வாடிமனைப்பட்டி: 58 ஆண்டுகளாக அசைவம் சாப்பிடாத தமிழகத்தின் அதிசய கிராமம்
புது புது அசைவ உணவுகளை நோக்கி மனிதர்களின் தேடல் தொடர்ந்து கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில், வாடிமனைப்பட்டி என்கிற கிராமத்தில், ஒருவர் கூட அசைவ உணவுகளை உண்ணாமல் வாழ்ந்து வருகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிக்கு அடுத்த வாடிமனைப்பட்டி கிராமத்தில் சுமார் 50க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசித்து வரும் பொதுமக்கள் கடந்த 1963-ம் ஆண்டிற்கு முன்னர் வரை சைவம், அசைவம் என அனைத்து உணவுகளையும் சாப்பிட்டு வந்துள்ளனர்.
1963ஆம் ஆண்டு கிராமத்திற்கு வள்ளலாரின் சுத்த சன்மார்க்க சங்கத்திலிருந்து வந்த முத்தையா என்கிற சாமியார், மாமிசம் உண்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறியுள்ளார். அதிலிருந்து அந்த கிராம மக்கள் சைவத்திற்கு மாறியுள்ளனர்.
இக்கிராமத்து ஆண்களை திருமணம் செய்து கொள்ளும் வெளியூர் பெண்களும் அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால், சைவத்திற்கு மாறி விடுகின்றனர். அதே போல ஆடு கோழிகளை வளர்த்து விற்றால் அவை பலி கொடுக்கவோ அல்லது இறைச்சிகளுக்கோ பயன்படுகிறது என்பதால் இங்கு ஆடு மற்றும் கோழிகள் வளர்க்கப்படுவதில்லை. பசு மாடுகளை மட்டும் வளர்த்து வருகின்றனர்.
கிராம கண்மாயில் மீன்கள் இருந்தாலும் அவற்றை அவர்கள் பிடிப்பது இல்லை. இங்குள்ள பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை யாருக்கும் மது பழக்கம் கிடையாது. அதே போல் வெளியூரில் உறவினர் வீட்டுக்கு சென்றால் கூட சைவ உணவுகளை மட்டுமே உண்பதாக இங்கு வசிக்கும் கிராம மக்கள் கூறுகின்றனர்.
இது குறித்து வெளியூரில் இருந்து திருமணமாகி வாடிமனைப்பட்டி கிராமத்திற்கு வந்து சைவம் மட்டுமே சாப்பிட்டு வரும் இளம்பாரதி பிபிசி தமிழிடம் பேசுகையில், 2008 ஆம் ஆண்டு எனக்கு திருமணமானது. திருமணத்திற்கு முன்பு வரை நான் அசைவம் சாப்பிட்டு வந்தேன்.
திருமணமாகி எனது கணவர் வீட்டுக்கு வந்ததிலிருந்து நான் அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். திருமணத்திற்கு பின் எனது தாய் வீட்டுக்கு செல்லும்போது கூட நான் அசைவம் சாப்பிடுவதில்லை.
நான் கர்ப்பமாக இருந்த போது அசைவம் சாப்பிட வேண்டும் என ஆசையாக இருந்தது. என் கணவரிடம் கேட்டபோது நாம் சன்மார்க்கத்தில் இருப்பதால் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். நமது குழந்தைகளும் அப்படித்தான் வளர வேண்டும் என கூறினார்.
என் கணவரே அசைவம் சாப்பிடாமல் இருக்கும் போது நான் ஏன் சாப்பிட வேண்டும் என நானும் அசைவம் சாப்பிடுவதை முற்றிலும் விட்டுவிட்டேன் என்கிறார் இளம்பாரதி.
சைவம் மட்டும் சாப்பிடுவது குறித்து அக்கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஜெகதீஷ் பிபிசி தமிழிடம் பேசுகையில், எங்கள் கிராமத்தில் மூன்று தலைமுறையாக அசைவம் சாப்பிடுவதில்லை.
நான் தற்போது வெளியூரில் கல்லூரியில் படித்து வருகிறேன். அங்கும் நான் அசைவம் சாப்பிடுவது இல்லை. என்னுடன் படிக்கும் நண்பர்கள் ஏன் நீ அசைவம் சாப்பிடுவதில்லை என கேலி செய்வார்கள். யார் என்ன சொன்னாலும் நான் அசைவம் சாப்பிடுவது இல்லை.
எங்கள் ஊரில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது காரைக்குடி. அங்கு அசைவ உணவுகளுக்கு பெயர் போன செட்டிநாடு உணவுகள் அதிகம் விற்கப்பட்டு வருகிறது. எங்கள் ஊரிலிருந்து பலரும் அடிக்கடி காரைக்குடி செல்வார்கள் ஆனால் யாரும் அசைவம் சாப்பிடுவது இல்லை என்கிறார் ஜெகதீஸ்.
வாடிமனைப்பட்டி கிராம மக்கள் எப்போதிலிருந்து அசைவம் சாப்பிடுவது இல்லை என அக்கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி பிபிசி தமிழிடம் பேசுகையில், நான் 5 வயதில் இருந்து சன்மார்க்கத்தை கடைபிடித்து வருகிறேன். அன்றில் இருந்து நான் அசைவம் சாப்பிடுவது இல்லை.
எனக்கு இப்போது வயது 63. நான் கடந்த 58 ஆண்டுகளாக அசைவம் சாப்பிடாமல் வாழ்ந்து வருகிறேன். நான் மட்டுமல்ல எங்கள் கிராமத்தில் பிறக்கும் பிள்ளைகள் அனைவருமே சன்மார்க்கத்தை பின்பற்றி அசைவம் சாப்பிடுவதை கைவிட்டுவிட்டோம்.
எங்கள் ஊர் குளத்தில் அதிகமாக மீன்கள் இருக்கிறது. ஆனால் நாங்கள் அந்த மீன்களை பிடிக்க மாட்டோம் யாருக்கும் விற்கவும் மாட்டோம். அதே போல் ஆடு, கோழி வளர்ப்பது இல்லை. மரங்களை அழிக்க மாட்டோம். இயற்கை விவசாயம் செய்து வருகிறோம். எங்கள் ஊரில் மாடு வளர்ப்பதுண்டு. நாங்கள் வளர்க்கும் மாடுகளை வாராவாரம் திங்கட்கிழமை சுத்தமாக குளிக்க வைத்து அன்று ஒரு நாள் முழுவதும் ஓய்வு கொடுத்து விடுவோம்.
எங்கள் கிராமத்திற்கு வெளியூரிலிருந்து திருமணமாகி வரும் பெண்களும் சன்மார்க்கத்தின் அடிப்படையில் அசைவம் சாப்பிடுவதை கைவிட்டு சைவம் மட்டுமே சாப்பிட்டு வருகின்றனர்.
இக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் அவர்களது உறவினர் வீட்டுக்குச் சென்றாலும், திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் அசைவம் சாப்பிடுவது இல்லை. இன்று அல்ல வரும் நாட்களிலும் எங்கள் கிராம மக்கள் அசைவம் சாப்பிட மாட்டோம் என்கிறார் ராமமூர்த்தி.
செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர்: பிரபுராவ் ஆனந்தன்
படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்.
பிற செய்திகள்:
- பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதில் என்ன சிக்கல்?
- கொரோனா தடுப்பு மருந்துக்கு பிறகு மாதவிடாய் சுழற்சியில் மாற்றமா? – விரிவான ஆய்வுக்கு கோரிக்கை
- முக்கியமான ஆசியா - பசிபிக் வணிக ஒப்பந்தத்தில் சேர சீனா விண்ணப்பம்: ஆக்கஸ் எதிரொலியா?
- அனபெல் சேதுபதி - விமர்சனம்
- `உங்கள் தனிநபர் தரவுகள் நிச்சயம் திருடப்படும்` - எச்சரிக்கையாக இருப்பது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்