You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கடலூரில் ஓரடி உயரத்தில் பிறந்த கன்று குட்டி - தாயிடம் பால் குடிக்க முடியாமல் தவிப்பு
செய்தி & காணொளி தயாரிப்பு: நடராஜன் சுந்தர்
படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்
கடலூரில் 32 செ.மீ உயரத்தில் பிறந்துள்ள கிடாரி கன்றுக்குட்டி தாய் பசுவிடம் பால் குடிக்க முடியாமல் தவித்து வருகிறது. பிறவி கோளாறு காரணமாக இவ்வாறு பிறந்துள்ளது என அரசு கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி பகுதிக்கு உட்பட்ட நளன் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி விஜயன்(வயது 55). இவரது வீட்டில் ஆடு, மாடு, கோழிகள் எனக் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இவற்றில் பசுமாடு ஒன்று அண்மையில் கிடாரி கன்றுக்குட்டியை ஈன்றது. அந்த கன்றுக்குட்டி உடல்நல குறைபாடுகளுடன் பிறந்துள்ளது. குறிப்பாக இந்த பசு இதற்கு முன் இரண்டு கன்றுகள் ஈன்றெடுத்துள்ளது. அந்த இரண்டு கன்றுகளும் நல்ல முறையில் எந்த குறைபாடும் இன்றி பிறந்துள்ளன.
மூன்று முறையும் தாய் பசுவிற்கு ஜெர்ஸி வகை சினை ஊசி செலுத்தப்பட்டே இந்த பசு சினை பிடித்துள்ளது. இந்த நிலையில் இந்த 3வது கன்று மட்டும் உடல்நல குறைபாட்டுடன் 32செ.மீ உயரத்தில் பிறந்திருப்பது உரிமையாளருக்கும், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கன்றுக்குட்டியால் அதன் உடல் எடையைத் தாங்கி சரிவர நடக்க முடியாமலும், உயரம் குறைவாக இருப்பதால் தாயிடம் எட்டி பால் குடிக்க முடியாமலும் மிகவும் சிரமப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தாய்ப் பசுவிடம் இருந்து பாலை கறந்து, அதைக் குழந்தைக்கு பால் கொடுப்பது போல பால் புட்டியில் ஊற்றி பால் ஊட்டுகின்றனர். இதைக் குழந்தை போல பராமரிப்பதைப் பார்க்கும்போது நெகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், கன்றுக் குட்டி படும் சிரமம் பார்ப்பவர்களை வேதனையடைய செய்கிறது.
கன்றுக்குட்டியை குழந்தை போல பராமரிப்பு
இதுவரை இதுபோன்ற கன்றுக்குட்டியை இப்பகுதியில் யாருமே பார்த்தது கிடையாது. வினோதமாக பிறந்துள்ளதால், கிராம மக்கள் அனைவரும் வியப்புடன் பார்த்து செல்வதாக கால்நடை உரிமையாளர் விஜயனின் மகன் அறிவு சுடர் தெரிவிக்கிறார்.
"மிகவும் உயரம் குறைவாகவும், உடல் பருமன் அதிகமாக இருப்பதால் நடக்க மிகவும் சிரமப்படுகிறது. வீட்டில் ஒரு குழந்தை போல பார்த்து வருகிறோம். இதற்காக எப்போதுமே தனியாக ஒரு நபர் கண்காணித்துக்கொண்டே இருக்கிறோம். இல்லையென்றால் இந்த கன்றுக்குட்டியை பார்த்துக்கொள்ள முடியாது. எங்கள் வீட்டில் ஒரு குழந்தைதான் இந்த கன்று," என்கிறார் அவர்.
இதுகுறித்து கன்றுக்குட்டியை பராமரிக்கும் கவிதா விஜயன் கூறுகையில், "நாங்கள் வளர்க்கும் பசு இதற்கு முன்னர் நல்ல முறையில் தான் இரண்டு கன்றுகளை ஈன்றுள்ளது. அவைகளை பார்த்துக்கொள்ள யாரும் தேவையில்லை. அந்த கன்றுக்குட்டிகள் பால் குடித்ததும், இழுத்துக் கட்டுவது மட்டுமே நம்முடைய வேலையாக இருக்கும்.
ஆனால் இந்த மூன்றாவது கன்று எதிர்பாராத விதமாக மிகவும் சிறிதாக பிறந்துள்ளது. இவற்றால் தாய் பசுவுடன் எட்டி பால் குடிக்க முடியவில்லை. அதனால் தாயிடமிருந்து பாலை கறந்து, பால் புட்டி மூலமாக தான் குழந்தைகளுக்கு கொடுப்பது போல பாலூட்டி வருகிறோம்.
ஒரு குழந்தையை எவ்வாறு நேரம் எடுத்து, எப்படி பார்த்துக் கொள்வோமோ, அதைப்போன்று தான் இதையும் பார்த்துக்கொள்கிறோம். இது முடியாமல் சிரமப்படுவதை பார்க்கும்போது வேதனையாக உள்ளது," என்கிறார் கவிதா.
கால்நடை மருத்துவர்கள் கூறும் கரணம் என்ன?
குறைபாடுகளுடன் பிறந்த கன்றுக்குட்டி குறித்து விளக்கமரிய அப்பகுதி அரசு கால்நடை வளர்ப்பு துறை அதிகாரியை தொடர்பு கொண்டபோது, பிறவி கோளாறு (Congenital Disorder) காரணமாக இவ்வாறு பிறந்துள்ளது. லட்சத்தில் ஒன்று இதுபோன்று பிறக்க வாய்ப்புள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குறைபாடுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுபோன்று கன்றுக்குட்டி குறைபாட்டுடன் பிறந்திருப்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளதாக கால்நடை மருத்துவர் செல்வமுத்து பிபிசி தமிழுடன் பகிர்ந்துகொண்டார்.
"தாய் பசுவானது சினைப் பருவத்தில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் வளர்ச்சி இல்லாமல், மிகவும் உயரம் குறைவாக சில குறைபாடுகளுடன் பிறக்கும். அடுத்ததாக தாய் பசு கருவுற்றிக்கும் காலத்தில் சில வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் சினைப் பருவத்தில் தாக்கும்போது இதுபோன்ற ஆகுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.மேலும் சினை பருவகாலத்தில் தாய் பசு மேய்ச்சலுக்கு செல்லும்போது சில வகையான நச்சு செடிகளை உண்ணும்போது அது வயிற்றில் உள்ள கன்று வளர்ச்சி இல்லாமல், மூளை, தசை, உள் உறுப்புகள் எல்லாமே பாதிக்கப்பட்டு இறுதியாக பொதுவாக பிறக்கக் கூடிய கன்றுக்குட்டிகள் போல் இல்லாமல் இதுபோன்று குறைபாடுகளுடன் பிறக்கிறது," என்கிறார் அவர்.
குறிப்பாக உலகளாவிய அளவில் நூற்றுக்கு சுமார் 10 சதவீதம் வரை இதுபோன்ற குறைபாடுகளுடன் கன்றுக்குட்டிகள் பிறப்பதாக கால்நடை மருத்துவர் செல்வமுத்து கூறுகிறார்.
"இவ்வாறு பிறக்கக்கூடிய கன்றுக்குட்டிக்கு அவ்வப்போது சரியான நேரத்தில் பால் கொடுத்து, உடல் வெப்பநிலை சராசரியாக உள்ளதா? அதன் நடவடிக்கைகள் எப்படி உள்ளது? என்பதை கண்காணிக்க வேண்டும். ஏதேனும் சளி, காய்ச்சல், உடல்நிலை மாற்றம் ஏற்பட்டால் கால்நடை மருத்துவரை அணுகி அதற்கு தகுந்தாற்போல சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
இதுபோன்ற கன்றுகளுக்கு வழக்கமாக செய்யக்கூடிய சிகிச்சை என்பது கிடையாது. பின்வரும் காலத்தில் இதுபோன்று குறைபாடுகளுடன் பிறக்கக்கூடிய கன்றுகளை சினைப் பருவத்திலேயே எவ்வாறு தடுத்து நிறுத்துவது உள்ளிட்ட விழிப்புணர்வைக் கால்நடை விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்க வேண்டும்.
இவ்வாறு பிறக்கும் கன்றுகளில் ஆயுள் காலத்தை உறுதியாக சொல்லமுடியாது. இவற்றை எவ்வாறு பாதுகாத்து, பேணிக்காத்து வருகிறோமோ அதைப் பொறுத்தே இதனுடைய ஆயுள்காலம் அமையும். இந்த கன்றை குழந்தை போல பார்த்துக்கொள்ள வேண்டும்," என்று கால்நடை மருத்துவர் செல்வமுத்து தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- 20 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த மனைவி மீது ஆசிட் வீசி கொன்ற கணவர்
- ஆப்கானிஸ்தானில் இருந்து முழுவதும் விலகிய அமெரிக்கா - 20 ஆண்டு போர், 25 முக்கிய தகவல்கள்
- அமெரிக்காவின் தாக்குதலில் குழந்தைகள் பலி: கண்ணீர் வடிக்கும் குடும்பம்
- கொரோனா தடுப்பூசி போட்டவருக்கு இதய பாதிப்பு - அறிகுறிகள் என்னென்ன?
- மூக்குதான் மூலதனம்: பல்லுயிர் பெருக்கத்தை காக்க போராடும் மோப்ப நாய்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்