You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"மூனும் பொன்னுங்க, வளர்க்க முடியலை" - மதுரை தம்பதி போலீஸிடம் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்
மதுரை அருகே பிறந்து 6 நாட்களே ஆன பெண் சிசு சந்தேகத்துக்கு இடமான வகையில் உயிரிழந்த சம்பவத்தில் குழந்தையை கொலை செய்ததாக அதன் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்களுக்கு பிறந்த மூன்றும் பெண் என்பதால், வறுமை காரணமாக குழந்தையை தரையில் மோதி கொன்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதிர்ச்சி தரக்கூடிய அந்த சம்பவத்தில் உண்மையில் என்ன நடந்தது?
மதுரை மாவட்டம் சேடப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய கட்டளையைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. விவசாய தொழில் செய்து வரும் இவருக்கும், கௌசல்யா என்பவருக்கும் திருமணமாகி 4 வயது பெண் குழந்தை மற்றும் 2 வயதில் பெண் குழந்தை என இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கௌசல்யா கர்ப்பமாகி கடந்த 21 ஆம் தேதி சேடப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவருக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை உடல்நலக் குறைவு காரணமாக டிசம்பர் 26 ஆம் தேதி இரவில் உயிரிழந்ததால் வீட்டின் அருகிலேயே பெற்றோர் புதைத்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், குழந்தையை பரிசோதிக்க சேடப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து செவிலியர் தேவி பெரிய கட்டளை கிராமத்திற்கு வந்து தடுப்பூசி போடுவதற்காக குழந்தையைக் கேட்டார். அப்போது அது உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாகவும், அதனால் அதை பெற்றோர் புதைத்து விட்டதாகவும் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து செவிலியர் தேவி கிராம நிர்வாக அதிகாரி முனியாண்டியிடம் கூறினார்.
இதைத்தொடர்ந்து, சந்தேகம் அடைந்த கிராம நிர்வாக அதிகாரி முனியாண்டி, சேடப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன், பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகினர்.
இதனால் குழந்தை இறப்புக்குக் காரணம் சிசு கொலையா? அல்லது வேறு ஏதும் காரணமா என காவல்துறையினர் விசாரித்தனர். இந்த விவகாரத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் குழந்தையின் சடலத்தை உடல்கூராய்வு செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
குழுந்தை புதைக்கப்பட்ட இடத்தில் பேரையூர் தாசில்தார் ரவிச்சந்திரன், காவல் ஆய்வாளர் காந்தி தலைமையிலான அதிகாரிகள் முன்னிலையில், மதுரை அரசு மருத்துவர் நடராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிசுவின் உடலை தோண்டி எடுத்து அங்கேயே உடல்கூராய்வு செய்தனர்.
அதில், சிசுவின் தலையின் மீது ஏற்பட்ட காயத்தால் அது இறந்து விட்டதாக தெரியவந்தது.
இதையடுத்து, சிசுவை கொன்றதாக அதன் பெற்றோரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில், பேரையூர் அருகே உறவினர் வீட்டில் இருவரும் பதுங்கியிருந்த தகவல் கிடைத்ததும் அங்கு சென்று அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணைக்குப் பிறகு முத்துப்பாண்டி மற்றும் கௌசல்யா மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 302, 201,344 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இது குறித்து, உசிலப்பட்டி காவல் நிலைய தரப்பில் விசாரித்தபோது, "போலீஸ் விசாரணையில் முத்துப்பாண்டியும் கௌசல்யாவும் தங்களுக்கு ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதால் மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தையை சரியாக வளர்க்க முடியாது என்பதால், அதன் தலையை சுவற்றில் மோதச்செய்து கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர்," என்று தெரிவித்தனர்.
இது குறித்து, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் பிபிசி தமிழிடம் கூறும்போது, "சிசுவின் தலையை சுவற்றில் மோத வைத்து கொலை செய்து வீட்டின் அருகே புதைத்ததாக பெற்றோர் வாக்குமூலம் அளித்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் இதுபோன்று பெண் சிசுக்கொலை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பெண் குழந்தைகளை வளர்க்க முடியாத பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை அரசு காப்பகத்தில் வைத்து வளர்த்துக் கொள்ளலாம்," என்று கூறினார்.
"பெண் சிசு வதை என்பது ஒரு கொடூர செயல், பெண் சிசுவை பாதுகாப்பது நம் கடமை. இதுபோன்று இனி ஒரு பெண் சிசுக்கொலை மதுரை மாவட்டத்தில் நிகழக்கூடாது. இதுபோன்று வளர்க்க முடியாத நிலையில் யாரேனும் குழந்தைகளை வைத்திருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்," என அவர் கேட்டுக் கொண்டார்.
பிற செய்திகள்:
- 7 ஆண்டுகளில் 122 தற்கொலைகள்: சாதிய பாகுபாட்டில் சிக்கியுள்ளனவா மத்திய பல்கலைக்கழகங்கள்?
- 3 நாட்களில் 5,900 விமானங்கள் ரத்து - கொரோனாவால் தொடரும் பயணச் சிக்கல்
- சென்னையில் மருத்துவர்கள் உள்பட 39 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி: தடுப்பூசி செலுத்தியும் பாதிப்பு
- திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என இளம்பெண்ணை கொலை செய்த மூன்று திருமணமான நபர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்