வனம் - சினிமா விமர்சனம்

பட மூலாதாரம், vanam/official teaser
நடிகர்கள்: வெற்றி, ஸ்மிருதி வெங்கட், அனு சித்தாரா, வேல ராமமூர்த்தி; இசை: ரான் ஈதன் யோஹனன்; இயக்கம்: ஸ்ரீகந்தன் ஆனந்த்.
தப்புத் தண்டா என்ற படத்தை இயக்கிய ஸ்ரீ கந்தன் ஆனந்த்தின் அடுத்த படம் இது. முந்தைய படத்தை திருட்டை மையமாக வைத்து உருவாக்கியவர், இந்தப் படத்தில் அமானுஷ்யமான ஒரு விஷயத்தைக் கையில் எடுத்திருக்கிறார்.
ஒரு புதிய நுண்கலைக் கல்லூரி. அதில் மாணவர் விடுதி கட்டப்பட்டுவரும்போது ஒரு அறையில் தற்கொலை நிகழ்கிறது. அந்தக் கல்லூரியில் மாணவராக வந்து சேர்கிறார் வெற்றி. அந்தக் கல்லூரியைப் பற்றிய ஆய்வுக்காக வருகிறார் ஸ்மிருதி வெங்கட். இதற்குப் பிறகு, குறிப்பிட்ட அறையில் வசிப்பவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள். இது ஏன் நடக்கிறது என ஆராய்கிறார்கள் வெற்றியும் ஸ்மிருதி வெங்கட்டும். அப்போதுதான் ஒரு ஜமீந்தாரின் வெறியாட்டம் குறித்துத் தெரியவருகிறது. ஜமீனுக்கும் அந்த கல்லூரிக்கும் என்ன தொடர்பு, குறிப்பிட்ட அறையில் வசிப்பவர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பதெல்லாம் மீதிக் கதை.

பட மூலாதாரம், vanam/official teaser
படத்தின் ஆரம்பம் சிறப்பாகவே இருக்கிறது. ஒரு ஜமீனின் கதையிலிருந்து ஆரம்பித்து, பிறகு தற்காலத்தில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களோடு இணைத்து ஒரு விறுவிறுப்பான படத்தைத் தர நினைத்திருக்கிறார் இயக்குனர். படத்தின் கதையைத் தனியாக எடுத்துப் பார்த்தால், சுவாரஸ்யமான, ஆர்வமூட்டும் கதைதான்.
ஆனால், படமாக்கப்பட்ட விதமும் திரைக்கதையும் ஏமாற்றமளிக்கின்றன. துவக்கத்தில் வரும் சில காட்சிகளுக்குப் பிறகு, பெரும்பாலான காட்சிகள் சுவாரஸ்யமற்ற விதத்தில், ஏனோதானோவென நகர்கின்றன. எந்தக் காட்சியிலும் அதற்கான அழுத்தமே இல்லை.
ஜமீன்தாரின் தோஷத்தை நிவர்த்தி செய்வதற்காக நடுக் காட்டுக்குள் கல்லூரி ஒன்றைக் கட்டவேண்டுமென பரிகாரம் சொல்வதெல்லாம் சுத்தமாக ஏற்க முடியவில்லை. கல்லூரியை எல்லோரும் வரக்கூடிய இடத்தில் கட்டுவார்களா அல்லது சாயங்காலமானால் புலிகள் திரியும் காட்டுக்குள் கட்டுவார்களா?

பட மூலாதாரம், vanam/official teaser
இந்தப் படத்தில் வரும் பேய் பயங்கர ஸ்ட்ரிக்டாக இருக்கிறது. தான் புதைக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட அறையில் இருந்தபடி யாராவது போதை மருந்து சாப்பிட்டாலோ, காதலியுடன் வீடியோ சாட் செய்தாலோ கோபமடைந்து கொன்றுவிடுகிறது. எந்நேரமும் அறைக்குள் இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டே இருக்கும் அளவுக்கு ஃப்ரீயாக இருக்கிறது பேய்.
படத்தின் இறுதியில் வரும் ஜமீன்தாரின் மறுபிறவி ட்விஸ்ட் நன்றாக இருக்கிறது. ஆனால், படத்தின் மற்ற இடங்களில் கோட்டைவிட்டிருப்பதால், அந்த ட்விஸ்ட்டைப் பார்த்து ஆச்சரியப்படக்கூட முடியவில்லை.

பட மூலாதாரம், vanam/official teaser
ஸ்மிருதி வெங்கட், அனு சித்தாரா, லிவிங்ஸ்டன், வேல ராமமூர்த்தி ஆகியோர் பரவாயில்லாமல் நடித்திருக்கிறார்கள். பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த வெற்றி, இந்தப் படத்தில் ரொம்பவும் சுமாராக நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு அட்டகாசமாக இருக்கிறது. பாடல்கள் மனதில் பதியவில்லையென்றாலும் பின்னணி இசை ஓகே.
ஒரு நல்ல கதையைக் கையில் எடுத்திருக்கும் இயக்குனர், அதை நல்ல திரைப்படமாக்கும் முயற்சியில் சற்று சொதப்பியிருக்கிறார்.
பிற செய்திகள்:
- இந்திய அரசின் மசோதா: தனியார் கிரிப்டோகரன்சிகளின் எதிர்காலம் என்ன?
- திரிபுரா வன்முறைக்கு உண்மையில் என்ன காரணம்? களத்தில் பிபிசி - சிறப்புச் செய்தி
- விண்கல்லில் மோதி உலகைக் காக்கப் போகும் விண்கலம்
- தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்வுக்குக் காரணம் என்ன?
- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வியூகம் வகுப்பதிலேயே மோதலா? அதிமுக கூட்டத்தில் என்ன நடந்தது?
- பிரியங்கா சோப்ராவுக்கு விவாகரத்தா? டிரெண்ட் ஆன தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்































