கு டான்ஜெட்கோ தான் காரணம் எனவும் அப்போது நாளிதழ்களில் செய்தி வெளியாகியிருந்தது. இதனை அடிப்படையாக வைத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரித்தது.

இந்த வழக்கில் வனத்துறை மற்றும் டான்ஜெட்கோ அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழு ஒன்றை அமைத்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், `வன விலங்குகள் உயிரிழந்தது ஒரு எதிர்பாராத விபத்து. யானை மின் கம்பத்தை மிக வலுவுடன் தாக்கியதால் மின் கம்பம் சரிந்து விழுந்துள்ளது. அப்போது மின்சாரம் தாக்கியதில் யானை மற்றும் அந்தப் பகுதியை கடந்த மற்ற வன விலங்குகளும் உயிரிழந்துள்ளன. இந்த விபத்து இயற்கையாக நிகழ்ந்த ஒன்று. இதற்கு யாருடைய அலட்சியமும் காரணம் அல்ல` என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் டான்ஜெட்கோ, `இந்த வனப்பகுதியில் 1932-ம் ஆண்டு மின் இணைப்பு அமைக்கப்பட்டது. அப்போதிலிருந்து பதிவான முதல் விபத்து இதுதான். சம்பவம் நடந்த உடனே அங்கு சென்று உடனடியாக அனைத்தும் சரி செய்யப்பட்டுவிட்டது. இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவம் நிகழாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்` என்று வாதிட்டது.

இந்த வழக்கில் தற்போது தீர்ப்பளித்துள்ள பசுமைத் தீர்ப்பாயம், `வன விலங்குகளின் உயிரிழப்புக்கு டான்ஜெட்கோ தான் காரணம். போதிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்திருக்க வேண்டியது டான்ஜெட்கோவின் கடமைதான். உயிரிழப்புக்கு விலங்கின் மீது பழிபோட்டு இதை கடவுளின் செயல் எனக் கூறிவிட முடியாது` எனத் தெரிவித்துள்ளது.

அதோடு வன விலங்குகளின் உயிரிழப்புக்கு இழப்பீடாக வனத்துறை மூன்று மாதங்களுக்குள் ரூ.75 லட்சம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

அவ்வாறு குறிப்பிட்ட காலத்திற்குள் இழப்பீட்டுத் தொகையை செலுத்த தவறினால் மாவட்ட ஆட்சியர் மூலம் டான்ஜெட்கோவின் சொத்துக்களை ஜப்தி செய்து தொகையை வசூலித்துக் கொள்ளலாம் எனவும் தீர்ப்பளித்துள்ளது. இந்த இழப்பீட்டுத் தொகையை வனத்துறை மனித - விலங்கு மோதல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது

இந்தத் தீர்ப்பு தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய வன உரிமை செயற்பாட்டாளர் பாண்டியராஜன், `இந்தத் தீர்ப்பு ஒரு முன்னோடியாக அமையும். ஆனால் ரூ.75 லட்சம் இழப்பீடு என்பது குறைவு தான். ஒரு யானையின் இறப்புக்கு ரூ.15 கோடி இழப்பீடு விதித்திருக்க வேண்டும். ஆனாலும் அரசுத் துறைகளை பொறுப்புக்கு உள்ளாக்குவதன் மூலம் விரைவாக தீர்வுகளை எட்ட முடியும். இந்தத் தீர்ப்பில் வனத்துறைக்கும் அபராதம் விதித்திருக்க வேண்டும். வன விலங்குகளின் உயிர்களை பாதுகாப்பதில் அவர்களுக்கும் முக்கியப் பங்கு உள்ளது.

சமீபத்தில் கோவை வனப்பகுதியில் ரயில் மோதி மூன்று யானைகள் கொல்லப்பட்டன. இந்த விவகாரம் பூதாகரம் ஆனதும் வனத்துறை, ரயில்வே துறை என இரண்டு தரப்பு அதிகாரிகளும் ஒருவரை ஒருவர் பழிக்குப் பழியாக சிறைபிடித்து வைத்த கேலிக்கூத்தான சம்பவங்கள் எல்லாம் அரங்கேறின. ஒரு அரசுத் துறை இன்னொரு துறை மீது நடவடிக்கை எடுக்காது, இல்லையென்றால் மாறி மாறி பழி சுமத்திக் கொள்வார்கள்.

இங்கே சிக்கல் என்னவென்றால் வன விலங்குகள் உயிரிழப்பு எந்தத் துறையின் கீழ் வரும் என்பது பற்றிய தெளிவு இல்லை. வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இது வருகிறது என்றாலும் மற்ற துறைகள் மீது அவர்களால் நடவடிக்கை எடுக்க வழியில்லை. சில சமயங்களிலே வனத்துறையுமே இதற்கு காரணமாக அமைகிறது. எல்லா இறப்புகளுக்கும் நீதிமன்றம் சென்று கொண்டிருக்க முடியாது. எனவே அனைத்து அரசுத் துறைகள் மீது அதிகாரம் கொண்ட சுயாதீனமான தனி அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அது தான் நிரந்தர தீர்வாக அமையும்` என்றார்

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய கோவை மண்டல முதன்மை வனப் பாதுகாவலர் ராமசுப்ரமணியன் "வனப்பகுதியில் விலங்கு நடமாட்டம் உள்ள பகுதிகளில் மின் கம்பிகள் ஒன்று மண்ணுக்கு அடியில் அமைக்க வேண்டும் அல்லது யானைக்கு எட்டாத உயரத்தில் அமைக்கப்பட வேண்டும். இது போன்ற எதிர்பாராத மரணங்கள் நிகழ்வது உண்டு. விலங்குகள் மட்டுமல்லாமல் சில சமயங்களில் மனிதர்களும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

மேகமலையில் இதே போல ஒருமுறை மின்சாரம் தாக்கி ஆறு யானைகள் உயிரிழந்தன. அதன் பின்னர் அந்தப் பகுதியின் மின் இணைப்புகள் உயர்த்தி அமைக்கப்பட்டன. இதை ஒரு முன்னுதாரணமாக அமைத்து செயல்பட வேண்டும். இதற்கென தனி ஆணையம் தேவையில்லை. அரசுத்துறைகள் முறையாக ஒருங்கிணைப்புடன் செயல்பட்டாலே போதுமானது. வன விலங்குகள் உயிரழப்புகளை தவிர்த்துவிடலாம்` என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: