You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலியல் புகார்: தமிழ்ப் பேராசிரியர் மீது 5 மாணவிகள் பாலியல் புகார் - சமூக நலத்துறையின் விசாரணையில் அதிரடி
திருச்சியில் உள்ள ஓர் தனியார் கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியர் மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன.
கல்லூரியின் விசாகா கமிட்டி விசாரணை நடைபெற்ற சூழலில், மாவட்ட நிர்வாகமும் இரண்டாவது நாளாக விசாரணையை நடத்தியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை. அதேநேரம், ஆன்லைன் மூலமாக ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர்.
அதிலும், சில ஆசிரியர்கள் தவறாக நடப்பதாகக் சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்து சர்ச்சையாகியது. அந்தவகையில் சென்னையில் உள்ள பிரபல பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது மாணவிகள் சிலர் அதிர்ச்சிப் புகார்களை தெரிவித்திருந்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட ராஜகோபாலன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து ஆன்லைன் வகுப்புகளைக் கண்காணிப்பதற்கு அரசு பல்வேறு விதிமுறைகளை வகுத்தது.
ராஜகோபாலன் விவகாரத்துக்குப் பிறகு தற்காப்புக் கலை பயிற்சியாளர் கெபிராஜ், தடகள பயிற்சியாளர் நாகராஜன், சிவசங்கர் பாபா, கிஷோர் கே சாமி என வரிசையாக கைது நடவடிக்கைகள் தொடர்ந்தன.
இதன் தொடர்ச்சியாக திருச்சியில் உள்ள பிரபல தனியார் கல்லூரி ஒன்றின் தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன் மீது முதுகலை பயிலும் 5 மாணவிகள் அதிர்ச்சிப் புகார் ஒன்றைத் தெரிவித்திருந்தனர்.
அந்தப் புகாரில், `வகுப்புகளில் இரட்டை அர்த்தத்தில் பேசுவது, தங்களுக்கு அருகில் மிக நெருக்கமாக வந்து அமர்வது போன்ற காரியங்களில் ஈடுபடுவார். வகுப்பறையில் மாணவிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் தனது அறைக்கு வருமாறு கட்டாயப்படுத்துவார். இதற்கு பெண் உதவிப் பேராசிரியை ஒருவரும் உடந்தையாக இருந்தார்' எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்தப் புகாரை கல்லூரியின் முதல்வரிடம் மாணவிகள் அளித்திருந்தனர். இதனை ஏற்றுக் கொண்ட முதல்வர், விசாகா கமிட்டியின் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். இதுதொடர்பாக விசாகா கமிட்டியினர் விரிவாக விசாரணை நடத்திய பிறகு, முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
முன்னதாக புகார் மனு வந்தபோதே விசாரணை நடத்தி பேராசிரியர் பால் சந்திரமோகனையும் பெண் உதவிப் பேராசிரியர் ஒருவரையும் பணியிடை நீக்கம் செய்திருந்தனர்.
அதேநேரம், பேராசிரியர் பால் சந்திரமோகன் மீது காவல்நிலையத்தில் மாணவிகள் புகார் அளிக்க முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது. `இதனால் தங்களது எதிர்காலத்துக்கு பாதிப்பு ஏற்படும்' என மாணவிகள் அச்சப்பட்டதாகத் தகவல் வெளியானது.
இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்துமாறு மாவட்ட சமூக நலத்துறைக்கு ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தமிமுன் நிஷா தலைமையிலான குழுவினர் கல்லூரியில் இரண்டாவது நாளாக இன்று விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிமுன் நிஷா, `விசாரணை நடந்து வருகிறது. முடிவில் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்றார்.
இதில், புகார் அளித்த மாணவிகளிடம் மட்டுமல்லாமல் பிற மாணவிகளிடமும் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் விரைவில் காவல்துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிற செய்திகள்:
- ஸ்டாலின் செயல்பாடு எப்படி? கமல் என்ன செய்கிறார்? பாஜக எம்.எல்.ஏ.க்களிடம் விசாரித்த மோதி
- இருப்பது 2 வெள்ளை காண்டாமிருகம், இரண்டுமே பெண்: இந்த இனத்தைக் காப்பாற்ற வினோத முயற்சி
- டோக்கியோ ஒலிம்பிக்: 40 ஆண்டுகளுக்குப் பின் தங்கம் வெல்லுமா இந்திய ஹாக்கி அணி?
- சைகோவ்-டி தடுப்பு மருந்து: கொரோனாவுக்கு எதிரான முதல் டி.என்.ஏ. தடுப்பு மருந்து
- நடுக்கடலில் இறங்கிய விமானம்; மரணத்தில் இருந்து தப்பிய விமானிகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்